நைனா மாமா

பெரியவர்கள் தான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். அது பிறந்தவுடன் நடக்கும் நிகழ்வு. குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்பொழுது, மழலை மொழியில் பெரியவர்களுக்கு சூட்டும் பெயர்கள் வித்தியாசமானவை. விசித்திரமானவை.

அப்படி என் மகன் ஒரு நண்பருக்கு சூட்டிய பெயர் தன் நைனா மாமா. அயுண், அமினு இப்படி அந்தப் பட்டியல் நீளும். நானும் கூட என் தாத்தாவுக்கு இப்படி விசித்திரமான பெயர் சூட்டியுள்ளேன். வெங்கடவரதன் எனும் அவரது பெயர் என் வாயில் நுழையாத காரணத்தால் வந்தது  "வெங்கடேச குமார ஜலபதி". சில பல வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் அவரது குழந்தைக்கு சூட்டவிருந்த பெயர் "ஜெய வீர ஆஞ்சநேயர்". ABT-யில் ஆஞ்சநேயருக்கு பதில் இவர் மலையை தூக்க நேர்ந்திருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. அவரது உருவத்திற்கேற்ற அழகான பெயர் சூட்டப்பெற்றார்.

நைனா மாமாவின் குழந்தைகள் அவரை நைனா என்று அழைப்பார்கள். ஆதித்யாவும் அப்படியே அழைக்க ஆரம்பித்து பின்னர் மாமா அதனுடன் ஒட்டிகொண்டது. நண்பர் ஒருவரது மகள், மழலை மொழியில் என்னை "பிசன்னா மாமா" என்று தான் விளிப்பாள். இது பரவாயில்லை. அவரது பக்கத்து வீட்டு நண்பர் பெயர் சச்சின். இவளோ அவரை "சச்சின மாமா" என்று தான் கூறுவாள். சச்சின என்றால் தெலுங்கில் "செத்துப்போன" என்று அர்த்தமாம்.

பக்திக் குழாம் ஒன்றில் நண்பர் ஒருவர் "ஸ்ரீமன் நாராயணா" என்று அடிக்கடி சொல்வார். எந்தவொரு வார்த்தைக்கும்/வாக்கியத்திற்கும்  முன்பாக "ஸ்ரீமன் நாராயணா" தான் இவரது வாயிலிருந்து வரும். இதனாலேயே குழாமில் உள்ள குழந்தைகள் மத்தியில் இவரது பெயரே ஸ்ரீமன் நாராயணா என்றாகிவிட்டது. குழாமில் உள்ள ஒரு பெண்மணி இவரது இயற்பெயரையே மறந்துவிட்டிருக்கிறார். அருகில் உள்ள யாரேனும் கூறுகையில் நினைவுபடுத்திக்கொள்வார். மீண்டும் ஸ்ரீமன் நாராயணா.

பள்ளியில் உடன் பயின்ற நண்பர்கள் இருவருக்கு ஒரே பெயர். அடையாளத்திற்காக முதல் எழுத்தை வைத்து விளிக்க, ஒரு கட்டத்தில் அதுவே புனைப்பெயராகிவிட்டது. சிநா, குநா. இது தான் அவர்களை அடையாளம் கொள்ள நாங்கள் இட்ட பெயர். இன்னமும் கூட பள்ளி நண்பர்களிடம் பேசும்போது வெறும் பெயரை மட்டும் சொன்னால், சிநா-வா, குநா-வா என்று கேட்பார்கள்.

கல்லூரி நண்பர் ஒருவரது பெயர் புலி. நீளமான அவரது பெயரையே நாங்கள் இப்போது கிட்டத்தட்ட மறந்துவிட்டோம். முகநூலில் அவரது திருமண புகைப்படம் இயற்பெயர் @ புலி என்கிற அவரது புனைப்பெயருடனே பகிரப்பட்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் பொது இடங்களில் அஃறிணை-யில் அவரை விளித்திருந்தால், யாரேனும் வன அலுவலருக்கு புலி வருது புலி வருது என்று அலறியடித்து தகவல் தெரிவித்திருக்ககூடும்.

குழந்தைகள் வளர்வதைப் போல, மழலைகள் பெரியவர்களுக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி கட்டுரையும் புனைப்பெயர் சூட்டுவதுவது வரை வளர்ந்துவிட்டிருக்கிறது. இன்னும் போனால், "மண்ணாங்கட்டி" தனது பெயரை மாற்ற ஊரெல்லாம் சுற்றியதைப் போல, கட்டுரையும் எங்கெங்கெல்லாமோ சுற்றக்கூடிய அபாயம் இருப்பதால், இத்துடன் முடித்துக்கொள்வோம்.

"மண்ணாங்கட்டி"யின் முடிவு "பெயரில் என்ன இருக்கிறது" என்கிற சித்தாந்தம். அதுவே கொஞ்சம் கூடிப் போனால் வேதாந்தம். ஆதியும் அந்தமும் ஏகாந்தம். புரியவில்லையா? புரியக்கூடாது. அது தான் கடவுள். எனக்கு நண்பர்கள் இட்ட பெயர் "சாமி".

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2