ஆட்டுக்கால் 11 ஜி

டெஸ்டிங் யுனிட்ல எல்லாரும் ரொம்பப் பரபரப்பா இருந்தாங்க. ஆட்டுக்கால் 11 ஜி 'லைவ்' டேட்டா பேஸில் எரர் அடித்ததே அவங்க பரபரப்புக்கு காரணம். அவங்களால எங்கருந்து எரர் அடிக்குதுன்னே கண்டுபிடிக்க முடியலை. ஏன்னா இதே டேட்டா பேஸை இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணின இன்னொரு யுனிட், எரர் எதுவும் இல்லைன்னு சொல்லி ரிபோர்ட் குடுத்துட்டாங்க. இப்ப இருக்குற டெஸ்டிங் யுனிட் மட்டுமில்லை, பெரிய ப்ரொக்ராமிங் கம்பெனியான CP(Cut-throat Programming) கம்பெனில கூட யாருக்கும் இதுல எரர் இருக்கா இல்லையன்னு உறுதியா சொல்ல முடியலை.

இந்தக் கோடிங் எழுதினது எல்லாம் DMK(Data Mining Knowledge)-ன்னு ஒரு கம்பெனி. திடீர்னு ஒரு நாள் கோடிங் எழுதின கம்பெனில வேலை பாத்த ஆரோக்கிய ராஜா-வை டெஸ்டிங் யுனிட் ஆளுங்க சும்மா விசாரிச்சிருக்காங்க. அவங்க கேட்ட கேள்விக்கெல்லாம், 'வரும்... ஆனா வராது' ரேஞ்சுக்கு பதில் சொல்லிருக்காரு ராஜா. அவங்களுக்கு இவரு மேல சந்தேகம் அதிகமாயிடுச்சு. உடனே அவங்களோட டெல்லி ஆபீஸுக்கு இவரை கூட்டிட்டுப் போய் விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

ராஜாவும் தனக்கு தெரிஞ்ச ப்ரொக்ராமிங் அறிவை வெச்சு சமாளிச்சுப் பாத்திருக்காரு. ஆனாலும் டெஸ்டிங் டீம் கேட்ட கேள்விக்கெல்லாம் இவரால பதில் சொல்ல முடியலை. ஒரு கட்டத்துல அவங்க குடுத்த டார்ச்சர் தாங்க முடியாம மனுஷன் என்னத்தையெல்லாம் உளறிக் கொட்டினானோ தெரியல, அடுத்த கொஞ்ச நாள்லயே அவங்க கம்பெனியை இன்னும் தீவிரமா விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

DMK எம்.டி-யோட பெரிய பொண்டாட்டில ஆரம்பிச்சு, சின்னப் பொண்ணு வரைக்கும் யாரையும் விட்டு வெக்கலை. அதுலயும் எம்.டியோட பெரிய பொண்டாட்டி கிட்ட இந்த கோடிங் பத்தி இவங்க விசாரிச்சுட்டு இருந்தப்ப கூட, DMK எம்.டி CP கம்பெனி கிட்ட இன்னொரு டேட்டா பேஸ் கோடிங்ல ஷேர் பத்திப் பேசிக்கிட்டு இருந்தாரு. விசாரணையைப் பத்தி அவர்கிட்ட கேட்டப்ப, இதெல்லாம் சகஜமப்பா. அதுமட்டுமில்லாம டெஸ்டிங் யுனிட்ல இருக்கறவங்களுக்கு அவங்க வேலை சம்பந்தமான ஒரு சந்தேகம். அதை வந்து என்கிட்ட நிவர்த்தி செஞ்சுகிட்டு போறாங்கன்னு சொல்லி சமாளிச்சுட்டாரு.

அதே நேரம் DMKவுக்கு போட்டி கம்பெனியான ADMK (Advanced Data Mining Knowledge) கம்பெனிக்காரங்க, 11 ஜி-ல ஒரே எரர். அதனால அந்தக் கம்பெனி சாப்ட்வேரை யாரும் வாங்காதீங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க. இவங்க கம்பெனில இருந்த ஒரு லீடிங் மார்கெட்டிங் மேனேஜரோட என்ன பிரச்சனைன்னு தெரியலை, அவரைக் கம்பெனியில இருந்து தூக்கிட்டாங்க. புதுசா சேந்த மார்கெட்டிங் மேனேஜருக்கு அந்த அளவுக்கு பேசத் தெரியலை. அதனாலயோ என்னவோ மக்கள் யாரும் இவங்க சொன்னதை அவ்வளவு பெருசா எடுத்துகிட்ட மாதிரி தெரியலை. ஆனாலும் இவங்க விடாம சொல்லிக்கிட்டே இருந்தாங்க.

DMK எம்.டி-யோட பெரிய பொண்டாட்டி தான் 60% கோடிங் பண்ணிருக்காங்க. அதனால அவங்களையும் விசாரிக்கணும்னு டெஸ்டிங் யுனிட்-ல சொன்னதும் எம்.டி பதறியடிச்சு, அவங்களுக்கு ப்ரொக்ராமிங் லாங்குவேஜ் தெரியாது. அப்படியிருக்கறப்ப அவங்க எப்படி கோடிங் எழுதியிருக்க முடியும்ன்னு சொல்லி சமாளிச்சு அவங்களைத் தப்பிக்க வெச்சுட்டாரு. டெஸ்டிங் யுனிட் ஆளுங்களும் அப்போதைக்கு அதை விட்டுட்டாங்க.

ஆடிட்டிங் நடக்கற சமயம் நெருங்கி வந்திடுச்சு. ரெண்டு கம்பெனியும் கண்டிப்பா லாபக் கணக்கு காட்ட வேண்டிய கட்டாயம். எங்க கம்பெனி சாப்ட்வேரை வாங்கினா இது இது இலவசம்ன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே வெச்சு DMKவும் ADMKவும் மாத்தி மாத்தி விளம்பரம் பண்ணாங்க. அதுலயும் லாபக் கணக்கு காட்டுறதுக்காகவும், அவங்க கம்பெனி சாப்ட்வேரை மக்கள் வாங்குறதுக்காகவும் அவங்களே மக்களுக்கு பணமெல்லாம் குடுத்தாங்க DMK கம்பெனிக்காரங்க. சும்மா விடுவாரா ஆடிட்டர்? அதுவும் இந்த தடவை புதுசா வந்த ஆடிட்டர், ஒரு ஆட்டம் ஆடிட்டார்.இவங்களால சரியா பணப் பட்டுவாடா பண்ண முடியலை. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் குடுத்தாங்க. அவங்களும் கொஞ்சம் கொஞ்சம் தடுத்தாங்க.

இதுக்கு நடுவுல, எம்.டியோட சின்னப் பொண்ணும் இன்னொரு மேனேஜரும் சேர்ந்து ஆளுக்கு 20% கோடிங் எழுதியிருக்காங்க. அதனால அவங்களை டெல்லிக்கு கூட்டிட்டுப் போய் விசாரிக்கணும்ன்னு சொல்லிட்டாங்க டெஸ்டிங் யுனிட்ல. எல்லாரும் ஆடிட்டர் பதிலுக்காக தான் காத்துட்டு இருந்தாங்க. எப்படியாவது லாபக் கணக்கு காட்டிடுங்கப்பான்னு சொல்லிடுச்சு பொண்ணு. நானும் அதுக்காகத் தான் கஷ்டப் பட்டு உழைக்கறேனடி என் செல்வமே-ன்னு டயலாகெல்லாம் விட்டு மகளை சமாதானப் படுத்தியிருக்காரு எம்.டி. அதுவும் அவங்க கம்பெனி மார்கெட்டிங் ஆளுங்க ஓவர் டைம் எல்லாம் பாத்து விளம்பரம் பண்ணாங்க.

ரெண்டு கம்பெனியோட வரவு செலவுக் கணக்கெல்லாம் பாத்து முடிச்சாச்சு. ஆடிட்டர் பதில் சொல்ல வேண்டியது தான் பாக்கி. சொன்னார் பாருங்க முடிவை. யாருமே எதிர் பாக்கலை. ADMK லாபம் பிச்சுகிட்டு போயிடுச்சு. DMK சாப்ட்வேரை வாங்க ஆளே இல்ல. எம்.டி அதுவரைக்கும் தோள்ல போட்டிருந்த மஞ்சள் துண்டை தலையில போட்டுக்க வேண்டியதாகிடுச்சு. யாருமே எதிர்பாக்கலை ADMKவுக்கு இத்தனை லாபம் வரும்ன்னு. ADMK எம்.டி கூட எதிர்பாக்கலை. ரெண்டு கம்பெனியும் சரி சமமா லாபக் கணக்கு காட்டுவாங்கன்னு தான் எல்லாரும் எதிர்பாத்தாங்க. DMKவோட நிலமை தலைகீழா மாறிடுச்சு. அவங்க கம்பெனி மண்ணைக் கவ்விடுச்சு.

அடுத்த ஒரே வாரத்துல DMK எம்.டி மகளையும் மேனேஜரையும் டெஸ்டிங் யுனிட்காரங்க தூக்கிட்டு போயிட்டாங்க டெல்லிக்கு. அவ்வளவு தான். எம்.டியோட சின்னப் பொண்டாட்டி, அட அதாங்க சின்னப் பொண்ணோட அம்மா, குய்யோ முறையோன்னு அடிச்சுகிட்டு அழ ஆரம்பிச்சுடுச்சு. இதைப் பாத்துட்டு எம்.டிக்கு மனசு பொறுக்கலை. சின்னப் பொண்ணு ஒரு பக்கம் டெல்லியில. சின்னப் பொண்டாட்டி ஒரு பக்கம் அழுதுகிட்டுன்னு அவரால சமாளிக்கவே முடியலை. அதுவரைக்கும் ஆரோக்கிய ராஜா கோடிங்ல எந்த எரரும் பண்ணவில்லைன்னு சொல்லிட்டு இருந்த எம்.டி, எல்லா எரரும் ராஜா தான் பண்ணாரு. என் பொண்ணு எந்த எரரும் பண்ணலைன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. இதைக் கேட்டுட்டு ஆரோக்கிய ராஜாவோட ஆரோக்கியமெல்லாம் போயி, கிட்டதட்ட புள்ளி ராஜா மாதிரி ஆயிட்டாரு.

எப்படியாவது எம்.டியோட பொண்ணைக் கரெக்ட் பண்ணிடலாம்ன்னு நினைச்சு தான் ராஜா இந்த ஆட்டுக்கால் 11 ஜி வேலைக்கே ஒத்துகிட்டாரு. கொஞ்சம் கொஞ்சம் கரெக்ட் ஆகுற மாதிரி இருந்துச்சு. திடீர்னு டெல்லிக்கு தூக்கிட்டு வந்துட்டாங்க. கனி உனக்கு, மனி எனக்குன்னு எல்லாம் சொல்லி வலையை விரிச்சாங்களே. இப்ப என்னடான்னா மொத்ததையும் என் தலையில கட்டி மாட்டி விட்டுட்டாங்களேன்னு கோபம். கோபத்தை காட்டவும் முடியலை. சிரிக்கவும் முடியலை. எவ்வளவு நேரம் தான் அவரும் வலிக்காத மாதிரியே நடிக்கிறது???

எரரை கண்டுபுடிச்சு கன்ஃபார்ம் பண்ணிட்டாங்கன்னா போச்சு. அதுக்கு அவங்க குடுக்குற தண்டனையை நினைச்சாலே ராஜாவுக்கு வயித்துல புளியில இருந்து பூசணிக்காய் வரைக்கும் எல்லாம் கரைக்க ஆரம்பிச்சுடும்.

அப்படி என்ன தண்டனைன்னு கேக்கறீங்களா? அவர் உயிரோட இருக்குற காலம் வரைக்கும், இளைஞன் படத்தை தினமும் 3 ஷோ பாக்கணும். இந்த தகத் தகாய தண்டனையை நினைச்சு நினைச்சு, அவருக்கு இருந்த கொஞ்சம் நஞ்சம் ப்ரொக்ராமிங் அறிவும் போயிடுச்சு. ஆட்டுக்கால் 11 ஜி-யால ஆட்டுக்கால் சூப் கூட குடிக்கிறதில்லைன்னா பாத்துக்கங்களேன்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2