சைக்கிள்
சின்னப் பசங்க எல்லாருக்கும் சைக்கிள் ஓட்டறதுன்னா ரொம்பவே புடிக்கும். எனக்கும் தான். எந்த வயசில கத்துக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகமில்ல. ஆனா ஆறாவது படிக்கும்போது ஒரு லீவு நாள், சனிக்கிழமைன்னு நினைக்கறேன், கால்வண்டி (சின்ன சைக்கிள்) 2 மணி நேர வாடகைக்கு எடுத்து சுத்திதிட்டு கடையில விட நேரமாயிடுச்சுன்னு வேகமா ஓட்டினேன். அப்போ செயின் கழண்டு போச்சு. பெடல் கிழிச்சு கால்ல காயம் ஆச்சு. அது மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. தழும்பா. அப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சாச்சு. வீட்லயே அப்பாவோட ராலே (Raleigh. ராலே-வை நெல்லைத் தெலுங்கென்று நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல) சைக்கிள் இருக்கும். ஸ்டாண்ட் போட்டபடி கொஞ்ச நேரம் ஓட்டுவேன். அப்பறம் இறங்கி வந்திடுவேன். ஏன்னா, சைக்கிள் பரண் மேல இருந்துச்சு. அது பரண் மேல போனதுக்கும் ஒரு கதை இருக்கு. அப்போல்லாம் பெரிய சைக்கிள்-ல ரெண்டு பக்கமும் கால் போட்டு ஓட்ட தெரியாது. பாருக்கு நடுவில கால் (குறுக்கு பெடல் / குரங்கு பெடல்) போட்டு தான் ஓட்டத் தெரியும். அப்படி ஒட்டும்போதே ரேஸ். பெரிய சாம்பியன்ஷிப் ரேஸ்-ல்லாம் கிடையாது. தெ...