கையெழுத்தால் வந்த பிரச்சனை - 2

ரேங்க் கார்ட்

அது தான் அடுத்த பிரச்சனையே. 2 சப்ஜெக்ட் அவுட். காலேஜா இருந்தா, அரியர்.. அடுத்த செமஸ்டர் கிளியர் பண்ணிடுவேன்-னு சொல்லி தப்பிக்கலாம். ஸ்கூல்-ல ம்ஹ்ம்.. சரி மத்த சப்ஜெக்ட்-லயாவது நல்ல மார்க் வாங்கியிருக்கோமா?? அதுவும் இல்லை. சரி.. தலையே போனாலும் தன்மானத்தை விடக்கூடாது-ன்னு வீட்ல விஷயத்தை சொல்லிட்டேன். அம்மா செம மூட் அவுட். அப்பா வீட்டுக்கு வந்தவுடனே சொல்லிட்டாங்க. அப்பாவும் கடமை தவறாம என்னைப் பின்னிட்டாரு. அடுத்த பரீட்சை-ல நல்ல மார்க் வாங்குவேன்-னு சொன்னேன். அப்பறம்தான் விட்டாரு. அப்போ தெரியல. இனி வரப்போற எல்லா exam-கும் இப்படித்தான் அடிக்கப் போறாரு.. நானும் இப்படித்தான் சொல்லப்போறேன்-னு..

விதி வலியது. அடுத்த ஒரே மாசத்துல midterm. இந்த தடவை சொன்ன சொல்லக் காப்பாத்தணும்-னு முடிவு பண்ணி வெறிகொண்டு படிக்க ஆரம்பிச்சேன். பரீட்சை முடிஞ்சு ரிசல்ட் வந்துச்சு. ரஜினி ஒரே பாட்டுல பெரிய ஆளா வர மாதிரி இங்க நீங்க கற்பனை பண்ணினால், நிர்வாகம் பொறுப்பல்ல. இந்த தடவை 3 சப்ஜெக்ட் அவுட் (என்ன கொடுமை சரவணன்).

சும்மா விடுவாங்களா ராமதிலகம்.. (போன ஜென்மத்துப் புண்ணியத்தைப் பாத்து கடவுள் நமக்கு கொடுத்த வரம் தான் கிளாஸ் மிஸ் ராமதிலகம்). உடனே நம்மளை பத்தி நல்லதா நாலு வார்த்தை பரீட்சை பேப்பர்-ல எழுதி, வீட்ல கையெழுத்து வாங்கிட்டு வரச் சொல்லிட்டாங்க. வீட்ல காட்டினா என்ன ஆகும்-னு சொல்லித்தான் தெரியனுமா... வீட்ல காட்டலை. அடுத்தநாள் இருக்கற கடவுள் இல்லாத கடவுள்-னு எல்லாரையும் வேண்டிட்டு ஸ்கூலுக்குப் போனேன். பிரார்த்தனை வீண் போகலை. ராமதிலகம் வரலை. ஆனா அதுக்கு அடுத்தநாள் கடவுள் கைவிட்டுட்டார். பரீட்சை பேப்பர்-ல கையெழுத்து வாங்காம ஸ்கூலுக்கே வரக்கூடாது-னு சொல்லிட்டாங்க.

ஆனாலும் வீட்ல பரீட்சை பேப்பர் காட்டவேயில்லை. இதுக்கு பயந்து ஸ்கூலுக்குப் போகாம இருக்க முடியுமா.. வரலாறு முக்கியம். அடுத்த நாள் என்ன நடந்தாலும் பரவாயில்லை-ன்னு ஸ்கூலுக்கு கிளம்பியாச்சு. வேன்-ல போயிட்டு இருக்கும்போது உதித்த அந்த அற்புதமான யோசனை, எங்கம்மா கையெழுத்தை என்னைப் போட வைத்தது (நல்லா கவனிக்கணும்.. நானா செய்யலை.. தானா நடந்தது. அப்பா கையெழுத்து கொஞ்சம் கஷ்டம். ஆனா சீக்கிரமே பழகிட்டோம்-ங்கறது வேற விஷயம்).

ராமதிலகம் வந்தாங்க. பரீட்சை பேப்பர் கேட்டாங்க. குடுத்துட்டோம். சந்தேகமே வராத அளவுக்கு அட்சர சுத்தமா போட்டிருந்தோம். கொஞ்ச நாள் சாந்தமாக போச்சு. ஆனா அப்படியே இருந்துட்டா போரடிக்குமே.. பிரச்சனை இருந்தாத்தானே வாழ்க்கை சுவாரஸ்யம் (அப்படி சொன்னவன் மட்டும் என் கை-ல கிடைச்சான்...) Parents meeting. அம்மா ஸ்கூலுக்கு வந்தாங்க. கடவுள் மீண்டும் கைவிட்டார். ராமதிலகம் எங்கம்மாவைப் பாத்துட்டாங்க.

சில பல கம்பளைண்ட்-கு அப்பறம் பரீட்சை பேப்பர் மேட்டருக்கு வந்தாங்க. ஆனா அம்மாவோ, பரீட்சை பேப்பர் கொடுத்ததே தெரியாது-னு சொல்லிட்டாங்க. 2 பேருக்கும் பயங்கர குழப்பம். நாம தெளிவா வேடிக்கை பாத்துட்டு இருந்தோம். பரீட்சை பேப்பரை கொண்டு வரச்சொன்னாங்க. அம்மாவுக்கு பயங்கர ஷாக். இந்தக் கையெழுத்து நான் போடவேயில்லை-னு சொல்லிட்டாங்க. மனுநீதி சோழன் பரம்பரை... நம்ம குட்டு வெளிப்பட்டுப் போச்சு. ஸ்கூல்லயே நல்ல கவனிப்பு. வீட்டுக்கு வந்தப்பறம் சிறப்பான தரமான சம்பவமெல்லாம் நடந்தது. ஆனா பாசம் மாறாம பெல்ட் தடம் பதிஞ்ச இடத்துல எல்லாம் தேங்காய் எண்ணை தடவிவிட்டார் (அடிக்கிற கை தான் அணைக்கும்).

கொஞ்ச நாள் அமைதி.. எங்க வீட்டுக்கு புது வரவா தங்கை வந்தாள். எல்லார் கவனமும் அவ மேல தான். நாம கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனோம்.

மெட்ரிகுலேசன் நமக்கு ஓவர்லோடு-ன்னு தெரிஞ்ச அப்பா, லேட்டா எடுத்தாலும் லேட்டஸ்டாக ஒரு முடிவெடுத்தார். 6-ம் கிளாஸ் ஸ்டேட் போர்டு ஸ்கூல் மாத்திடலாம்-னு முடிவு பண்ணிட்டார். நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. தேனி மாவட்டத்தில் சொல்லிக்க கூடிய அளவுக்கு பெரிய ஸ்கூல். எங்கப்பா பெரியப்பா 1 பெரியப்பா 2 எல்லாரும் அந்த ஸ்கூல்ல படிச்சதெல்லாம் வரலாற்றுப் பதிவுகள் (நான் 6-ம் கிளாஸ் சேந்தப்போ கூட, அவங்களுக்குப் பாடம் எடுத்த 2-3 வாத்தியார் அப்பாவும் அங்க வேலை பாத்துட்டு இருந்தாங்க)

அந்த ஸ்கூல்-ல சேரணும்னா Entrance exam எழுதணும்... அடுத்த பிரச்சனை...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2