சித்திரைப் பௌர்ணமி - 2

பக்கத்து ஊர்ல, 3 நாள் திருவிழா நடத்துவாங்க. இங்க உற்சவரும் மூலவரும் வேற வேற கோவில்ல இருப்பாங்க. உற்சவர் மட்டும் தான் ஊருக்குள்ள இருப்பார். மூலவர் ஊரைவிட்டு வெளியில தனியா தோப்புக்குள்ள இருப்பார். முதல் நாள் குதிரை வாகனத்தில் சாமி வீதியுலா. ரெண்டாவது நாள், பெருமாள் ரெண்டு அம்பாளுடன் சப்பரத்தில் வீதியுலா. மூன்றாவது நாள் மஞ்சள் நீராட்டு. ஊரே களைகட்டும். ஹைலைட்டே 2 வது நாள் நடக்கும் கரகாட்டம் தான். எனவ ஊர்லருந்து மட்டுமில்லாம அக்கம் பக்கத்தில இருக்குற ஊர்லருந்தெல்லாம் அந்த ஊருக்கு ஆளுங்க வருவாங்க கரகாட்டம் பாக்க.




தாய்க்குலங்கள், தந்தைக்குலங்கள் தொடங்கி ரத்தத்தின் ரத்தங்கள், உடன்பிறப்புகள் உள்பட பட்டாணி திங்கிற சிறுசுலருந்து பல்லுப்போன பெருசு வரைக்கும், கோவில் பக்கத்தில தான் கூடியிருப்பாங்க. போலீஸ்காரங்க எல்லாம் வந்திருப்பாங்க. அட, கரகாட்டம் பாக்க இல்லைங்க. திருவிழா பந்தோபஸ்துக்கு.

அந்த ஊர்ல மொத்தம் 10 கும்பு. கும்புன்ன ஒவ்வொரு சமூகத்தை சேந்தவங்களும் ஒவ்வொரு கும்பு. நாயக்கர், பிள்ளைமார், கள்ளர், மறவர், செட்டியார் இப்படி 10 கும்புகள் உண்டு. ஒவ்வொரு கும்புக்கும் ஒவ்வொரு தலைவர், ஒவ்வொரு மண்டகப்படி. கடைசி கும்பு கொசவ (குயவர்) செட்டியார் சமூகம். மண்பாண்டம் செய்யறவங்க. வசதியில்லாத காரணத்தால பெரும்பாலும் மண்டகப்படி வெக்க மாட்டாங்க. அவங்களால என்னை முடியுமோ அதை உண்டியல்ல போட்ருவாங்க.

'ஐயா வாரும் சபையோரே! வயசில பெரியோரே!'ன்னு சற்றே நாகரீகமாத்தான் ஆரம்பமாகும். வழக்கமா 3 கரகாட்டக் கலைஞர்கள் வருவாங்க. ஒரு ஆண். ரெண்டு பெண். ஒருத்தர் பாட, மத்த ரெண்டு பேரும் ஆடுவாங்க. அப்பறம் ஆடுறவங்கள்ள ஒருத்தர் பாடுவார். பாடுனவர் ஆடுவார். இப்படியாகப் போகும்.

அவங்க அடிக்கிற நையாண்டி மேளம் எல்லாரையும் குத்தாட்டம் போட வைக்கும். பத்தரை பதினோரு மணிக்கு மேல மெதுவா தாய்க்குலங்கள் அவங்கவங்க குழந்தைகளைக் கூட்டிகிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாங்க. வரமாட்டேன்னு அடம்புடிக்கிற குழைதைகளக் கூட விட மாட்டாங்க. வீட்டுக்கு இழுத்துட்டு போயிடுவாங்க. ஏன்னா அதுக்கப்பறம் கரகாட்டம் ரொம்பக் 'காட்டமா' இருக்கும்.

அதுவரைக்கும் சிலேடையாக, இலைமறைகாயாக கரகாட்டக் கலைஞர்கள் பேசிட்டு வந்த வசனத்தையெல்லாம் நேரடியாவே பேச ஆரம்பிச்சிடுவாங்க. வாலிப வயோதிகர்களெல்லாம் குஷியாயிடுவாங்க. அவங்க கரகாட்டத்தில பொண்ணுக்கு வரன் பாக்கிற மாதிரி காட்சி வந்த, 'எனக்கு நல்லா பையன பாத்து கல்யாணம் பண்ணி வெக்கலன்னா நான் ஐயரைக் கூட்டிட்டு ஓடிடுவேன்'ன்னு சொல்லி எங்களையும் உள்ள இழுத்திடுவாங்க.

யாராவது ஒரு கலைஞர் அல்லது கலைஞியோட ஆட்டம் நல்லா இருந்தா ரூபாய் நோட்டெல்லாம் குத்திவிடுவாங்க. பெரும்பாலும் அந்தக் குடுப்பினை கலைஞிக்கே வாய்க்கும். அது தனக்கு கிடைக்காமப் போன ஆண் கலைஞரோட வயித்தெரிச்சல் மைக்-ல அவர் அடுத்து பேசற வசனத்தில தெரியும்.

எங்க ஊர்ல நாங்க தான் அலங்காரம் பண்ணனும். வேலை நிறைய இருக்கும். ஆனால் பக்கத்து ஊர்ல அலங்காரம் பண்றதுக்கும் ஒரு ஆல் இருப்பார். நடராஜன்-ன்னு அவர் பேரு. சும்மா சொல்லக் கூடாது. எங்கப்பா பண்றதைவிடவும் நல்லா அலங்காரம் பண்ணுவார்.


சாமி விக்ரகமும் நல்ல களையா லட்சணமா இருக்கும். 3 விக்ரகங்களையும் சப்பரத்தில் வெச்சு அலங்காரம் பண்ணிடுவாங்க. அவங்க வேலை முடிக்கற வரைக்கும் எங்களுக்கு வேலை கிடையாது. தாத்தா மட்டும் எல்லா மண்டகப்படிக்கும் போவார். புனித நீர் தெளித்து அந்த இடங்களை சுத்தம் செய்ய. 10 மண்டகப்படியிலும் வேலை முடிந்துவிட்டால், கோவிலுக்கு வந்துவிடுவார்.

எப்படியும் 11 அல்லது 11.30 மணிக்குத்தான் சாமி புறப்பாடு ஆகும். நாட்டாமை, கணக்குப்பிள்ளை தொடங்கி 10 கும்புத் தலைவர்களுக்கும் மாலை, பரிவட்டம் முடிந்த பிறகு சாமி புறப்பாடு தொடங்கும். முதலில் நாயக்கர் மண்டகப்படி. அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தேவராட்டம் ஆடியபடி முன்னால் செல்ல, சாமி ரெண்டு அம்பாளுடன் சப்பரத்தில் இருந்தபடியே தொடர்ந்து செல்வார். 30 ல் இருந்து 40 பேர் ஆடுவாங்க. எல்லாரோட கை, கால் அசைவுகளெல்லாம் ஒரே மாதிரி இருக்கும். நம்ம எல்லாம் என்னதான் ப்ராக்டிஸ் பண்ணி ஆடினாலும் அந்த மாதிரி ஆட முடியாது.

அந்த உறுமிச் சத்தம், ஆரம்பத்தில் மெதுவா இருக்கும். நேரம் ஆக ஆக வேகம் எடுக்கும். ஆடுறவங்களும் அதுக்கு தகுந்த மாதிரி வேகமா ஆடுவாங்க. உறுமி இன்னும் வேகமெடுக்கும். ஆட்டமும் வேகமெடுக்கும். க்ளைமாக்ஸ் நெருங்குற நேரத்தில டக்குன்னு உறுமியை நிறுத்திடுவாங்க. ஒரு நிமிஷம் பிரேக். திரும்பவும் ஆட்டம் ஆரம்பம்.

இப்படியே அவங்க மண்டகப்படி வரைக்கும் ஆடுவாங்க. மண்டகப்படியில சப்பரத்தை இறக்கி வெச்ச உடனே வெடியெல்லாம் வெடிப்பாங்க. விசிலும் கைதட்டல் சத்தமும் சும்மா அதிருதுல்ல ரேஞ்சுக்கு இருக்கும். மண்டகப்படின்னலே அவங்கவங்க சமூகத்தை சேர்ந்த குடும்பங்களோட 100 அர்ச்சனைத் தட்டுகளாவது இருக்கும். அது தவிர 150 தேங்காய்கள் தனியா வெச்சிருப்பாங்க. 2 இல்லாட்டி 3 கூடை வாழைப்பழம். பொறி, சுண்டல் இப்படி இன்னும் நிறைய வெச்சிருப்பாங்க. எப்படியும் ஒரு மண்டக்கபடிக்கு அரைமணி நேரத்திலருந்து முக்கால் மணிநேரமாகும்.


அப்பறம் அங்கருந்து சப்பரம் கிளம்பி அடுத்த மண்டகப்படிக்கு போகும். வீதியில எல்லார் வீட்லயும் நிறுத்தி அர்ச்சனை நடக்கும். இப்படியே 8 மண்டகப்படி முடியும்போது பாத்தா காலையில ஏழரை - எட்டு மணியாகிடும். இன்னும் ஒரு மண்டகப்படி தான். முடிஞ்சா வீட்டுக்கு போயிடலாம்-ன்னு நினைப்பேன் பரீட்சை லீவுக்கு காத்திட்டிருக்கிற பையன் மாதிரி. அப்போதான் பேட்டை-ங்கிற இடத்துக்கு போவோம். அதுவும் வீடுதான். அண்ணன் தம்பிங்க ௨ பேரு. அவங்க குடும்பம். வீட்டுக்கு முன்னால பெரிய காலி இடம். இது தான் பேட்டை. அங்க சப்பரம் வந்தப்பறம் சாமியாடிகளை வெச்சு அருள்வாக்கு கேப்பாங்க அந்த பேட்டை பிரதர்ஸ். அவங்க கேக்கற கேள்விகளுக்கெல்லாம் சாமியாடிகள் அவங்களை திருப்திப் படுத்தற மாதிரி பதில் சொல்லணும். இல்லாட்டி 'அடிடா சாமி மேளத்தை'ன்னு சவுண்டு. திரும்பவும் அருள்வாக்கு. எப்படியும் 2 மணிநேரம் ஆகிடும் அங்கயே.

பேட்டையை தாண்டி இருக்கிற வீடுகளுக்கெல்லாம் பெரும்பாலும் நல்ல விடிஞ்சு வெயில் வந்தப்பறம் தான் சப்பரம் வரும். பேட்டையை தாண்டி கொஞ்ச தூரத்தில தான் ஒரு கலர் கம்பெனி இருக்கும். பேட்டையில எல்லாரும் காத்திருந்து களைச்சிருப்பாங்கன்னு தெரிஞ்சு வந்திருக்கிற கூட்டத்துக்கே அன்னைக்கு இலவச கலர் விநியோகம் நடத்தி தாகம் தீர்த்து வெப்பாங்க. இதுக்குன்னே பேட்டை தாண்டினதுக்கப்பறம் வந்து சேந்துக்கற சின்னப்பசங்க கோஷ்டியெல்லாம் நிறைய உண்டு.

செட்டியார் சமூகத்தை சேந்த கடைசி மண்டகப்படி கோவிலுக்கு பக்கத்தில தான் இருக்கும். மண்டகப்படி முடிச்சா கோவிலுக்கு போயிடலாம்ன்னு நினைசீங்கன்னா தப்பு. மண்டகப்படிக்கு அப்பறம் அர்ச்சனைத் தட்டு வரும் பாருங்க. உங்க வீட்டு கணக்கு எங்க வீட்டு கணக்கு கிடையாது. ஊரே திரும்ப வந்து அர்ச்சனைத் தட்டோட நிக்குதோன்னு சந்தேகம் வந்திரும். அவ்வளவு தட்டுகள் வரும். சூடம், பத்தி, பரிவட்டம், விபூதிப் பொட்டலம் இதுக்கெல்லாம் ஒரு சாக்கு. தேங்காய் பழத்துக்கு ஒரு சாக்கு. சப்பரம் கிளம்பும்போதே கட்டுவோம். ஒவ்வொரு மண்டகப்படிக்கும் சாக்கு நிறைஞ்சிடும். மாத்திக் கட்டிட்டு தான் கிளம்புவோம்.

கடைசி மண்டகப்படி முடிஞ்சு கோவிலுக்கு வர்றதுக்குள்ள திரும்பவும் ரெண்டு சாகும் நிறைஞ்சிடும். இப்ப நீங்களே எவ்வளவு தட்டு வரும்-ன்னு கணக்குப் போட்டு பாருங்க (ஏன்னா நான் கணக்குல கொஞ்சம் வீக்). கோவிலுக்கு வந்து சப்பரம் இறக்கி வெச்சதும் அதுல இருக்கிற பூவை வீட்டுக்கு எடுத்துட்டு போக பெரிய சண்டையே நடக்கும். ஆளாளுக்கு பிச்சிடுவாங்க. அவங்களோட முதல் குறி, வெள்ளைப் பூ தான். அது இல்லாட்டி மத்த பூக்கள். அவங்க போனதுக்கப்பறம் நாங்க சாமியையும் அம்பாளையும் அலங்காரம் பிரிச்சு, சாமியை வெளியில டேபிள்ல வெச்சுட்டு தாயாரை (அம்பாளை) சன்னிதியில வெச்சிட்டு வீட்டுக்கு கிளம்பிடுவோம்.


திரும்ப சாயங்காலம் 4 மணிக்கு வருவோம். சாமியை ஒரு பலகையில வெச்சு கட்டி அதை இரண்டு பக்கமும் மூங்கில் கழையோட கட்டிடுவாங்க. மஞ்சள் நீராடுக்கான எல்லா ஏற்பாடும் நடந்திருக்கும். பெருமாள் கள்ளழகராக இருக்கும்போது அவரை எதிர்த்து மற்ற கள்ளர்கள் கம்புச்சண்டை போடுற மாதிரி ஒரு சின்ன வைபவம் நடக்கும். இதுக்கு முன்னால நல்லா கம்புச் சண்டை தெரிஞ்ச ஒருத்தர் கம்பு சுத்தி தான் திறமையை காட்டுவார் (கோவில் படத்தில வர்ற வடிவேலு மாதிரி கிடையாது. நிஜமாகவே கம்பு சுத்துவார்). சாமியை சீர்பாதங்கள் தூக்கியிருப்பாங்க. இவங்களுக்கு முன்னால ஒரு 30 பேரு கம்போட 2 வரிசையா எதிரெதிர்ல நிப்பாங்க. எதிர்த்தாப்ல இருக்கறவரோட கம்பை தட்டிகிட்டே இவங்க கொஞ்சம் முன்னேறுவாங்க. சீர்பாதங்கள் சாமியை கொஞ்சம் பின்னுக்கு கொண்டு போவாங்க. அப்பறம் சாமியை முன்னுக்கு கொண்டு வருவாங்க. கம்புச் சண்டை போடுறவங்க பின்னால போவாங்க.

அப்படியே ஒரு 10 நிமிஷம் நடக்கும். ஒரு கட்டத்துல சண்டை போடுறவங்களை சாமி அப்படியே பின்னுக்குத் தள்ளி ஜெயிக்கிற மாதிரி பண்ணிடுவாங்க. ஜெயிச்ச உடனே மஞ்சள் நீராட்டு. அதை ஆரம்பிச்சு வெச்சிட்டு சாமி துலுக்க நாச்சியார் சன்னிதிக்கு செல்வதாக ஐதீகம். அதனால மூலவர் இருக்கிற கோவில் வரைக்கும் போயிட்டு வருவார் உற்சவர். ஊருக்குள்ள ஒருத்தனும் வெள்ளைத் துணி உடுத்த முடியாது. உடனே மஞ்சத் தண்ணி ஊத்திடுவாங்க. தெரிஞ்சவன், தெரியாதவன் பக்கத்து ஊர்க்காரன், யாரையும் விட மாட்டாங்க. மஞ்சத் தண்ணி ஊத்திடுவாங்க.

உற்சவர் ஊருக்குள் வர்ற வரைக்கும் இங்க திருவிழாக் கோலம் தான். நாயகன் படத்தில வர்ற பாட்டு மாதிரி 'அந்தி மழை மேகம்' தான். சில சமயம் கோவில்ல இருக்கிற எங்களையும் மஞ்சத் தண்ணியில குளுப்பாட்டிடுவாங்க. சாமி திரும்ப வந்தப்பறம் அலங்காரம் பிரிச்சு நிலைக்கு கொண்டு வந்தாச்சுன்னா 3 நாள் திருவிழா முடிஞ்சிடும். ஊர்மக்கள் சார்பா எங்களுக்கு துணிமணி வாங்கிக்குடுத்து மரியாதை செய்வாங்க. ஒரு வருடாந்திர நிகழ்வு முற்றுப் பெரும். மீண்டும் அடுத்த வருஷம் தான்.

வீட்டுக்கு வந்து தூங்குவோம் பாருங்க. அது தான் தூக்கம். 3 நாள் தூக்கமில்லாமல் சாமியுடன் வீதியுலா வர்றதால அப்படியொரு தூக்கம். அடிச்சு போட்ட மாதிரி. அப்பாடா! இந்த வருஷம் திருவிழா முடிஞ்சுது. இனிமேல் அடுத்த வருஷம்தான்-னு நெனைச்சுக்குவோம். மக்களோட மக்களா இருந்து அவங்க சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டு அவங்களோடவே இருக்கிற இந்த 3 நாளும் கண் மூடித் திறக்கிறதுக்குள்ள முடிஞ்சிடும்.

அடுத்த வருஷம் திருவிழாவுக்கு கலந்துக்கலாம்-ன்னு நானும் 4 வருஷமா நினைசுகிட்டே இருக்கேன். பொழப்பு சிரிப்பா சிரிக்குது. அதனால போக முடியறதில்லை. அடுத்த சித்திரைப் பௌர்ணமிக்காவது ஊருக்குப் போகணும். கடைசியாக சித்திராப் பௌர்ணமிக்கு நான் ஊர்ல இருந்து, 2007-ல்.

உங்களுக்கும் திருவிழாவைப் பாக்கணும்ன்னு ஆசையிருக்கா? எங்க ஊருக்கு வாங்க. எந்த ஊருன்னு கேக்கறீங்களா? இதுவரைக்கும் எங்க ஊர்-ன்னு சொன்னது என் சொந்த ஊரான உப்பார்பட்டி. தேனியிலருந்து கம்பம் போற வழியில 10 கி.மீ-ல இருக்கு. பக்கத்து ஊர்-ன்னு சொன்னது உப்புக்கோட்டை. தேனியிலருந்து குச்சனூர் போற வழியில 12 கி.மீ-ல இருக்கு. அடுத்த சித்திரைப் பௌர்ணமிக்கு கண்டிப்பா வாங்க. நானும் வரேன்.

இப்போதைக்கு அப்பீட்டேய்...

திருக்கண் - தென்னங் கீற்றால் இல்லாமல் செடிகொடி கொண்டு போடப்பட்ட கொட்டகை
மோது - பத்துலருந்து பதினஞ்சு தட்டைக் குச்சிகளை வெச்சு கட்டிய கட்டு.

Photo Courtesy: Yamo Moya

Comments

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2