வியாழக்கிழமை (02-May) அங்கங்க பரவலா மழை. வெள்ளிக்கிழமை கிளம்பறதைப் பத்தி முடிவெடுக்க முடியாம ஒரே சஸ்பென்ஸ். பஹ்ரைன்-ல இருந்து கிளம்பி, பாதி வழியில மாட்டிக்கிட்டா என்ன பண்றது-னு ஒரே சஸ்பென்ஸ் + த்ரில்லர். இதையெல்லாம் மீறி கிளம்பிப் போனா, அட்வென்ச்சர் + சஸ்பென்ஸ் + த்ரில்லரா இருக்குமோ.. என்ன பண்றதுன்னு ஒரே டிஸ்கஷன் ஆப் தி கன்ப்யூஸன். நானும் சேதுமாதவன் சாரும், மற்றும் சுற்றமும் நட்பும், எல்லாரும் சேர்ந்து துபாய், அபுதாபி, சவுதி-னு இருக்கற எல்லா ப்ரெண்ட்ஸ் கிட்டயும் போன் பண்ணி மழை அப்டேட் கேட்டோம்.
"டேய் மழை வந்திருந்தாக்கூட இவ்வளவு கஷ்டபட்டிருக்க மாட்டோம். மழை பெய்யுதா மழை பெய்யுதா-னு 5 நிமிஷதுக்கு ஒரு தடவை நீங்க பண்ற டார்ச்சர் தான்-டா தாங்க முடியலை"-னு எதிர் முனை-ல எல்லாரும் பீல் பண்ணிருப்பாங்க. வெரி டெலிகேட் பொசிசன்.
அதுலயும் Citi ப்ரசன்னா தான் ரொம்ப பாதிக்கபட்டார். அதனால ஒரு வெப்சைட் லின்க் அனுப்பி, "இந்த தடவை மழை வந்தா பெரிய அளவுல பாதிப்பு இருக்க கூடாதுனு எச்சகச்ச முன்னேற்பாடுகள் பண்ணியிருக்காங்க. இந்த லின்க்-ல 30 நிமிஷதுக்கு ஒரு தடவை மழை பெய்யுதா, எங்க எல்லாம் தண்ணி தேங்கி பிரச்சனை ஆகியிருக்கு-னு அப்டேட் பண்ணிட்டே இருப்பாங்க. ஓயாம என்னை டார்ச்சர் பண்ற வேலை வெச்சுக்காத" என்று (ஆக்ரோஷமாக - மைண்ட் வாய்ஸில்) சொன்னார்.
சாயங்காலம் 6 மணி-க்கு மழையையும் பாதிப்புகளையும் பொறுத்து துபாய் போவதா வேண்டாமா என முடிவு செய்யலாம், என முடிவு செய்தோம். 6 மணி அப்படிங்கறது, அப்படி இப்படி 7 மணி ஆகிப்போச்சு. அது கூடப் பரவாயில்ல.. அப்படி இப்படி 8 மணி ஆயிடுச்சு. இப்போ கூட முடிவு பண்ணலைன்னா என்ன அர்த்தம்னு நீங்க கேக்கறது, எங்களுக்கு கேக்குது. உடனே முடிவு பண்ணோம். Citi ப்ரசன்னா-க்கு போன் பண்றதா முடிவு - பண்ணோம் - போனை எடுத்ததும் அவர் முதல்ல சொன்னது... "தூறல் நின்னு போச்சு".
"குடைக்குள் மழை - அது போன மாசம்.. குட்டி குட்டி மழை.. அது இந்த மாசம்"
"போன மாசம் நீ (மக்கள்/அரசு) ப்ளான் பண்ணாம இருந்த.. அதனால நான் வயலண்ட்டா வந்தேன்
இந்த மாசம் பக்கா-வா ப்ளான் பண்ணிட்ட.. அதனால நான்-வயலண்ட்டா (Non-Violent/சைலண்ட்டா) வரேன்"
துபாய் போனீங்களா இல்லயா? அதை முதல்ல சொல்லு.. அதை விட்டுட்டு பன்ச் டயலாக் சொல்லிட்டிருக்கியே அப்படின்னு நீங்க மைண்ட் வாய்ஸ்ல நினைக்கறீங்க தானே...
போனோம்.. ஒரு வழியா வியாழக்கிழமை ராத்திரி 8.30 மணிக்கு துபாய் போறதா முடிவு பண்ணோம். அடுத்த நாள் காலை 6 மணிக்கு கிளம்பறதா முடிவு பண்ணோம்.
(பிக்பாஸ் ஸ்டைலில் படிக்கவும்) "முதல் நாள் (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி"
நாங்க இன்னும் கிளம்பலை.. பின்ன.. முந்தின நாள் 8.30 மணிக்கு தான் துபாய் போறதா முடிவே பண்ணோம். பேக்கிங் அதுக்கப்பறம் தானே ஆரம்பிச்சோம்.. அதனால தூங்கவே 12 மணி ஆயிடுச்சு. காலை-ல 5 மணிக்கு வெச்ச அலாரம், நாம லேட்டா தூங்கினதைப் பாத்து இரக்கபட்டு, 5.45-க்கு தான் அடிச்சது.. அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க.. நீங்க நம்பலைன்னாலும் அதான் நெசம்.
அப்படி இப்படின்னு 6.45-க்கு கிளம்பினோம். ஓட ஓட ஓட தூரம் குறையலனு பாட்டு மாதிரி போறோம் போறோம் போயிட்டே.. டே.. டே.. இருக்கோம். பஹ்ரைன் பார்டர் - தாண்டி சவுதி போனதும் ஒரு 5 நிமிஷம் ப்ரேக். திரும்பவும் ஓட்டம். அடுத்த ஒரு 2 - 2.30 மணி நேரம் கழிச்சு திரும்பவும் ஒரு 5 நிமிஷம் ப்ரேக். அடுத்து சவுதி பார்டர் தாண்டி எமிரேட்ஸ் உள்ள போனதும், இன்னும் 2 தடவை ப்ரேக் எடுத்து சாயங்காலம் 5 மணி வாக்கில் துபாய் போனோம். பார்டர் இமிக்ரேஷன்-ல ஆன நேரத்தை விட நாங்க ப்ரேக் எடுத்த நேரம் தான் அதிகம்.. அட ஆமாங்க.. மழை அலர்ட்-டால யாருமே வண்டியை எடுக்கவே இல்ல போல. அதனால இமிக்ரேஷன்-ல ஆளே இல்ல.. ரோடெல்லாம் காலி.. கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் நாங்க மட்டும் தான்.
சவுதி-ல வண்டி ஸ்பீட் லிமிட் 120 தான். அதுவே எமிரேட்ஸ்-ல 160. ஆனா நான் அங்கயும் 130-ல தான் ஓட்டிட்டு இருந்தேன். இப்படியே போனா ராத்திரி 10 மணிக்கு தான் துபாய் போக முடியும்-னு தெரிஞ்சுபோச்சு. இதனால ஒரு ஐடியா பண்ணின சேதுமாதவன் சார், "நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்களேன். நான் கொஞ்ச நேரம் ஓட்டறேன்" அப்படின்னார். எனக்கும் லைட்டா தலை வலிக்கற மாதிரி இருந்துச்சு. சரி.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்த மாதிரியும் ஆச்சு.. அப்படியே எல்லார் கிட்டயும் எங்க இருக்கோம்.. எவ்வளவு நேரத்துல துபாய் போய் சேருவோம்-னு அப்டேட் பண்ண மாதிரியும் ஆச்சு-னு வண்டியை அவர்கிட்ட குடுத்தேன்.
இதுவரைக்கும் மிடில் லேன்-ல (மித வேகம் - மிக நன்று-னு) போயிட்டு இருந்த வண்டி, இப்போ லெப்ட் லேன்-ல (அதிவேக லேனில் - 160 அதிகபட்சம் இன்னும் கொஞ்சம் வேகம் அதை விட நன்று-னு) போக ஆரம்பிச்சது. எங்க வண்டி வேகமா வர வண்டிகளுக்காக ஒதுங்கி வழிவிட்ட காலம் போய், இப்போ மத்த வண்டிகள் எங்க வண்டிக்காக ஒதுங்கி வழி விட ஆரம்பிச்சாங்க. சேதுமாதவன் சார், "சர்" சேதுமாதவன் ஆனார். இப்படியாகத்தான் சாயங்காலம் 5 மணி வாக்கில் துபாய் போனோம்.
சேதுமாதவன் சாரும் அவர் பையனும், அவரோட ப்ரெண்ட் வீட்டுக்குப் போயிட்டாங்க. நானும் ஆதித்யாவும் ராத்திரி சாப்பிட்டு படுத்தாச்சு.
"இரண்டாவது நாள் (சனிக்கிழமை) காலை"
மறுநாள் காலை சேதுமாதவன் சாரும், அவ்யுக்த்தும் அந்த நண்பரின் வீட்ல பொங்கல் சாப்பிட்டு கிளம்பி வந்துட்டாங்க. நாங்க Citi ப்ரசன்னா வீட்ல உப்புமா/கிச்சடி (ரெண்டுக்கும் நடுல). நாங்களும் ஏதோ ஸ்கூலுக்குப் படிக்கப் போற மாதிரி மதியத்துக்கு வெஜ் ரைஸ் டப்பாவுக்கு எடுத்துட்டு, கிளம்பி அந்த போட்டி நடக்கற ஸ்கூலுக்குப் போனோம்.
👇இதுதான்அந்த ஸ்கூல்...ஷாப்பிங்-மால் ரேஞ்சுக்கு இருக்கு-ல...👇
டயத்துக்கு ஆரம்பித்து டயத்துக்கு ஒரு நிகழ்ச்சியை முடிக்கறதெல்லாம் "ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்" ரேஞ்சுக்கானது. இந்த போட்டியும் விதிவிலக்கல்ல. நிகழ்ச்சி ஆரம்பிச்சது 1 மணி நேரம் லேட். வந்திருக்கும் இவர்களே.. கலந்துகொள்ளூம் அவர்களே.. அவர்களுடன் வந்திருக்கும் இவர்களே.. நேரில் வராமல் டபாய்த்து ஆன்லைனில் (Skype/Zoom வகையறாக்கள்) மொக்கை போடும் அன்பு நெஞ்சங்களே என ஆத்திட்டு, லஞ்ச் பிரேக் விட்டார்கள். போட்டில கலந்துக்க வந்த ஸ்டூடண்ட்ஸ் மற்றும் அவங்க Mentor-க்கு (பயிற்சியாளர்) அவங்களே லஞ்ச் குடுத்தாங்க. அதுவும் சைவம் தேவைன்னா நீங்க அப்பாலிக்கா இருக்கற வரிசை-ல நில்லுங்க அப்படின்னு ரெண்டு தரப்புக்கும் சாப்பாடு ஏற்பாடு பண்ணிருந்தாங்க. பாராட்டுக்கள்.
அங்க மதியத்துக்கு பாஸ்தா-ன்னதும் பசங்க 2 பேரும் பாஞ்சிட்டாங்க. கொண்டு போன வெஜ் ரைஸ்-ச நானும் சேதுமாதவன் சாரும் சாப்பிட்டோம். இங்க தான் மீரா-ஜி யோட திறமையைக் கண்டு நான் வியந்தேன். காலைல உப்புமா/கிச்சடி சாப்பிட்டோம்-னு சொன்னேனே.. அதுல இருந்த அதே காய்கறிகள்.. ரவை-க்கு பதில் இதுல பாசுமதி அரிசி.. அவ்வளவே.. ஹோட்டல்-ல எல்லாம் ஒரே ஒரு பேஸ் வெச்சு பல வெரைட்டி சைட் டிஷ் பண்ற மாதிரி. ஆனா நம்ம சத்சங்க மக்களுக்கு இதெல்லாம் பழகிப் போன விஷயம். ஏன்னா, ஏகதின 4000 பாராயணம் (ஒரே நாளில் நாலாயிர திவ்யப்ரபந்தம் முழுசும் வந்தே பாரத் வேகத்தில் படிச்சு முடிப்போம்) சமயத்தில் சாயங்காலம் கிட்டதட்ட எல்லாருக்கும் கத்தி கத்தி வாசித்து தொண்டை காஞ்சு போயிருக்கும். அப்போ தொண்டைக்கு இதமா, சூடா ஒரு சூப் குடுப்பாங்க பாருங்க.. குளுகோஸ் சாப்பிட்ட மாதிரி தெம்பு வரும். ஆனா மதியம் பந்தியில் ரசம் சாப்பிட்டவங்களுக்கு மட்டுமே அதோட சூ"ப்"சுமம் தெரியும்.
"மூன்றாவது நாள் (ஞாயிறு) காலை"
மறுநாள் காலை தோசை.. மதியம் எப்படியும் பசங்க அந்த ஸ்கூல்-ல குடுக்கறதை தான் சாப்பிடுவாங்க அப்படிங்கறதால, எதுக்கு இருக்கட்டுமே-னு தயிர் சாதம் மட்டும் தான் குடுத்தாங்க மீரா-ஜி. "என்னோட innovati-veg-rice-அஹ் கிண்டல் பண்ணதால, உங்களுக்கு டப்பா கட்ட மாட்டேன்"னு சொல்லிட்டாங்க. சொல்லப் போனா அது ஒரு பாராட்டு.. அதுவும், சொன்னது நான். பாவம், சேதுமாதவன் சார் என்ன பண்ணார்? அவருக்கு மதிய சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே, அப்படியே மூஞ்சியை சோகமா வெச்சுட்டு Citi ப்ரசன்னா-வ பாத்தேன். "மதிய சாப்பாட்டுக்கு நான் ஏதாவது ஏற்பாடு பண்றேன்"-னு அவர் கண்ணாலயே சிக்னல் காமிச்சார். ஒரு ப்ரசன்னாவோட மனசு ஒரு ப்ரசன்னாவுக்கு தான் தெரியும்..
பசங்களை ஸ்கூலில் விட்டுட்டு, கொஞ்ச நேரம் அவங்க கூட இருந்துட்டு.. அப்பறம் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு.. அப்படியே கிளம்பி Citi ப்ரசன்னா வீட்டுக்கு வந்தோம். குழம்பு, ரசம், மோர்.. இலை போட்டு சாப்பாடுன்னு அசத்திட்டார் மனுஷன். வடை இல்லாத ஒரே ஒரு குறை தான்.. உண்ட மயக்கம் தீர கொஞ்ச நேரம் அப்படியே கட்டையை சாய்க்கலாம்னு பாத்தா, அதுக்குள்ள பசங்க, "இங்க நிகழ்ச்சி முடியப்போகுது" அப்படின்னு போன் பண்ணிட்டாங்க. கிளம்பிப் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு, திரும்பவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மேடைல ஏறி மானே தேனே பொன்மானே-ல்லாம் கேட்டுட்டு, கிளம்பி வந்தோம்.
நைட்டு டின்னர் முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்ததும் துணிமணியெல்லாம் எடுத்து பொட்டி-ல அடுக்கிட்டோம்.
"நான்காவது நாள் (திங்கள் கிழமை) காலை 5.30 மணி"
அடுத்த நாள் - திங்கள் கிழமை காலைல எழுந்ததும் பல்லைத் தேச்சுட்டு ஒரு காபி சாப்பிட்டதும் கிளம்பிட்டோம். பழைய பகையை மனசுல வெச்சுக்காம, எங்களுக்கு சாண்ட்விச், தயிர்சாதம் எல்லாம் கட்டிக் கொடுத்தார் மீரா-ஜி. வாழ்க வாழ்க..
மீண்டும் அதே ஓட ஓட ஓட தூரம் குறையல.... அப்படி இப்படியாக, மதியம் 2.30 வாக்கில் பஹ்ரைன் வந்தடைந்தோம்.
இனி: ஹலோ.. துபாயா... Citi ப்ரசன்னா இருக்காரா??? என்று அடிக்கடி போன் வரும்...
மீண்டும் செல்வோம்..
Comments
Post a Comment