இதிலுமா வேகம் சௌந்தர் சார்???
சௌந்தர் சாரும் குடும்பமும் இதற்கு முன்பே பஹ்ரைனில் இருந்திருந்தாலும், இப்போது திரும்பி வந்திருந்த இந்த 2 வருடங்களாகத் தான் எனக்குப் பரிச்சியம். இதற்கு முன் இருந்தபோது, அவருடைய அக்காவும் அவர் குடும்பமும் கூட பஹ்ரைனில் தான், சொந்தமும் நட்பும் புடைசூழ இருந்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பலர் நிரந்தரமாக இந்தியாவுக்கு செல்ல, சௌந்தர் துபாய் சென்று சிலகாலம் கழித்து, அங்கிருந்து இந்தியா சென்றுவிட்டார்.
2 வருடங்களுக்கு முன்பு, மீண்டும் துபாயில் வேலை. அங்கு சேர்ந்த சில மாதங்களில், ட்ரான்ஸ்பரில் பஹ்ரைனுக்கு வந்தார்கள். சத்சங்கத்திற்கு வர ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடனும் பழக ஆரம்பித்தாலும், யாருடனும் அத்தனை நெருக்கம் பாராட்டவில்லை.
இன்னும் சில காலத்தில் சத்சங்கத்தில் இருக்கும் குழந்தைகளிடம் சௌந்தர் சாருக்கு கொஞ்சம் ஈடுபாடு உண்டானது. அதிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அத்தனை பாசமாக விளையாட ஆரம்பித்தார். சுஜாதா மேடமும், வம்சியும் (கவிதார்கிக சிம்மன்) கூட கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார்கள். வம்சி அவன் வயதிற்கு ஏற்ற நண்பர்கள் சத்சங்கத்தில் யாரும் இல்லையென்றாலும், மற்ற சிறு வயது குழந்தைகளுடன் கொஞ்சம் பழக ஆரம்பித்தான்.
சௌந்தர் சார், என்னுடன் சேர்ந்து நரசிம்மன் அண்ணாவை கிண்டல் செய்யும் அளவுக்கு எங்களுக்கு நெருக்கமானார். முக்கியமான விஷயங்களில் எல்லாம் நரசிம்மன் அண்ணாவின் பங்களிப்பு இருக்கும் ஆகையால், அவரை "ஸ்ரீகார்யம்" என்று அழைக்க ஆரம்பித்தார் சௌந்தர் சார். சில சமயம் உண்மையாக இருந்தாலும், பல சமயங்களில் கிண்டலாகவே அழைத்து வந்தார். நான் ஏதாவது சொல்லி நரசிம்மன் அண்ணாவை கிண்டல் செய்யும் சமயங்களில், அவரும் சேர்ந்துகொண்டு எக்ஸ்ட்ரா ஏதாவது சொல்லிவிட்டு சிரிப்பார்.
சௌந்தர் சார், சத்சங்க கோஷ்டியில் இருந்தாலும், வேகத்தில் தனித்து நிற்பார். பாசுரம் சேவிப்பதில் அத்தனை வேகம். அதிலும் ஒரே நாள் 4000 பாராயணத்தின்போது அவரது வேகம், அப்பப்பா... அவர் முதல் கோஷ்டி சேவித்தபோது இரண்டாவது கோஷ்டியும், இரண்டாவது கோஷ்டியாக பாசுரம் சேவித்தபோது முதல் கோஷ்டியும் இவரது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். ஆனால், அந்த வேகம் எல்லாம் சும்மா ஜுஜுபி... ட்ரைலர்.. மெயின் பிக்சர் பார்க்க வேண்டும் என்றால், சுந்தரகாண்டம் பாராயணம் தான்.
ஒரே நாள் சுந்தரகாண்டம் பாராயணத்தின்போது சௌந்தர் சார் வேறொரு பரிமாணத்தில் வாசிக்க ஆரம்பிப்பார். வாம்மா மின்னல் ரேஞ்சுக்கு வேகம் இருக்கும். பாராயணத்தின்போது சீரக வெந்நீரோ, பானகமோ, மோரோ அவ்வப்போது கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். நிமிர்ந்து பார்த்து வாங்கிக்கொண்டு, டம்ளரில் இருப்பதை அண்ணாக்க தொண்டைக்குள் இறக்குவதற்குள், 5 பக்கம் முடித்திருப்பார் சௌந்தர் சார். அத்தனை வேகம்... பஹ்ரைனில் முதன் முதலில் ஒரே நாள் சுந்தரகாண்டம் பாராயணத்தை அறிமுகம் செய்த/தொடங்கி வைத்த குடும்பம் என்பதால், அந்த வேகம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
கொரோனா காலத்தில் E-சத்சங்கம் தான் நடந்துகொண்டிருந்தது. அதனால் யாரும் யாரையும் நேரில் பார்க்கும் வாய்ப்புகள் குறைந்தன. டிசம்பர் 2020-ல் நடந்த சத்சங்க ஸ்போர்ட்ஸ் தான் சிலரை மீண்டும் நேரில் பார்க்க கொஞ்சம் வழி செய்தது. கொரோனா தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்தவுடன், மீண்டும் E-சத்சங்கம். இந்த காலகட்டத்தில் எப்போதாவது பார்க்கும்போது கலகலப்பாக பேசுவதோடு மட்டுமில்லாமல், சத்சங்க குழந்தைகளுடன் அவ்வளவு ஆசையாக விளையாடுவார். போனில் பேசினாலும், முதலில் குழந்தைகளை பற்றி விசாரித்துவிட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்.
ஒரு online சத்சங்கத்தின் போது, கொஞ்சம் கம்மிய/கரகரப்பான குரலில் பாசுரம் சேவித்தார். நடுநடுவே கொஞ்சம் இருமினார். அடுத்த E-சத்சங்கத்திற்கு வரவேயில்லை. "உடம்பு சரியில்லை சார். அதான் கலந்துக்க முடியலை" என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்.
30-Mar அன்று காலையில் சுந்தரராஜன் சார் (சென்னையில் இருந்து) மெசேஜ் அனுப்பியிருந்தார். "சௌந்தர் சாருக்கும் சுஜாதாவுக்கு கொரோன +ve ன்னு வந்திருக்காம்-பா. கொஞ்சம் போய் பாத்துட்டு வர முடியுமா?" என கேட்டிருந்தார். Sitra-வில் உள்ள கொரோனா முகாமுக்கு 14 நாள் அனுப்பிவிடுவார்களோ? அனுப்பினால் வம்சி தனியாக இருப்பானே.. மேலும், அந்த முகாம் எப்படி இருக்குமோ, எப்படி நடத்துவார்களோ என்பது குறித்து இருவருக்குமே பயம் இருந்தது. நானும் ஸ்ரீ கோசகனும் அவர்களுக்கு வேண்டிய கொஞ்சம் சாமான்கள், மருந்துகள், கபசுர குடிநீர் பொடி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய் கொடுத்துவிட்டு, வாசலில் இருந்தே ஒரு 10 நிமிடங்கள் பேசிவிட்டு, முடிந்த அளவுக்கு தைரியம் சொல்லிவிட்டு வந்தோம். நாங்கள் போயிருந்தபோது சௌந்தர் சார் உள்ளே படுத்துக்கொண்டிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை.
மறுநாள் 31-Mar Health Ministry-ல் இருந்து வண்டி வந்து இவர்கள் இருவர் உள்பட பலரையும் Aali-யில் உள்ள ஹெல்த் சென்டருக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள். கொரோன +ve வந்த அனைவரையுமே அங்கே அழைத்துச்சென்று/வரச்சொல்லி முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்து பரிசோதித்து, அதற்கு தகுந்தவாறு உபகரணங்கள் கொடுத்து வீட்டிலேயே quarantine, அல்லது உடல்நிலைக்கேற்ப வேறு மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை என்று முடிவு செய்வார்கள். இதையெல்லாம் பஹ்ரைன் அரசே முன்னின்று அனைவருக்குமே இலவசமாக நடத்துகிறது.
சௌந்தர் சாரை சோதித்துவிட்டு நுரையீரல் தொற்று இருப்பதால் ஆக்சிஜன் சரியாக சுவாசிக்க முடியாததை அறிந்துகொண்டு, உடனடியாக BDF (Bahrain Defense Force) ஹாஸ்பிடலுக்கு கொண்டுசென்று ICU-வில் சேர்த்துவிட்டனர். சுஜாதா மேடத்தை சோதித்துவிட்டு, அவருக்கு உபகரணங்கள் கொடுத்து வீட்டிலேயே quarantine என்று சொல்லிவிட்டார்கள். காலையில் சென்றார்கள். இத்தனையும் முடியவே மாலை வரை ஆகிவிட்டது. இப்படி நடக்குமென்றோ அதற்கு தகுந்த முன்னேற்பாட்டுடனோ இவர்கள் சென்றிருக்கவில்லை.
தொடர்புக்கு ஒரு போனை வம்சியிடம் கொடுத்துவிட்டு போகுமாறு நான் சொல்லியிருந்ததால் (வீட்டில் லேண்ட்லைன் போன் இருப்பது எனக்கு தெரியாது), ஒரு போனை மட்டும் கொண்டு போய், அதையும் சௌந்தர் சார் எடுத்துக்கொண்டு BDF ஹாஸ்பிடலுக்கு போய்விட்டார். பாவம் சுஜாதா மேடத்தை போனில்லாத காரணத்தால் (இங்கே BeAware எனப்படும் Health Ministry App போனில் இன்ஸ்டால் செய்து, இந்த ஊரின் அடையாள அட்டை நம்பரை அதிலிட்டு பதிவு செய்தல் அவசியம்) Aali ஹெல்த் சென்டரில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எப்படியோ யார் யாரிடமோ கெஞ்சி கூத்தாடி, ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறார். சாரி மேடம்.
இதற்கிடையில் சௌந்தர் சாரே BDF ஹாஸ்பிடலுக்கு போய் சேர்ந்துவிட்டதையும், ICU-வில் இருப்பதையும் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார். பாவம் அவருக்கு வெஜிடேரியன் சாப்பாடு எதுவும் கிடைத்திருக்கவில்லை போலும். சென்னையிலுள்ள அவரது அக்கா வீடியோ காலில் அழைக்க, இவரும் ஆன் செய்ய, ஆக்சிஜன் மாஸ்க்குடன் இவரது நிலையைப் பார்த்ததும் பதறி உடனே சுந்தரராஜன் சாரை தொடர்புகொள்ள, அவர் பதறி எனக்கு போன் செய்தார். நான் நடந்தவற்றை சொல்லி, நிச்சயம் பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னேன்.
அன்று இரவு சுஜாதா மேடத்திற்கும் வம்சிக்கும் இரவு உணவு கொடுத்துவிட்டு வந்து, இவர்களைப் பற்றி கவலைப் பட்டுக்கொண்டிருப்பாரே என்று சௌந்தர் சாருக்கு மெசேஜ் அனுப்பினேன். "தள்ளி நின்று தானே பேசினீங்க/சாப்பாடு குடுத்தீங்க? உங்களை/உடல்நிலையை நல்லபடியா பாத்துக்கோங்க சார். நீங்க தான் ஆதாரமே" என்று பதில் அனுப்பினார். என்னுடைய குடும்பத்திற்கு நான் ஆதாரம் என்ற அர்த்தத்தில் சொல்லியிருப்பார் போல என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், "நீங்க தான் ஆதாரமே" என்று அவர் சொன்னதற்கு வேறு அர்த்தம் இருக்குமென்று அப்போது தெரிந்திருக்கவில்லை.
இரவு 8 மணி வாக்கில், ஜெனரல் வார்டுக்கு தன்னை மாற்றிவிட்டார்கள் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். உடனே அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டோம்.
ஆனால் அன்றிரவே மீண்டும் எமர்ஜன்ஸிக்கு கொண்டுபோகும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. சௌந்தர் சார் அன்று காலையில் சாப்பிட்டது மட்டும் தான். அதுவும் முழுங்க முடியாத காரணத்தால் சரியாக சாப்பிடவில்லை. எனவே, சாப்பிடாததால் ஏற்பட்ட லோ-பிபி மற்றும் ஏற்கனவே இருந்த நோய் தொற்று இரண்டும் சேர்ந்து பிரச்சனையாகி இருக்கக்கூடும். இதையெல்லாம் கேட்டால் சுஜாதா மேடம் மிகவும் பயந்துவிடுவார் என்பதால், அவரிடம் சௌந்தர் சார் சொல்லவில்லை. ஆனால் இதையெல்லாம் அதிகாலை (01-Apr) 3.15-க்கு எனக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். நான் 6.30-க்கு பார்த்துவிட்டு, சாப்பிட ஏதாவது கேளுங்க சார். பிரட்-டாவது வைத்திருப்பார்கள் என்று சொன்னேன்.
வெள்ளரிக்காய் தக்காளி ஆப்பிள் மற்றும் பால் கொடுத்தார்கள், சாப்பிட்டேன். இப்போது தான் உயிர் வந்தது என்றும், மொபைலில் பேட்டரி குறைந்துவிட்டது என்றும் 6.40-க்கு அனுப்பினார். வெளியாட்கள் வந்து பார்க்க அனுமதிக்கிறார்களா? உணவு, மருந்து, சார்ஜர் கொண்டு வந்தால் கொடுக்க விடுவார்களா என்று கேட்டேன். யாரையும் அனுமதிப்பதில்லை என்று 11.45க்கு பதில் அனுப்பினார். ஆனாலும் அவரது வார்டு மற்றும் படுக்கை எண் கேட்டேன். அனுப்பினார்.
நண்பர்கள் யார் மூலமாகவாவது இதையெல்லாம் கொடுத்தனுப்பலாம் என்று முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை. பிறகு அவரிடமிருந்து எதுவும் தகவலும் இல்லை. மதியம் 1.45க்கு உடல்நிலை எப்படி இருக்கிறது சார் என்று கேட்டு மெசேஜ் அனுப்பினேன். அது டெலிவரியே ஆகவில்லை. பேட்டரி குறைந்துவிட்டதால் போன் ஸ்விட்ச்-ஆப் ஆகியிருக்கும் என்று நினைத்தேன்.
உடனே அந்த வார்டில் இருக்கும் லேண்ட்லைன் எண்களை நண்பர்கள் மூலம் பெற்று, டயல் செய்தேன். ஒரு நர்ஸ் பேசினார். அவர் நல்லபடியாக இருப்பதாகவும், ஆக்சிஜன் லெவல் 95-ல் இருப்பதாகவும், இப்போது தூங்குகிறார் என்றும் சொன்னார். வெஜிடேரியன் சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றேன். "சரி, அவருடைய அட்டையில் குறித்து விடுகிறேன். சாப்பாட்டு நேரத்தில், கொடுத்துவிடுவார்கள்" என்று சொன்னார்.
மாலை வம்சியை கொரோனா டெஸ்டுக்கு அழைத்துப் போய், முடிந்ததும் கூட்டிவந்தேன். இரவு வரை சௌந்தர் சார் பற்றி எதுவும் தகவல் இல்லாததால், அவர் ஸ்டேபிளாக இருக்கிறார் போலும் என்று எண்ணிக்கொண்டோம். ஆனால் இரவு 9.30 வாக்கில், ஹாஸ்பிடலில் இருந்து ஒரு மருத்துவர் சுஜாதா மேடம் போனில் அழைத்து, "Your husband is in critical state. We are trying our level best" என்று சொல்லியிருக்கிறார். உடனே பதறிக்கொண்டு என்னை அழைத்தார் சுஜாதா மேடம். நான் அவரை கொஞ்சம் சமாதானம் செய்து, சௌந்தர் சார் பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்தேன். தெரிந்தவர் தெரியாதவர் நண்பர்கள் அவர்களுடைய நண்பர்கள் என்று யார் யாரையோ தொடர்புகொண்டு பேசினேன். இரவு 10.30 வாக்கில், சட்டென Trafco ஸ்ரீதர் சார் நினைவுக்கு வர, அவருடைய நண்பர் Dr சதானந்த் BDF ஹாஸ்பிடலில் தான் இதய சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் என்றும் நினைவுக்கு வந்தது. உடனே ஸ்ரீதர் சாரை தொடர்புகொண்டு சௌந்தர் பற்றி சொல்லி, டாக்டர் நண்பரிடம் விசாரிக்க சொல்லுங்கள் என்று கேட்டேன். மறுநாள் காலை ஹாஸ்பிடல் போனதும் விசாரித்து சொல்கிறேன் என்று டாக்டர் சொன்னார்.
இதற்கிடையில் சென்னையிலிருந்து சௌந்தர் சாரின் அக்கா, என் நம்பரை சுந்தரராஜன் சாரிடம் பெற்றுக்கொண்டு, நேரடியாகவே என்னிடம் பேசினார். காலை முதல் நடந்தவற்றை சொல்லி, சௌந்தர் சாரை பற்றி தற்போதைய நிலையை தெரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்றும் சொன்னதும், கொஞ்சம் சமாதானம் ஆனார். இதற்குள் மணி இரவு 12.30 தாண்டியிருந்தது.
என் கதை/கட்டுரைகளை படித்துவிட்டு, நான் எழுதும் உப்புசப்பில்லாத நடையையும் மொக்கை ஜோக்குகளையும் அத்தனை ரசித்து பாராட்டியவர் சௌந்தர் சார். "ஆயிரத்தில் ஒருவன்(ர்) ரவிக்குமார்" கதையை லிங்க் அனுப்பியவுடன், எங்கேயோ போய்க்கொண்டிருந்தவர், காரிலேயே படித்துவிட்டு உடனே கூப்பிட்டு பேசினார். "அந்த PMP ரவிக்குமார் மட்டுமில்ல சார்.. நீங்களும் இந்தக் கதையுமே கூட பெரிய motivation தான்" என்று சொன்னார். வெறுமனே வாயளவில் இல்லாமல் நிஜமாகவே மனதாரப் பாராட்டினார். "ஜன்னலோரம்" கதைகளின் ஒவ்வொரு பாகத்தையும் லிங்க் அனுப்பியவுடன் படித்துவிட்டு, பாராட்டவும் செய்தார் சௌந்தர் சார். இன்னும் நிறைய எழுதுங்க சார் என்று ஊக்கப்படுத்தவும் செய்தார்.
சௌந்தர் சார்... உங்களை பத்தியே ஒரு கதை எழுதியிருக்கேன்... படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க சார்...
Excellent service by you prasanna. 🙏🙏🙏🙏
ReplyDeleteSimple prose and lucid. We will miss Sri Soundar very much for sure, Prasanna. Your timely help to the bereaved, with support from others is exceptional. No words to describe such noble thought and service. My respects. Pray for his Atma to reach the thiruvadi of Sriman nArAyanA 🙏
ReplyDeleteGreat writeup
ReplyDeleteExcellent. Really heart touching.
ReplyDeleteYou brought the whole incident in front of my eyes. Heartfelt condolences to their family. Your timely help and efforts are unparallel. Will pray for his soul to reach lotus feet of lord.
ReplyDeleteI used to get astonished by Tamizh eloquence and agility possessed by Prasanna. For finalizing participants for Sundharakanda Parayanam to be held on 02 Apr 2021, by mid of Mar 2021; Prasanna explicitly mentioned the speed at which Soundhar sir used to recite. We missed to witness your lightening speed recitation sir.
ReplyDeleteMay Sriman nArAyanA bestow eternal abode and give enough strength to Sujatha Madam / Kavitharkika Simman and all their close relatives to overcome this huge loss.
Adiyen Dasan
நேர பார்த்த மாதிரி இர்ருந்து உன் write up
ReplyDeleteரொம்ப கஷ்டமாக இருந்தது