காற்றலை

சிறுவயதில் பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள் மத்தியில் அஷோக் 4 பட்டங்களை இணைத்து பறக்கவிட்டு ஒரு நூலை இழுப்பதன் மூலம் திசையெல்லாம் மாற்றிப் பறக்கச் செய்து கெத்து காட்டுவான். சாதாரண பேப்பர் மடித்து செய்யும் ராக்கெட்டையே வித்யாசமாக செய்து அதில் ஒரு ரோஜாப்பூவோடு பறக்கவைத்து +1 படிக்கும்போது ஒரு பெண்ணிற்கு ப்ரொபோஸ் செய்தான். அசந்துவிட்டாள். அவளுக்கும் இவன் மீது ஒரு கடைக்கண் க்ரஷ் இருந்தது. உடனே காதலை ஏற்றுக்கொண்டாள். ஆனால் அவளை விடவும் எதையாவது பறக்கவைப்பதில் அலாதி ஈடுபாடு அஷோக்கிற்கு. இவனைவிட்டு அவள் பறந்துவிட்டாள்.

இவனுடன் பள்ளியில் படித்த ரோஹித்தின் தாத்தா திடீரென யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடுவாராம். வீட்டில் இருக்கும் பொருளையெல்லாம் இடம் மாற்றி வைப்பாராம். சிறிது நேரத்தில் மீண்டும் கண்ணுக்கு தெரிவாராம். இந்தக் கதையை கேட்டு இவன் சிரித்து வயிறு வலித்து ஆனாலும் அடக்க முடியாமல் சிரித்தான். "டேய் ரோஹித்.. யார்கிட்ட கதை விடுற.. இவங்க தாத்தா மறைவாராம்.. வீட்ல சாமானை எடுத்து இடம் மாத்தி வைப்பாராம்.. திரும்பவும் கண்ணுக்கு தெரிவாராம்.. போடா டேய்.. யாரவது LKG பசங்க கிட்ட சொல்லு.. நம்புவாங்க", என்று அநியாயமாக கிண்டலடித்து விரட்டிவிட்டிருக்கிறான்.

"ஒருநாள் அந்தக் கருங்கழுதை கல்லை எடுத்துட்டு வந்து காட்டறேன்டா" என்று சொல்லிவிட்டுப் போனான் ரோஹித். அது நடக்கவேயில்லை. பரீட்சை வந்ததால் எல்லாரும் மறந்தும் விட்டனர்.

கல்லூரியில் இவனது Drone ப்ராஜெக்ட் பேப்பரில் பக்காவாக விவரித்திருந்தாலும், செயல்முறையில் தோல்வி அடைந்தது. ஆனாலும் இவனது திறமையையும் கான்செப்ட்டையும் பார்த்து Drota (Drone Taxi) நிறுவனம் கேம்பஸ் இன்டர்வியூவில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் அடித்தார்கள். சில வருடங்களிலேயே அஷோக் Drota (Drone Taxi) கம்பெனியின் தலைமை ஆராய்ச்சியாளன். முதன்முதலில் UAV (Unmanned Aerial Vehicle) 2011-ல்  கான்செப்டை அறிமுகம் செய்தது இவர்கள் தான். இதன் பின்னர் தான் சிறிய அளவிலான கேமரா மற்றும் டெலிவரி ட்ரோன்-கள் வர ஆரம்பித்தன.

2011-ல் அறிமுகம் செய்திருந்தாலும் மக்களுக்கான அல்லது பெரிய சாதனங்களுக்கான இவர்களது ட்ரோன் சோதனை முயற்சி பல தோல்விகளையே தழுவி வந்தது. அஷோக் மீது கம்பெனியில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில் 2016-ல் நிலையான ஒரு ட்ரோன் ஒன்றை உருவாக்கி தான் யாரென நிரூபித்தான். 50 கிலோ அளவுள்ள ஒரு மனிதனை அல்லது பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். அதிகபட்சம் 180 கிலோமீட்டர்கள்.

அடுத்த 3 மாதத்தில் அதை இன்னும் மேம்படுத்தி அதிகபட்சம் 100 கிலோ எடையும் 250 கிலோமீட்டர் தூரமும் கொண்டுசெல்லும் அளவுக்கு மாற்றியமைத்தனர். சில பல கட்ட Beta சோதனைகளுக்குப் பிறகு முதல் ஆளில்லா பறக்கும் டாக்ஸி Uber, Ola-விற்கு போட்டியாக களத்தில் இறங்கியது. அரசாங்கமே கூட போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத ரிமோட் ஏரியாக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதிக்காக இந்த டாக்சியை பரிசீலித்துக் கொண்டிருந்தது.

இப்போது அஷோக் Drota-வில் ஒரு பார்ட்னர்.  நினைத்தது நினைக்காதது எல்லாம் நொடியில் கிடைக்கும் அளவுக்கு கோடிகளில் சம்பளம். ஆனாலும் அவன் தேடல் நிற்கவில்லை. Transportation-ல் வெற்றி பெற்றாகிவிட்டது. இப்போது அவனது தேடல் Teleportation நோக்கி இருந்தது.

அஷோக் teleportation பற்றி யோசிக்கும்போதெல்லாம் ரோஹித்தும் அவன் தாத்தாவும் நினைவுக்கு வருவார்கள். இது கட்டுக்கதை என்று தோன்றினாலும், ஒருவேளை உண்மையாக இருந்தால்?? என்று நினைப்பான். ச்சே.. என்ன முட்டாள்தனம்.. அபத்தம்.. என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்.

சில நாட்களாகவே ரோஹித்தை தொடர்புகொண்டு அவன் தாத்தா விஷயத்தை கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருந்தது. கண்டிப்பாக பங்கமாய் கலாய்ப்பான். நான் சொன்னப்போ நம்பலை.. இப்போ என்னடா என்று ஓட்டுவான்.. ஆனாலும் கேட்டே ஆகவேண்டும் என்று தோன்றியது. போன் செய்தான்.

டேய் அஷோக்கு.. டாக்ஸி கம்பெனி ஓனர்... எப்படி டா இருக்க.. ஆளே இல்லாத கடை-ல யாருக்கு டா டாக்ஸி ஓட்டிட்டு இருக்க?

டேய்.. நான் ஓனர் இல்லை. வெறும்  பார்ட்னர் மட்டும் தான்.

ஓனரோ பார்ட்னரோ.. ஏதோ ஒன்னு.. அதை விடு.. பரவாயில்லையே.. இத்தனை நாள் கழிச்சு ஞாபகம் வெச்சு போன் பண்ணியிருக்கியே... சில பல ருக்கியே-க்களுக்கு பிறகு, "ஏண்டா உங்க தாத்தா ஏதோ காணாம போவாரு.. வீட்ல இருக்கற பொருளை எல்லாம் இடம் மாத்தி வெப்பாரு-ன்னு சொல்லுவியே.. அதைப் பத்தி கொஞ்சம் சொல்லேன்".

சிரிப்பாய் சிரித்தபின், "என்னடா இத்தனை வருஷம் கழிச்சு எங்க தாத்தா மேல உனக்கு ஆர்வம்?" என்று கேட்டான். இல்லடா.. ஒரு ரிசர்ச் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கு உபயோகமா இருக்குமா-னு தான் கேட்டேன்.

ம்ம்... இப்போவாவது நான் சொன்னது உண்மை-னு நம்பிக்கை வந்துச்சே.. ஆனா அந்தக் கல் இப்போ இல்லைடா.. எங்க தாத்தாவோட சேர்ந்து அந்த கல்லோட ரகசியமும் புதைஞ்சிடுச்சு.

என்னடா சொல்ற??

ஆமாடா.. ஒரு தடவை எங்கப்பா தாத்தாவுக்கு தெரியாம அந்தக் கல்லை எடுத்துட்டுப் போயி பேங்க்-ல இருந்து பணம் திருடிட்டு வந்துட்டாரு. அது தாத்தாவுக்கு தெரிஞ்சுபோச்சு. தப்பான விஷயத்துக்கு அந்தக் கல் உபயோகப்படக்கூடாதுன்னு எங்க தாத்தா பல தடவை எங்கப்பா கிட்ட சொல்லியிருக்காரு. ஆனாலும் எங்கப்பா கேக்கலை. ஏதோ விளையாட்டா போயி பேங்க்-ல இருந்து பணம் எடுத்துட்டு வந்துட்டாரு. இந்தக் கல் இருந்தா நம்ம குடும்பத்துக்கே ஆபத்து வந்திரும்-னு சொல்லி தாத்தா கோவத்துல அந்தக் கல்லை எங்கயோ ஒளிச்சு வெச்சுட்டாரு. தாத்தாவோட அந்தக் கல் பத்தின ரகசியமும் புதைஞ்சு 10 வருஷம் ஆச்சு.

பிறகு அஷோக் ரோஹித்தை தொடர்புகொள்ளவே இல்லை. கம்பெனியின் டாக்ஸியை இன்னும் பெரிதுபடுத்துவது தவிர மக்களிடம் பிரபலப்படுத்துவது, இவற்றில் பிஸியாகிவிட்டான். Teleportation குறித்த ஆராய்ச்சியை அப்போதைக்கு கிடப்பில் போட்டான்.

சுமார் நான்கு மாதங்கள் கழித்து ரோஹித் போன் செய்தான். "அஷோக்கு.. எங்க தாத்தாவோட டைரியில அந்தக் கல் பத்தின இன்பர்மேஷன் இருக்கு டா". டக்கென அஷோக்கின் கண்கள் பிரகாசமாயின. "சொல்லுடா.. என்ன எழுதியிருக்கார்?"

அய்.. அப்படியெல்லாம் உடனே சொல்லிட முடியுமா...

ரோஹித்.. இது என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட். ப்ளீஸ்..சொல்லு. அந்தக் கல் பத்தி உங்க தாத்தா என்ன எழுதியிருக்கார்?

சரி சரி.. சொல்றேன். அந்தக் கல் கழுதை தலையில இருக்குமாம்.

அட.. இவ்வளவு தானா.. தேங்க்ஸ் டா.. நான் பாத்துக்கறேன்.

டேய் டேய்.. இருடா.. நீ நினைக்கற மாதிரி அது அவ்வளவு ஈஸி இல்லை. அதுக்கு சில பல ப்ரொசீஜர் இருக்கு. அந்தக் கல் அத்தனை சீக்கிரம் கிடைக்காது. நீ பாட்டுக்கு ஏதாவது ஒரு கழுதையைப் புடிச்சு மண்டையை பிளந்திடாத.. ஒரு குறிப்பிட்ட நாளில் கழுதையைப் புடிச்சு... அதுவும் கருங்கழுதை.. அதுக்கு சில பல பரிகாரங்கள் செஞ்சு அப்பறம் மண்டையை உடைச்சாதான் கல் கிடைக்கும். அதுக்கு நீ ஆறுமாசம் வெயிட் பண்ணனும்.

என்ன டா சொல்ற?? எதுக்கு ஆறு மாசம்?

ஆமாடா.. ஆதிவாரம் - ஞாயிற்றுக்கிழமை - புனர்பூசம் நட்சத்திரம் இதெல்லாம் சேர்ந்து வரும் அன்னிக்கு கருங்கழுதைக்கு சில பூஜைகள் செஞ்சு அப்பறம் அதோட மண்டையை உடைச்சா, ரத்தம் வராது. மூளைக்கு நடுவில இந்தக் கருஞ்சிவப்பு கல் இருக்குமாம். அதை எடுத்து வாயில் அதக்கி வெச்சுக்கிட்டா, யார் கண்ணுக்கும் தெரிய மாட்டோம். இதை வெச்சு தான் எங்க தாத்தா வித்தை காட்டியிருக்காரு. இந்த மூணு விஷயமும் சேர்ந்து அமையற நாள் இன்னும் ஆறுமாசம் கழிச்சு தான் வருது.

ஓஹோ.. இதுல இவ்வளவு விஷயம் இருக்கா.. சரி இப்போ என்ன பண்ணலாம் சொல்லு ரோஹித்.

ஒண்ணும் பண்ண முடியாது. ஆறுமாசம் ஆறப்போட வேண்டியது தான்.

Drone-ன் மார்க்கெட்டிங் மற்றும் கமர்ஷியல் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் அசோக்கும் ஆறுமாதம் அமைதியாய் இருந்தான். குறிப்பிட்ட நாளுக்கு ஒரு மாதம் முன்னதாகவே ரோஹித்துக்கு போன் செய்தான்.

எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருக்கேன். அடுத்த மாசம் 14ம் தேதி வெள்ளிக்கிழமை நீ நம்ப ஊருக்கு வந்திடு. 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நமக்கு தேவையான நாள். தாத்தா டைரி-ல சொல்லிருக்கற விஷயம் எல்லாம் அன்னிக்கு கரெக்ட்டா செட் ஆகுது.

சரி டா.. கண்டிப்பா கல் கிடைச்சுடும் தானே??

வாடா மொதல்ல.. கழுதை மண்டை-ல கல் இல்லைன்னா, என் மண்டையைப் பிளந்திடுவ போலயே..

ஹாஹா.. இல்ல டா.. ட்ரீம் ப்ராஜெக்ட்.. சொன்னேனே..

ஓவர் ஆக்ஷன் உடம்புக்கு ஆகாது டா.. அடுத்த மாசம் வா.. அப்பறம் பேசுவோம்.

அதற்கு பிறகு ஒவ்வொரு நாளும் அஷோக்கிற்கு ஒரு வருடம் போல இருந்தது. 13ம் தேதியே ஊருக்கு வந்துவிட்டான். ரோஹித்துக்கு இத்தனை வருடங்கள் கழித்து இவனைப் பார்த்ததில் மகிழ்ச்சி. மேலும் சில பல நண்பர்களை சந்தித்தார்கள்.

ஏண்டா ரோஹித்.. இவங்களுக்கு எல்லாம் நம்ம கல் விஷயம் பத்தி...

யாருக்கும் எதுவும் தெரியாது.. நீயே உளறி வைக்காத..

ஓஹ்.. ஓகே ஓகே.. சாரி டா.. எல்லாரும் நம்ம ப்ரெண்ட்ஸ் தானே-ன்னு சொல்லிட்டியோ-னு நினைச்சேன்.

ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. கழுதையும் வந்தது. என்னென்னவோ பூஜைகள் செய்தான் அந்த மந்திரவாதி. காலையில் 4 மணிக்கு ஆரம்பித்தார்கள். யாருமே இந்தப்பக்கம் அந்தப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கவில்லை. சர்வத்தையும் அடக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். சரியாக மதியம் 12 மணிக்கு அந்த மந்திரவாதி ஏதோ வெறி பிடித்தவன் போல காட்டுக்கூச்சல் போட்டுக்கொண்டே கருங்கழுதையின் மண்டையில் வெறும் கைகளால் ஓங்கி அறைந்தான்.

அஷோக் பயத்தில் தெறித்து ஒதுங்கினான். ரோஹித் மட்டும் திடமாக உட்கார்ந்திருந்தான். என்ன ஆச்சர்யம்.. கழுதையின் மண்டையிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் கூட வரவில்லை. ரோஹித்தின் கண்ணில் மின்னல் பிரகாசம். தன் தாத்தா சொல்லியிருந்த குறிப்பு சரியாக இருப்பது அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. அதைவிடவும் அந்தக் கல் கிடைக்கபோவது இன்னும் சந்தோஷம்.

ரோஹித்துக்கு அந்தக் கல்லை வைத்து பணம் சம்பாதிப்பதெல்லாம் அவனுக்கு ரெண்டாம் பட்சம் தான். அதை வைத்திருந்தாலே போதும். அஷோக்கிற்கு அந்தக் கல் எப்படி வேலை செய்கிறது? அதை வாயில் அதக்கிக்கொண்டால் எப்படி உருவம் மறையும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். எனவே இருவரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு  வந்தனர். 6 மாதத்திலிருந்து 1 வருடம் வரை ஆராய்ச்சிக்கு கல் அஷோக்கிடம் இருக்கும். பிறகு ரோஹித் வாங்கிக்கொள்வான்.

கல் கைக்கு வந்தவுடன் பரபரவென வேலைகளை தொடங்கினான் அஷோக். கம்பெனி ஆட்களிடம் விஷயம் லீக்காகி விட்டால் ஏதாவது பிரச்சனை வருமென்ற காரணத்தால், ஆராய்ச்சிக்காக இன்டெர்ன்ஷிப் செய்துகொண்டிருந்த ஒருவனை கூட்டிவந்தான். Lab-ன் பூட்டப்பட்ட கண்ணாடி அறையில் அந்தப் பையன் வாயில் கல்லை போட்டதும் மறைந்து விட்டான். அவன் அதை உணரவில்லை. ஆனால் அஷோக் அரண்டுவிட்டான். தெர்மல் இமேஜிங் மூலம் தெரிந்த உருவம், சாதாரண கண்களுக்கு தெரியவில்லை.

அந்தப் பையனுக்கோ, என்னடா கம்பெனில எவ்வளவு பெரிய ஆள்.. கோடீஸ்வரன்.. நம்மளை கூட்டிட்டு வந்து கண்ணாடி ரூமுக்குள்ள விட்டு ஏதோ கல்லை வாயில போட்டுக்க சொல்லி நிக்க வெச்சுட்டான்?? என்று தோன்றியது.

"சார்.. எவ்வளவு நேரம் இங்க இருக்கணும்" என்று அந்தப் பையன் கேட்டதும் தான் சுயநினைவுக்கு வந்து, அடுத்த கட்ட வேலைகளை ஆரம்பித்தான். வாயில் போட்டதும் எச்சில் பட்டு அந்தக் கல்லில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன.. அதனால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று AI, தெர்மல் இமேஜிங் உள்ளிட்ட இரண்டு மூன்று நுட்பங்கள் மூலம் அத்தனையும் படம்பிடித்தான். பிறகு அதை ஆராய்ச்சி செய்தான்.

உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து உருவம் மறைகிறது என்கிற வரையில் இவனுக்குப் போதுமானது. அதை வைத்து teleportation கருவியை எப்படி வடிவமைப்பது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அந்தக் கல்லில் எச்சில் பட்டவுடன் ஒருவித வேதி மாற்றம் ஏற்பட்டு நம் உடல் செல்கள், ரத்தம், எலும்புகள் நரம்புகள் எல்லாம் நிறமற்றவையாகி விடுகின்றன. கிட்டத்தட்ட Hollowman படத்தில் ஹீரோவுக்கு நிகழ்வது போன்ற effect. கல்லை வாயிலிருந்து எடுத்ததும் சில நொடிகளில் உடல் மீண்டும் இயல்புக்கு வந்துவிடுகிறது. அசந்து விட்டான்.

Drota-விலிருந்து வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக teleportation ஆராய்ச்சியை தொடங்கினான். அந்த +1 பெண் போனபிறகு ரொமான்ஸில் ஈடுபாடு இல்லாது போனது. Infatuation, காதல், காமம் எல்லாமே ஆராய்ச்சியில் இருந்ததால், இதுவரையிலும் பிரம்மச்சாரி தான். வேறெதிலும் கவனம் சிதறாமல் ஒரேவாக்கில் நினைத்ததை நோக்கி ஓட முடிந்தது. அந்தக் கல்லால் உடலில் ஏற்படும் மாற்றங்களை செயற்கையாக உருவாக்க முயற்சி செய்தான். முதற்கட்ட முயற்சிகள் எல்லாம் தோல்வி. கொஞ்சம் கொஞ்சமாக ஆய்வில் முன்னேறிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் பேசியபடி 6 மாதம் கழித்து கல்லை ரோஹித்திடம் கொடுத்துவிட்டான். "திரும்ப தேவைப்பட்டால் வாங்கிக்கறேன்" என்று சொல்லியிருந்தான். ரோஹித்தும் ஒப்புக்கொண்டான்.

ஒரு பொருளை எப்படி அணு (Atom) அளவில் பிரித்து, மீண்டும் வேறொரு இடத்தில அதன் உருவம் மாறாமல் மீண்டும் சேர்ப்பது என்பதில் அத்தனை சவால்கள் இருந்தன. அந்தக் கல்லை வைத்து செய்த ஆராய்ச்சிக்குப் பிறகு அணு அளவில் பிரிப்பதில் கொஞ்சம் சுலபமாக இருந்தது.

அடுத்தகட்டமாக உயிருள்ள உடலை வைத்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். அது இன்னும் சவாலாக இருந்தது. எலியை வைத்து ஆராய்ச்சியை ஆரம்பித்தான். ஆனால் எலியின் செல்களை பிரிப்பது அத்தனை சுலபமாக இல்லை. பல எலிகளை ரணகொடூரமாக பரலோகம் அனுப்பியபிறகு செல்களாகப் பிரிப்பதை வெற்றிகரமாக முடித்தான். இப்போது அவனுக்கு முன்னாலிருக்கும் சவால், பிரிக்கப்பட்ட எலியை வேறொரு இடத்திற்கு மாற்றி சேர்ப்பது. கிட்டத்தட்ட Fax போல. ஒரு மெஷினில் உள்வாங்கி, வேறொரு மெஷினில் வேறொரு இடத்தில் மீண்டும் உருவாக்குவது. Fax மெஷினின் அடிப்படையை செல் பரிமாற்றத்திற்கு எடுத்துக்கொண்டு, Receiving End-ல் ஒரு 3-D பிரிண்ட்டரை இணைத்தான்.

ஆனால் மீண்டும் சேர்ப்பதில் பிரச்சனை ஆரம்பித்தது. தலையில் வாலும், முதுகில் இரண்டும், வயிற்றில் இரண்டுமாக கால்கள் சேர்ந்தன. கண்கள் கழுத்தில்.. வயிற்றுப்பகுதி கால்களுக்குப் பக்கத்தில் ஒரு காது  சேர்ந்தது. மற்றொரு காதை காணவேயில்லை.

ரோஹித்திடம் பேசி மீண்டும் கல்லை வாங்கிவந்தான். இம்முறை மிக சக்திவாய்ந்த அதி நவீன Neuro AI எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனைகளை செய்தான். அதன் முடிவுகளை வைத்து மீண்டும் எலி ஆராய்ச்சியை தொடங்கினான். இம்முறையும் எலியை செல்களாகப் பிரிப்பதுவரை சுலபமாக முடித்தான். ஆனால் மீண்டும் சேரவேயில்லை. பல முறை முயற்சித்தும் எலி மீண்டு வரவேயில்லை. 3-D பிரிண்ட்டரின் செட்டிங் எல்லாம் சரிபார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது தான் அவனது Reunite Algorithm-ல் பிழை இருப்பதைக் கண்டான். எல்லாம் சரியாகத்தான் coding செய்திருந்தான். எப்படி இந்தப் பிழை வந்ததென தெரியவில்லை. பிறகு முந்தைய version rollback செய்து, அதில் உருவம் சரியாக மீண்டும் சேர்வதற்கான coding சரி செய்தான். புதிய எலி.. மீண்டும் தொடங்கியது ஆராய்ச்சி. சக்ஸஸ்.. வெற்றிகரமாக எலியை செல்களாகப் பிரித்து மீண்டும் பழைய உருவத்துடன் சேர்த்துவிட்டான்.

யாரோ அவனருகில் நிற்பது போலிருந்தது. ஏதோ நினைவு பொறித்தட்ட, "ரோஹித்.. இங்க தான் இருக்கியா?" என்று கத்தினான். ம்ஹ்ம்.. பதிலில்லை. உடனே தெர்மல் இமேஜிங் மெஷினை திருப்பி ரூம் முழுதும் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை.  மனப்பிரமையாக இருக்குமென தனக்குத்தானே சொல்லிவிட்டு, ஆராய்ச்சியை தொடர்ந்தான்.

இது மட்டும் வெற்றியடைந்தால், மனிதன் நொடிகளில் நாடு விட்டு நாடு சென்று வர முடியும். நேரம், எரிபொருள் என பல விஷயங்கள் மிச்சப்படுத்தலாம். அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகள் பள்ளி முடித்து வந்தவுடன், இந்தியாவில் இருக்கும் தாத்தா பாட்டியுடன் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு இரவு உணவு முடித்து, மீண்டும் அமெரிக்கா வந்து தூங்கி காலையில் பள்ளி சென்று விடலாம். நினைத்துப் பார்க்கவே எத்தனை கிளர்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறது... உறவுகளில் தூரத்தால் பிரிவு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

ஒன்றல்ல இரண்டல்ல.. 25 எலிகளை Lab-ன் ஒரு மூலையிலிருக்கும் மெஷின் மூலமாக உறிஞ்சி, மற்றொரு மூலையில் இருக்கும் 3-D பிரிண்ட்டர் மூலம் ஒன்று சேர்த்து உயிருடன் ஓடவிட்டான். கண்களில் நீர் வழிந்தது. இதுவரை அவன் வாழ்க்கையில் இத்தனை சந்தோஷமாக இருந்ததில்லை. +1 பெண் காதலை ஏற்றுக்கொண்டபோதும் சரி.. Drota-வில் சேர்ந்து கோடிகளில் சம்பாதித்தது வரை.. இந்தக் கணம் அத்தனை சந்தோஷமாக உணர்ந்தான். யாருமே இதுவரை செய்யாத சவாலான விஷயத்தை தனியொருவனாக சாதித்த கர்வம்.


உடனே ரோஹித்துக்கு போன் செய்தான். "சக்ஸஸ் டா.. சக்ஸஸ்.. என்னோட teleportation research சக்ஸஸ் ஆயிடுச்சு டா. அதுக்கு நீ குடுத்த கல் தான் ரொம்ப உதவியா இருந்துச்சு. தேங்க்ஸ் டா"

சூப்பர் டா அஷோக்.. நான் எதிர்பாத்ததை விடவும் சீக்கிரம் முடிச்சுட்ட.. அடுத்து என்ன பண்ணப்போற?

இதுக்கு Patent வாங்கணும். தனி கம்பெனி ஆரம்பிச்சு ப்ராப்பரா கவர்மெண்ட் அப்ரூவலோட இதை மக்களுக்கு பயன்படும் ஒரு திட்டமா கொண்டு போயி சேக்கணும். அதுக்கு முன்னாடி ஒரு Human Trial பாக்கணும்.

பெரிய லெவல்ல யோசிக்கற.. நீ நினைச்சபடியே எல்லாம் நடக்கணும். இந்த மாதிரி ஒரு விஷயம் மக்களுக்கு போயி சேரணும். வாழ்த்துகள் அஷோக். இனிமேல் போன் பண்ணுவியா?? இல்ல இந்த கல் விஷயம் மாதிரி ஏதாவது தேவை இருந்தா மட்டும் தானா??

அப்டி எல்லாம் இல்ல ரோஹித். அடிக்கடி பேசுவோம். நீ ஏன் என் கம்பெனில பார்ட்னரா சேரக் கூடாது?

எது பார்ட்னரா? அதுக்கெல்லாம் பணத்துக்கு நான் எங்க போவேன்? கோடிக்கணக்குல வேணுமே உன்னோட ப்ராஜெக்ட்டுக்கு..

அதான் கல் இருக்கே டா.. ஏதாவது ஒரு பிரைவேட் பேங்க்-ல ஒரு பிராஞ்சு-ல போயி எடுத்துட்டு வந்தாலே போதுமேடா... ஹா ஹா ஹா...

அஷோக்.. இந்த விஷயத்தில் எங்க தாத்தா பாலிசி தான் நான் பாலோ பண்றேன். இந்தக் கல்லை எக்காரணம் கொண்டும் கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்த மாட்டேன். அப்பறம் நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, இந்தக் கல் விஷயம் நம்ம 2 பேருக்குள்ள தான் இருக்கணும்.

ஓகே ஓகே. டென்ஷன் ஆகாத ரோஹித்.. சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்.. பணமெல்லாம் வேண்டாம். நீ என்னோட கம்பெனில பார்ட்னர். அவ்வளவு தான். சீக்கிரம் அடுத்த Update கொடுக்கறேன். பை..

ஓகே அஷோக். என்ன ஹெல்ப் வேணாலும் சொல்லு.

கண்டிப்பா..

அஷோக் அடுத்த 2 நாளில் Human Trial-க்கு நாள் குறித்தான். அந்த Intership பையன் போல யாரையும் இம்முறை கூப்பிடவில்லை. விஷயம் வெளியில் லீக்காகிவிட்டால் என்னசெய்வது என்ற பயம் தான். தானே teleport செய்துகொள்வதாக முடிவு செய்தான். கம்பியூட்டரில் எல்லாம் தானாகவே இயங்குவது போல செட் செய்தான். செல்களாகப் பிரித்து அதை உறிந்து மற்றைய மெஷினுக்கு அனுப்பி அந்த மெஷின் 3-D பிரிண்ட்டருக்கான Command கொடுக்கும். இவையெல்லாம் நடப்பது 1.30 நிமிட நேரத்தில்.

ராக்கெட் ஏவுவது போல கவுண்ட்டவுன் எல்லாம் செட் செய்திருந்தான். D-Day வந்தது. அஷோக் மெஷின் முன்னால் நின்றான். செல்களாகப் பிரிக்கப்பட்டு உறிஞ்சப்பட்டான். ஆனால் Receiving End மெஷினில் எந்த மாற்றமும் இல்லை. 3-D பிரிண்ட்டருக்கான Command-ம் போகவில்லை. கம்பியூட்டரில் 1.30 நிமிடங்கள் என்பதற்கு பதில் 130 நிமிடங்கள் என்று இருந்தது. 3-D பிரிண்ட்டர் சார்ஜ் 25 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.. அதன் Backup UPS, 20 நிமிடங்கள் மட்டுமே.

காற்றில் கலந்துவிட்ட அஷோக் உங்கள் காதோரமாய் வந்து காப்பாற்றச்சொல்லி கதறிக் கொண்டிருப்பான். எப்படியாவது அவனை....

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2