சிதைவு

சக்தி மட்டும் தான்னு கிடையாது. ஹோட்டல்ல வேலை செய்யற எல்லார் கிட்டயும் நல்லா பேசுவேன். பொதுவாவே ஹோட்டல்ல வேலை செய்யறவங்கன்னா நிறைய பேருக்கு ஒரு இளக்காரமான ஒரு பார்வை தான் இருக்கும். ஹோட்டல்ல வெய்ட்டர் தானே, இலை எடுக்கறவன் தானே என்கிற மாதிரியான பார்வை. ஹோட்டல்ல வேலை செய்தவன்கிற முறையில அவங்களோட வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும். நாம அவங்களை வெளியில இருந்து பாக்குறதுக்கு ஒரு யுனிபார்ம், கையில மெனு கார்ட், புன்னகையுடன் கூடிய உபசரிப்புன்னு தான். உள்ளுக்குள்ள எத்தனை விதமான மன உளைச்சல்கள், சொந்தப் பிரச்சனைகள், இது தவிர வேலை செய்யற இடத்துல இருக்கும் பிரச்சனைகள்-ன்னு அவங்க வாழ்கை வேற துறைகளில் வேலை செய்யும் சாமானியனை விடவும் கொஞ்சம் கஷ்டம் தான்.

நீங்க குடும்பத்தோட ஹோட்டலுக்கு போறீங்க. ஒரு டேபிள் காலி ஆகுது. நீங்க, உங்க மனைவி, பள்ளி செல்லும் வயதிலுள்ள உங்க குழந்தைங்கன்னு எல்லாரும் சீட்ல உக்காந்த அப்பறம், ஒரு சின்னப் பையன் வந்து இலை எடுத்துட்டு டேபிளை துடைச்சு க்ளீன் பண்ணுவான். தன் வயசுப் பசங்க எல்லாம் அவங்கவங்க அப்பா அம்மாவோட, குடும்பத்தோட சாப்பிட ஹோட்டலுக்கு வந்திருக்காங்க. ஆனா இவனோ இலை எடுத்து, அவங்க டேபிளைக் க்ளீன் பண்ணிட்டு இருக்கான். நம்ம அப்பா அம்மாவோட எப்பவாவது இந்த மாதிரி ஒரு ஹோட்டலுக்கு போய் சாப்பிட மாட்டோமான்னு ஒரு நினைப்பு அவனுக்கு வரும். அது கூடப் பரவாயில்ல. பள்ளிக் கூடம் போகணும். படிக்கணும்ன்னு அவனுக்குள்ள இருக்கற ஏக்கம் உங்க குழந்தைகளைப் பாத்தவுடனே கண்டிப்பா வரும். அந்தப் பையனோட மனநிலை எப்படி இருக்கும்ன்னு யோசிச்சுப் பாருங்க.

அதைப் பத்தியெல்லாம் எழுதினா பக்கம் பக்கமா எழுதலாம். அவ்வளவு விஷயம் இருக்கு. இப்ப நம்ம விஷயத்துக்கு வருவோம். நேத்துல இருந்து மனசு ரொம்ப பாரமா இருக்கற மாதிரி இருக்கு. அதுவும் நேத்து ராத்திரி சக்தி வந்து பேசிட்டு போனதுக்கப்பறம்தான். இவரும் ஹோட்டல்ல தான் வேலை செய்யறார். ஆர்டர் குடுத்தவங்க வீட்டுக்கு போய் பார்சல் டெலிவரி செய்யறது தான் இவரோட வேலை. ஹோட்டலுக்கு போயிருக்கும்போது என்னைப் பாத்துட்டா என்ன சாமி நல்லா இருக்கீங்களான்னு கேப்பாரு. எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு 5 நிமிஷமாவது பேசிட்டு தான் போவார். சமீபத்துல தான் இவருக்கு கல்யாணம் ஆச்சு. லவ் மேரேஜ். ரெண்டு வீட்லயும் ஒத்துகிட்டு இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க.

நேத்து டின்னர் ஹோட்டல்ல தான் ஆர்டர் செஞ்சோம். சக்தி தான் வந்திருந்தார் டெலிவரிக்கு. என்ன சாமி, நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாள் கழிச்சு ஆர்டர் பண்றீங்க போல. ஏன் இத்தனை நாள் ஹோட்டல் பக்கம் வரவேயில்ல? ன்னு கேட்டார். கொஞ்சம் வேலை ஜாஸ்த்தியாயிடுச்சுங்க. அதான் ஹோட்டல் பக்கம் வர முடியலை. இன்னிக்கு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்தோம். அதான் ஹோட்டல்ல டின்னர் ஆர்டர் செஞ்சோம்ன்னு சொன்னேன்.

என்ன ஆச்சு, யாருக்கு உடம்பு சரியா இல்லைனு கேட்டார். ஒண்ணும் இல்லங்க. எல்லாம் நல்ல விஷயம் தான். மனைவி கன்சீவ் ஆகியிருக்காங்க. அதான் செக்கப்புக்கு போயிட்டு வந்தோம்ன்னு சொன்னேன். வாழ்த்துக்கள் சாமி. கைய குடுங்க முதல்ல என்று கையைக் குடுத்தார். உங்களுக்கு ஓ.கே ஆயிடுச்சு சாமி. எனக்குத் தான் அவுட் ஆயிடுச்சுன்னு சொன்னார். எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. என் மனைவிக்கு லேசான அதிர்ச்சி. என்னங்க, போன தடவை உங்களைப் பாத்தப்ப தான உங்க மனைவியை டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போக போறாங்க உங்க அம்மான்னு சொன்னீங்க என்றேன். ஆமாம் சாமி. கூட்டிட்டு போனாங்க. டாக்டரும் 2 மாசம்ன்னு சொல்லிருந்தார். எங்களுக்கெல்லாம் சந்தோஷம். அதிலயும் எங்கம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். யப்பா எப்படியாவது சாகுறதுக்குள்ள பேரப் புள்ளைய பாத்திடணும்ன்னு இருந்தேன். நல்ல சேதிய சீக்கிரம் சொல்லிட்டீங்கன்னு சந்தோஷப் பட்டாங்க என்றார்.

சரி, திடீர்னு என்ன ஆச்சு? என்றேன். அவங்க சொந்தக்காரங்க யாருக்கோ கல்யாணம்னு அவங்க ஊருக்கு போனா என் மனைவி. பஸ்-ல போனதா, அலஞ்சதா, என்னன்னு தெரியல சாமி, எங்க வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாள் வயித்த வலிக்குதுன்னு துடிச்சிருக்கா. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் பாத்தா, கலஞ்சிருச்சுன்னு சொல்லிட்டங்க சாமின்னு சொன்னார், கலங்கிய கண்களுடன்.

நாங்க தான் படிக்கலை. எங்க புள்ளையாவது படிக்கணும். பையனோ பொண்ணோ, எதுவா இருந்தாலும் நல்லா படிக்க வெக்கணும்ன்னு ஆசைப் பட்டேன். என்ன எல்லாமோ பேசி வெச்சிருந்தோம். இப்படிப் பண்ணலாம். அப்படிப் பண்ணலாம். இந்த இந்த மாதிரி அந்தக் குழந்தையை நெறிப் படுத்தணும். பெரிய ஆளாக்கணும். நம்மள மாதிரி ஆயிடாம அதுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை சேப்டி பண்ணிக் குடுக்கணும்னு நினைச்சோம். நம்ம புள்ளைக்கும் நம்மல மாதிரி, லவ் மேரேஜ் தான் நடக்கனும்னு பேசிச் சிரிசுட்டு இருந்தோம். இப்படி இன்னும் நிறைய கனவுகளைச் சொல்லிகிட்டே இருந்தாரு. அவரோட கண்ல அந்தத் துயரத்தையும் தாண்டி ஒரு ஒளி தெரிஞ்சது. பேசி முடிச்சப்பறம், கலங்கிய கண்ல இருந்த அந்தக் கண்ணீர் அந்த ஒளியையும் சேர்த்துக் கொண்டு போயிடுச்சு.

அவர் பேசினதுல கருச்சிதைவு ஏற்பட்ட ஒரு மனைவியின் கணவனா, தன் குழந்தையை கருவிலேயே பறி கொடுத்த ஒரு தகப்பனா, ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்துக் குடுத்து பெத்தவங்களை சந்தோஷப் படுத்த முடியாத மகனா எவ்வளவு வலியும் வேதனையும் இருக்கும்ன்னு புரிஞ்சது. அந்தப் பெண்ணின் நிலைமைய நினைச்சுப் பாருங்க. இருக்கிறது மாமியார் வீட்ல. வெளிநாட்டுல வேலை பார்க்கும் கணவன். எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தாலே இடிச்சு இடிச்சு பேசுவாங்க சில மாமியார் வீட்ல. இப்ப, சொல்லவும் வேணுமா? என்னதான் அவங்க நல்லபடியா பாத்துக்கிட்டாலும், கணவன் பக்கத்துல இல்லைங்கிற ஒரு வருத்தம் இருக்கும். அதுவும் இது மாதிரியான சமயத்தில வேற யார் இருக்கங்களோ இல்லையோ, கணவன் மட்டும் இருந்தால் போதும்ன்னு ஒரு மனநிலை இருக்கும்.

அவர் பேசிட்டு போனதிலருந்து ரொம்ப பயமா இருக்குங்க என்றாள் என் மனைவி. அவளை சமாதனம் செய்து தூங்க வைக்கவே ரொம்ப நேரமாயிடுச்சு. அதுக்கு அப்பறமும் எனக்கு தூக்கம் வராம, எது எதையோ யோசிச்சுட்டிருந்தேன். நேத்திக்கு அவர் வந்தது பேசினது எல்லாம் கனவா இருக்கக் கூடாதான்னு நினைச்சுகிட்டே எழுந்தேன். ஆனால் டேபிள் மேல இருந்தது அவர் கொண்டுவந்து குடுத்த டெலிவரி பில். "இது போலவொரு மனத் துன்பத்தை இனி அவருக்கு கொடுக்காதே இறைவா"ன்னு பிரார்த்தனை செஞ்சுகிட்டேன். சிதைந்து போயிருக்க வேண்டிய அல்லது கலைக்கப்பட்டிருக்க வேண்டிய சில ஜீவன்களெல்லாம் இன்னிக்கு நாட்டையே சிதைச்சுகிட்டு இருக்கு. என்னவோ போங்க... ஏழைன்னா ஆண்டவனுக்கு கூட எளப்பம் தான் போல...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2