வனவாசம் - 2

அப்போது...

"எலேய்" என்று யாரோ சத்தம் போட்டார். எங்களை யார் கூப்பிடப்போகிறார்கள் என்று  நினைத்து, நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.

"எலேய்... உங்களத்தாண்டா. நில்லுங்கடா" என்று மீண்டும் கேட்டது. நின்று சுற்றும் முற்றும் பார்த்தோம். பக்கத்தில் இருந்த தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் தான் கத்தியிருக்கிறார். அதுவும் எங்களைப் பார்த்து தான்.


நின்றோம். "யாருடா நீங்க? எங்கடா போறீங்க?" என்று அதட்டலாக கேட்டார். எங்களுக்கு உதறல் எடுத்தது. சீனி ஓடுடா என்று சொல்லி, நானும் ஓடத்தொடங்கினேன், மலையடிவாரத்தை நோக்கி. நாங்கள் ஓடுவதைப் பார்த்து அந்த ஆள் எதிர் திசையில் ஓடினார். வேலியிடப்பட்ட அந்த தோட்டத்தின் நுழைவு பாதை எங்களுக்கு பின்னால்... அதாவது அதைக் கடந்து வந்துவிட்டோம்.

அந்த ஆள் நுழைவு வரை போய், திரும்பவும் எங்களை தொடர்ந்து வந்து பிடிப்பதற்குள் நிச்சயம் கொஞ்சம் தூரம் ஓடியிருப்போம். ஆனால் கள்ளாட்டம் ஆடிய அந்த ஆள், பாதியிலேயே வேலியை எகிறி குதித்து வந்து எங்களை பிடித்துவிட்டார்.

"யாருடா நீங்க? எங்கடா போறீங்க?" மீண்டும் அதே கேள்வி. தீடீர் தைரியம் வந்தவனாக சும்மா வீரப்ப அய்யனார் கோவிலுக்கு போறோம் என்று அடித்துவிட்டான் சீனி. எனக்கும் கொஞ்சம் உதறல் நின்றது. நீங்க யாரு? எதுக்கு எங்களை துரத்தறீங்க? என்றேன் நான். "பள்ளிக்கூடத்து டவுசர் (Uniform Trouser), தோள்ல பள்ளிகூடப் பை (school bag) மாட்டிகிட்டு நீங்க கோவிலுக்குப் போறீங்க.. அதுவும் சும்மா போறீங்களா?" என்று கேட்டவுடன் தான்  சட்டையை மாத்திட்டு டவுசரை மாத்த மறந்துட்டோமே (மண்டைக்கு மேல இருந்த கொண்டையை மறைக்கலயே) என்று எங்களுக்கு உரைத்தது.


அப்பறமென்ன? மாட்டிக்கொண்ட எல்லாரும் செய்யும் அதையே தான் நாங்களும் செய்தோம். "அண்ணே எங்களை விட்ருங்க. நாங்க போயிடறோம்" என்று கெஞ்ச ஆரம்பித்தோம். எங்கடா போறீங்க? எதுக்கு? என்றார். புள்ளிவிபரம் பட்டியலிட்டோம். வீட்டை விட்டு ஓடறீங்களா? சரிதான்... என்று சொல்லிவிட்டு இருவரின் கையையும் பிடித்துக்கொண்டு திரும்பி நடக்க ஆரம்பித்தார். நாங்கள் கொஞ்சம் முரண்டு பிடித்தோம். ம்ஹும்.. தரதரவென இழுத்துக்கொண்டு நடந்தார். இதற்குள் அங்குவந்த பெண்மணியிடம் நடந்ததை சொல்லி, ஆட்டை பட்டியில் அடைக்குமாறு சொல்லிவிட்டு மீண்டும் ஊரை நோக்கி நடந்தார் (தோம்).

மேய்ப்பராக இருந்தவர்கள் (இப்போது கடவுளர்) காப்பாற்றுவது தானே வழக்கம்.. ஆனால் இந்த மேய்ப்பர் இப்படி மாட்டிவிட்டாரே என்று தோன்றியது. இந்த வயசுல வீட்டை விட்டு ஓடிப் போகணும்னு எப்படித்தான் உங்களுக்கு தோணுச்சோ.. அதுவும் பிளானெல்லாம் போட்டு கத்தி கயிறுன்னு சாமானெல்லாம் எடுத்துக்கிட்டு.. அடேங்கப்பா என்று சொல்லிவிட்டு நிறுத்தாமல் அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். எங்களுக்கு எதுவுமே மண்டையில் ஏறவில்லை. மாட்டிக்கொண்டதைக் காட்டிலும் இருவர் வீட்டிலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது? எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற எண்ணமே பூதாகரமாக இருந்தது.

இதற்கிடையில் இருவர் பற்றிய விபரமும் சொல்லியிருந்ததால், முதலில் என்னை ஊருக்கு அனுப்புவதாக ஏற்பாடானது. தேனியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் என் ஊர். அல்லிநகரத்தில் இருந்து மினிபஸ் பிடித்து தேனி வந்தோம். பஸ் ஸ்டாண்ட்டில் எங்கள் ஊருக்கு போக பஸ் அப்போது இருக்கவில்லை. கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருந்தோம். பஸ் வந்தவுடன் ஏற்றிவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்று நினைத்தேன். பஸ் வந்தது. ஆனால் 20 நிமிடம் கழித்து பஸ் கிளம்பிப் போகும்வரை அவர் நகரவேயில்லை. கூடவே சீனி. நான் கிளம்பிய பிறகு சீனியை அவரே வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்.

இரவு 8.15 மணிக்கு நான்  ஒன்றுமே நடக்காதது போல் சாதாரணமாக வீட்டிற்குள் நுழைந்தேன். அப்பா உட்கார்ந்திருந்தார். அம்மா "ஏண்டா லேட்" என்று கேட்டார். ஸ்பெஷல் க்ளாஸ் என்று சொன்னேன். எந்த சப்ஜெக்ட் என்றார் அப்பா. ரைட்டு.. எங்கருந்தோ இன்பர்மேஷன் வந்திருச்சு என்று தோன்றியது. ஆனாலும் சமாளிப்போம் என்று நினைத்து, "இங்கிலிஷ்" என்றேன்.

யாரு உங்க இங்கிலிஷ் சார்?

செல்லத்துரை சார்.

சரி. வா.. கிளம்பிப் போயி அவரைப் பாத்துட்டு வருவோம்.

எனக்கு பகீர் என்றது.

"எங்க போயிட்டு வர? உண்மையை சொன்னா அடிக்கமாட்டேன்". பெரும்பாலும் இப்படித்தான் ஆரம்பிப்பார். நான் பேசி முடித்தவுடன் பெல்ட்டோ பிரம்போ அவர் கையில் தயாராக இருக்கும். அன்றும் அப்படியே. செம்ம மாத்து. நான் வர லேட்டானதால் பள்ளிக்கு, பிறகு செல்லத்துரை சார் வீட்டுக்கு என போன் போட்டு கேட்டிருக்கிறார்கள்.

மறுநாள் அப்பாவும் நானும் பள்ளிக்கு சென்றோம். சீனி அவன் பெரியப்பாவுடன் வந்திருந்தான். நடந்தவற்றை பள்ளிக்கு விளம்பி, இனி இவர்கள் இப்படி நடக்கமாட்டார்கள் என்றும், அப்படி மீறி நடந்தால் பள்ளி எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது என்றும் எழுதிக் கொடுத்துவிட்டு வந்தார்கள்.

அன்று முழுமைக்கும் நானும் சீனியும் பேசிக்கொள்ளவில்லை. மகேந்திரன் எங்களை பார்ப்பதையே தவிர்த்தான். மற்ற பையன்கள் எங்களைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டனர். சிலர் சிரிக்கவும் செய்தனர். அன்று வந்த  வாத்தியாரும் எங்களை குசலம் விசாரித்தனர்.

இரண்டொருநாள் கழித்து காலை க்ளாஸிற்குள் நுழைந்தேன். சீனி ஏற்கனவே வந்திருந்தான். என்னைப் பார்த்து புன்னகைத்தான். நானும் பதிலுக்கு... பிறகென்ன.. வீட்டில் நடந்ததை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டோம். இரண்டு பக்கமும் இழப்பு ஜாஸ்தி.


அடுத்த இரண்டாவது நிமிடம் பந்தை எடுத்துக்கொண்டு கிரவுண்டிற்கு சென்று கொண்டிருந்தோம்...

Comments

  1. வன போஜனத்திற்கு தடையாக இருந்து மிகப்பெரிய சாம்ராட் மற்றும் ஆதித்யா உருவாவதற்கு காரணமாக இருந்த தம்பியை மீட்டு எடுத்து குடுத்த அந்த நல்ல மேய்ப்பருக்கு கோடானு கோடி ஸ்தோத்திரமப்பா

    பயபுள்ள நெறய வேலை பார்த்து இருக்கு .......இருக்கட்டும் இருக்கட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2