குற்றமே தண்டனை

இன்று:
அவனும் நண்பரும் காரில் பயணித்துக் கொண்டிருந்தனர். சைரன் சத்தம் கேட்டது. உடனே காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டான்.

ஏன் வண்டியை நிறுத்தின?

ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேக்குதே.. அதான்.

அதுக்கு என்ன இப்போ?

ஆம்புலன்சுக்கு வழிவிட்டு, வண்டியை ஓரங்கட்டினான்.





இரண்டு மாதங்களுக்கு முன்:
காலையில் எழும்போதே,

ச்சே.. இன்னிக்கு வெள்ளிக்கிழமையா.. ஆபீஸ்ல மீட்டிங் வெச்சு உசுர வாங்குவாங்களே என்று அலுத்துக்கொண்டான்.

காரணமேயில்லாமல் சிணுங்கிக்கொண்டிருந்த 3 வயது மகள், ஸ்கூல் ஐ.டி. கார்டை தேடிக்கொடுக்க சொன்ன 8 வயது மகனிடம், சட்னியில் உப்பு குறைவாகப் போட்ட மனைவி, பேப்பர்காரனை இன்னும் காணுமேடா என்று கேட்ட அப்பா, என எல்லாரிடமும் சிடுசிடு தான்.

ஒருவழியாக அறக்கப்பறக்க கிளம்பி அலுவலகம் வந்தான்.

மீட்டிங்குக்கு தேவையான ரிப்போர்ட் எல்லாம் தயார் செய்தான்.

வாடா ஒரு தம்மும் காபியும் போடலாம் என்றான் நண்பன்.

மீட்டிங் இருக்கே டா. மேனேஜர் காட்டுக் கத்து கத்துவான் டா... உனக்கு தெரியும்ல..

டேய் 11 மணிக்கு தான் மீட்டிங். இப்போ மணி 10.40. பத்து நிமிஷத்துல வந்திடலாம் வா.

இருவரும் சென்று வந்தனர்.

மீட்டிங் ஆரம்பித்தது.

வழக்கமாக 1 மணிநேரத்தில் முடியும் மீட்டிங், அன்று 2 மணிநேரத்துக்கும் மேல் நீண்டது.

போன குவார்ட்டர் சேல்ஸ் கம்மி. இப்படியே போனா, கம்பெனியை இழுத்து மூடவேண்டியதுதான் என்று கத்திக்கொண்டிருந்தார் மேனஜர்.

அத்தனை ஒன்றும் சேல்ஸ் கம்மியில்லை. ஆனால் மேலிடத்தில் அவரை காதில் ரத்தம் வரும் அளவிற்கு கழுவி ஊத்துவார்கள் என்பதே அவர் கத்தலுக்கு காரணம்.

இன்று:
கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் ஆம்புலன்ஸை காணோம். சத்தம் மட்டும் தான் கேக்குது. வண்டிய எடு.. போகலாம்.

கொஞ்சம் பொறுடா... சத்தம் பக்கத்துல கேக்குது. ஆம்புலன்ஸ் போனவுடனே போகலாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்:
ஒருவழியாக மீட்டிங் முடிந்தது. எல்லாருக்கும் கொலைப் பசி. ஆனால் மீட்டிங் முடிந்து வந்ததும் வராததுமாக, இவனிடம் ஒரு பெரிய வேலையை கொடுத்தார் மேனஜர்.

அனைவரும் லஞ்சுக்கு போனார்கள். இவன் மட்டும் மேனேஜரின் வேலையை வேண்டா வெறுப்பாக கம்பியூட்டரில் தட்டிக்கொண்டிருந்தான். அவர் மேலிருந்த கோபத்தை, கீபோர்டில் கொட்டினான். ஒவ்வொரு கீயையும் தட்டும்போது ஒன்னரை டன் வெயிட்டு டா என்பது போலவே இருந்தது.

வேலையை முடித்துவிட்டு 4 மணிக்கு கேன்டீன் சென்றால், சாண்ட்விச்சும் டீயும் தான் இருந்தது. சாண்ட்விச்சை முடித்துவிட்டு பாதி டீயை குடிக்கும் முன்பாகவே மீண்டும் மேனேஜரிடமிருந்து அழைப்பு.

அவன் கொடுத்த ரிப்போர்ட்டில் மேலும் சில பல மாறுதல்களை செய்யச் சொன்னார்.

மணி 5. வேலையை முடித்து ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டு, அவர் எதுவும் சொல்வதற்கு முன்பாகவே,

சார், எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு. கிளம்பறேன் சார்.

காலையிலிருந்து அவன் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்ததால், அவர் எதுவும் சொல்லவில்லை.

ஓகே. டேக் கேர்.

கார் சாவியை எடுத்துக்கொண்டு ஆளை விட்டால் போதும்டா சாமி என்று மாயமாய் மறைந்தான்.

அப்பாடா ஒருவழியா வீக்கெண்ட் வந்திருச்சு. ரெண்டு நாள் வீட்லயே ரிலாக்ஸ் பண்ண வேண்டியது தான். அவகிட்ட எந்த பிளானும் வெச்சுக்காதான்னு சொல்லணும் என்று நினைத்து போனை எடுத்தான்.

சார்ஜ் 3% தான் இருந்தது. ச்சே... இதை சார்ஜ்ல போடவேயில்லையா என்று அலுத்துக்கொண்டான்.

அவளே கால் செய்தாள்.

"ஹலோ... என்னங்க உடனே வாங்...." என்பதற்குள், போன் ஆப் ஆகிவிட்டது. அவள் குரலில் பதட்டம். பின்புலத்தில் யாரோ கத்திக் கொண்டிருந்தார்கள்.

இவனுக்கு டென்சன் தலைக்கேறியது. பரபரப்பு தொற்றிக்கொண்டது. போனுக்கான கார் சார்ஜ் கேபிளை தேடினான். காணவில்லை.

வண்டியை கிளப்பிக்கொண்டு மெயின் ரோட்டிற்கு வந்தால், செம ட்ராபிக். 

இன்று:
டேய்... நான் கத்தறது உன் காதுல விழலையா? மீட்டிங்குக்கு லேட்டாச்சு. மேனேஜர் எப்படி கத்துவான்னு உனக்கு தெரியும்ல? வண்டிய எடு.. போகலாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்:
ஊர்ந்து செல்லும் அந்த ட்ராபிக்கில் இவனும் கொஞ்சம் ஊர்ந்தான். சிக்னலில் நிற்கும்போதெல்லாம் சீட்டுக்கடியில், டேஷ்போர்டில் என கேபிளை தேடினான். ம்ஹூம்... கிடைத்தபாடில்லை.

ஒருவேளை அப்பாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ? யாருக்கு என்ன ஆச்சோ என்று குழப்பத்தில் இருந்தான்.

ஒரு வழியாக முக்கால்வாசி தூரம் கடந்துவிட்டான். இன்னும் கொஞ்சம் தூரம் தான். ஆனால் இனிமேல் தான் ரொம்ப லேட்டாகும். மெட்ரோ, ஒன்வே என, ஏகத்துக்கும் ட்ராபிக் ஜாம் ஆகும். இன்று வெள்ளிக்கிழமை வேறு. சொல்லவா வேண்டும்... பின்னாலிருந்து தூரத்தில் சைரன் சத்தம் கேட்டது

கொஞ்சம் கொஞ்சமாக இவன் ட்ராபிக்கில் முன்னேற, சைரன் சத்தமும் நெருங்கியது. ரியர்வியூ கண்ணாடியில் பார்த்தான். ஆம்புலன்ஸ்.

இத்தனை ட்ராபிக்கில எதுக்குடா ஆம்புலன்ஸை வேற எடுத்துட்டு வந்து எங்க உயிரை வாங்கறீங்க? என்று நினைத்துக்கொண்டான்.

ஒரு கட்டத்தில், இவன் வண்டி மட்டும் தான் ஆம்புலன்சுக்கு முன்னர் சென்று கொண்டிருந்தது. எங்கே சென்றது? ட்ராபிக்கில் நின்று கொண்டிருந்தது என்று தான் சொல்லவேண்டும். ட்ராபிக் கொஞ்சம் நகர்ந்தாலும், இவன் ஆம்புலன்சுக்கு வழி கொடுக்க தயாரில்லை.


நானும் தான் அவசரமாப் போயிட்டு இருக்கேன். வீட்ல யாருக்கு என்ன ஆச்சுன்னு தெரியல... என்று தானே சமாதானம் செய்துகொண்டான்.

ஒரு சிக்னலில் ஒரு வழியாக ஆம்புலன்ஸ் இவனைக் கடந்து சென்றது. ரெட் சிக்னல் ஆகையால், இவனால் போக முடியவில்லை. ஆனாலும், ஆம்புலன்ஸை துரத்திப்பிடிக்க ஒரு வெறி. ஆம்புலன்ஸ் பின்னால் போனால், ட்ராபிக்கில் மாட்டாமல் கொஞ்சம் சீக்கிரம் போய்விடலாம் என்பதும் காரணம்.

ஆனால் சிக்னல் திறந்த பிறகு, ட்ராபிக்கில் இவன் கொஞ்ச தூரம் செல்வதற்குள்ளாகவே, அதே ஆம்புலன்ஸ் எதிர்திசையில் மீண்டும் அலறியபடி சென்றது.

அடுத்த 10 நிமிடத்தில் வீட்டை அடைந்தான். வீட்டில் யாருமேயில்லை. மேலும் டென்ஷன் கூடியது. வெளியே ஓடிவந்தான்.

பக்கத்துக்கு வீட்டு பெண்மணி வந்தாள்...

இவன் கேட்கும் முன்பாகவே,

உங்க பையனுக்கு தலையில அடிபட்டு இப்போ தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோறாங்க. சீக்கிரம் போங்க.

எந்த ஹாஸ்பிடல்?

நலம் ஹாஸ்பிடல்.

காரில் சென்றால் ட்ராபிக்கில் மாட்டிக்கொள்ள நேரிடும் என்பதால், பைக்கை கிளப்பினான்.

அய்யோயோ.. அவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே...

ஒருவழியாக ஹாஸ்பிடலை அடைந்தான்.

என்னங்க... என்று ஓடிவந்தாள் மனைவி. அப்பா பதட்டத்துடன் இருந்தார்.

என்ன ஆச்சு?

அழுகைக்கு விசும்பலுக்கும் இடையில், கிரிக்கெட் விளையாடப் போனான்... அங்க கீழ விழுந்து தலையில அடி பட்டுடுச்சு... மயங்கிட்டான். மாமா தான் ஆம்புலன்சுக்கு போன் பண்ணினார்.

டாக்டர் என்ன சொன்னாங்க?

நிறைய ரத்தம் போயிருக்கு... ரொம்ப க்ரிட்டிக்கல்னு சொல்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க...

பயப்படாத... ஒன்னும் ஆகாது. அப்பா, அடிபட்ட உடனே ஆம்புலன்சுக்கு போன் பண்ண வேண்டியதானே??

நான் உடனே போன் பண்ணிட்டேன் டா... ட்ராபிக்காம். அதுலயும் எவனோ வேணும்னே ஆம்புலன்சுக்கு வழிவிடாம வந்திருக்கான்.. என்றார் கலங்கிய கண்களுடன்.

இவனுக்கு உச்சந்தலையில் சுரீரென உரைத்தது. அவன் வழிவிடாமல் வந்த ஆம்புலன்ஸ், நலம் ஹாஸ்பிடல் ஆம்புலன்ஸ்.


 டாக்டர் வெளியே வந்தார்.

பாருங்க, நிறைய பிளட் லாஸ். இன்ஜுரிக்கு ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணிருக்கோம். இன்னும் மயக்கம் தெளியலை. 48 ஹவர்ஸ் மானிட்டரிங்ல இருக்கட்டும். அதுக்கு அப்பறம் தான் எதுவும் சொல்ல முடியும்.

48 மணிநேரம்... அழுதே விட்டான்... ரத்தமும் சதையுமாய் 8 வருடம் வளர்த்த மகனுக்கு தானே எமனாய் மாறுவோம் என்று நினைத்தும் பார்த்திருக்கவில்லை. சாரிடா.. காலைல உன்னை திட்டிட்டேன் என்று பிதற்றினான். ஆம்புலன்சுக்கு வழிவிடாம வந்து என் புள்ளைக்கு நானே எமனாகிட்டேனே என்று மனதுக்குள் புழுங்கினான்.

பையனை காப்பாற்றுமாறு அவன் வேண்டாத தெய்வமில்லை.

கடவுள் புண்ணியத்தில் தப்பிப்பிழைத்து மீண்டு வந்தான் மகன்.

மகனைப் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி குத்திக்கொண்டே இருந்தது. அதிலிருந்து மீண்டுவர இவனுக்கு வெகுநாட்கள் பிடித்தது.

இன்று:
என்ன இப்போ? கத்தினாப் பரவாயில்ல டா. நாம இத்தனை அவசரமா ஓடி என்னத்தை கண்டோம்? ஒன்னு அடுத்த வேளை சோத்துக்கு ஓடுவோம்.. சொற்ப இன்க்ரிமெண்டுக்காகவோ, இல்ல வீட்டு EMI-க்கோ ஓடுவோம். ஒருவேளை சோறு இல்லாட்டி என்ன ஆகும்? ஒன்னும் ஆயிடாது. இந்த மாசம் இல்லாட்டி அடுத்த மாசம் EMI சேத்து கட்டிக்கலாம். ஆனா ஆம்புலன்ஸ்ல போற ஜீவன், உயிரைக் காப்பாத்திக்க ஓடுற கடைசி ஓட்டம் அது. அந்த ஜீவனுக்குப் பின்னாடி அதை மட்டுமே நம்பி வாழற ஒரு குடும்பம் இருக்கலாம்... நம்மால அந்த ஜீவனுக்கு உதவ முடியலைன்னாலும், அதோட ஓட்டத்துக்கு தடையா இருக்க வேண்டாமே.. அதுவே அந்த ஜீவனுக்கு செய்யற பெரிய உதவி... வழிவிடுவோம், வாழவிடுவோம்

நண்பன் ஒன்றும் பேசவில்லை.

ஆம்புலன்ஸ் கடந்து சென்றதும், இவன் வண்டியை ஆபீசுக்கு விரட்டினான்..

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2