ருசியான சொற்பொழிவு
சொற்பொழிவு. அதிலும் ஆன்மீக
சொற்பொழிவு. பேசப்போகிறவர் பன்மொழி வித்தகர், பல மொழிகளில் புத்தகங்கள்
எழுதியுள்ளார், நல்லவர், வல்லவர் எனும்படி சொற்பொழிவாற்ற வந்திருந்தவரை
அறிமுகம் செய்து வைத்தார் மேடையில் பேசியவர். பன்மொழி வித்தகர் என்றவுடனே
எனக்கு லேசாக அச்சம். உடன் வந்திருந்த நண்பரிடம், "அன்புல்ல தமிலு மக்கலே"
என்று ஏதாவது ஆரம்பிக்கப் போகிறார் என்று சொன்னேன். ஆனால் நல்ல தமிழ்
உச்சரிப்புடன் அவர் பேச ஆரம்பித்தவுடன், நண்பர் எனது மூக்கை
தேடிக்கொண்டிருந்தார்
மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் அந்த
சொற்பொழிவின் முதல் நாள் அதுவும் 10 நிமிடங்கள் மட்டுமே அவரது பேச்சை
கேட்க முடிந்தது (காரணம் பின்னர் சொல்கிறேன்). அந்த 10 நிமிட பேச்சில்
இருந்தே அவர் ஓரளவு விஷயம் தெரிந்தவர் என தெரிந்துகொண்டேன். நேற்று
மீண்டும் சென்றிருந்தேன்.
சொற்பொழிவுக்கு
ஏற்பாடு செய்திருந்தவர்கள் இரண்டையும் செவ்வனே செய்திருந்தனர். அங்கே
கூடியிருந்த அனைவருக்கும் உணவு பார்சல் செய்யப்பட்டு தயார்
நிலையிலிருந்தது. காரில் வீட்டிற்கு திரும்பும்போதே புளிசாத வாசனை மூக்கை
துளைத்தது. பசியையும் தாறுமாறாக ஏற்றி விட்டது. வீட்டிற்கு வந்தவுடன்
பார்சலைப் பிரித்துப் பார்த்தேன். ஒருவர் வயிறுமுட்ட சாப்பிடும் அளவிற்கு
புளிசாதமும் சிறிது சர்ர்ர்ர்க்கரைப்(அவ்வளவு இனிப்பு) பொங்கலும் ஒரு சிறிய
பருப்புவடையும் இருந்தது.
பருப்பு வடை மீதான எனது
காதல் பள்ளிக் காலத்திலேயே துவங்கிவிட்டது. நண்பன் கொண்டுவரும் பருப்பு
வடையில், ஒரு பாதியை தாஜா செய்து வாங்கிவிடுவேன். மிதமான சூட்டில், நல்ல
கரகரப்புடன் இருக்கும். அதிலும், வடையில் மிளகாய் இருந்துவிட்டால், அதை
அப்படியே தயிர் சாதத்தில் வைத்து சாப்பிட்டால், அந்த கரகரப்பு, மிளகாயின்
காரம், தயிர் சாதத்தின் குளிர்ச்சி என அந்த சுவையை விவரிக்க வார்த்தை
இல்லை.
பள்ளி இறுதியாண்டில் டியூஷன் செல்வதற்கு முன்பாக ஒரு தள்ளுவண்டிக் கடையில் வடை சாப்பிடுவது வாடிக்கையாகிவிட்டது. வடை சிறியது தான் (விலையும் சிறியது .50 பைசா தான்). அத்தனை கரகரப்பாகவும் இருக்காது. ஆனால் குட்டிக் குட்டியாக சூடான சற்றே பதமான பருப்புவடை, தொட்டுக்கொள்ள தக்காளி/புதினா சட்னி. எப்படியும் ஒரு 10-12 வடை உள்ளே போகும்.
பள்ளி
விடுதியில் தங்கியிருந்த காலத்தில் வீட்டு சாப்பாட்டின் அருமை புரிந்தது.
சிறிது நாட்களில் விடுதி சாப்பாடு பழகிவிட்டது. காலை உணவிற்கு இட்லி, தோசை
தான். தோசை என்றால் உண்மையில் தோசை கிடையாது. ஊத்தப்பம் தான். நல்ல 1/2
இன்ச் தடிமனில் ஒரு ஜான் நீளத்தில் இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே வயிறு
நிரம்பிவிடும். அதை தேங்காய் சட்னியில் ஊறவைத்து, விள்ளல் விள்ளலாக சாப்பிட
ஒரு லாவகம் வேண்டும். ஊறவைக்காமல் சாப்பிட்டால் சர்வ நிச்சயம் தொண்டையில்
மாட்டிக்கொள்ளும். ஒரு டம்ளராவது தண்ணீரைக் குடித்தால் தான், மூச்சு விடவே
முடியும். என்றாவது தோசைக்கு பதில் தக்காளி சாதம். பள்ளி நாட்களில்
காலையில் தக்காளி சாதத்தை கடமைக்கு தான் சாப்பிடுவார்கள்.
ஒவ்வொரு வாரமும் சனி/ஞாயிறு வந்துவிட்டால் கொண்டாட்டம் தான். ஒன்று, சனிகிழமை இரவு தக்காளி சாதம், கெட்டியான தேங்காய் சட்னியுடன் போடுவார்கள். வாரனாட்களைக் காட்டிலும் சனிக்கிழமை இந்த தக்காளி சாதத்திற்கு காத்திருப்பார்கள் மாணவர்கள். ருசியும் சிறப்பாக இருக்கும். கையில் எடுத்து சாப்பிட மாட்டார்கள். சாதத்தில் தேங்காய் சட்னியை கிளறி, அப்படியே தட்டுடன் வாயில் கவிழ்த்து விடுவார்கள். நன்கு சாப்பிடக் கூடிய மாணவர்கள், 3-4 தட்டுகள் காலி செய்வார்கள்.
இரண்டு, விடுதி மாணவர்களைப் பார்க்க பெற்றோர்கள் வருவார்கள். பலவகை உணவுப் பண்டங்களுடன். அம்மா பெரும்பாலும் எனக்கு இடியாப்பம் கொண்டுவருவார். இடியாப்பத்திற்க்கு தேங்காயும் சர்க்கரையும் தான் எனக்குப் பிடித்தம். சமீபத்தில் வேலை நிமித்தம் இலங்கை சென்றிருந்த போது, இரண்டொரு நாள் காலை உணவிற்கு திண்டாடினேன். ஒரு நாள் காலை, அங்கிருந்த அலுவலக நண்பர் ஒருவர், அருகிலிருந்த உணவகம் ஒன்றிற்கு அழைத்து சென்றார். இடியாப்பம் கண்ணில் பட்டது. மற்ற உணவுகள் எல்லாம் அசைவம் கலந்ததாக இருந்ததால், இடியாப்பமும் உருளைக்கிழங்கு ஸ்டூ(stew) ஆர்டர் செய்தேன். ஸ்டூ-வின் ருசி எப்படி இருக்குமென்று தெரியாததால் ஒரு கரண்டியில் கொஞ்சமாக சாறு எடுத்து இடியாப்பத்துடன் சாப்பிட்டேன். அடுத்து அங்கிருந்த 3 நாட்களும் இடியாப்பமும் உருளைக்கிழங்கு ஸ்டூ சாறும் தான்.
கல்லூரிக்
காலத்தில் மதிய உணவிற்கு சப்பாத்தி இருந்தால், கண்டிப்பாக நான் கேண்டீனிலோ
அல்லது விடுதி உணவையோ தான் சாப்பிட நேரிடும். டப்பாவைப் பிரித்துப்
பார்த்து அதில் சப்பாத்தி இருந்துவிட்டால், நண்பர்கள் எனக்கு டப்பாவை
கழுவும் வேலை கூட வைக்கமாட்டார்கள். அத்தனை சுத்தமாக சாப்பிட்டு
முடித்துவிடுவார்கள். அதுவும் 4th ஹவர் நடக்கும்போதே. சாப்பாட்டு வேளையில்
டப்பாவைக் கையிலெடுக்கும் போது தான் தெரியும், அது காலியான விஷயமே. எத்தனை
கண்கொத்திப் பாம்பாக இருந்தாலும், ஆட்டையைப் போட்டுவிடுவார்கள். கேண்டீன்
உணவு அத்தனை சிறப்பாக இருக்காது. அதை ஒப்பிட்டால் விடுதி உணவு சுவையாக
இருக்கும். சப்பாத்தி காலியான நாட்களில் விடுதி நண்பனின் அறைக்கு
சென்றுவிடுவேன். மதிய உணவை மற்றவர்களுடன் சாப்பிடாமல் கொஞ்சம் நிறைய உணவைப்
போட்டுக்கொண்டு அறைக்கு வந்துவிடுவான். தட்டு முழுக்க சாதம். அதில்
ஒருபக்கம் குழம்பு. ஒருபக்கம் ரசம். ஒருபக்கம் மோர். குழம்பு சாப்பிட்டால்
ரசமாக இருக்கும். ரசத்தில் மோர் கலந்திருக்கும். மோரில் மோரைத் தவிர
எல்லாமே. ஒரே தட்டில் 2-3 பேர் சாப்பிடுவோம். மற்றவர்களை முந்திக்கொண்டு
சாப்பிட்டால் தான் வயிறு நிறையும். அடிதடியே நடக்கும். நாங்கள் சாப்பிட்டு
வெளியேறியவுடன் அந்த அறை போர்க்களம் போல காட்சியளிக்கும். எங்களை நோக்கி சிலபல கெட்டவார்த்தைகளை உதிர்த்தவாரே நண்பன் அறையை சுத்தம் செய்வான்.
சென்னையில்
வேலை தேடிகொண்டிருந்த போது சாப்பாட்டிற்கு திண்டாட்டம் தான்.
சனிக்கிழமையானால் கண்டிப்பாக சாயுங்காலம் நண்பர்கள் எல்லாரும் நங்கநல்லூர் சென்றுவிடுவோம். நேராக ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுவிடுவோம். அதற்கு
ஆஞ்சநேயர் கோவிலில் தரும் மிளகோரை-யும் ஒரு காரணம். 2-3 முறை சென்று
பிரசாதம் வாங்கிவிடுவோம். பிரசாதம் கொடுப்பவர் ஒருமாதிரி முறைக்க
ஆரம்பித்தவுடன் நிறுத்திவிடுவோம். பக்தியால் மனமும் வயிறும் நிரம்பிவிடும். பிறகு ஒருவாறு வேலை கிடைத்தாகிவிட்டது. அலுவலகத்தில் ஒரு தளத்தில் சரவணபவன், ஹாட்-லைன் (மற்ற கடைகளின் பெயர் மறந்துவிட்டேன்) போன்ற உணவகங்கள் உண்டு. அந்தக் கடைகளுக்கு எங்கள் அலுவலகத்தில் டோக்கன் கொடுப்பார்கள். ஒரு உணவகத்தில் (சத்தியமாக சரவணபவன் அல்ல. அந்த ஒரு கடையின் தரமும் விலையும் அப்படி. மற்ற சரவணபவன்-கள் எல்லாம் சிறந்தவையே.)
வாடிக்கையாளராகிவிட்டேன். நான் சென்றால் அன்றைய தினத்தின் சுவையான உணவை
சொல்லுவார் அந்தக் கடையின் சிப்பந்தி. அது தான் எனது மதியம்/இரவு உணவு. இரவில் பெரும்பாலும் ஆலூ பரோட்டாவும் தயிரும் தான். அவர் கடையில் தயிர் இல்லையென்றால் பக்கத்துக் கடையில் வாங்கித் தருவார். சூடான ஆலூ பரோட்டா, அதிலிருக்கும் உருளைகிழங்கு மசாலா, ஒன்றிரண்டு கொத்தமல்லி, இதனுடன் தயிர். அத்தனை சுவையாக இருக்கும். சமயங்களில் எனக்குப் பிடித்தமான அயிட்டங்கள் இல்லாதபோது வேறு ஏதாவது சாப்பிடுங்கள் என்று சமிக்ஞை செய்துவிடுவார். அன்று சரவணபவனே கதி.
சொற்பொழிவில் ஆரம்பித்து சரவணபவன் வரை போய்விட்டோம்.
சரி விஷயத்திற்கு வரலாம். சொற்பொழிவின் முதல் நாள் 10 நிமிடம் தான் கேட்க
முடிந்தது என்று சொன்னேன் இல்லையா, அதற்க்கு காரணம் ஒரு நண்பர் அன்று மதிய
உணவிற்கு அழைத்திருந்தார். செவிக்கினிமையை விடுத்து நாவிற்க்கினிமையை நாடிச் சென்றேன். நல்லதொரு சொற்பொழிவைக் கேட்க முடியவில்லையே என்று வருத்தமும், அன்றைக்குப் பார்த்து மதிய உணவிற்கு வருவதாக ஒத்துகொண்டேனே என்று என் மீதே கோபமும் வந்தது. இருந்த கோபத்தில் 4 பருப்புவடைகள் அதிகம் சாப்பிட்டேன்
இன்னும் 2 நாள் சொற்பொழிவு மிச்சம் இருக்கிறது. எப்படியாவது போய் விடவேண்டும். நீங்கள் நினைப்பது புரிகிறது. இம்முறை நிச்சயம் சொற்பொழிவு கேட்கத்தான்.
என்ன சொற்பொழிவு என்று சொல்லவே இல்லையே... இராமாயணம்.
என்ன சொற்பொழிவு என்று சொல்லவே இல்லையே... இராமாயணம்.
ஜெய் ஸ்ரீ ராம்.
போலோ பருப்பு வடை-கீ ஜெய்.
Comments
Post a Comment