அகவை 60, ரேபான் கண்ணாடி, புலிநகம் செயின், புல்லட்




சிங்கம் என்றால் என் தந்தைதான்
செல்லம் என்றால் என் தந்தை தான்
கண் தூங்கினால் துயில் நீங்கினால்
என் தந்தை தான் என் தந்தை தான்
எல்லோருக்கும் அவர் விந்தை தான்

இன்று அப்பாவுக்கு அகவை 60. ரேபான் கண்ணாடி அணிந்து, புலிநகம் செயினை போட்டுக்கொண்டு, உத்திரியத்தை கக்கத்தில் இரண்டு பக்கமும் பறக்கவிட்டபடி புல்லட்டில் ஊரார் பார்க்க செல்லவேண்டும் என்பது அப்பாவின் ஆசை.

சீனி அய்யர் (ஸ்ரீனிவாச ஐயங்கார், என் அப்பாவின் தாத்தா) குடும்பம் நொடித்து ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகிவிட்டது என்று பேசிய ஊரார் முன்னே, நாங்கள் நொடித்துவிடவில்லை என்று காட்டவேண்டும் என்பதற்காகவே மேலே சொன்னதை செய்ய ஆசை அப்பாவுக்கு.

கோவில் கைங்கர்யம், வயல்கள், தோட்டம், மாடுகள், வேலையாட்கள் என்று இருந்த குடும்பம், பாட்டியின் அகால மறைவிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிதிநிலை கரைந்து தோட்டம், மாடுகள், வேலையாட்கள் எல்லாம் இழந்து, கோவில் கைங்கர்யமும் கோவில் சம்பந்தப்பட்ட வயல்கள் மட்டும் எஞ்சி நின்ற சூழ்நிலையில் அப்பாவின் இரண்டு அண்ணன்களும், வேலை நிமித்தம் வெளியூர்களில் செட்டிலாகிவிட்டனர். ஆனால் அப்பா மட்டும் சொந்த ஊரிலேயே. ஜோதிடம், வாஸ்து, நீரோட்டம் இவற்றின் மூலம் அன்றாட தேவைகளுக்கு மட்டுமே வருமானம்.

பலவேறுபட்ட பிரச்சனைகளையும் சமாளித்து, எங்கள் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டியபோதே அவர் சாதித்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் தரைத்தளம் முடிந்து, முதல் தளம் முடிய சிறிது காலதாமதம் ஆனதால், பல்வேறுபட்ட பேச்சுக்கள் எழுந்தன. நானுமே கூட வீடு கட்டுவதற்கு அவரை அவதூறாகப் பேசி எதிர்த்து நின்றிருக்கிறேன். பதின்ம வயதுகளில் பையன்களுக்கு அப்பாவை கண்டால் தான் பிடிக்காதே என்று சமாதானம் செய்துகொண்டாலும், இப்போது யோசித்துப் பார்த்தால், உப்புப் பெறாத காரணங்களுக்காகவே எங்களுக்குள் பிணக்கு இருந்திருக்கிறது.

இன்றளவும் கூட குடும்ப பாரத்தை தானே சுமக்கிறார். பள்ளியிலும் கல்லூரியிலும் கற்றுக்கொண்டதை விட, அவரிடம் தான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர் தொழிலுக்காக செல்லும் இடங்களுக்கெல்லாம் என்னையும் அழைத்து செல்வார். ஆனால் அப்போதெல்லாம், அவர் பணத்திற்க்காக படும் கஷ்டமும் உழைப்பும் தெரியாது. சிறுவன் ஆகையால், பைக்கில் ஜாலியாக அவருடன் சென்று வருவேன். பலதரப்பட்ட மக்களையும் அவர்கள் வாழ்க்கை தரங்களையும் பார்த்திருக்கிறேன். கோடீஸ்வரன் தொடங்கி அடுத்தவேளை உணவுக்கு வழியறியாத குடும்பம் வரை கண்டிருக்கிறேன்.

இன்று ஓரளவுக்கு பக்குவப்பட்டவனாக (பக்குவப்பட்டவன் என்று நினைக்கிறேன்) இருப்பதற்கு காரணம், என் அப்பா. ஆரண்யகாண்டம் படத்தில் ஒரு சிறுவனிடம் "உங்கப்பா-ன்னா ரொம்ப புடிக்குமாடா" என்று ஒரு வசனம் வரும். அந்த சிறுவன் "அப்படியில்ல.. ஆனா அவர் எங்கப்பா" என்று பதில் சொல்வான். போலவே சிறுவயதில் அவருடன் நிறைய சண்டையிட்டிருக்கிறேன். நான் கேட்டதை அவர் வாங்கித்தரவில்லை என்பதற்காக. இப்போதும் சண்டையிடுகிறேன். அவர் கேட்டதை நான் வாங்கித்தரவில்லை என்பதற்காக.

ரேபான் கண்ணாடி அணிந்து புல்லட்டில் ஊரைப் பலமுறை சுற்றியாகிவிட்டது. இப்போதெல்லாம் புல்லட்டை விடவும் பொலீரோ-வில் தான் அதிகம் பயணிக்கிறார். ஏளனமாய்ப் பார்த்தவர்களும் பேசியவர்களும் இன்று ஏதோ ஒரு காரணத்திற்க்காக அப்பாவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வாட்ஸாப், பேஸ்புக் என என்னை விடவும் அப்டேட்டாக இருக்கிறார்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா.

சண்டைகள் தொடரும்.. பாசமும் வளரும்.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2