பிசிபேளாபாத்

இந்த வெள்ளி கிழமையும் எப்போதும் போலவே 8.30 க்கு ஆரம்பித்து 8.50 க்கு விடிந்தது. மிக சாதாரண வெள்ளிக்கிழமை / விடுமுறை நாளாகவே பட்டது எனக்கு. ஆனால் தங்கமணி அப்படியொரு முடிவெடுத்தபோது தான் புரிந்தது, என் நினைப்பு எவ்வளவு தவறானதென்று.

மதிய உணவிற்கு பிசிபேளாபாத் பண்ணப் போவதாக சொன்னவுடன் எனக்கு புரிந்துவிட்டது, இன்னிக்கு என்னை சோதித்து பார்க்க முடிவெடுத்தாச்சுன்னு. பெரும்பாலான கணவர்களை போல, நானும் புது பொண்டாட்டியின் சமையலுக்கு பரிசோதனை கூடத்து "சிங்கம்" தான்.

முந்தைய நாள் ஹோட்டலுக்கு கூட்டிப் போகாததன் விளைவு இப்படி மோசமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொள்ளும். என் மனைவி சமைத்து. ஆனாலும் அவள் ரொம்ப சமத்து (அடுத்த வேளைக்குஅந்த பிசிபேளாபாத்தும் கிடைக்காம போயிடுமே!!!)

சரி. எவளவோ பண்ணிட்டோம். இதை பண்ண மாட்டோமா!!! என்றெண்ணி மனதை திடப்படுத்திக் கொண்டேன். கிச்சனில் காய்கறி, பாத்திரம், இன்னபிற என எல்லாத்தையும் தயார் செய்துவிட்டு, நேராக வந்து 'லேப்டாப்'பிக் கொண்டிருந்த என்னிடமிருந்து அதை பாசமாக பறித்தார் தங்கமணி.

எதுக்குன்னு கேட்டேன். அம்மாகிட்ட போன் பண்ணி எப்படி பண்றதுன்னு கேக்க வேண்டாமா? என்றார் (எப்படி சிக்கிருக்கேன் பாத்தியாப்பா!!!). போன் பண்ணினார். அனால் அம்மா எடுக்கவில்லை. இரண்டாவது, மூன்றாவது முறை அழைத்தும் எடுக்கவில்லை. லேசான எரிச்சலுடன், இந்த மம்மி என்ன பண்ணுது போன் எடுக்காம, என்று தனக்குத் தானே பேசிக்கொண்டார்.


நான் சும்மா இருந்திருக்கணும். ஆனால், அந்தத் திருநள்ளாறு தெய்வம் எனக்கு அருள் செய்திருந்தபடியால், "இரு. நான் ட்ரை பண்றேன்" என்று திருவாய் மலர்ந்தேன். நான் போன் செய்த அந்த நாலாவது முறை, எடுத்தேவிட்டார். அம்மாவும் மகளும் சில பல 'ஹலோ'க்களை பரிமாறிக் கொண்டபோது நெட்வொர்க் ஏதோ சதி செய்தது (ஸ்ரீலஸ்ரீ செல்போன் அனந்த சுவாமிகளின் சித்து விளையாட்டு அது). எனக்கு லேசான சந்தோஷம்.

உடனே தங்கமணி சமயோசிதமாக லேண்ட்லைன்க்கு அழைத்தார். ஆனால் அதுவும் மக்கர் பண்ணியது. தங்கமணியின் எரிச்சல் சற்றே ஜாஸ்தியானது. மீண்டும் செல்லில் அழைத்தார். மீண்டும் சில பல ஹலோக்கள். நான் சந்தோஷத்தில் வாய்விட்டு சிரித்தே விட்டேன். தங்கமணி என்னை முறைத்தவுடன் தான் தெரிந்தது, பாகிஸ்தான் தான் கிரிக்கெட் உலககோப்பை வெல்லும் என்று ஆர்யா-வின் அறிக்கை போல அவசரப்பட்டு விட்டோம் என்று.

மேலும் அங்கிருப்பது உசிதமல்ல என்றுணர்ந்து மெல்ல நழுவினேன். இந்தமுறை தங்கமணி கையில் எடுத்த ஆயுதம் செல்போன். கொஞ்சம் காஸ்ட்லியான போன் ஆச்சே என்று நான் கலவரமான போது, செல்போன் கான்டாக்ட்சில் அம்மாவின் நம்பரை தேடிகொண்டிருந்தார். நான் சற்றே நிம்மதி அடைந்தேன். அந்த செல்போன் எனக்கு சதி செய்தது. லைன் ரொம்பவும் கிளியர்ஆக இருந்தது.

பிசிபேளாபாத் போனில் தயாராகிக் கொண்டிருந்தது. முக்கால் ஆழாக்கு அரிசி, மீதத்திற்கு துவரம்பருப்பு என்று மிகத் தெளிவாகத் தான் சொன்னார் அம்மா. மீததிற்க்குன்னா எவ்வளவுன்னு கரெக்டா சொல்லும்மா என்றார் தங்கமணி. முக்கால் ஆழாக்கு அரிசி, மீதத்திற்கு துவரம்பருப்பு என்றார் அம்மா (திரும்பவும் மொதல்ல இருந்தா). தங்கமணி மீதம்ன்னா எவ்வளவு பருப்புன்னு சொல்லும்மா என்றார் கொஞ்சம் தடித்த குரலில். தங்கமணியின் இந்த மிரட்டலில் அம்மா சிறிது பதறிவிட்டார். இந்தமுறை, அரிசி அரை ஆழாக்காக குறைந்தது. அரை ஆழாக்கு அரிசி, அரை ஆழாக்கு பருப்பு என்று சொன்ன பிறகுதான் தங்கமணிக்கு புரிந்தது.

அப்படியே மிச்சத்தையும் சொல்லிமுடித்தார் அம்மா. எல்லாத்தையும் கவனமாக கேட்டுகொண்டார் தங்கமணி. லைன்ஐக் கட் செய்தார். பிறகு காய்கறி நறுக்கிகொண்டிருக்கும்போது, எவ்வளவு காய்கறி போடணும்ன்னு கேக்கலியேப்பா என்றார் என்னை பார்த்து. நான் எதுவும் சொல்லாமல் ஹி ஹி என்று சிரித்து வைத்தேன். மீண்டும் செல்லை கையில் எடுத்து ஏதோ யோசித்தவர், அப்படியே வைத்துவிட்டு மீதமிருந்த காய்கறிகளை நறுக்கலானார்.

திடிரென, ஏம்ப்பா அரை ஆழாக்கு அரிசி நம்ம ௨ பேருக்கு பத்துமா என்றாள் என்னைப் பார்த்து. எனக்கும் லேசான சந்தேகமிருந்தபடியால் கொஞ்சம் பெரிய ஆழாக்கை காட்டி, இதை எடுத்துக்கோ என்றேன். 10 மணிக்கு ஆரம்பித்த பிசிபேளாபாத் ஒருவழியாக 12.30க்கு குக்கரில் வைத்து அடுப்பில் ஏற்றபட்டது. பத்து நிமிடங்களாகியிருக்கும், ஏதோ நினைவு வந்து என்னிடம், ஏம்ப்பா, உப்பு போட்டேனா?ன்னு கேட்டார். நான் மீண்டும் ஹி ஹி. லேசாக முறைத்துகொண்டே கிச்சனுக்குள் போய்விட்டார்.

விசிலடித்தது குக்கர். வாசனை என்னவோ நன்றாகவே இருந்தது. டக்கென வெளியே வந்த தங்கமணி, என்னை பார்த்து மணி ௧ ஆச்சு, குளிக்கப் போகலியா? என்றார். இதோ கிளம்பிட்டேன் டார்லிங் என்றவாரே டவலுடன் கிளம்பிவிட்டேன். அதான். அதேதான். நீங்க என்னை யோசிக்கறீங்கன்னு தெரியும். ஆட்டுக்கு மஞ்சத் தண்ணி. எனக்கு சுடுதண்ணி.

பிசிபேளாபாத் இந்த சிங்கத்தை சீண்டிப்பார்க்கவிட்டால், எப்படியிருந்தது என்பதை அப்புறமா சொல்றேன்.

இப்போதைக்கு அப்பீட்டேய்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2