ஸ்வாமி ராமானுஜர் ஸஹஸ்ராப்தி

2015ல் நாராயணன் சாரும் சுந்தரராஜன் சாரும் லிப்டில் செல்லும்போது சாதாரணமாக, "ராமானுஜர் 1000வது வருஷம் வைபவம் வருது. இந்த வருஷம் ஆரம்பிச்சு 2017 வரைக்கும் 3 வருஷம் நடத்தினா நன்னாயிருக்கும்" என்று நாராயணன் சார் சொல்ல, "அவ்வளவுதானே சார், பண்ணிடலாம்" என்று சுந்தரராஜன் சார் சொல்ல, அதுவே இத்தனை பெரிய வைபவத்திற்கான ஆரம்பப்புள்ளியாக ஆனது.


முதல் வருடம் குழந்தைகளை வைத்து ராமானுஜர் நாடகம் நடத்தலாம் என்றும், இரண்டாவது வருடம் பெரியவர்கள் நடிப்பதாகவும், மூன்றாவது வருடம் மீண்டும் குழந்தைகளை வைத்தே நாடகம் அரங்கேற்றி வைபவத்தை முடிக்கலாம் என்றும் முடிவானது.

முதல் வருடம் ஏற்பாடுகள் ஆரம்பமாயின. பிரசன்னா கதை எழுதுவார், லக்ஷ்மி நரசிம்மன் டைரக்ட் பண்ணுவார் என்று நாராயணன் சார் சொல்ல, "நானா... அதுவும் ராமானுஜர் கதையா? சார்.. வேற யாரவது எழுதட்டுமே" என்றேன். "உங்களால முடியும்.. எழுதுங்க" என்றார் நாராயணன் சார். இதோ, 3வது வருடத்திற்கும் கதை வசனமெழுதி முடித்தாயிற்று.

முதல் வருடம் நிரம்பவே அவகாசம் இருந்தது. குழந்தைகளை தமிழ் பேசவைப்பதே பெரிய விஷயமாக இருந்தது. வசனங்கள் தங்கிலீஷ்-ல் மாற்றம் செய்யப்பட்டன. வசனத்தையும், உச்சரிப்பையும், நடிப்புடன் சேர்த்து குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை தேர்ந்த கலைஞர்களாக மாற்றினார் நரசிம்மன் அண்ணா.

யாருமே எதிர்பாராத அளவில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தனர் குழந்தைகள். கண்ணீர் மல்க, வார்த்தைகள் வராமல், அனைவரையும் கட்டியணைத்தார் நரசிம்மன். அதிலும் அத்தனை நாளிதழ்களிலும் நாடக போட்டோக்களை பிரசுரித்து, அனைவரது பாராட்டையும் பெற்று, கவனத்தையும் ஈர்த்தார் நரசிம்மன் என்று சொன்னால் மிகையாகாது.

இரண்டாவது வருடம் (2016) குழந்தைகள் ஒரு காட்சியில் மட்டும் வந்து நாடகத்தை ஆரம்பிக்க, பிறகு பெரியவர்கள் தொடர்வதாக தீர்மானம் செய்தோம். பிறகு குழந்தைகள் ஸ்வாமி தேசிகர் நாடகம் நடிக்கட்டும் என்றும், பெரியவர்கள் மட்டுமே ஸ்வாமி ராமானுஜர் நாடகம் நடிப்பதாக ஏற்பாடானது.
ஆனால் அது வருடக் கடைசியில் செய்யலாம் என்று முடிவானதால், ராமானுஜர் திருநக்ஷத்திரத்தின் போது ஏதாவது ஒரு நிகழ்வு கொண்டாட வேண்டும் என்று பேச்செழுந்தபோது, பட்டிமன்றம் நடத்தலாம் என்றார் நாராயணன் சார். அதேபோல், இரண்டு குழுக்களாக பிரித்து பட்டிமன்றம் நடந்தது. கோலப்போட்டி, சம்பிரதாய தளிகை என, இன்னும் சில அன்றைய தின கொண்டாட்டத்தில் அடக்கம்.

ராமானுஜர் நாடகத்திற்கு நான் கதை வசனம் எழுத, சிட்டி நாராயணன் இயக்குவதாகவும், தேசிகர் நாடகத்திற்கு நரசிம்மன் கதை வசனம் எழுதி, அவரே இயக்குவதாகவும் முடிவானது. வைபவத்தின் ஒரு பகுதியாக தாமல் ராமகிருஷ்ணனை உபன்யாசம் செய்ய அழைத்துவருவதாக ஏற்பாடானது. நாராயணீயம் தலைப்பில் 8 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற உபன்யாசம், பஹ்ரைன் பாவகதர்களுக்கு நிச்சயம் பெரிய ஆச்சரியத்தையும் புதியதோர் அனுபவத்தையும் அளித்தது. நாளுக்கு நாள் அதிகமான கூட்டம், 8வது நாளில், இரவு 11 மணிவரையில் இருந்து உபன்யாசத்தை ரசித்தனர்.

குழந்தைகள் நடித்த தேசிகர் நாடகத்தைப் பார்த்த தாமல் ராமகிருஷ்ணன் அவர்கள், வெகுவாகப் பாராட்டினார். தேசிகர் காலத்தை கண்முன்னே கொண்டுவந்ததாக மிகவும் சிலாகித்துப் பேசினார். குழந்தைகளின் நடிப்புக்கு, பெரியவர்கள் ஈடுகொடுக்க முடியுமா என்ற கேள்வியோடு பேச்சை முடித்தார்.

பின்னர் ராமானுஜர் நாடகத்தை கண்ட அவர், இதுவும் சிறப்பாக இருந்தது. ஆனால் என்னை கவர்ந்தது, குழந்தைகள் நாடகமே என்று நடக்காத பட்டிமன்றத்திற்கு தீர்ப்பளித்தார்.

2017ம் ஆண்டு ராமானுஜரின் ஆயிரமாவது திருநக்ஷத்திரத்தை கொண்டாட உலகமே ஆயத்தமானது. பஹ்ரைனில் கொண்டாட, பல்வேறு திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, ஆனால் செயல்வடிவம் பெறாமல், நாடகமும் குழந்தைகளுக்கான போட்டிகளும் நடத்தலாம் என்று முடிவானது.

போட்டிகளில் கலந்துகொள்ள குழந்தைகள் ஆர்வம் காட்டுவார்களா என்ற சந்தேகம் எழ, வெகுசில குழந்தைகளே ஆர்வம் காட்டி சந்தேகத்தை மெய்ப்பிக்கவிருந்த நிலையில் கடைசி ஒருசில நாட்களில், இதற்கு மேல் குழந்தைகள் கலந்துகொண்டால் சமாளிக்க முடியுமா என்ற அளவிற்கு நிலைமை தலைகீழானது. நாடகத்திற்கு மிகக்குறைந்த காலத்தில் குழந்தைகள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்து அனைவரையும் கவர்ந்தனர் என்றால், நிச்சயம் ஸ்வாமி ராமானுஜர் தான் இதை நடத்திவைத்தார் என்பதில் ஐயமில்லை.

தான் இல்லாவிட்டாலும், தனது மனதில் தோன்றிய பல்லாக்கிற்கும், தேருக்கும் ஏற்பாடுகள் செய்து, மிகச்சிறப்பான ஒரு புறப்பாடு நடந்ததை போனில்(Whatsapp Video Call) மட்டுமே கண்டுகளித்த நரசிம்மன் அண்ணாவின் மனத்துயர் பற்றி சொல்ல வார்த்தையில்லை. நிச்சயம் அவரது பிரிவு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்றால் மிகையல்ல. வைபவம் நடத்திய அனைவருமே அந்த வெற்றிடத்தை உணர்ந்தனர். மீண்டும் அவர் பஹ்ரைனிற்கு வர அந்த எம்பெருமானார் அருள்புரிய வேண்டும்.

ராமானுஜருக்கு விழா எடுக்கலாம் என்று நாராயணன் சார் மனதில் தோன்றிய சிறு பொறி, அதனை சிரமேற்கொண்டு சுந்தரராஜன் சார் கொடுத்த செயல்வடிவம், 3 வருடங்கள் தொடர்ந்து அத்தனை நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக்கொண்டு வெகுசிறப்பாக நடத்திக்கொடுத்த அத்தனை அத்தனை பாகவதர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

Comments

  1. அருமை வாழ்த்துகள் திரு.பிரசன்னா...🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2