சித்திரைப் பௌர்ணமி

"பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்". சித்திரைப் பௌர்ணமி-ன்ன உடனே நிறைய பேருக்கு ஞாபகத்துக்கு வர விஷயம் இதுவாகத் தானிருக்கும்.



ஆத்தைக்(ஆறு) கண்டதுமில்லை, அழகரை சேவிச்சதுமில்லை-ன்னு சொல்றது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, எங்க குடும்பத்துக்கு பொருந்தும். இத்தனைக்கும் எங்க ஊர்லருந்து மதுரை ஒன்னும் ரொம்ப தூரமெல்லாம் கிடையாது. அப்பறம் ஏனிந்தத் தாமதம்? யார் செய்த குற்றம்-ன்னு எல்லாம் யோசிக்கவே வேண்டாம். மதுரைக்கு போய் பாத்ததில்லை-ன்னு சொன்னனே தவிர, அழகர் ஆற்றில் இறங்குறதை பாத்ததேயில்லை-ன்னு சொல்லலை.(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்).

எங்க ஊர்லயே, எங்க கோவில்லயே அந்த நிகழ்ச்சி அதே நாளில், அதே நேரத்தில் நடக்கும். அதனால மதுரைக்கு போகவேண்டிய அவசியமில்லாம போச்சு. அதுவும் மதுரையில 1 குதிரை தான். 1 அழகர் தான். ஆனா எங்க ஊர்ல, 2 குதிரை. 2 அழகர். எப்படின்னு கேக்கறீங்களா? அதைச் சொல்லத்தானே இத்தனை பில்டப்பு...

எங்க ஊர்லயும், பக்கத்துக்கு ஊர்லயும், வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு. ரெண்டு கோவிலுக்கும், என் தாத்தாவோட தாத்தா காலத்துல இருந்து நாங்க தான் கைங்கர்யம் & டிரஸ்ட்டி. இப்ப புரிஞ்சதா எப்படி 2 அழகர்-ன்னு?

சித்திராப் பௌர்ணமிக்கு முதல் நாளே வேலைகள் ஆரம்பிச்சுடுவோம். கோவிலை சுத்தம் செய்யறதில ஆரம்பிக்கும். மூலவர் சிலைகளையும் கருவறையையும், தண்ணீரால் சுத்தம் செய்வோம். அப்பறம் உற்சவ விக்ரகங்கள். இந்த விக்ரகங்கள் எல்லாம் வெங்கலத்தில் இருக்கும். புளி போட்டு தேய்ச்சு சுத்தம் பண்ணனும். முடிச்சதுக்கப்பரம் கடைசில விக்ரகங்கள் பளபள-ன்னு மின்னும் பாருங்க, அப்போ எதையோ சாதிச்ச மாதிரி ஒரு உணர்விருக்கும்.

அடுத்த நாள் காலையிலேயே 'திருமால் பெருமைக்கு நிகரேது'-ன்னு டி.எம்.எஸ், 'ஸ்ரீ பார்த்தசாரதி கா வா வா'-ன்னு ஜேசுதாஸ், 'கோவிந்தா கோவிந்தா ஒ ஸ்ரீனிவாசா'-ன்னு எஸ்.பி.பி இப்படி ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சுடுவாங்க. கோவில்ல கட்டியிருக்கிற ஸ்ரீ அம்மன் ரேடியோஸ் மைக்செட் வழியா. இதையெல்லாம் கேட்டுட்டு நம்ம ஜனங்களுக்கு அப்படியே சும்மா பக்தி, விஜய் டிவி சூப்பர் சிங்கர்-ல டேஞ்சர் சோன் பெர்பாமன்ஸ் மாதிரி எக்ஸ்ட்ரீமா இருக்கும்.

நம்ம வீட்டு வாசல்ல கண்டிப்பா ஒரு குழாய் கட்டிடுவார் நல்லமுத்து(மைக்செட் ஆப்பரேட்டர்). அன்னைக்கு எல்லாம் வீட்ல யாரும் பேசிக்கவே மாட்டோம். என்ன மைக்செட் சத்தத்தில எவளவு சத்தமாப் பேசினாலும் கேக்கவே கேக்காது. தூர்தர்ஷன்-ல ஞாயிற்று கிழமை மதியம் 1.30 செய்திகள்ல வர மாதிரி தான் பேசிக்குவோம். சீர்பாதங்கள் (சாமி தூக்கும் ஆட்கள்) மதியம் குதிரை வாகனத்தை பஜனை மடதிலருந்து எடுத்திட்டு வந்து கோவில் மண்டபத்தில வெச்சு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.

இந்த இடத்தில பக்கத்து ஊர் குதிரையைப் பத்தி சொல்லியே ஆகணும். எங்க ஊர் குதிரையை விட அந்த குதிரை அட்டகாசமா இருக்கும். ஒரு நிஜக் குதிரை நிக்கிற மாதிரி இருக்கும். அப்படியே குதிரையை அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கும். மதுரையிலருந்தே அழகர் கோவிலுக்கு அந்தக் குதிரையை கேட்டிருக்காங்க-ன்னா பாத்துக்கங்க, அதோட பெர்சனாலிட்டி எப்படின்னு. எங்க ஊர் குதிரை கொஞ்சம் உயரம் குறைச்சல். அந்த குதிரையை கம்பேர் பண்ணும்போது எங்க ஊர் குதிரை கொஞ்சம் பெர்சனாலிட்டி கம்மிதான். இந்த 2 குதிரையில, எந்தக் குதிரைக்கு நல்லா அலங்காரம் பண்ணியிருக்காங்கன்னு பட்டிமன்றமே நடக்கும். அலங்காரம் பண்றதைப் பாக்க சின்ன பசங்க பட்டாளமே கோவில்ல தான் இருக்கும்.

"அபரஞ்சித் தங்கத்தில் ஜொலிக்கின்ற சாமி", "நூற்றியெட்டு திருப்பதியில் இது நூபுரகங்கை திருப்பதி" இந்த மாதிரி பாட்டெல்லாம் போட்டு அசத்துவார் நல்லமுத்து. சாயங்காலமா 4 மணிக்கு எங்கப்பா உற்சவர் விக்ரகத்தை குதிரை மேல எடுத்து வெச்சு அலங்காரம் பண்ண ஆரம்பிப்பாரு. அது முடிய 9-9.30 ஆகிடும். விக்ரகம் குதிரை மேல வெக்கும்போது குதிரைக்கும் விக்ரகதுக்கும் சம்பந்தமேயில்லாத மாதிரி இருக்கும். ஆனா விக்ரகத்துக்கு கை, கால் எல்லாம் வெச்சு கட்டி, அலங்காரம் முடிச்சு பாத்தா அப்படியே குதிரை மேல ஒரு ஆள் இருக்கற மாதிரி இருக்கும். அலங்காரம் முடிச்சு ஒரு அரைமணி நேரம் ரெஸ்ட். அந்த கேப்-ல சாப்பிட்டு முடிச்சுடுவோம்.

அப்படியே வந்த மோது கட்டி ரெடியா வெச்சிருப்பாங்க. அதை அப்படியே பூஜையெல்லாம் முடிச்சுட்டு ஒரு நுனியில பத்த வெச்சுடுவாங்க. சின்ன பசங்க படை சூழ நான்தான் இழுத்துட்டு போவேன். ஒரு நாலஞ்சு வீதி சுத்திட்டு நான் கோவிலுக்கு வந்திடுவேன்.



ஊர் பெரிய தலைங்களுக்கு மாலை, பரிவட்டம், மரியாதையெல்லாம் முடிச்சப்பறம், பத்து பத்தரைக்கு கோவிந்தா கோஷத்தோட சாமி வீதி உலா ஆரம்பிக்கும். மாலை, பரிவட்டமெல்லாம் வந்த அதையெல்லாம் சாமி பாததில வெக்கிற வேலை எனக்குத்தான். சின்னப் பையனா இருந்த வரைக்கும், மேலயே ஒரு ஓரமா உக்காந்துக்குவேன். அப்பறம் கொஞ்சம் வளந்ததுக்கப்பறம், சீர்பாதங்கள் எல்லாம் ஒரு பக்கமா பாரம் ஜாஸ்தியா இருக்குன்னு புலம்ப ஆரம்பிச்சாங்க. அதுக்கப்பறம் அப்பா கூடவே நடந்து வருவேன். மாலை பரிவட்டமெல்லாம் வந்தாத்தான் மேல ஏறுவேன்.



கோவிலுக்கு போய் மட்டும் பாக்கற சாமியை அவங்கவங்க வீட்டு வாசலுக்கே வந்திருக்கும்போது ஜனங்க அப்படியே தங்களை மறந்து பாத்திட்டு இருப்பாங்க. இப்படியே கோவிந்தா கோஷத்தோட ஒவ்வொரு வீதிய சாமி உலா வருவார். களைப்பு தெரியாம இருக்க ஜெனரேட்டர் சத்தத்தையும் தாண்டி கோவிந்தா கோஷம் கேட்டுகிட்டே இருக்கும். எல்லார் வீட்லயும் சீர்பாதங்களுக்கும், ஆயக்கால் போடற ஆளுங்களுக்கும், வாழைப்பழம், நீர்மோர், பானகம் இப்படி நிறைய குடுப்பாங்க. அப்படி சாப்பிட்ட தான் இவங்களும் களைப்பு இல்லாம சாமியை தூக்கிட்டு ராத்திரியெல்லாம் சுத்த முடியும்.



நடுநடுவில மண்டகப்படியெல்லாம் இருக்கும். ஒவ்வொரு மண்டகப் படியிலையும் 15-20 நிமிஷம் ஆகும். எவ்வளவு லேட்டா வீதியுலா ஆரம்பிச்சாலும், காலையில 4.30-5.00 மணிக்கெல்லாம் ஊரை சுத்தி வந்திடுவாங்க சீர்பாதங்கள். சில சமயம் மழையும் இவங்களை வேகப்படுத்தும். ஒவ்வொரு சித்ராப் பௌர்ணமிக்கும் லேசான மழையை எதிர்பாக்கலாம். வீதியுலா முடிச்சப்பறம், காலை எத்தனை மணிக்கு அழகர் ஆற்றில் இறங்கணும் அப்படிங்கரதைப் பொறுத்து சீர்பாதங்கள் வீட்டுக்கு போவாங்க. நானும் எங்கப்பாவும் வீட்டுக்கு வந்துடுவோம். அப்பா கிளம்பும்போது என்னை எழுப்பறதுக்கு அம்மாகிட்ட சொல்லிட்டு நான் தூங்கிடுவேன். ஆனால் எங்கம்மா என்னை எழுப்பும்போது எப்படியும் 10 மணி ஆகியிருக்கும். என்னை வீட்ல விட்டுட்டு அவங்க மட்டும் போய் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தை பாத்துட்டு வருவாங்க.

பெரியவனான அப்பறம் நானே தூங்காம அப்பா கிளம்பும்போதே கிளம்பிடுவேன். ஊரே ஆத்தங்கரையில தானிருக்கும். குறைஞ்சது ஐயாயிரம் பேராவது வந்திருப்பாங்க. எங்க ஊர் சாமிக்கும் பக்கத்து ஊர் சாமிக்கும் எதிர் சேவை நடக்கும். சாமியை குதிரையோட தூக்கிட்டு அப்படியே முன்னாலையும் பின்னலையும் ஓடுவாங்க சீர்பாதங்கள். ஈர மணலில் கால் தடுக்க வாய்ப்பு அதிகம்ங்கிறதால பக்கத்தில யாரையும் விட மாட்டாங்க. 2 சாமிங்க, ஒன்னுக்கொன்னு போட்டியா அலங்கரிக்கப்பட்ட 2 குதிரைகள், எங்க திரும்பினாலும் மனிதத்தலைகள்-ன்னு அந்த இடமே பாக்கவே கோலாகலமா இருக்கும்.




ஆத்தங்கரயிலையே திருக்கண் போட்டிருப்பாங்க. எதிர்சேவை முடிச்சப்பறம் திருக்கண்-ல இறக்கி வெச்சிடுவாங்க. பகலெல்லாம் 2 சாமியும் அங்கயே இருந்து பக்தர்களுக்கு அருள் செய்வாங்க. 2 சாமிங்க. 1 திருக்கண். பக்கத்தில பக்கத்தில பாக்கவே கண்கொள்ளாக் காட்சியா இருக்கும். சாயங்காலம் 5-5.30 க்கு பூஜையெல்லாம் முடிச்சப்பறம் திரும்பவும் கோவிந்தா கோஷம் காதைப் பிளக்கும். அந்தந்த ஊர் ஆளுங்களோட அவங்கவங்க ஊர் குதிரையை சீர்பாதங்கள் தூக்கிட்டு போவாங்க. இந்தச் சமயத்தில தான் விஜயகாந்த் வருவார். 'வாராரு வாராரு அழகர் வாராரு'-ன்னு பாட்டுல தான். ரெண்டு ஊர்லயும் சும்மா மைக்செட்டெல்லாம் அலறும்.

ஊருக்கு வந்து அலங்காரமெல்லாம் பிரிச்சு சாமியை நிலைக்கு கொண்டுவந்தாச்சுன்னா எங்க ஊர்ல திருவிழா முடிஞ்சிடும்.

ஆனால் பக்கத்து ஊர்ல, ௩ நாள் திருவிழா நடத்துவாங்க. ஊரே களைகட்டும். ஹைலைட்டே 2 வது நாள், நடக்கும் கரகாட்டம் தான். எங்க ஊர்லருந்து மட்டுமில்லாம அக்கம் பக்கத்தில இருக்கிற ஊர்லருந்தெல்லாம் அந்த ஊருக்கு ஆளுங்க வருவாங்க கரகாட்டம் பாக்க.

இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்ட எப்பூடி?

அதனால, தொடரும்....

Photo Courtesy: Yamo Moya

Comments


  1. என்னுடைய மகனின் மலரும் நினைவுகளில் என்பங்களிப்பு .என்னுடைய வயது தற்பொழுது னுடைய அறுபது.எங்களுக்கு சொந்த ஊர் உப்பார்பட்டி .இந்த ஊருலயும் உப்புக்கோட்டை பக்கத்துக்கு ஊருலயும் எனது குடும்பம்தான் பரம்பரை மானேஜிங் ட்ரஸ்டி ,அர்ச்சகம் எல்லாமே நாங்கதான் எங்களுடைய இந்த ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் சித்ராபௌர்ணமி உற்சவம் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் அதே நாளில் நடைபெறுவதால் உப்பார்பட்டி மற்றும் உப்புக்கோட்டை .ஆகிய இரண்டு ஊர்களிலும் நான் என்னுடைய அப்பா ,அண்ணாக்கள் ஸ்ரீனிவாசவரதன் வடபத்திர சாயி ஆகியோருடன் எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து உப்பார்பட்டியில் மற்றும் உப்புக்கோட்டையிலும்தான் பெருமாளோடு வீதி புறப்பாட்டு உற்சவத்தில் இருப்போம் பின்பு என்னுடைய மகன் ப்ரசன்னவரதன் சுமார் ஐந்து வயதில் இருந்தே நானும் உங்களோடு வருவேன் என்று அடம்பிடித்து கூடவே வந்து விடுவான் .சிறு வயது என்பதால் இரண்டு ஊரிலிமுள்ள சீர்பாதம் தாங்கிகள் (சாமிசுமப்பவர்கள் )எனது மகனை சாமி பக்கத்தில் ஏற்றி உட்காரவைத்துவிடுவார்கள் விடிய விடிய ஒவ்வொரு மண்டகப்படியிலும் கூல்ட்ரிங்க்ஸ் புளியோதரை ,சுண்டல் என்று பிரசன்னாவின் வாய் அரைத்த படியேதான் இருக்கும் .உப்பார்பட்டியில் குதிரை வாகன புறப்பாட்டுடன் உற்சவம் முடிந்துவிடும் .ஆனால் உப்புக்கோட்டயில் மறுநாளும் வீதி புறப்பாடு தேவியருடன் நடக்கும் .தொடரும் .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2