உணவுத் தீவிரவாதம்
டாக்டர் கணேஷ் மற்றும் குழுவினர் இறை இசை பயணத்திற்காக பஹ்ரைன் வந்திருந்த பொழுது அறிமுகம் செய்த பதம் இது - "உணவுத் தீவிரவாதம்". பஹ்ரைன் மற்றும் துபாயில் அவருடைய குழுவினர் எதிர்கொண்ட விருந்தோம்பல் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகையில் இந்தப் பதம் அறிமுகமானது.
ரஞ்சனியும் குழந்தைகளும் இந்தியாவுக்கு சென்ற அந்த தினம் தொடங்கி இன்றுவரை, ஒரு வேளை கூட பசித்து உண்ணவில்லை. இங்கிருக்கும் உணவுத் தீவிரவாத தலைவர்கள் எனக்கு பசி ஏற்பட விட்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம்.
முதல் நாள் ஸ்வாதி ஸ்ரீராமின் கைவண்ணத்தில் வயிறு நிரம்பியது. அடுத்தடுத்த நாட்களில் விஜி ஸ்ரீராம், ரஞ்சனி கோசகனின் அம்மா (இனி ரகோ-அம்மா) என பலரும் எனது வாயையும் வயிற்றையும் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டனர் என்பதே உண்மை.
தினமும் கழுத்துவரை உணவைக் கொடுக்கும் அவர்கள், ஏகாதசியன்று மட்டும் கொஞ்சம் இரக்க மனதுடன் வயிற்று அளவு மட்டும் உணவு குடுத்து என் வயிற்றில் பாலை வார்த்தனர். ஆனால் அதற்கும் சேர்த்து மறுநாள் துவாதசி அன்று மீண்டும் கலவரம் ஆரம்பமாயிற்று. மோர்க்குழம்பு, சாத்தமுது (ரசம்), பருப்பு உசிலி, சாதம், என ஐந்தடுக்கு டிபன் கேரியரில் வீட்டுக்கே பார்சல் வந்தது.
ஒருவேளை அந்த சாதம் பத்தாதோ என நினைத்து நானும் கொஞ்சம் குக்கரில் அரிசி வைத்தேன். ஆனால் என் கண்கள் என்னை ஏமாற்றிய தருணம் அது. வயிறு நிரம்ப சாப்பிட்ட பிறகும், கைப்பிடி சாதம் மீதமிருந்தது டிபன் கேரியரில். சரி.. பரவாயில்லை. மீதம் இருந்த சாதத்தை வைத்து, இரவு உணவை சிம்பிளாக தயிர் சாதத்துடன் முடிச்சுக்கலாம் என முடிவு செய்தேன். ஆனால் இரவு பெசரட்டு தோசையுடன் டின்னர் முடியும் என அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. இதற்கிடையில் மீனாக்ஷி மேடம் வந்து கோவில் பிரசாதம் கொடுத்தார். அப்போ மீதமிருந்த சாதம் என நீங்கள் நினைப்பது என் காதுக்கு கேட்கிறது. அதேதான் நடந்தது.. மறுநாள் காலை பிரேக் பாஸ்ட்க்கு, ஐஸ் பிரியாணி.
அதற்கடுத்த நாள் முதல் ரகோ-அம்மா அடிக்க ஆரம்பித்தார். இலை போட்டு விருந்து மயம்தான். சாப்பிட்டு முடித்ததும், யாரேனும் கைத்தாங்கலாக தூக்கி விடமாட்டார்களா என சுற்றிலும் தேடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இப்படியே போனால் திடுதிப்பென எனது ஓனர் ரஞ்சனி திரும்பி வந்து என்னைப் பார்த்தால் நான் வீட்டை வேறு யாருக்கோ உள்வாடகைக்கு விட்டு இருப்பதாக நினைக்கக்கூடும்.. ஐந்தே நாட்களில் 2 கிலோ வெயிட் ஏறிட்டேன்.
ம்ஹ்ம்... இது சரிப்பட்டு வராது எனத் தெரிந்து கொண்டு மறுநாள் முதல் நானே கரண்டியை கையில் எடுக்க முடிவு செய்தேன். ஒருமுறை முடிவு பண்ணிட்டா நம்ம பேச்ச நாமளே கேட்க மாட்டோமே... அடுத்தநாள் கரண்டியும் கையுமாக கிச்சனில் நானே சம்பவம் பண்ணினேன். இல்லை இல்லை... சாம்பார் பண்ணினேன்.
எல்லாம் முடிந்து சரியாக சாப்பிட உட்கார்ந்த போது போன் அடித்தது. எடுக்காமலே விட்டிருக்கலாம்.. விதி வலியது... விரல்கள் தன்னிசையாக போனில் சுண்ணாம்பு தடவி, காலை அட்டண்ட் செய்தது...
ரகோ-அம்மா: என்ன சாப்ட்டாச்சா?
நான்: இதோ சாப்பிட போறேன்
ரகோ-அம்மா: சாப்பிடாதீங்க.. கீரை கூட்டு கொடுத்துவிடுகிறேன், என்றார்.
காய்கறி கடையில் கொசுறாக கொத்தமல்லி கருவேப்பிலை வாங்குவதுபோல் கீரை கூட்டுக்கு கொசுறாக பீட்ரூட் கூட்டு, உருளைக்கிழங்கு பொரியல், வத்த குழம்பு வந்து சேர்ந்தது.
நேற்றும் கிச்சனில் கலவரம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. எனவே (கூடுமான வரையில்) அயல்நாட்டு தீவிரவாத பெசரட்டுகளையும் பொரியல்களையும் முறியடிக்க முடிவுசெய்த படி, கேரியர் விடு தூதாக வந்த போன் கால்களை எல்லாம் வாண்ட்டடாக மிஸ்டு காலாக்கினேன். தப்பித்தவறி அட்டண்ட் செய்தவற்றை ராங் நம்பர் என நானே மாறு வேடத்தில் வந்து பேசி சுற்றலில் விட்டேன். லெமன் ரைஸ் கேரட் கோஸ்மல்லி என லைட்டாக முடித்துக்கொண்டேன். இன்றும் எப்படியோ ஒருவழியாக தீவிரவாத கும்பலிடமிருந்து தப்பி விட்டேன்.
ஆனால் ரஞ்சனி திரும்பி வர இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன என நினைக்கும் போதே கொஞ்சம்... பயம் எல்லாம் இல்லை... பயம் கலந்த அச்சமாக இருக்கிறது என சொல்லலாம் என்றாலும் அப்படியும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது என்றும் ஆணித்தரமாக கூற முடியாத....
உங்கள் தாண்... ஐயோ... சாம்பார் சாப்பிட்டு நான் - தாணாகிடுச்சே...
உங்கள் நான்.
அனேகமாக உணவு தீவிரவாதத்தின் அடுத்த பாகம் வந்தாலும் வரலாம்
அருமை .....😋😋
ReplyDelete