பிரசன்னாவின் பிரச்சனைகள் - 1

என்னோட பிளாக்-கையும் மதிச்சுப் பாக்க வந்த உங்களுக்கு நன்றி 

என்னடா பிரசன்னா-பிரச்சனை-ன்னு எழுதிருக்கானே, இவனுக்கு அப்படி என்ன பிரச்சனை-னு நினைக்கிறீங்களா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" ரேஞ்சுக்கு பிரச்சனை இருக்கு பாஸ். ஆனா நாம எல்லாம் பிரச்னையை போர்வையா போத்திட்டு தூங்குவோம்-ல (ஒரு போர்வை வாங்க துப்பு இல்லையடா உனக்கு-னு நீங்க மனசுக்குள்ள நினைக்கறது எனக்கே சத்தமா கேக்குது. ஆனா மேட்டர் கோர்வையா வருது பாருங்க)

நான் பிறக்கும் முன்னமே, ஆன் குழந்தை தான் பிறக்கும்-னு கணிச்சு பிரசன்ன வரதன் தான் பேரு-ன்னும் முடிவு பண்ணிட்டாங்க. வேற யாரு.. எங்கப்பா அம்மா தான். பட் அந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு.

எங்கம்மாவுக்கு சீமந்தம் ஏற்பாடு பண்ணப்ப தான் முதல் பிரச்சனை ஆரம்பம். எங்கப்பா கூடப்பிறந்த பெரியப்பா பெரியப்பா-னு 2 பேரு (எங்கப்பாவுக்கு 2 அண்ணன்) சீமந்த செலவை நாங்க ஏத்துக்க முடியாதுன்னு பிரச்சனை. அப்பல்லாம் எல்லாரும் கூட்டுப் பொரியல் குடும்பமா இருந்தாங்களாம். யாருன்னு கேக்கறீங்களா.. தாத்தா, பெரியப்பா 1 பெரியம்மா 1, அவங்க 3 பசங்க (லேட்டர் என்ட்ரி 2 ஆக மொத்தம் 5), பெரியப்பா 2 பெரியம்மா 2, அவங்க 2 பொண்ணுங்க, எங்கப்பா அம்மா-னு ஒத்துமையா (அப்படின்னா என்ன?) இருந்திருக்காங்க. அப்பறம் அப்படி இப்படி-னு சீமந்தம் முடிஞ்சு கொஞ்ச நாளில் ஹீரோ என்ட்ரி. (நான் பொறந்துட்டேன்-னு நீங்க புரிஞ்சுக்கணும்).

அப்பறம் கொஞ்ச நாளில் நான் தவழ ஆரம்பிச்சப்பவே பயங்கர சேட்டையும் (இருக்காதா பின்னே). கட்டிப் போட்டுதான் வளத்தாங்க (அடுத்த பிரச்சனை). நம்ம அடங்கிருவோமா என்ன.. அப்பவே டெரர் ஆச்சே.. கயிறை இன்னும் இறுக்கமா காட்டினாங்க. எங்க கிருஷ்ணர் மாதிரி உரலை உருட்டிட்டுப் போயிருவேனோ-ன்னு நினைச்சு, தூண்-ல கட்டிபோட்டாங்க. இழுத்து இழுத்துப் பாத்து, டயர்ட் ஆகி தூங்க வேண்டியது தான் (என் உழைப்பெல்லாம் வீணாப் போச்சே). அந்தப் பக்கமா போறவர்ற லேடீஸ் எல்லாரும் கயிறை கழட்டி கொஞ்சிட்டுப் போவாங்களாம் (கோபியர் கொஞ்சும் ரமணா பாடலை நினைத்துக்கொள்ளவும். அதைத்தாண்டிப் போக வேண்டாம்). போகும்போது மறக்காம திரும்பவும் கட்டிபோட்டுருவாங்களாம் (விடுங்க பாஸ்.. இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்)

வளர வளர சேட்டையும் வளந்துச்சு.. பொறுத்துப் பொறுத்துப் பாத்த அப்பா அம்மா, கொண்டு போயி ஸ்கூல்-ல சேத்துட்டாங்க (2 1/2 வயசுல LKG). படிச்சா அறிவு வளருமாமே (அப்படி நம்பித்தான் நாம ஸ்கூலுக்கு போனோம்), அதான் நாமளும் போனோம் (அறிவு வளந்துச்சா-ன்னு கேக்கறவன் ரத்தம் கக்கி சாவான்).

எங்க ஊருக்கு அப்பல்லாம் ஸ்கூல் வேன் வராது. விடுவாரா எங்கப்பா.. ஒரு மெட்ரிகுலேசன் ஸ்கூல்-ல பேசி 5-10 பசங்களை உங்க ஸ்கூல்ல சேத்துவிடுறேன்-னு சொல்லி வேன் வரவெச்சுட்டாரு. சொன்னமாதிரியே ஊருக்குள்ள பேசி என்னை மாதிரி 4-5 (அப்பாவி) பசங்களை ரெடி பண்ணிட்டாரு.

காலை 5.45-6 மணிக்கு எழுப்பிவிட்டு, குளிச்சு ரெடி பண்ணிட்டு 7.05-கு மர்பி ரேடியோ-ல தலைப்பு செய்திகள் சொல்லும்போது சாப்பாடு ஊட்ட ஆரம்பிச்சு, 7.15-க்கு "ஆகாசவாணி. செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி"-னு  விரிவான செய்திகள் சொல்லும்போது என்னை இழுத்துட்டு பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்புவாங்க எங்கம்மா.

அந்த வேன் ஊரெல்லாம் சுத்திப் ஸ்கூலுக்குப் போகும். திரும்பவும் அதே மாதிரி சுத்தி ஊர்ல கொண்டுவந்து விடுவாங்க. சில வெள்ளிக்கிழமை-ல மட்டும் வேன்-ல ஊரை சுத்த தேவையிருக்காது. அப்பாவும் அம்மாவும் Suzuki Max 100 பைக்ல (Yezdi பைக் வாங்கறதுக்கு முன்னாடி கொஞ்ச நாள் Suzuki இருந்துச்சு) வந்து என்னை ஸ்கூல் வாசல்ல பிக்கப் பண்ணிட்டு பெரியகுளத்துல இருக்கற பெரியப்பா 1 வீட்டுக்கு போவோம். 2 நாள் பாண்டவருடன் சேர்ந்து ஒரே ஆட்டம் தான். கிரிக்கெட், சைக்கிள், வராக நதியிலே பாம்பு புடிக்கறது-னு நாங்க ஒரே பிசி. நாங்க 6 பேரும் வீட்டை அதகளம் பண்ணுவோம்.

ஞாயித்துக் கிழமை சாயுங்காலம் கரெக்ட்டா காய்ச்சல் வந்திரும் (திங்கள் கிழமை ஸ்கூலுக்கு போகணுமே). அதே பீலிங்-ல ஒரு ஸீன் போட்டு தூங்கிருவோம். அடுத்த நாள் வண்டி நேரா நம்ம வீட்டுக்குத்தான் போகும்-னு நம்பி உக்காருவேன். ஆனா நேரா ஸ்கூல்-ல நிக்கும். இறங்கி கேட் தாண்டி உள்ள போற வரைக்கும் பாத்துட்டு தான் வண்டி கிளம்பும். கேட்டை தாண்டி உள்ள போனதுக்கப்பறம் நோ ரிட்டன். வாட்ச்மேன் அடிப்பன்..

நாம இப்போ 4-ம் கிளாஸ். Quarterly Exam வந்துச்சுங்க. நாமதான் தேர்வு-ன்னாலே சோர்வாயிடுவோமே.. ஆனாலும் இந்த இரக்கமற்ற சமூகம் என்னை பரீட்சை எழுத வைத்தது. ஒருவழியா exam முடிஞ்சு லீவு விட்டாய்ங்க.

லீவு-ல செமையான ஆட்டம். வாடகை சைக்கிள், பெரியப்பா வீடு-ன்னு சிறப்பா போச்சு. ஸ்கூல் re-open ஆச்சு. பிரச்னையும் தான்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2