வனவாசம்

நானும் சீனியும் வனவாசம் போய் இப்போது 20 வருடங்கள் ஆகியிருக்கும். டார்ஜான் என்று சொல்வது கொஞ்சம் அதிகம் தான். என்றாலும் இந்தியா இரண்டு Bear Grylls-சையோ அல்லது Steve Irwin-னையோ இழந்திருக்கிறது என்பது நிதர்சனம். இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் கோவில் படத்தில் வரும் வடிவேலு போல உங்களுக்கு மிருகதோஷம் பிடிக்கும்.

1997-1998 வருடம். நாங்கள் 8-வது படித்துக்கொண்டிருந்தோம். செல்லத்துரை சார் தான் க்ளாஸ் சார். தவிர அவர் அசிஸ்டன்ட் HM கூட. கொஞ்சம் மெதுவாக சமயங்களில் போரடிக்கும் விதமாக பாடம் நடத்துவார். முன் வரிசை மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தும்போது சாரல் மழை தான். அவரைப் போல் இதுவரை யாரும் தும்மல் போட்டு பார்த்ததில்லை என்பது இங்கு கொசுறு செய்தி. அக் என்று சத்தம் முதலில் வரும். பின்னர் கொஞ்சம் காற்றுடன் மூக்கிலிருந்து ஹூன் என்று சத்தம் வரும். தும்மும் சமயத்தில் முன் வரிசை மாணவர்களுக்கு கண்டிப்பாக குடை தேவைப்படும்.


அப்போதெல்லாம் நான் கொஞ்சம் கணக்கில் (கணிதத்தில்) வீக். இப்போ மட்டும் என்னவாம் என்று கேட்பவர்களுக்கு ஆதார் அட்டை தொலைந்து போகக் கடவது.

சாதாரண க்ளாஸ் டெஸ்ட் தொடங்கி எல்லா எக்ஸாமிலும் எனது வேண்டுதல் எல்லாம் கணக்கில் எப்படியாவது பாஸாக வேண்டும் என்பதாகவே இருக்கும். மற்ற பாடங்களில் சர்வ சாதாரணமாக (எவ்வளவு முயற்சித்தும்) 60 - 65% வாங்கிவிடுவேன். கணக்கில் பாஸாகிவிட்டால் அன்றைய தினம் பிரசன்னா ஹேப்பி அண்ணாச்சி. அப்பாவின் அடியிலிருந்து தப்பலாம். வீட்டில் ஏதாவது சேட்டை செய்து அப்பா என்னை அடிக்க முடிவெடுத்துவிட்டால் அவர் கேட்கும் முதல் கேள்வி, "உன் கணக்கு நோட் எங்க? எடுத்துட்டு வா". கண்டிப்பாக பெல்ட்டோ பிரம்போ உறுதி.

இப்படியாக இன்னும் சில பல தலையாய பிரச்சனைகள். போலவே பெரியப்பா வீட்டில் தங்கியிருந்த சீனிக்கும் அவனது பெரியப்பா ஏதாவது பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். முக்கியமாக என் அப்பாவை போல அவரும் படிக்கச் சொல்லியிருக்கிறார். என்னடா வாழ்க்கை.. பள்ளிக்கூடத்துல தான் நம்மள போட்டு பொளந்து கட்றாய்ங்க. சரி வீட்ல நிம்மதியா இருக்கலாம்னு பாத்தா அதுவும் முடியல என நண்பர்கள் பேசிக்கொண்டிருந்த சமயம், யார் வாயிலிருந்து வந்ததென்று தெரியவில்லை. ஆனால் எவனோ சொன்ன அந்த விஷயத்தை நாங்கள் செய்வதாக முடிவானது. ஆம். வீட்டை விட்டு ஓடிப் போவதென்று ஆகச்சிறந்த முடிவெடுத்தோம்.

மூவர் செல்வதாக பேசி, கடைசியில் மாட்டியது நானும் சீனியும் தான். அந்த மூன்றாவது நபர் மகேந்திரன். முதலில் வருவதாக சொன்னவன், பின்னர் வரவில்லை என்று சொல்லிவிட்டான். சரி... எங்கே செல்வது என்று கேள்வி தொக்கி நின்றது. ஆளாளுக்கு இடம் சொன்னார்கள். மதுரைக்கு போகலாம் என்றால் சீனிக்கு சொந்த ஊர் மதுரை. அவனுக்கு தெரிந்தவர்களிடம் மாட்டிக்கொள்வோம். என் அப்பாவுக்கோ எந்த ஊரிலும் ஒருவராவது தெரியாது என்று சொல்ல முடியாத அளவுக்கு தொழில் ரீதியாகவோ நட்பு வட்டமோ உண்டு. எந்த ஊருக்கு சென்றாலும் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருந்தது. எனவே மக்கள் நடமாட்டமில்லாத இடத்திற்கு போவது தான் நல்லது என்று முடிவானது.

அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் வீரப்ப அய்யனார் கோவில். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் கோவில். ஜன நடமாட்டம் மிக குறைவு. கோவிலை தாண்டி கொஞ்சம் தம்-கட்டி ஏறினால், மலை தான். மலையேறிவிட்டால் காட்டில் தலைமறைவாகிவிடலாம். யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று முடிவு செய்தோம்.


அல்லிநகரத்திலிருந்து வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் வழியில்தான் மகேந்திரன் வீடு என்பதால் நாங்கள் போவதற்கான எல்லா உதவிகளும் செய்வதாக சொன்னான். எங்களை தவிர ஒரு 4-5 பேருக்கு வகுப்பில் இந்த விஷயம் தெரியும். அவர்களும் மலை/காட்டில் வாழ்வது குறித்து அவர்களுக்குத் தெரிந்த/கேள்விப்பட்ட விஷயங்களை சொன்னார்கள்.

மனதளவில் தயார் ஆனாலும் சில பொருட்கள் சேகரிக்க அவகாசம் தேவைப்பட்டது. கயிறு, பேட்டரி, தீப்பெட்டி, கத்திரிக்கோல், கத்தி இப்படி என்னவெல்லாம் தேவைப்படும் என்று தோன்றியதோ எல்லாம் தயார் செய்தோம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை நாங்கள் மலையடிவாரத்திற்கு வருவதாகவும் மகேந்திரனும் மற்ற நண்பர்களும் சந்திப்பதாகவும், எங்களுக்கு ஏதேனும் பொருட்கள் தேவையென்றால் அவன் கொண்டுவருவதாகவும் பேசிக்கொண்டோம். ஒரு சுபயோக சுபதினத்தில் ஜூட்.

காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றோம். மாலை பள்ளி முடிந்தவுடன் மகேந்திரனுடன் அல்லிநகரம் போனோம். அங்கிருந்து வீரப்ப அய்யனார் கோவில் செல்வதாக ஏற்பாடு. மகேந்திரன் கொஞ்ச தூரம் எங்களுடன் வந்தான். "டேய் இங்க இருக்கறவங்க எல்லாரும் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சவங்க. என்னைப் பாத்தா எங்க போற எதுக்கு போறன்னு கேப்பாங்க. நீங்களும் மாட்டிக்குவீங்க. இந்த ரோட்ல நேராப் போயிட்டே இருங்க. வீரப்ப அய்யனார் கோவில் வந்திடும். நான் வீட்டுக்கு போறேன்"னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.

நானும் சீனியும் ஏதோ உப்புப்பெறாத எங்கள் பிரச்சனைகளை எல்லாம் பேசிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். பிறகு காட்டில் என்ன மாதிரி மிருகமெல்லாம் வரும், அதை எப்படி எதிர்கொள்வது, பசித்தால் என்ன சாப்பிடுவது, போன்ற தலையாய விஷயங்களை பேசிக்கொண்டே மெதுவாக ஊர் எல்லையைக் கடந்து மலையடிவாரத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தோம். இரண்டு பக்கத்திலும் புளியந்தோப்புகள். நடுநடுவே வேறு ஏதோ சில தோட்டங்கள்.

அப்போது...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2