லண்டன் லெட்டர்

பஹ்ரைன் 04-Aug-2016


அன்புள்ள  ____,

நாளது தேதி இங்கு அனைவரும் நலம். அங்கும் அனைவரும் நலமாக உள்ளீர்கள் என்று நம்புகிறேன். நான் கடந்த வாரம் லண்டன் சென்றுவந்தது குறித்து பகிர்ந்து கொள்ளக்கருதி இக்கடிதம் எழுதுகிறேன்.

புதன் நள்ளிரவு 1 மணிக்கு பஹ்ரைனில் இருந்து விமானம் புறப்பட்டது. 7 மணிநேர பயணம். ஏர்-ஹோஸ்டஸ் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை. ஏர் இந்தியா பணிப்பெண்கள் தேவலாம்(??) என்று தோன்றியது. வியாழக்கிழமை லண்டன் நேரம் காலை 6.15க்கு விமானம் தரையிறங்கியது. சென்ற முறையே ட்யூப் எனும் அண்டர்கிரவுண்ட் ரயிலில் பயணித்திருந்தாலும், இம்முறை விமானநிலையத்திலிருந்து லண்டன் நகரம் சென்றதே ரயிலில் தான். டாக்சி ஏறவேயில்லை. டாக்சி அத்தனை காஸ்ட்லி என்பதும் ஒரு காரணம்.

எல்லா ரயில் நிலையங்களிலும் அத்தனை சிறந்த கட்டமைப்புகள். நிறைய வழித்தடங்கள் உண்டு. ஒரு சில ரயில் நிலையங்களில் இரண்டு மூன்று வழித்தடங்கள் இருக்கும் பட்சத்தில் ரயில் நிலையமே ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மால் போல அத்தனை பிரம்மாண்டமாய் இருக்கிறது. Piccadilly Line, District Line, City Line இப்படி பல வழித்தடங்கள். ரயில் மாற்றி ஏறிவிட்டால் அதோகதி தான். ஆனால் அப்படி மாற்றி ஏறுவதற்கு வழிதவறிப் போவதற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவே. எல்லா ரயில் நிலையங்களிலும் அந்தந்த நிலையத்திலிருந்து செல்லும் இடங்களுக்கான வரைபடங்கள் இருக்கின்றன. ரயில்களிலும் அதே வரைபடங்கள் இடைவெளியில்லாமல் ஒட்டியிருக்கிறார்கள். ரயிலின் வழித்தடம், தற்போது நிற்கும் நிலையம், அடுத்து வரப்போகும் நிலையம் என அறிவிப்பு வந்துகொண்டே இருக்கிறது.

ரயில், பஸ், போட்/படகு என அனைத்து இடங்களிலும் ஒரே பயண அட்டை(Oyster Card) மூலம் பயணம் செய்ய முடியும். ரயில் பயணத்தில் ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு தடம் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒவ்வொரு நிலையத்திலும் அட்டையை தேய்க்க வேண்டிய அவசியமில்லை. கிளம்பும் இடத்திலும் கடைசியில் இறங்கும் நிலையத்திலும் தேய்த்தல் போதுமானது. மொத்த பயணத்திற்குமான தொகையை எடுத்துக்கொள்கிறார்கள். இது போன்ற வசதிகளுக்காகவாவது ஆங்கிலேயன் இன்னும் ஒரு 50 வருடகாலம் இந்தியாவை ஆட்சி செய்திருக்கலாம் என்று தோன்றியது.


வியாழன் முழுதும் அலுவலகத்தில் கழிந்தது. வெள்ளிக்கிழமை மாலை நண்பர் அருண் பிரசாத்தை சந்தித்தேன். ஈஸ்ட் ஹாம் (East Ham) என்னும் இடத்திற்கு வரச்சொன்னார். அவரும் அலுவலகத்திலிருந்து நேரே அங்கு வந்துவிட்டார். அந்தப் பகுதியில் பெரும்பாலும் இந்தியர்கள் தான் என்று சொன்னார். ட்ரைனில் வந்த பாதிக்கும் மேற்பட்ட கூட்டம் அந்த நிறுத்தத்தில் இறங்கியதில்  ஆச்சரியம் இல்லை. அங்கிருக்கும் மஹாலக்ஷ்மி  கோவிலுக்கு அழைத்து சென்றார். சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றும் அவரும் அவருடைய நண்பர்களும் தான் அதனை வீடியோ கவரேஜ் செய்ததாகவும் சொன்னார். சிற்பங்கள் எல்லாம் அத்தனை சிறப்பாக செதுக்கியிருந்தார்கள். கோவிலின் சிறப்பம்சமாக 18 அடி  உயர ஆஞ்சநேயர் சிலை ஒன்றை நிறுவியிருந்தனர். சிறிது நேரத்தில் திருமதி. செல்வப்பிரியா அருண் வந்து சேர்ந்தார். சென்னை சிட்டி குரூப்பில் செல்வாவும் வேலை செய்திருந்ததால், முன்பே பரிச்சியம் தான். செல்வாவுடன் அருண் மீண்டும் கோவிலுக்குள் செல்ல, நான் வெளியே வந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த கோவில் இருந்த அதையே சாலையில் நிறைய இந்திய/தமிழக உணவகங்கள். நமது ஊர் மனிதர்கள். சில கடைகளில் தமிழிலும் பெயர்ப் பலகைகள். ஐரோப்பிய கார்கள். இரவு 7.30 மணிக்கும், வெயில் அடித்தது. அத்தனை வெளிச்சம். 9.30 வாக்கில் தான் இருட்ட துவங்குகிறது.

டேஸ்ட் ஆப் இந்தியா என்னும் உணவகத்தில் நமது ஊர் உணவு வாங்கிக்கொடுத்து சாகக் கிடந்த நாக்கை காப்பாற்றினார் அருண். அங்கு போட்டோ எடுத்துக்கொண்டோம். அப்போது அருணுக்கு செல்வாவுக்கும் நடந்த உரையாடலில், சில பல வருடங்களுக்கு முந்தைய இளமைத் துள்ளலான அருணும் செல்வாவும் வந்து போனார்கள்.

"சாம்பார்சட்னிக்கும் உண்டோ அடைக்குந்தாழ் தோசைக்கு

இவையல்லால் பூசல் வரும்"

நமது உணவிற்கு ஈடு இணை உண்டா என்ன? அருண், நீவிர் வாழ்க. நும் குலம் வாழ்க.

அவர்களின் மகள் தன்வி பற்றி பேசினார்கள். இருவரின் கண்களிலும் அத்தனை பெருமையும் சந்தோஷமும். 15 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே தியேட்டரில் கபாலி படம் பார்க்க முடியும் என்பதால்  வருத்தமாம் 8 வயது தன்விக்கு. "நான் எங்கேயும் வரலை. வீட்டிலேயே சிவாஜி, எந்திரன் படம் பாத்துக்கறேன்" என்று சொல்லி, உணவகத்திற்கு வர மறுத்துவிட்டாளாம்.

மற்றபடி சம்பிரதாய விசாரிப்புகள். பஹ்ரைனைப் பற்றி நானும், லண்டனைப் பற்றி அவர்களும் கொஞ்சம் பேசினோம். செல்வாவிடம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு மாற்றம், என்னை வாங்க போங்க என்று அழைத்தார். அருணிடமும், அவங்க எத்தனை மணிக்கு வருவாங்க என்றெல்லாம் கேட்டுள்ளார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சிட்டி குரூப்பில் வேலை செய்யும் சமயத்தில் செல்வா இப்படி எல்லாம் என்னை அழைத்ததில்லை. நான் அப்போது சின்னப் பையன் என்பதால், வாடா போடா என்று ஒருமையில்தான் அழைப்பார். கால ஓட்டத்தின் மாற்றங்களில் இதுவும் ஒன்று போலும்.


சிட்டி குரூப் நண்பர்கள் பலரையும் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில் இருந்த காலம் தான் எத்தனை இனிமையானது... பேசியபடியே நினைவுகளை மலரச் செய்துகொண்டிருந்தோம்.

லண்டனை சுற்றி பார்க்க முடிந்ததா? பார்க்க போகிறாயா என்று கேட்டார் அருண். ஞாயிற்றுக்கிழமை போகலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னேன். "அம்மா வந்திருக்காங்க. அவங்களை இங்க பக்கத்தில இருக்கற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போகப்போறேன். நீயும் வாயேன்" என்றார். சரி என்று சொல்லி உடனே கமிட்டாகிவிட்டேன். தனியாக ஊர் சுற்றப் போய், என் அழகில் மயங்கி யாராவது வெள்ளைக்காரி கடத்திக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம் தான். (துப்புபவர்கள் தனியாக இன்பாக்சில் வந்து துப்பவும். இங்கே வேண்டாம்... பப்ளிக் பப்ளிக்)

சனிக்கிழமை மொத்தமும் அலுவலகத்தில் கழிந்தது. ஞாயிற்றுக்கிழமை நான் வராவிட்டாலும் சமாளித்துவிடுவார்கள் என்பதை ஒருமுறைக்கு இருமுறை கன்பார்ம் செய்துவிட்டு, அருணுக்கு நான் வருவதை உறுதி செய்வதற்காக மெசேஜ் அனுப்பினேன். சிறிது நேரத்தில் அவரே போனில் அழைத்தார். லண்டன் ஐ (London Eye, அதாங்க அந்தப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய  ராட்டினம். இதை மில்லினியம் வீல் என்றும் அழைக்கிறார்கள்), பிக் பென் (Big Ben, அதாங்க மணிக்கூண்டு), பக்கிங்ஹாம் பேலஸ் (Buckingham Palace, அதாங்க அரண்மனை) இந்த இடங்களைப் பார்க்கப் போகலாம் என்றும், எங்கே, எத்தனை மணிக்கு வரவேண்டும் என்பதை காலை சொல்வதாக சொன்னார்.

ஞாயிற்றுக்கிழமை காலை அருணுக்கு நான் போன் செய்தேன். வாட்டர்லூ (Waterloo) ஸ்டேஷன் வருமாறு சொன்னார். நான் இருந்த இடத்தில இருந்து அங்கு செல்ல நேரடி ரயில் இல்லை. அதனால்  எம்பாங்க்மென்ட் (Embankment) நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்து தேம்ஸ் நதியை கடந்து 5 நிமிட நடையில் வாட்டர்லூ அடையலாம். நான் பையிலிருந்த கேமராவை எடுத்து கழுத்தில் மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன். தேம்ஸ் நதியை கடக்கும்போது பாலத்தின் மீதிருந்து சிலபல போட்டோக்கள் எடுத்தேன். லண்டனில் நிறையப் பெண்கள் குட்டைப் பாவாடை போட்டுக்கொண்டு... கடிதத்தில் வேண்டாம். நேரில் சொல்கிறேன்.

லண்டன் ஐ-யை கடந்து தான் வாட்டர்லூ நிலையம் செல்லவேண்டும். எனவே அங்கு நின்று மீண்டும் சிலபல போட்டோக்கள். 1999இல் நிறுவப்பட்ட இந்த லண்டன் ஐ, 443அடி உயரமும் 394அடி விட்டமும் கொண்ட பிரம்மாண்டமான ராட்டினம். இதில் ஏறிக்கொண்டால் கிட்டத்தட்ட முழு லண்டனையும் பார்க்க முடியும். சிறிது நேரத்தில் அருண் வந்து சேர்ந்தார். அவருடன் அவரது அம்மா, மகள் தன்வி மற்றும் வேறொரு நண்பருடைய மனைவியும் இரண்டு குழந்தைகளும் வந்திருந்தனர். செல்வா சிறிது நேரம் கழித்து வந்து சேர்ந்துகொண்டார்.

சிறிது நேரம் அங்கிருந்த சிறுவர்களுக்கான விளையாட்டு திடலில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அருண் அவர்களை போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். நானும் சில போட்டோக்களை க்ளிக்கினேன். கேமராக்களையும் லென்ஸ்களையும் புகைப்படங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். லெமன் சாதம், உருளைக்கிழங்கு பொரியல், சிப்ஸ், சோயா தயிரில் செய்த தயிர் சாதம் என சிறிது  வயிற்றுக்கு ஈயப்பட்டது. அருணின் அம்மா இன்னும் கொஞ்சம் சாப்பிடுமாறு வற்புறுத்தினார். மனைவியைப் பிரிந்த சோகத்தில்(!!!) இருந்த நான், மறுத்துவிட்டேன். எனது நிலையைப் பார்த்து அவர்களே வருத்தப்பட்டனர் (!!??!!!!!!)

அந்த நண்பரின் குழந்தைகள் இருவரும் படு சுட்டி. ஒரு நிமிடம் கூட உட்காரவில்லை. ஓடிக்கொண்டே இருந்தனர். அதில் பெரியவன், 3 வயதிருக்கும் என நினைக்கிறேன், அங்கிருந்த தாழ்ந்த ஒரு மரக்கிளையை மடக்கி இரண்டு கால்களுக்கும் நடுவில் வைத்து அழுத்திக்கொண்டிருந்தான். "அடேய், நீ கிளையை வளைச்சதும் சரியில்ல, அதை புடிச்சிருக்கற இடமும் சரியில்ல" என நான் நினைத்துக் கொண்டிரும்போதே அருணும் அந்தப் பையனின் அம்மாவும் மரத்தை விட்டு, உடனே வந்து அருகில் உட்காருமாறு சத்தம்போட்டனர்.

உணவருந்திவிட்டு, லண்டன் ஐ அருகில் சென்றோம். மிகநீண்ட வரிசை நின்றுகொண்டிருந்தது. 1 மணிநேரத்துக்கும் மேல் காத்திருக்கவேண்டும் என்பதால், லண்டன் ஐ-யில் சுற்றும் எண்ணம் கைவிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நல்ல கூட்டம். பலர் தனியாகவோ அல்லது குழுவாகவோ பல வித்தை/வேடிக்கைகள் செய்துகொண்டிருந்தனர். ஒருவர் இரும்புச் சங்கிலியால் உடல் முழுதும் இறுக்கப் பிணைக்கப்பட்டு அந்தக் கட்டிலிருந்து 19 நொடிகளில் தன்னை விடுவித்துக்கொண்டு சாகசம் நிகழ்த்திக் காட்டினார். ஆனால் அதற்க்கு முன் கிட்டத்தட்ட 19 நிமிடங்கள் மொக்கை போட்டார்.

குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்க அங்கிருந்த சிறிய ராட்டினத்தில் ஒரு ரவுண்டு வந்தனர். அந்த நண்பரின் சின்னப்பையன் தனியாக சுற்ற முடியாது என்பதால், அருணும் அவனோடு சுற்றினார். சுற்றும் ராட்டினதோடு சேர்த்து அருணை போட்டோ எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஆனால், கேமரா அவரை விடுத்து, அவர் அருகில் அமர்ந்து சுற்றிக்கொண்டிருந்த பெண்ணையே போகஸ் (Focus) செய்தது. கேமராவும் நம்மைப்போலவே இருந்தால் என்னதான் செய்வது??

பிறகு அங்கிருந்து 10-15 நிமிட நடையில் பிக் பென் (Big Ben) அடைந்தோம். ஒரு பெரிய மாளிகை/அரண்மனையின் ஒரு பகுதி தான் இந்த பிக் பென். 4 பக்கமும் கடிகாரம் கொண்ட மணிக்கூண்டு. உண்மையில் இந்த மணிக்கூண்டில் இருக்கும் மணி (Bell) தான் பிக் பென். அத்தனை பெரிய மணி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 1859 தொடங்கி இன்றுவரை சுழன்றுகொண்டிருக்கிறது. நடுவில் சில பல இயக்க குளறுபடிகள், கோளாறுகள் என இருந்தாலும், சரிசெய்யப்பட்டு சுழல்கிறது, காலச்சக்கரத்துடன் சேர்த்து.

அங்கிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். சாலை வழி, பூங்கா வழி என்று இரண்டு வழிகள் உண்டு பிக் பென்-னில் இருந்து அரண்மனையை அடைய. பூங்கா வழியில் சென்றோம். அங்கிருந்த ஒரு பெரிய மரத்தடியில் சிறிது ஓய்வெடுத்தோம். அதிரசம், எள் மிட்டாய், தட்டைவடை என மீண்டும் சிறிது வயிற்றுக்கு ஈயப்பட்டது.

அத்தனை பெரிய பூங்காவில் பறவைகளுக்கும் பூக்களுக்கும் பஞ்சமில்லை. இதுவரை நான் கண்டிராத அத்தனை பெரிய அன்னப்பறவைகளை அங்கு தான் கண்டேன். பார்த்த காக்கைகள் எல்லாம் சொல்லிவைத்தார் போல அண்டங்காக்கைகள் தான். பெயர் தெரியாத பூக்கள் எல்லாம் அழகாக இருந்தன. சில பல க்ளிக்குகள்.

இதற்குள் அந்த 3 வயது பையன் சாப்பிட்டிருந்த சிப்ஸ், டோரிட்டோஸ், இன்ன பிற எல்லாம் சேர்த்துக் குழப்பி அடித்ததில் அவனுக்கு வயிற்றைக் கலக்கிவிட்டது போலும். கழிவறை தேடிக் கண்டுபிடித்து சென்றோம். காசு போட்டால் தான் கதவு திறக்கும் என்று போடப்பட்டிருந்தது. பெண்களுக்கு நீண்ட வரிசை காத்திருப்பு. ஆண்களுக்கு அத்தனை கூட்டமில்லை. ஆண்கள் கழிவறையில் மட்டும் தான் அந்த கட்டணக் கதவு வேலை செய்தது. பெண்கள் கழிவறையில் ஏதோ இயந்திர கோளாறு போலும். அந்த கதவு திறந்தே இருந்தது. கழிவறைக்கு கதவு கூட ஆண்களை பழி வாங்குவதை நினைத்து மிக வருந்தினேன்.


அடுத்த சில நிமிட நடையில் பக்கிங்ஹாம் அரண்மனையை அடைந்தோம். 1703-ல் கட்டப்பட்டு யாரோ ஒரு பிரபு-வின் மாளிகையாக இருந்த கட்டிடம், 19-ம் நூற்றாண்டில் புனரமைக்கப்பட்டு, விஸ்தீரணம் செய்யப்பட்டது. 1837-ல் விக்டோரியா ராணி அங்கு குடியேறினார். அதுமுதல்தான் அந்தக் கட்டிடம் அரண்மனை அந்தஸ்து பெற்றது என்று சொல்லலாம். நாங்கள் சென்றது மதியம் 3 மணி ஆகையால் வரலாற்று சிறப்புமிக்க காவலர் பணிமாற்றம் பார்க்க முடியவில்லை. அடுத்த காவலர் பணிமாற்றம் மறுநாள் (திங்கள்) காலை 11.30க்கு தான் என்று அறிவிப்பு இருந்தது. அரண்மனையை சுற்றிலும் பூங்காவும் புல்வெளியும் பச்சைப் பசேலென கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. எதிர்பார்த்த அளவுக்கு வெளி வேலைப்பாடுகளில் அத்தனை பிரம்மாண்டம் இல்லை. ஒருவேளை இந்திய அரண்மனைகளை பார்த்திருப்பதால் அப்படி தோன்றியிருக்கக்கூடும்.

பெரிய மேடை ஒன்று அமைத்து அதில் விக்டோரியா ராணியின் சிலை ஒன்றை நிறுவியிருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் பலரும் அரண்மனையுடனும் ராணியின் சிலையுடனும் செல்பி எடுத்துக்கொ(ல்)ள்கின்றனர்.


நான் லண்டன் வந்திருப்பதை அறிந்த எலிஸபெத் ராணி, சந்திக்க விருப்பம் தெரிவித்து அரண்மனை விருந்துக்கும் வரவேண்டும் என்று விடுத்த அழைப்பை, அடுத்த முறை மனைவியுடன் வரும்போது கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லி மறுத்துவிட்டேன். அதற்குள் அரண்மனைக்கு புது வர்ணம் தீட்டுங்கள் என்றும் சொல்லிவந்துள்ளேன் (வெள்ளையடிக்க கூடவா காசு இல்ல??).

மீண்டும் ரயில்நிலையம் நோக்கி ஒரு நடைப் பயணம். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு காபி. அனைவரும் ஒரே ரயிலில் தான் திரும்பினோம். கொஞ்சம் கூட்டம் இருந்தது. இரண்டு நிலையங்களில் இடம் கிடைக்காமல் மூன்றாவது நிலையத்தில் தான் உட்கார இடம் கிடைத்தது. பேச ஆரம்பிப்பதற்குள் நான் இறங்கவேண்டிய டவர்ஹில் (Tower Hill) நிலையம் வந்துவிட்டது. அவசரமாக இறங்கவேண்டிய சூழ்நிலையில் அருணின் அம்மாவிடம் நான் விடைபெறுவதை சரியாகக் கூட சொல்ல முடியவில்லை. அதில் கொஞ்சம் வருத்தம் தான் (நிதர்சமான சத்தியமான உண்மை). அடுத்த வருடத்தில் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் என்று அருணிடம் சொல்லியிருக்கிறேன். எனது வாக்கை கம்பெனி MD காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கை... அதானே எல்லாம்...

அங்கிருந்த 5 நாட்களில் வெள்ளி(மாலை மட்டும்), ஞாயிறு தவிர்த்து மற்றைய நாட்கள் எல்லாம் அலுவலகத்திலேயே கழிந்துவிட்டதால், சொல்வதற்கு சிறப்பாக ஒன்றுமில்லை.

அடுத்த லண்டன் லெட்டர், குடும்பத்துடன் சென்று வந்தால் மட்டுமே எழுதுவேன். குடும்பத்தில் அனைவருக்கும் எனது வணக்கத்தை சொல்லவும்.


மற்றவை நேரில்.


--

என்றும் அன்புடன்,
ப்ரசன்ன வரதன்

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2