நம்பர் 80

மனைவியின் பாஸ்ப்போர்ட் நிமித்தம் எம்பஸியின் அவுட்சோர்ஸ் ஆபீசுக்கு சென்றிருந்தோம். எல்லா பார்ம்களும் பூர்த்தி செய்தபின்பு, அதை சரிபார்த்துவிட்டு, டோக்கன் கொடுத்தான் அந்த அலுவலக ஆள். நம்பர் 80.

உள் அறையில் இடம் இல்லை. வெளியில் இருந்த சேர்களில் அமர்ந்தோம். கடைசியாக என்ன டோக்கன் போயிருக்கிறது என்று பார்க்க உள்ளே சென்றேன். நம்பர் 73 என்று காட்டியது. வந்து மனைவியிடம் சொன்னேன்.

ஆனால் டோக்கனில் 16 நபர்கள் வெயிட்டிங் என்று போட்டிருந்தது. மனைவிக்கு அப்போதே கொஞ்சம் சந்தேகம். உள் அறையில் இடம் கிடைத்தவுடன் அங்கே சென்று அமர்ந்தோம்.

டோக்கன் நம்பர் 50 கவுண்ட்டர் 3-க்கு செல்லவும் என்று அறிவித்தனர். இப்போது மனைவி என்னைப் பார்த்து, நீங்க வந்தப்போ எப்படி 73 காட்டியிருக்கும்? இப்போதான் டோக்கன் 50 கூப்பிடுறாங்க என்றார்.

சத்தியமா நான் வந்து பாத்தப்போ 73 தான் போட்டிருந்தாங்கம்மா என்று சொன்னேன். ம்ஹ்ம்.. பதிலுக்கு ஒரே ஒரு தீர்க்கமான பார்வை. நான் ஒன்றும் பேசவில்லை (பேசவும் முடியுமா என்ன??). அடுத்த டோக்கன் நம்பர் கூப்பிடட்டும். அப்போது பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன் (மனதின் அடி ஆழத்தில்).

24 படத்தில் வருவது போல வாட்ச் இருந்திருந்தால் 5 நிமிடம் பின்னால் போய் மனைவிக்கும் காட்டியிருப்பேன். வாட்சும் இல்லை.. நான் சூர்யாவும் இல்லை.. பப்பர பப்பர பே

என்னை சோதிக்க அடுத்த எண் 51 என்று அறிவித்தனர். மீண்டும் ஒரு தீர்க்கமான பார்வை. பேசவில்லையே.. பதிலுக்கு நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே..

மீண்டும் என்னை சோதிக்க, 52 எண் டோக்கனை அழைத்தனர். நான் உங்களுக்கு என்னடா துரோகம் பண்ணேன்? என்னை அடி வாங்க வைக்கிறதுல உங்களுக்கு அப்படி என்னடா சந்தோஷம் என்று எண்ணிக்கொண்டேன் (இதுவும் மனதின் அடி ஆழத்தில் தான்).

சிறிது நேரம் அமைதியாக கழிந்தது. டோக்கன் எண் 56 கூப்பிட்டனர். எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. உடனேயே டோக்கன் 59 கூப்பிட்டனர். இன்னும் கொஞ்சம் தெம்பு வந்தது.

கொஞ்ச நேரத்தில் டோக்கன் 63, 62, 67 இப்படி வரிசையில்லாமல் எண்கள் அழைக்கப்பட்டன. இப்போது நான் மனைவியை நோக்கி ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தேன். என்ன? என்றார். நான் போய் தண்ணி குடிச்சுட்டு வறேன் என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் எழுந்துவிட்டேன்...

நல்லா இருங்க அவுட்சோர்ஸ் ஆபீஸ் மக்கழே.. நீங்கல்லாம் நல்லாவே  இருங்க..

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2