நடையா இது நடையா

"உதிப்பன உத்தமர் சிந்தையுள்" என்பது போலே, இப்படியொரு சிந்தனை உதித்தது எந்த உத்தமர் சிந்தையிலோ?? என்ன சிந்தனையா... சொல்றேன். அதுக்கு முன்னாடி, இந்தப் பாசுரத்தோட 2வது அடியை  படிச்சுடுங்க. "ஒன்னலர் நெஞ்சமஞ்சிக் கொதித்திட * மாறி நடப்பன". இப்போ அடிமேல் அடி வெச்சு நடந்து போய் அந்த உத்தமர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?
 
அஷோக்... இந்த நாள் உன்னோட காலண்டரில் குறிச்சு வெச்சுக்கோ. நீ எப்படி என் வீட்டை இடிச்சு... (மானே தேனே பொன்மானே) நடுத்தெருவுல நிக்க வெச்சியோ, அதே மாதிரி உன்னையும் ஒருநாள் நடுத்தெருவுல நிக்க வெக்கல, என் பேர் அண்ணாமலை இல்லேடா... என்று ரஜினி சொன்ன டயலாக்கை யார் மீதோ இருக்கும் கடுப்பில், மொத்த பில்டிங்கையும் பார்த்து சொன்னது மட்டுமில்லாமல், நடுத்தெருவில் நிறுத்தியும் விட்ட அந்த மனிதருள் மாணிக்கம்... யாருன்னு தெரிஞ்சா, எனக்கும் சொல்லுங்க.
 

இந்த வருட சத்சங்க விளையாட்டுகளில் நடைப்பயிற்சியும் இருப்பதாக அறிவித்தனர். அறிவிப்பாளர்களே அசந்துபோகும்படி, அனைவரும் அளித்த அபாரமான பங்களிப்பு... அடேங்கப்பா லெவல்.

எல்லாரும் 1-2 நாட்கள் நடந்து தோராயமாக 15 முதல் 20 ஆயிரம் ஸ்டெப்கள் வைத்திருக்க, அதிரடியாக வந்து சேர்ந்தது அந்த ஸ்க்ரீன் ஷாட். பார்த்த அனைவருக்குமே, வடிவேலு பாணியில் பேஸ்மெண்ட் ஆட்டம் கண்டுவிட்டது.

ஒரே ஒரு பாம்.. 28 கிலோமீட்டர் க்ளோஸ் என்பது போல, ஒரே டேக்கில் சங்கர் சார் 25,500 ஸ்டெப்கள் நடந்து கலவரத்தை உண்டாக்கினார் என்று சொன்னால் மிகையல்ல. நல்லவேளை.. மற்ற போட்டியாளர்கள் யாருக்கும் வாந்தி பேதியாகவில்லை. அந்த அளவுக்கு சக போட்டியாளர்கள் வயிற்றில் (காலில்) கரும்புளியை கிலோ கணக்கில் கரைத்துவிட்டார்.

சங்கர் சாரின் வாக்கிங் குறித்து குரூப்பில் சலசலப்பு கிளம்ப (கிளப்பிவிட்டதே நாம தானே), "சாதாரணமாவே நான் ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் நடப்பேன். என்னோட வாக்கிங்-ஐ ஒரு முன்மாதிரியா, ஒரு பெஞ்ச் மார்க்-ஆ எடுத்துட்டு மத்தவங்க உத்வேகத்தோட நடக்க ஆரம்பிக்கணும். அதுக்காகத்தான் அந்த 25,500 ஸ்டெப்ஸ் ஸ்க்ரீன் ஷாட் போட்டேன். மத்தபடி எனக்கு பரிசு எல்லாம் வேண்டாம். அதை குடுக்கறதுக்கு தான் ஆசையே தவிர, வாங்கறதுக்கு இல்லை" என்று சொன்ன அந்த மனசு இருக்கே.. அது தான் சார் கடவுள்.

இதற்குள் அவர் குறித்து பாஹுபலி மீம்ஸ் எல்லாம் குரூப்பில் வரத்துவங்கியது, மினிஸ்டரின் கருணையால்.

சேலஞ்ச் ஆரம்பித்த முதல் நாளோ இரண்டாவது நாளோ.. சரியாக ஞாபகம் இல்லை. நான் வாக்கிங் கிளம்ப, என் ஓனரும் என்னுடன் வருவதாக சொல்ல, குழந்தைகளை என்ன செய்ய என்று கேட்ட கேள்விக்கு, அவங்களும் தான் என்று கூலாக பதில் சொன்னார். குடும்பத்தோட வாக்கிங் சேலஞ்ச்... அடேங்கப்பா லெவல்.
 
 
இந்த இடத்தில, "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்" பாடல் நினைவுக்கு வந்தது எனக்கு மட்டும் தானா? உண்மையான தமிழன் என்றால் கையை தூக்கவும்.

நான், ஓனர், ஆதித்யா மூவரும் நடக்க, அபிநவ் மட்டும் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வாக்கிங்??!!!! போவதாக ஏற்பாடு. வாக்கிங் போன 3.5 கிலோமீட்டரில், 3.25 கிலோமீட்டர் நான் அபிநவை சைக்கிளுடன் தள்ளிக்கொண்டு தான் நடந்தேன் என்பது தனிக் கதை.

இந்த 3.5 கிலோமீட்டரை நாங்கள் கடப்பதற்குள், பில்டிங்கில் இருக்கும் 36 பிளாட்காரர்களும் (சக வாக்கர்கள்) பார்த்தாகிவிட்டது. "வாக்கிங்-ஆ.. அதுவும் குடும்பத்தோட.. கலக்கறீங்க சார்.." என்று சிலர்.. "கப்புள் (Couple) வாக்கிங்-ஆ... அசத்துங்க" என்றெல்லாம் சிலர் கேட்டு காண்டாக்கிவிட்டனர்.

அவர்களுக்கெல்லாம் சொல்லிக்கொள்வது ஒன்று தான். "கேள்வி கேக்கறது ரொம்ப ஈஸி சார்". இதற்குமேல் நான் ஏதாவது சொன்னால் அடுத்த வாக் நடப்பதற்கு காலும் அடுத்த நடை எழுத கையும் சேதாரம் ஆகக்கூடும் என்பதால்... ஒருகால்(லும்) பதில் சொல்ல மாட்டேன்...

அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் எங்களை "கப்புள் வாக்கிங்" என்று கலாய்த்த அந்த ராமநாதபுர சேது சீமையின் இளவரசர் ராம பாஸ்கர சேதுபதி (மரு எல்லாம் ஒட்டவைத்துக்கொண்டு, ஸ்ரீராம் GBM என்று பெயரை மாற்றிக்கொண்டுவிட்டார்), அவரது ஓனருடன் "கப்புள் வாக்கிங்" போனபோது (கவனிக்க.. நம்மைப் போல பேமிலி வாக்கிங் அல்ல.. இரண்டு ஸ்ரீ-களையும் விளையாட அனுப்பிவிட்டு இந்த இருவர் மட்டும் சென்ற நயமான அசலான கப்புள் வாக்கிங்) நம் சக வாக்கர்களின் கேமரா கண்களில் சிக்கினார்.

அதே கேள்வி.. "கப்புள் வாக்கிங் சேலஞ்ச்-ஆ" என்று கேட்டதற்கு, "கப்புள்-ஆ வாக்கிங் போறதே சேலஞ்ச் தான்" என்று சொல்லி அனைவரையும் அசரவைத்துவிட்டார்.

எதிராளியை கேள்விகேட்டு அசரவைப்பது ஒரு கலை என்றால், அதற்கு ஒரு பதில் சொல்லி கேள்வி கேட்டவரை மட்டுமில்லாமல் சுற்றியிருப்பவர்களையும் அசரவைப்பது இன்னும் பெரிய கலை. அந்தக் கலையில் நம் ராம பாஸ்கர சேதுபதி அனைத்து ராஜ தந்திரங்களையும் கரைத்து குடித்தவர் என்றே சொல்லவேண்டும்.

இதைக் கேட்டு அனைவரும் அசந்து போய் வாக்கிங் போவதை மறந்து ஸ்தம்பித்து நிற்க, இந்த கேப்பில் ராம பாஸ்கர சேதுபதியும் அவர் ஓனரும் 2000 ஸ்டெப்ஸ் வாக்கிங் மீட்டரில் ஏற்றிவிட்டனர்.
 
 
 
இந்த போபியா (Phobia) என்று சொல்வார்களே.. ஏதாவது ஒன்றைப் பார்த்து பயப்படுவது.. அந்த மாதிரி, இப்போல்லாம் யாராவது வாக்கிங் போனாலே, அவங்க நம்ம வாக்கிங் குரூப் ஆளா இருப்பாங்களோ என்ற எண்ணம் ஏற்படுவதை தடுக்கமுடிவதில்லை.

நானும் மினிஸ்டரும் வாக்கிங் போய்க்கொண்டிருந்தோம். தூரத்தில் யாரோ ஒரு கப்புள் எங்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்கள். நம்ம குரூப் ஆளாகத்தான் இருக்கும் என்று பேசிக்கொண்டே நாங்களும் முன்னேறினோம். அருகில் வந்த பிறகு பார்த்தால் வேறு யாரோ.. பாவம் அவர்கள் எந்த குரூப் சேலஞ்ச்-ல் இருக்கிறார்களோ என்ன அவசரமோ.. எங்களைப் பார்த்து சிரிக்கக்கூட இல்லை. நாங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கடந்துவிட்டோம்.

இன்னும் கொஞ்ச தூரத்தில் யாரோ ஒரு பெண்மணி ஜாகிங் (Jogging) போய்க்கொண்டிருந்தார். அட.. நம்ம குரூப்-ல வாக்கிங் மட்டும் தானே சொன்னாங்க.. ஜாகிங் சேலஞ்ச் குரூப் எதுவும் புதுசா ஆரம்பிச்சிருக்கங்களோ? இல்ல, ஒருவேளை இவங்க ஜாகிங் போறதால ஸ்டெப்ஸ் கவுண்ட் ஜாஸ்தியாகுமோ? இதுவும் ஸ்ரீவத்சன் டெக்னிக்கா இருக்குமோ? என்றெல்லாம் சந்தேகம் தோன்ற, நாங்களும் கொஞ்சம் (கொஞ்சமே கொஞ்சம் வேகமாக) ஜாகிங் செய்துகொண்டே அவரிடம் சென்றோம்.

அருகில் சென்று மாஸ்க்கை இறக்கிவிட்டு நாங்கள் புன்னகைக்க, பதிலுக்கு அந்தப் பெண்மணியும் மாஸ்க்கை இறக்கி புன்னகைத்தார். நாகரிகம் அறிந்தவர் போலும். ஆனால் அப்போது தான் தெரிந்தது, அவர் நம்ம குரூப் ஆள் இல்லையென்று.

நமக்கும் நாகரிகம் தெரியுமென்று நிரூபிக்க வேண்டிய தருணமாதலால், நாங்கள் உடனே நின்றுவிடாமல் கொஞ்ச தூரம் அவருடன் மூச்சுவாங்க அளவளாவிக்கொண்டே ஜாகினோம். நிற்க. மற்றபடி நானோ மினிஸ்டரோ, ஜாகிங் பெண்மணியின் பெயரை கேட்கவுமில்லை போன் நம்பரை வாங்கவுமில்லை என்பதை சத்தியத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.

நாம நடக்கறதால நமக்கு ஏதாவது நடக்காதா என ஒரு குரூப்.. நாம நடக்கறோமோ இல்லையோ.. நம்மளால ஏதாவது நடந்தா அதுவே போதும் என்று மற்றொரு குரூப்.

நாம (நான் தனி ஆள் இல்ல...) ரெண்டாவது குரூப் என்று சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை.

"கண்டம் விட்டு கண்டம் பாயும் அது இது எது" என்று கேள்விப்பட்டிருப்போமே தவிர நேரில் பார்த்திருக்கும் வாய்ப்புகள் குறைவே. ஆனால் கண்டம் விட்டு கண்டம் நடப்பவர்களை பார்த்ததுண்டா? நம் குரூப்பில் இருக்கிறார்கள்.
 
 
வாக்கிங் சேலஞ்ச் ஆரம்பித்து கொஞ்ச காலம் வரையில் Hoora 265 பில்டிங், பக்கத்து பில்டிங், அதிகபட்சமாக Juffair வரையில் வாக்கர்கள் பரவிக்கிடந்தனர். அடுத்த சில நாட்களில் எல்லாம் எல்லை தாண்டிய பயங்கர"வாக்கிங்"-ஆக சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா-வில் இருந்தெல்லாம் வாக்கர்கள் நம் குரூப்பில் வலம் வர ஆரம்பித்தார்கள் என்பதெல்லாம்... அடேங்கப்பா லெவல்.

பஹ்ரைனில் இருந்தவரைக்கும் 4 ரோடு, 2 தெரு, ஒரு முட்டுச்சந்து என்று வாக்கிங் போய்க்கொண்டிருந்த மினிஸ்டர், சவுதி அரேபியா எல்லைக்குள் நுழைந்ததுமே நல்ல நிழலாகப் பார்த்து வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு, ஜெத்தா, ரியாத் என எல்லா இடத்துக்கும் நடந்ததே போகிறாராம். அதிலும் குவைத் பார்டர் என்றால், குஷியாக ஜாகிங் போகிறாராம். தனியாகத்தான் ஜாகிங் போகிறாரா என்பது இந்த இடத்தில் பதிலளிக்க இயலாத கேள்வி.

மினிஸ்டரை சவுதி அனுப்பிவிட்டு, இந்தப்பக்கம் அவருடைய தெய்வமச்சான் நடக்க ஆரம்பித்தால் 15-20 ஆயிரம் ஸ்டெப்ஸ் கவுண்ட் மினிமம் கியாரண்டி. இப்படியாக சவுதி பார்டருக்கு அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக மினிஸ்டரும் தெய்வமச்சானும் மற்ற வாக்கர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள்தான் இப்படி என்றால், பஹ்ரைன் வாக்கர்களின் கொஞ்ச நஞ்ச தூக்கத்திற்கும் வேட்டு வைக்கும் விதமாக விஜி ஸ்ரீராம் மேடம் செய்த காரியம் இருக்கிறதே...

அசந்த நேரம் பார்த்து அடிப்பது என்பது போல, பஹ்ரைனுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு குறைந்தபட்சம் 8 மணிநேர வித்தியாசம் என்பதை சாதகமாக்கி, பஹ்ரைன் வாக்கர்கள் தூங்கும் நேரம் விஜி ஸ்ரீராம் மேடம் வாக்கிங் போய்க் கொண்டிருப்பார் ஆஸ்திரேலியாவில். பஹ்ரைன் வாக்கர்கள் காலையில் எழுந்து பார்த்தால், விஜி மேடம் கணக்கில் ஸ்டெப்ஸ் கவுண்ட் பல்க்-காக இருக்கும்.

இது போன்ற சம்பவங்களால், குரூப்பில் ஸ்டெப்ஸ் கவுண்ட் எகிற ஆரம்பித்தது. சங்கர் சாருக்கே டஃப் கொடுக்குமளவுக்கு வாக்கர்கள் நடையாய் நடக்க, இதுவரையில் பார்த்ததெல்லாம் ட்ரைலர் தான்-மா. சும்மா ஜுஜுபி... என்பது போல சங்கர் சார் 25 ஆயிரம் ஸ்டெப்ஸ் கணக்கிலிருந்து ஒரு நாளைக்கு 30 ஆயிரம் அதற்கு மேல் என ஏலத்தில் ரேட்டை ஏற்றி விடுவது போல ரேஞ்சை ஏற்றிவிட்டார்.

Hoora 265 பில்டிங் முதல் தளத்தில் மணிகண்டன் சாரும் பழமலை சாரும் 2வது தளத்தின் மினிஸ்டருக்கும் தெய்வமச்சானுக்கும் டஃப் பைட் கொடுக்க, பக்கத்துக்கு பில்டிங்கில் இருந்து இவர்களுக்கு நடுவே மூக்கை நுழைத்தார் மாமயிலை மாடவீதி மதுரை திருப்பரங்குன்ற முருகனடிமை. கூடவே திருநெல்வேலி சிங்கிகுளத்தில் இருந்து வந்திருக்கும் அவரது அப்பாவும்.

Hoora ஏரியாவில் மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை என்று செய்திகள் வந்தவண்ணம் இல்லையென்பது உங்களில் பலரும் அறிந்திராத உண்மை. என்ன சார் இது பஹ்ரைன் வாக்கர்களுக்கு வந்த சோதனை...
 
 
எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக் காட்சிகளில் முதலில் 3 அடி வாங்கிவிட்டு, பிறகு வில்லன்களை பந்தாடுவார். போலவே, முதல் வாரங்களில் சங்கர் சார் தவிர மற்ற வாக்கர்களிடம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு கவுண்ட் இல்லையே என்று நாம் யோசித்து முடிப்பதற்குள், அடுத்தடுத்த வாரங்களில் பல்க்-காக கவுண்ட் வர ஆரம்பித்தது. அதுவும், அந்தப் பக்கத்துக்கு பில்டிங் எக்ஸ்டன்ஷன்-காரரின் குடும்பமே ரோட்டில் நின்று, போவோர் வருவோரையெல்லாம் "வாக்கிங் சேலஞ்ச் வெச்சுக்கலாம் வறீங்களா?" என்று கேட்காத குறையாக, ஸ்டெப்ஸ் கவுண்ட்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுக்கு நடுவில், என் கிணத்தை காணோம் ரேஞ்சுக்கு, 1,50,000 ஸ்டெப்ஸ் கவுண்ட்டை காணோம் என்று ரவி சாரிடம் பஞ்சாயத்து வேறு பேசியிருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வருகின்றன. இன்னும் என்ன மாய மந்திரங்கள் எல்லாம் "நடக்க" காத்திருக்கிறதோ.. அதுவும், அவர் ஒரு மாயவாதி என்று நினைக்கும்போதே.. ஒன்றும் சொல்வதற்கில்லை.

அசந்த நேரம் பார்த்து அடிக்கிறார் என்ற நமது குற்றச்சாட்டை விஜி ஸ்ரீராம் மேடம் படித்துவிட்டார் போலும். முந்தையநாள் வாக்கிங் ஸ்டெப்ஸ் ஸ்க்ரீன் ஷாட் போட்ட கையோடு (காலோடு??!!?) பிளைட் ஏறி மறுநாள் காலைக்கெல்லாம் பஹ்ரைனில் இறங்கிவிட்டார். பிளைட்டுக்குள்ள 8 மணி நேரம் வாக்கிங் போயிருக்கேன். இன்னிக்கு கவுண்ட்-ல ஒரு 22,000 சேர்த்திடுங்க என்று இறங்கிய காலோடு பீதியை கிளப்பியிருக்கிறார். எதுவா இருந்தாலும், சங்கத் தலைவர் ரவி சாரிடம் பேசிக்கோங்க என்று சொல்லிவிட்டேன். பாவம் ரவி சார்...

வாமன ரூபிகளாய் குறுங்-கவுண்ட்களுடன் வலம் வந்தவர்கள் திரிவிக்ரம அவதாரமாய் பல்க்-கான கவுண்ட்களுடன் வளமாக இருக்கிறார்கள். முதலிடத்திற்கு "நடக்கிறது" அடிதடி என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. சரி கடைசியிலிருந்து முதல் இடம் பிடிக்கலாம் என்றால், அங்கு டோக்கன் வாங்கி கியூவில் நிற்பதற்கே கலவரம் (கடைசியிலிருந்து முதல் இடம் என்பதால் "நடக்கிறது" என்று சொல்ல முடியாதே...)

பரபரப்பான இறுதி வாரத்தில் இருக்கிறோம். பைனல்-ஸில் கலந்துகொள்ள பல வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வாக்கர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். முதலிடம் பிடித்து வெற்றிநடை போடப்போகிறவர் யார்? உங்களை போலவே தெரிந்துகொள்ள பரபரப்புடன் குறுக்கும்நெடுக்கமாக "அவா"-வுடன்...
 
 
 
வாக் ஆன்தம் பாடல் (உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக)

 
நடப்போம்...

Comments

  1. அருமை என்னே ஒரு கதை நடை....👍👏👏👏👌❤

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2