ஆயிரத்தில் ஒருவன்(ர்) ரவிக்குமார்

ரவிக்குமார் எனும் கொடுங்கோலன்... இது தான் நான் இந்தக் கதைக்கு முதலில் யோசித்த தலைப்பு. ஏன் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்.

அன்று:

நான் PMP படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். சுந்தரராஜன் சார் மூலமாக இங்கே பஹ்ரைனில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். சவுதியிலிருந்து ஒரு ஆசான் (mentor) வந்து வகுப்புகள் நடத்தினார். 5 வெள்ளிக்கிழமைகள்.. ஒவ்வொரு வெள்ளியும் 6-7 மணி நேரம்.. மொத்தம் 35 மணி நேர வகுப்புகள்.

வகுப்புகள் முடிந்தது. ஒரு மாதிரி குன்ஸாக இது தான் PMP என்று ஒரு அர்த்தம் செய்துகொண்டிருந்தேன். பரீட்சை எழுதுவது பற்றி முடிவு செய்திருக்கவில்லை. சர்டிபிகேட் வாங்கினால் இங்கே வேலைக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று பார்த்து, அத்தனை சிறப்பாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றறிந்து பரீட்சை எழுதுவதை அப்போதைக்கு ஒத்தி வைத்தேன்.


(சில நாட்களுக்கு முன், செப்டம்பர் மாதத்தில்):

நானும் கோசகனும் வாக்கிங் போகும்போது (என்னுடைய LinkedIn பக்கத்தைப் பார்த்த பிறகு), "ஜி.. நீங்களும் PMP கோர்ஸ் மட்டும் முடிச்சுட்டு பரீட்சை எழுதலை போல" என்று ஆரம்பித்தார். நானும் கோர்ஸ் மட்டும் முடிச்சுட்டு பரீட்சை எழுதலை என்று சொன்னார். நம்ம ஸ்ரீராம் PMP எக்ஸாம் பாஸ் பண்ணிட்டார் போல ஜி.. எப்படி படிச்சார்.. என்ன பண்ணினார்-னு கேக்கணும் என்றும் சொன்னார். நான், சரி ஜி.. பாத்துக்கலாம் என்று மட்டும் சொல்லி வைத்தேன். அவருக்குள் தூங்கிக்கொண்டிருந்த மாணவன் எனும் கொடூர அரக்கன் முழித்துவிட்டான் என்று நான் அறிந்திருக்கவில்லை.

நான் ஏற்கனவே ISO Internal Auditor சர்டிபிகேட் முடித்திருந்தேன். அடுத்தகட்டமான Lead Auditor கோர்ஸ் அக்டோபர் மாதத்தில் நடக்கிறது என்றும், கலந்துகொள்வதாக இருந்தால் 2 நாட்களுக்குள் கன்பார்ம் செய்யவேண்டும் என்றும் மெயில் வந்திருந்தது. அது சம்பந்தமாகவும் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்ததால் PMP பற்றி கோசகன் கேட்டபோது என்ன சொல்வதென்று தெரியாத நிலையில் இருந்தேன்.

மறுநாள் வாக்கிங் போகும்போது, "ஜி.. ஸ்ரீராம்-கிட்ட பேசிட்டேன். ரவிக்குமார்-னு ஒருத்தர் கிட்ட பேச சொன்னார். அவர்தான் ஸ்ரீராம்-க்கு mentor-ஆம். நல்லா சொல்லிகுடுப்பாராம்" என்று சொன்னார். சரி இனிமேல் தான் பேசப்போகிறார் போல என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, "ரவிக்குமார் கிட்டயும் பேசிட்டேன் ஜி.. கோர்ஸ் பத்தி மெயில் அனுப்பறேன்-னு சொல்லியிருக்கார். Fees அமௌன்ட் சொல்லியிருக்காரு. நீங்களும் ஓகே-ன்னா 2 பேர் ஜாயின் பண்றோம்-னு அவருக்கு சொல்லிடுவேன் என்றார். இப்போ ஆரம்பிக்கறோம்.. இன்னும் ரெண்டே மாசத்தில் PMP எக்ஸாம் எழுதறோம்.. தட்டறோம் தூக்கறோம் என்றார். வழியனுப்ப வந்தவனை வான்ட்டடாக வண்டியில் ஏத்திவிட முடிவு செய்துவிட்டார் என்று எனக்கு அப்போதும் புரியவில்லை.

முதல்நாள் வெறும் வாய்வார்த்தையாக இருந்த ஒரு விஷயத்தை மறுநாளே செயல்வடிவம் கொடுத்து இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கும் பிளான் போட்ட கோசகனைப் பார்த்து கொஞ்சம் வியப்பாகவும் கொஞ்சம் அச்சமாகவும் கொஞ்சம் What A Man என்றும் தோன்றியது.

இதற்கிடையில் PMP எக்ஸாம் நடத்தும் PMI நிறுவனம் 02-Jan-2021 முதல் புதிய பாட/தேர்வு திட்டத்தில் தான் எக்ஸாம் எழுத முடியும் என்று முடிவு செய்துவிட்டனர். ஏற்கனவே எடுத்த முடிவு தான். கொரோனா காரணமாக Jun-2020யில் நடைமுறைக்கு வந்திருக்கவேண்டிய புதிய தேர்வு திட்டம் Jan-2021ல் வருகிறது. இதையெல்லாம் யோசித்து மறுநாள், "PMP-யே பண்ணிடலாம்-னு நினைக்கறேன் ஜி.. Lead Auditor கோர்ஸ் அடுத்த 6 மாசத்துல திரும்பவும் வரும். ஆனா PMP தனியா படிக்கறத விட சேர்ந்து படிச்சா கொஞ்சம் பெட்டரா இருக்கும்.." என்று நான் சொல்லி முடிப்பதற்குள், "சூப்பர் ஜி.. உங்களுக்கும் சேர்த்து பீஸ் கட்டிட்டேன்.. அடுத்த வாரம் க்ளாஸ்" என்று பதில் வந்தது. அப்போது தான் கோசகன் மேல் எனக்கு லைட்டாக டவுட் வர ஆரம்பித்தது.

ரவிக்குமார் என்ட்ரி.. தான் பணிபுரியும் நிறுவனம் உள்பட தன்னைப் பற்றி சொல்லிவிட்டு, தான் PMP படித்தபோது என்னவிதமான முயற்சிகள் செய்து எத்தனை கஷ்டப்பட்டு படித்தேன் என்று சொல்லி ஆரம்பித்தார். அத்தனை ஒன்னும் கஷ்டம் கிடையாது.. ஒரு நாளைக்கு 3-4 மணிநேரம் dedicated-ஆ படிச்சீங்கன்னா போதும்.. ஈஸியா பாஸ் பண்ணிடலாம் என்று சொன்னார். கேட்கும்போதே நமக்குள் PMP ஆகிவிடவேண்டும் என்று எண்ணம்/வெறி தோன்றும்.

கோசகன் முதல் நாள் க்ளாசில் கொட்டாவி விட்டவர், மறுநாள் க்ளாசில் தூங்கியே விட்டார். முழித்துப் பார்க்கும்போதெல்லாம் "சூப்பர் ஜி.. நோட்ஸ் எல்லாம் எடுக்கறீங்களே ஜி.. செம்ம ஜி.. செம்ம ஜி.. தட்டறோம் தூக்கறோம்" என்பார். நடுநடுவே எனக்கு ஆபீஸ் கால் வரும். நான் பேசி முடித்தவுடன் அவருக்கு ஆபீஸ் கால் வரும்.. இப்படியாக 4 நாள் கோர்ஸும் முடிந்தது. இந்த 4 நாளும் வேளாவேளைக்கு எனது ஓனரோ அவரது ஓனரோ காபி கொண்டுவருவார்கள். கூடவே கொஞ்சம் ஸ்நாக்ஸ் இருக்கும். இந்த இடத்தில "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரஹத்தாத்தா" ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.

ஒவ்வொரு க்ளாஸிலும் "முதல் attempt-லேயே நீங்க எக்ஸாம் க்ளியர் பண்றீங்க.. பண்ணதும் உங்க சர்டிபிகேட் எனக்கு ஷேர் பண்ணுங்க.. பண்ணனும். அதை நோக்கி தான் நம்ம பயணம்" என்பதை சொல்லிவிடுவார் ரவிக்குமார். ரொம்ப பாசிட்டிவாக பேசுவார். ஒரு தடவை கூட "ஒருவேளை எக்ஸாம்-ல பெயில் ஆயிட்டா" என்ற அவர் சொன்னதேயில்லை.

ரவிக்குமாருடன் சேர்ந்து சேஷன் என்பவரும் க்ளாஸ் எடுத்தார். கிளாசுக்கு நடுவில் ஒன்றிரண்டு கேள்விகள் கேட்பார். அதில் A,B,C,D ஆப்ஷன்கள் இருக்கும். பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு ஆப்ஷன்கள் சொல்வோம். மீதம் 2 ஆப்ஷன் இருக்கு.. யாராவது அந்த ஆப்ஷன் செலக்ட் பண்ணலாமே என்று கொஞ்சம் சிரித்துக்கொண்டே சொல்வார். குசும்பாக/நக்கலாக சொல்கிறாரா அல்லது நிஜமாகவே நாம் செலக்ட் பண்ணியிருக்கும் ஆப்ஷன் தப்பா என்று யோசிக்கத் தோன்றும். Scope Baseline-ல் உள்ள 3 முக்கியமான விஷயங்கள் பற்றி அவர் சொன்னது பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பிசகில்லாமல் சொல்ல முடியும். அந்த அளவிற்கு சொல்லியடிப்பதில் சேஷு கில்லி. (என் அப்பா பெயரும் சேஷன்.. சேஷன் காலிங் சேஷு)

 

ரவிக்குமாரின் உதவியுடன் PMI-ல் அப்ளிகேஷன் போட்டோம். 3 நாட்களில் அப்ரூவல் வந்துவிட்டது. உடனே Membership பீஸ் கட்டி எக்ஸாம் பீஸும் கட்டிவிட்டார் கோசகன். காலை 5 மணிக்கு படிப்பதாக ஆரம்பித்த எங்கள் பிளான், 1 வாரம் கழித்து காலை 10 மணியானது. அடுத்த வாரத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்றானது. அதற்கும் அடுத்த வாரத்தில், வாரத்திற்கு 4 நாள் என்றானது. பிறகு செவ்வாய் கிழமை காலை மட்டும் என்றாகிப்போனது. ஏனென்றால், ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் 2 மணிநேரம் கேள்வி-பதில் நேரம் நடக்கும். ஒருநாளைக்கு 2 chapter விகிதம், சராசரியாக 20 கேள்விகள் இருக்கும். கேள்விக்கு 1 மார்க் விகிதம் குறைந்தபட்சம் 14 மார்க் எடுக்க வேண்டும்.

கோர்ஸ் முடிச்சாச்சு. இனிமேல் நீங்க எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிக்கணும், என்று இல்லாமல், தொடர்ந்து கேள்வி-பதில் வகுப்புகள் நடத்தி எல்லாரும் முதல் முயற்சியிலே எக்ஸாம் க்ளியர் செய்ய வேண்டும் என்று தான் சொன்ன சொல்லில் தவறாமல் இருந்தார் ரவிக்குமார்.

கோசகன் சர்வசாதாரணமாக 17-18 எடுப்பார். நான் முக்கித்தக்கி chapter revise பண்ணியும் 12-14 தான் வரும். இதில் என்ன வினோதம் என்றால், அவர் விட்ட அந்த 2-3 கேள்வி நான் சரியாக எழுதியிருப்பேன். உடனே "ஜி.. பாத்தீங்களா.. நீங்க கான்செப்ட்-ல ஸ்ட்ராங்கா இருக்கீங்க ஜி.. நல்ல புரிஞ்சு படிக்கறீங்க" என்பார். நீங்க SSLC பெயில்-ண்ணே.. நான் 8வது பாஸு-ண்ணே என்பது போலவே இருக்கும்.

சட்டென ஒருநாள் "நாம படிச்சு முடிச்சுட்டோம். 200 Question செட் எழுத ஆரம்பிச்சிடுங்க. உங்க மார்க்கைப் பொறுத்து நான் Benchmark Question செட் தரேன்" என்று சொல்லிவிட்டார் ரவிக்குமார். நாங்களும் எழுத ஆரம்பித்தோம். ஒரு Question செட் முடிக்க 4 மணி நேரம் ஆகும். 4 மணி நேரத்திற்குள் முடிக்கவேண்டும் என்றும் சொல்லலாம். 2 செட் எழுதினோம். கோசகன் வழக்கம் போல 75-85 average ரேஞ்சில் இருந்தார். நான் 65 வருவதற்க்கே நாக்குத் தள்ளிவிட்டது. அதனால் என்னை மட்டும் இன்னுமொரு 200 செட் எழுதச்சொன்னார். அதிலும் 70 மார்க் தான்.

ஆனாலும் ரவிக்குமார் என்னையும் கோசகனுடன் சேர்ந்து Benchmark question எழுதச்சொன்னார். நானும் எழுதினேன். முதல் டெஸ்ட் 63. கோசகன் 75 வாங்கினார். அடுத்த டெஸ்ட் அவர் 70க்கு மேல்.. நான் 60 தான். "You are ready for exam" என்று கோசகனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் ரவிக்குமார். பிரசன்னா, நீங்க 2 நாள் நல்லா ரிவைஸ் பண்ணுங்க என்றார்.

இதற்குள் கோசகன் 11-Dec அன்று எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிவிட்டார். நானோ, Benchmark டெஸ்டில் benchmark எட்டாததால் திரும்பவும் bench-சை தேய்த்துக்கொண்டிருந்தேன். கோசகன் மறுநாள் காலையில் கூட, "இன்னும் அந்த பதட்டம் இருக்கு ஜி.. ஹார்ட் பீட் படபடப்பா அடிக்குது" என்றார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

படித்துவிட்டு ரவிக்குமாரிடம் சொன்னேன். வேறு ஒரு 200 question செட் கொடுத்தார். எழுதினேன். என்னையே மார்க்கும் எண்ணும்படி answer செட்டும் அனுப்பிவைத்தார். 74%.. ஆகா சிறப்பான சம்பவம்.. ராகவன் ஜெயிச்சுட்டான் டா.. வெற்றிக்கனியை பறிச்சுட்டான் டா என்று புளகாங்கிதம் அடைந்த அந்த தருணம், 3 முட்டையை குடிச்ச மமதைல ஆடாதடா ராகவா என்று சரத்குமாரிடம் வடிவேலு சொல்வது போல, "நீங்க குறைஞ்சது 80% வாங்கியிருக்கணும் பிரசன்னா" என்று சொல்லி பிரகாசமாக எறிந்த ஜோதியை பச்சைத் தண்ணீர் ஊற்றி அணைத்தார் ரவிக்குமார்.

"சார், நான் Agile (புதிய தேர்வு திட்டம்) எக்ஸாம் எழுதிக்கறேன் சார். என்னால கான்செண்ட்ரேட் பண்ண முடியலை. ரொம்ப கஷ்டமா இருக்கு" என்றேன். "ஓஹோ.. ஓகே பிரசன்னா. ஆனா நீங்க Jan-2021 லேயே எக்ஸாம் எழுத முடியாது.. நானும் இன்னும் கோர்ஸ் மெட்டீரியல் எல்லாம் ப்ரிப்பேர் பண்ணலை" என்றார். "Feb அல்லது March-ல் எழுதிக்கறேன் சார்" என்றேன். "ஓகே" என்று சொன்னவருக்குள் இருந்த கொடுங்கோலன் சட்டென முழித்துக்கொண்டு, "இருந்தாலும் இப்பவே நீங்க ப்ரிப்பேர் பண்ணுங்க.. இன்னும் 20 நாள் இருக்கு.. Dec கடைசி வாரத்தில் ஒரு நாள் எக்ஸாம் தேதி எடுங்க. அதுக்குள்ள நல்லா ப்ரிப்பேர் பண்ணிட்டு ஒரு அட்டெம்ப்ட் பண்ணலாம்" என்றார். கடைசி வரைக்கும் அந்த பாசிட்டிவ் அணுகுமுறையை அவர் விடவேயில்லை.

இந்த ஈஸியான சிலபஸ்-லேயே இவனால படிக்க முடியலை. Agile வேற கஷ்டமா இருக்கும். இவனுக்கு சொல்லிக்குடுத்து பாஸ் பண்ண வைக்கறது ரொம்ப கஷ்டம் என்று யோசித்திருப்பாரோ என்னவோ... "இன்னொரு தடவை எல்லா chapter-யும் ரிவைஸ் பண்ணுங்க. முடிச்சுட்டு சொல்லுங்க. உங்களுக்கு வேற ஒரு Question செட் தரேன்" என்றார். கோட்டை எல்லாம் அழிச்சுட்டு திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் N Gosakan PMP ® என்று போட்டு பேனர் எல்லாம் அடித்து பில்டிங் எதிரில் வைத்துவிட்டார்கள்.

ஒருவழியாக திரும்பவும் படித்து முடித்துவிட்டு ரவிக்குமாரிடம் சொன்னேன். ஒரு question கொடுத்தார்.  இரவு 8 மணிக்கு ஆரம்பித்து, ஒருவழியாக 2 மணிக்கு முடித்தேன். 6 மணிநேரம்.. முடிவு 69%. எப்படியும் இது போதாது.. நீங்க 75% வாங்கியிருக்கணும் என்று சொல்வார்.. நாம் Agile படிக்க ஆரம்பிக்க வேண்டியது தான் என்று நினைத்திருந்தேன். மறுநாள் "You are ready for exam" என்று அனுப்பியிருந்தார். வெறுத்துவிட்டேன்.. "ஏன் சார் இப்படி பண்றீங்க" என்று அவரிடமே கேட்டுவிட்டேன்..

நீங்க நல்லா ப்ரிப்பேர் பண்ணியிருக்கீங்க பிரசன்னா.. ஆனா 6 மணிநேரம் எடுத்துக்கிட்டது தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு. அதனால இன்னொரு 200 question செட் தரேன்.. 4 மணி நேரத்தில முடிக்க முடியுதான்னு பாருங்க என்றார். திரும்பவும் மொதல்ல இருந்தா என்று நீங்கள் யோசிப்பது போலத்தான் நானும் யோசித்தேன். ஆனாலும் அடுத்த செட் எழுதினேன். இம்முறை 4 1/2 மணிநேரம். அதே 69%. சென்ற முறை போலவே மறுநாள், "You are ready for exam" என்று அனுப்பியிருந்தார்.

இன்று :

28-Dec-2020 அன்று தேதி குறித்தாகிவிட்டது. ஒருநாளைக்கு ஒரு தடவையாவது கோசகன் போன் செய்வார். 10 நிமிஷம் பேசுவார். உங்களால முடியும்.. ஜெயிக்கறோமோ தோக்கறோமோ தெரியாது. ஆனா சண்டை செய்யணும்.. என்று சொல்வார். என் மேல் எனக்கே இல்லாத நம்பிக்கையை கோசகனும் ரவிக்குமாரும் வைத்திருந்தனர். ஒருவழியாக 28ம் தேதி சண்டை செஞ்சு நானும் PMP ஆகிவிட்டேன். சுந்தரராஜன் சாருடன் சென்று சேர்ந்த அதே சென்டரில் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணிவிட்டேன். கண்டிப்பாக ரவிக்குமார் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். Agile கோர்ஸில் என்னை வைத்துக்கொண்டு கஷ்டப்படவேண்டாம்.

கோசகன் 5ல் 3 Above Target எடுத்தபோது, என்ன கோசகன் 3 ஏரியா-ல தான் வாங்கியிருக்கீங்க என்று கேட்டார். நான் 5ல் 3 Above Target எடுத்தபோது, என்ன!! 3 ஏரியா-ல Above Target-ஆ என கேட்டு ஆச்சரியப்பட்டார். எனக்கே அந்த விஷயம் அதிர்ச்சி தான் என்பதால் அவர் ஆச்சர்யப்பட்டது பெரிய விஷயம் இல்லை என்றே சொல்லவேண்டும். இன்னும்கூட நான் பாஸ் பண்ணியதை நம்பமுடியாமல், இன்னதென்று புரியாத மோனநிலையில் தான் இருக்கிறேன். 

என்னை இத்தனை கஷ்டப்படுத்தி படிக்கவைத்து PMP ஆக்கிய ரவிக்குமார், PMP PGMP PFMP வரைக்கும் முடித்தவர். இந்தியாவில் இந்த 3ம் முடித்தவர்கள் 1000-க்கும் குறைவு தான் (அதனால் தான் ஆயிரத்தில் ஒருவன்(ர்) ரவிக்குமார்). கோசகனைப் போன்றவர்களை ஈஸியாகவும் என்னைப் போன்றவர்களை கஷ்டப்படுத்தியும் படிக்கவைத்து PMP மட்டுமல்லாது வேறு பல எக்ஸாம்களிலும் முதல் முயற்சியிலேயே பாஸ் பண்ணவைக்கும் ரவிக்குமார் நிச்சயம் ஒரு கொடுங்கோலன் தானே.. நீங்களே சொல்லுங்க சார்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2