பிரசவம்

முடி திருத்தகம் சென்றிருந்தேன். வழக்கமாக எனக்கு ஒருவர் முடிதிருத்துவார். நடுவில் சில நாட்கள் அவரைக் காணவில்லை. நேற்று சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன்.

ஊருக்கு போயிருந்தீங்களா என்று கேட்டேன்.

ஆமாம் சார். என் மனைவி இறந்துட்டாங்க. அதுக்காக போயிருந்தேன் என்றார் சாதாரணமாக.

எப்படி என்றேன் நான்.

7 மாத கர்ப்பிணியாக இருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அது தெரியாமலே சில நாட்கள் அவள் இருந்துவிட்டாள். அதனால் அவளும் இறக்க நேரிட்டது என்றார்.

அவரை சங்கடப்படுத்திவிட்டோமோ என்று பட்டது எனக்கு. என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

இறைவன் நிச்சயம் உங்களுக்கு துணை இருப்பார் என்று சொன்னேன்.

போதும் சார். இறைவன் ஒருவனே போதும். வேறு யாரும் வேண்டாம் என்றார்.

மனைவி இறந்த துக்கத்தில் இருந்து இத்தனை சீக்கிரம் மீண்டு விட்டாரா அல்லது விரக்தியில் சொன்னாரா தெரியவில்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, உங்களுக்கு வேறு குழந்தை இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை கேட்டு, அந்த கேள்வியை கேட்டே இருக்க வேண்டாமோ என்று தோன்றியது.

"2 குழந்தைங்க இருக்காங்க சார். ஒரு பையன், ஒரு பொண்ணு. பையனுக்கு 8 வயசு. பொண்ணுக்கு 3 வயசு. எங்க அப்பா, அம்மாகிட்ட (பாட்டி தாத்தா) இருக்காங்க. பையனுக்கு கொஞ்சம் விவரம் தெரியும். அம்மா செத்துட்டாங்க-னு புரிஞ்சுகிட்டான். ஆனா, பொண்ணுக்கு தெரியாது. அவளுக்குப் புரியலை. அம்மா எங்கயோ போயிருக்காங்க.. வந்திருவாங்க-னு நினைச்சுட்டு இருக்கா. ரொம்ப தொல்லை பண்றதில்லை. ஆனா பாட்டிகிட்ட அப்பப்போ அம்மா எப்போ வருவாங்க-னு கேக்கறா சார்" என்று சொன்னவரின் குரல் சற்றே உடைந்திருந்தது.

பிறகு மௌனம்....

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2