என்னை நோக்கிப் பாயும்... பைரவர்

கிராமங்களில் நாய்கள் சர்வ சாதாரணம். வீட்டிற்கு ஒன்று இருக்கும். அல்லது வீதிக்கு இரண்டோ மூன்றோ. அவ்வப்போது வீதியில் யாரேனும் சோறு இடுவார்கள். அந்த வீதிக்கு காவல் அந்த பைரவ/பைரவிகள். எங்கள் வீட்டிலும் கூட நாய் வளர்த்தோம். நான் பிறக்கும் சமயம் வரையில் அதற்கு முன்பும் குறைந்தபட்சம் 10 மாடுகள், 2-3 நாய்கள் இருக்குமாம். எனக்கு விபரம் தெரிந்த பிறகு 1-2 மாடுகள், அவ்வப்போது 1 நாய் என்றானது.

------------------------
 
நானும் தங்கமணியும் வாக்கிங் போவதுண்டு. இளையவனின் கண்ணில் படாமல், சாவியை எடுத்து கதவு திறக்கும் சத்தம் கூட வராமல், வீட்டை விட்டு ஓடிப்போய்... நடப்போம். அவன் பார்த்துவிட்டால் அவ்வளவு தான். தானும் வாக்கிங் வருவேன் என்று அழுது புரண்டு அடம்பிடிப்பான். சில சமயம் சாக்ஸும் ஷூவுமாக அவனிடம் மாட்டிக்கொள்வோம். அழுவான்.. பெற்ற மனம் பித்து. அழுகையைப் பார்க்கமாட்டாமல் அவனையும் சாக்ஸும் காலுமாக கிளப்புவோம். அப்பறம் எங்க வாக்கிங்.. நான் MBBS படிக்கறேன். நீ வயசான ஆளு.. எம்பி எம்பி BS படி என்று வசூல்ராஜாவில் சொல்வது போல நான் கொஞ்ச நேரமும், தங்கமணி கொஞ்சநேரமும் அவன் கையைப் பிடித்து நடை பழகுவோம்.

 
------------------------

எங்கள் வீட்டின் எதிர் தெருவில் ஒரு நாட்டு நாய் வளர்த்தார்கள். குட்டியாக இருக்கும்போதே எனக்கும் அதுக்கும் ஏழாம் பொருத்தம். கட்டித்தான் போட்டிருப்பார்கள் (நல்லவேளை). ஆனாலும் நான் கடந்து போகும்போதெல்லாம் உறுமும்.. குரைக்கும். அதன் பல்லை பார்க்க மட்டுமே கொஞ்சம் பீதியாக இருக்கும். குரைத்து குரைத்து பாவம் அதற்கு தொண்டை வலிக்குமே என்பதால், கொஞ்சம் விறுவிறுவென நடந்து விடுவேனே தவிர, எனக்கு பயமெல்லாம் கிடையாது. 

------------------------

சிலபல காரணங்களால் போன வியாழக்கிழமை நான் மட்டும் வாக்கிங் கிளம்பினேன். வழக்கம் போல இளையவனை ஏமாற்றி, அவனுக்குத் தெரியாமல் கிளம்பினேன். கீழே வந்ததும், ராகவன் சார் கை காட்டினார். நானும் கையசைத்தேன். என்ன பிரசன்னா.. உனக்கு என்ன எக்ஸ்ட்ரா வெயிட் இருக்கு-ன்னு அதை குறைக்க வாக்கிங் போற? என்று கேட்டார். (முதல் அறிகுறி).

------------------------

ஒரு நாள் நான் கடைக்குப் போய்விட்டு திரும்பிவரும்போது என்னைப் பார்த்து குரைத்தது. கட்டித்தானே போட்டிருப்பார்கள் என்ற தைரியத்தில் நான் வழக்கம் போல விறுவிறுவென நடக்க ஆரம்பித்தேன். யாரோ புண்ணியவான் கயிறை கழட்டி விட்டிருக்கிறான். ஸ்லோ மோஷனில் என்னிடம் நடந்து வந்தது. நான் அட்டென்சன் பொசிஷனில் நின்றேன். பக்கத்தில் வந்து பல்லை நன்றாகக் காட்டியது. கையிலிருந்த மில்க் பிகிஸ் பாக்கெட்டிலிருந்து 2 பிஸ்கட் போட்டேன். கவ்விக்கொண்ட பிறகும் முறைத்துக்கொண்டு உறுமிக்கொண்டு சாற்றி நகர்ந்து நின்றது. எனக்கு போகச்சொல்லி சிக்னல் கொடுக்கிறது என்று 2 நொடி கழித்து தான் உரைத்தது. எங்கே ஓடினால் கொத்தாக கவ்விக்கொண்டு போய்விடுமோ என்று பயத்தில் நான் இப்போது ஸ்லோ மோஷனில் நடந்தேன். 5 அடி தாண்டியதும், அடுத்த நொடி எங்கள் வீட்டு கதவு டமால்...


இதைப் பார்த்துவிட்ட அந்த வீட்டம்மா வேறு, "தினமும் போயிட்டு வரும்போதெல்லாம் எங்க Tommy-க்கு இப்படி பிஸ்கட் போட்டா, உன்னை ஒன்னும் பண்ணாது" என்று சொன்னார். எனக்கே மாசத்துக்கு ஒரு தடவையோ ரெண்டு தடவையோ தான் பிஸ்கட் Quota என்பதால், அவர்கள் வீட்டு வழியாக போகும் 2 நிமிட சுற்று வழியை விட்டுவிட்டு, 5 நிமிடம் நடக்கும் குறுக்கு வழியில் கடைக்கு போக ஆரம்பித்தேன்.
 
------------------------

குறைக்க இல்ல சார்.. இருக்கறதை மெயின்டெய்ன் பண்றதுக்கு. அப்பறம் உங்களை மாதிரி வயசானதுக்கு அப்பறம் எங்களால நடக்கவாவது முடியனுமே.. அதுக்கு தான் என்றேன். கரெக்ட் மா.. Carry On என்றார். சற்று பின்னாலிருந்து ரவி சாரும் கையசைத்தார். (இரண்டாம் அறிகுறி) நானும் பதிலுக்கு கையசைத்துவிட்டு கிளம்பினேன்.

------------------------

எங்கள் ஊரில் ஒரு கால்நடை பிரியர் இருந்தார். சுற்றுவட்டாரத்தில் ரேக்ளா ரேஸ் என்றால் நிச்சயம் இவர் இருப்பார். இவரது மாடுகள் சிலமுறை பரிசு வென்றிருக்கின்றன. அவரது பண்ணையில் மாடுகள், நாய்கள், பறவைகள் என பல ஜீவராசிகளை வளர்த்து வந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு நாள் தீவனம் மட்டுமே ஆயிரத்தில் செலவாகும். ஒருமுறை அவர் பண்ணைக்குப் போயிருக்கும்போது சைனீஸ் சோ-சோ என்று ஒரு நாய் குட்டியை காட்டினார். நல்ல புஷ்டியாக எது முன்புறம் எது பின்புறம் என்று தெரியாத அளவுக்கு அத்தனை முடி. சைனாவின் வழக்கப்படி, மிகவும் வேண்டப்பட்ட விருந்தினர்கள், VIP-கள் என யாரவது வந்தால், அன்று அந்த வீட்டில் சோ-சோ தான் விருந்து. ஏக் மார்.. தோ துக்கடா. அடுத்த சோ-சோ வரும்வரை No லொள் லொள், என்று சொன்னார். இவரது குடும்பம் சைவபட்சிகள் என்பதால் இந்த சோ-சோவுக்கு ஆயுள் கெட்டி என்று சொல்லி சிரித்தோம்.

 
------------------------

கொஞ்ச தூரத்தில், எப்போதும் போகும் வழியில் கேபிள் பணிக்காக பள்ளம் தோண்டியிருந்தார்கள் (மூன்றாவது அறிகுறி). சுற்றி போக வேண்டியிருந்தது. நான் இந்த 3 அறிகுறிகளைக் கண்டு சுதாரித்திருக்க வேண்டும். ம்ஹ்ம்.. விதி வலியது..

------------------------

அவரிடம் இருந்து ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய் குட்டியை விலைக்கு வாங்கினோம். குட்டியிலேயே நல்ல ஆஜானுபாகுவாக இருந்தாலும், பக்கத்துக்குத் தெருவில் ஏதாவது நாய் குரைத்தால் கூட, வீட்டிற்குள் வந்து கதவு இடுக்கு வழியாக எட்டிப்பார்க்கும் அளவுக்கு வீரம் மிக்கது. பிறகு பொமரேனியன் வகை "சுசி". கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, சைஸுக்கு சவுண்டுக்கும் சம்பந்தமே இருக்காது. வீட்டு ஆட்கள் தவிர யாரையுமே பக்கத்தில் நெருங்க விடாது. சுசிக்கு பிறகு வீட்டிற்கு நாய் வரவில்லை. ஏற்கனவே 2 நாய் (நானும் தங்கையும்) வளக்கறோமே.. போதும்.. என்று சொல்லிவிட்டார் அம்மா.

------------------------

ஹைவே-யில் வாக்கிங் போய்க்கொண்டிருந்தேன். லேசாக குளிர் என்பதால், காதில் ஹெட்போன் மாதிரியான குல்லாவை போட்டிருந்தேன். சுமார் 10 அடி தூரத்தில் ரோட்டைக் கடந்து நான் வாக்கிங் போகும் பிளாட்பாரம் அருகில் புல்லில் வந்து உட்கார்ந்தது ஒரு பைரவி. நம்மூர் ராஜபாளையம்/சிப்பி நாய் போல ஒல்லியான உருவம். நல்ல உயரம்.


நான் கடந்து போகும்போது லேசாகக் குறைத்தபடியே மெதுவாக எழுந்து என்னை நோக்கி வந்தது. நான் ச்சூ என்று சொல்லி கையை வீசவும், 2 ஸ்டெப் பின்னாடி போய் நின்று நல்ல சத்தமாக குரைக்க ஆரம்பித்தது. இப்போது இன்னொரு சத்தம். கிட்டத்தட்ட என் பின்னாலயே நின்று குரைப்பது போல உணர்வு. முதுகுத்தண்டு சில்லிட்டுவிட்டது. திரும்பிப் பார்த்தால், ஒரு பைரவர் (இந்த பைரவியின் பாய்ப்ரெண்ட் போலும்) ஆக்ரோஷமாக என்னை நோக்கிப் பாய்ந்து வந்தது. நான் சொன்ன அந்த ச்சூ இந்த நாயின் கோபத்தை தூண்டிவிட்டது போல. நாயைப் பார்ப்பதே அரிதான இந்த ஊரில் சிலபல ஆண்டுகள் இருந்துவிட்டதால், பாய்ந்து வரும் நாயை எப்படி சமாளிப்பது என்று கிட்டத்தட்ட மறந்தே விட்டது.

எப்படியோ சுதாரித்து, தரையில் தவழ்ந்து கல்லைத் தேடினால் புல் மட்டுமே பல்லிளித்தது. இல்லாத கல்லை எடுத்து எறிவது போல பாவனை செய்ய, இரண்டு நாய்களும் 2 ஸ்டெப் பேக். ஆனாலும் நின்று குரைத்துக்கொண்டே இருந்தன. மீண்டும் இல்லாத கல்லை எறிவது போல பாவனை செய்ய, நாய்கள் மீண்டும் 2 ஸ்டேப் பேக். கொஞ்சம் தைரியம் வர, நான் 2 ஸ்டேப் முன்னே போய், கையை வீச, நாய்கள் திசைக்கொரு பக்கமாக பின்வாங்கின.


நான் ஒரு 15-20 அடி Backward வாக்கிங் செய்துகொண்டே, நாய்களை விரட்டிக்கொண்டே, பிளாட்பார்மிலிருந்து விழுந்துவிடாமல் பார்த்துக்கொண்டே.. இன்னும் சில பல கொண்டே... ஒருவழியாக தப்பித்து ஓடினேன்.. ஆம்.. என் வாக்கிங்கை அந்த நாய்கள் Sprinting ஆக்கியிருந்தன. கொஞ்சம் பிசகியிருந்தாலும் கொத்தாகக் கவ்விக்கொண்டு போயிருக்கும்.. ஒரு நாய் ஒரு தடவை கடிச்சாலே 16 ஊசி.. 2 நாய் கன்னாபின்னா-ன்னு கடிச்சா.. அப்பப்பா... குரைச்சுப்பாத்தாலே பீதியா இருக்கு.

நேற்று வாக்கிங் போகும்போது, திரும்பவும் அந்த நாய்கள் என்னைப் பார்த்து குரைத்து தொண்டை வலிக்க கூடாதே என்பதற்காக பாக்கெட்டிலும் கைகளிலும் என, சிலபல கற்களை எடுத்துக்கொண்டு போனேன். அவ்வளவே.. எனக்கு பயமெல்லாம் கிடையாது.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2