அப்பாவி ரங்கமணிகளுக்கு அடிபொலி டிப்ஸ்

தங்கமணியிடம் சிக்கித்தவித்து அல்லல்படும் (என்னைப் போன்ற) அப்பாவி ரங்கமணிகளே...

ஸ்கூல் லீவ் விட்டு 1 மாசமாச்சு.. தங்கமணி வெக்கேஷன் போயி 1 மாசமாச்சு.. இப்போ வந்து இந்த மாதிரி டிப்ஸ் குடுக்கறீங்களே என்பவர்களுக்கு, எனக்கு வெக்கேஷன் ஆரம்பமாகி 2 நாட்கள் தான் ஆகிறது. நாம் அலுவலகத்தில் லீவ் எடுத்துக்கொண்டு வெக்கேஷன் போனால் தான் வெக்கேஷன் என்று அர்த்தம் இல்லை. தங்கமணியும் குழந்தைகளும் மட்டும் ஊருக்குப் போவதாக ஏற்பாடாகி, ரங்கமணிகளுக்கு ஜாக்பாட் அடிக்கக்கூடும். இதுவும் நமக்கு வெக்கேஷனே.

முதலில் அவர்கள் ஊருக்குப் போவதற்கு 1 வாரம் முன்பாகவே தொடங்கி கொஞ்சம் சோகமாக இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டும். அவர்களை பிரிந்து எப்படி இருக்கப் போகிறோமோ என்று சில பல பிட்டுக்களை அவ்வப்போது சொல்லிவைக்க வேண்டும். ஆனால் இது ஓவர்டோஸாகிப் போனால், சரி.. நீங்களும் வந்திருங்க என்பது போலவோ, நாங்க மட்டும் எதுக்குங்க போகணும்.. நீங்க வேற இங்க தனியா கஷ்டப்படுவீங்க என்பது போலவோ எதிர்மறை விளைவுகள் வரக்கூடும். எனவே, பிட்டுகள் அளவாக இருத்தல் நலம்.


ஊருக்கு கிளம்பும் அன்று எந்த சச்சரவுகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. ஒரு மாதம் கழித்து வந்தவுடனே அது பெரிய கலவரமாகலாம். எனவே, முடிந்த அளவிற்கு சண்டை சச்சரவுகள் தவிர்த்தல் நலம். ஏர்போர்ட்டில் அவர்களை வழியனுப்ப போகும்போது, கொஞ்சம் எக்ஸ்டரா சோகம் காட்டலாம். தவறில்லை. கொஞ்சநேரத்தில் ஊருக்குப் போகப்போகிறோம் என்ற மனநிலையில் தங்கமணிகள் இருப்பதால், நம்மைப் பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள்.

அவர்கள் ஊருக்கு கிளம்பியவுடன் ஏர்போர்ட்டிலேயே "என் பொண்டாட்டி ஊருக்கு போயிடுச்சே... நோ தங்கமணி என்ஜாய்" என்பது போல மனநிலை இருந்தாலும், அடக்கி வாசிக்கவேண்டும். போலீஸ் கெடுபிடி தனி.. ஆனால், கூட வந்திருக்கும் நண்பர்களோ, அவர்களது தங்கமணிகளோ இதனை நம் தங்கமணியிடம் போட்டுக்கொடுக்கக் கூடும்.


பிளாட்டில் அக்கம்பக்கம் நண்பர்கள் On The Go Spy-யாக மாறி தங்கமணியிடம் நம்மைப் பற்றி சொல்வார்கள். நன்மையையும் உண்டு.. எதிர்வினையும் உண்டு... முடிந்தளவிற்கு அவர்கள் முன், கொஞ்சம் நம்மைப் பற்றி சோகமாகவும் தங்கமணியைப் பற்றி கொஞ்சம் புகழ்ந்தும் பேசவேண்டும். தங்கமணிகள் வெக்கேஷன் முடிந்து வந்தபிறகும் கூட இது போன்ற போட்டுக்கொடுக்கும் சம்பவங்கள் நடக்கக்கூடும்

சில ரங்கமணிகளே தங்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற புகைச்சலில் சகஜமாக பேசுவது போல, "உங்க வீட்டுக்கு 2-3 தடவை வந்திருந்தேன்.. ஆனால் அவரைக் காணோமே.. நீங்க இல்லைன்னு ரொம்ப ஊரை சுத்த ஆரம்பிச்சுட்டார் போல" என்று நம் தங்கமணியிடம் ஏதாவது போட்டுக்கொடுக்கக்கூடும். எனவே, அவர்கள் கண்ணில்படும்படியாக நம் காலணியை விட்டுவிட்டு, வேறு புதிய காலணி அணிந்து செல்வது நலம். பிற்பாடு, வீட்டில் தான் இருந்தேன்.. பாத்ரூமில் இருந்தேன்.. தூங்கினேன் என்பது போல ஏதாவது சொல்லி சமாளிக்கலாம்.

அந்த ஒருமாதமோ இரண்டு மாதமோ மட்டும் நம் உணர்ச்சிகளை ரிவர்ஸில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். அதாவது தங்கமணி ஊருக்கு கிளம்பியவுடனே மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும்.. அவர்கள் திரும்பிவரும் தேதி நெருங்க நெருங்க சோகம் நிரம்பும்.. ஆனால் அவர்கள் சென்றவுடனே சோகமாக இருப்பது போலவும், அவர்கள் திரும்பிவரும் தேதி நெருங்கும் சமயம் மகிழ்ச்சியாக இருப்பது போலவும் காட்டிக்கொள்ளவேண்டும். இது கொஞ்சம் கஷ்டம்தான்.. முயற்சிசெய்தால் முடியும். அப்பேற்பட்ட தங்கமணிகளையே சமாளிக்கும் ரங்கமணியாகிய நம்மால் முடியாத காரியம் எதுவும் உண்டா என்ன...

நம் உடல் எடை சாப்பாடு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். தங்கமணி இல்லாத மகிழ்ச்சியில் அளவுக்கதிகமாக சாப்பிட்டு வெயிட் ஏறவும் கூடாது.. ரொம்பவும் ஊரைச்சுற்றிவிட்டு சாப்பிடாமலும் இருத்தல் கூடாது. "நான் ஊர்ல இல்லைன்னதும் தின்னு தின்னு வெயிட் போட்டுடீங்களா என்றோ, சாப்பிடக்கூட நேரமில்லாம அப்படி என்ன கிழிச்சீங்க" என்றோ கேள்விகள் வரும்.

சமநிலையில் இருந்தால், "அப்போ நான் ஊருக்குப் போனதுல உங்களுக்கு வருத்தமே இல்லை.. என்னை (யும் குழந்தைகளையும்) பிரிஞ்சு இருந்தா உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை.. அப்படித்தானே" என்ற எடக்குமடக்காக கேள்விக்கணைகள் வரலாம். "எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று அண்ணா சொல்லியிருக்கிறார்" என்பது போல எதையாவது சொல்லி சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தங்கமணி வருவதற்கு சில தினங்கள் முன்பாகவே தொடங்கி வீட்டை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் செய்த காரியங்களுக்கான எந்த தடயங்களும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக கிச்சன் ஏரியாவை பளபளப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். இது நம்மை தங்கமணிகளின் Good Books-ல் வைக்கும்.


பொறுப்பு துறப்பு: நிதர்சனத்தில் இதுபோல் இல்லாமல் சில தங்கமணிகள் உக்கிரமாக இருக்கக்கூடும். அல்லது குண்டக்கமண்டக்க கேள்விகள் கேட்டு போட்டுவாங்கக்கூடும். மேலே சொன்ன விஷயங்கள் நடக்காமலும் போகலாம். இதைப் படிக்கும் எந்த ரங்கமணிக்காவது ஒருவேளை எதிர்மறை விளைவுகள் நேர்ந்தால், உடனே என் தங்கமணியிடம் என்னைப் பற்றிப் போட்டுக்கொடுக்க கூடாது... It's a Gentlemen's Agreement.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2