பொய்யாமொழி கயல்விழி - காதல் கதை

காதல் - கல்லூரிக் காலங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கடந்து வந்திருப்போம் இந்தக் "காதலை"..
இளங்கலை (UG) கல்லூரிக் காலம் தான் எத்தனை இனிமையானது.. முதல் பருவத்தின்போது அந்நியனாக பார்த்த முகங்கள் பிறகு நண்பர்களாவதும், மூன்றாம் அல்லது நான்காம் பருவத்தில் சண்டையிடுவதும், கடைசி பருவத்தில் நிகழும் Farewell நாளின்போது எல்லாரும் கட்டிப்பிடித்து கதறியழுவது என டெம்பிளேட் கல்லூரி வாழ்க்கை.


நடுவே சிலபல களேபரங்கள். அதில் சிலர் வில்லனாவதுண்டு (பெரும்பாலும் ப்ரொபஸர்கள்). சிலர் ஹீரோவாவது உண்டு. ப்ரொபஸர் வில்லன் ஆனாலும் ஹீரோ ஆனாலும் அந்த பேட்ச் மாணவர்கள் கோர்ஸ் முடித்து செல்லும்வரையில் அவர் வில்லன்/ஹீரோ தான். ஆனால் கல்லூரி முடித்து வெளியே வந்தபிறகு எல்லா ப்ரொபஸர்களுமே மாணவர்களுக்கு ஹீரோ தான். படிப்பு முடித்து வெளியேறிய பிறகுதான் அவர்களிடம் அந்த இறுக்கம் குறைந்து மாணவர்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அப்படிப்பட்ட ஒரு களேபரத்தின்போது சக மாணவன் "பொய்யாமொழியை (காரணப்பெயர்) அடிச்சுட்டாய்ங்க டா" எனக் கத்திக்கொண்டே வகுப்பிற்குள் நுழைய, நண்பர்கள் அனைவரும் ஆவேசமாய் வெளியே ஓடிவந்த சமயம் பொய்யாமொழிக்கு வலிப்பு வர, அவனைத் தூக்கிக்கொண்டு ஒரு பட்டாளமே ஆஸ்பத்திரி ஓடியது. பொய்யாமொழி ஹீரோவானான். நிகழ்வில் சம்பந்தப்பட்ட ப்ரொபஸர் வில்லன் ஆனார்.


மாதங்கள் ஓடின. சிலபல அரியர்களுடன் கடைசி செமஸ்டரில் காலடி வைத்தோம். ப்ராஜக்ட் வடிவில் அடுத்த களேபரம். சந்துபொந்துகளில் இருக்கும் கம்பியூட்டர் சென்டரெல்லாம் பிரசித்தி பெறுவது இந்த ப்ராஜக்ட் சமயத்தில் தான். அப்போதெல்லாம் சுற்றுவட்டாரத்தில் தேனி Cadd Cae சென்டர் பிரபலம். காலேஜ் ப்ராஜக்ட் சமயத்தில் கூட்டம் அள்ளும். சிலர் காலேஜ் ப்ராஜெக்ட்டுடன் இன்னொரு டிராக்கில் காதல் ப்ராஜெக்ட்டும் ஓட்டுவார்கள்.

ஒருவழியாக UG முடித்தோம். Cadd Cae சென்டரில் காதல் ப்ராஜக்ட் ஓட்டியவர்கள், "அந்தப் பொண்ணு உன்னைத்தான்டா பாக்குது" என உசுப்பேற்றி விட, அவர்கள் பேச்சை நம்பிக் காதலில் விழுந்தவர்களில் பொய்யாமொழி ஒருவன். உடனிருக்கும் நண்பர்கள் எல்லாரும் காதல் பிரவாகத்தில் நீச்சலிடித்துக்கொண்டிருந்த வேளையில் அப்படி நீந்துவதற்கு ஒரு குட்டை கூடக்கிடைக்காமல் சுற்றிக்கொண்டிருந்தான் பொய்யாமொழி. சொல்லப்போனால் காதலிக்கும் எண்ணம் அவ்வளவாக இல்லாமல் இருந்தான் என்பதே என் தனிப்பட்ட கருத்து.

சட்டெனத் திரும்பிப்பார்க்க வைக்கும் அழகில்லையென்றாலும், சற்றே கருப்பாக இருந்தாலும், நல்ல களையாகவே இருப்பான். இவனளவிற்கு களையாக இருக்கமாட்டாள் கயல்விழி (இதுவும் காரணப்பெயரே). அவளுக்கு இவனைப் பிடித்ததில் ஆச்சரியமில்லை. பார்த்தவுடன் அத்தனை ஈர்ப்பில்லாத, அவனைக்காட்டிலும் இன்னும் கொஞ்சம் கருப்பாக, முட்டைக்கண்களுடன் கண்ணாடி போட்டுக்கொண்டு இருக்கும் அவளை என்ன காரணத்திற்காக அவனுக்குப் பிடித்தது என்பது Cupid கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

இப்படி காதல் ப்ராஜக்ட் ஓட்டியவர்கள் எல்லாருமாக சேர்ந்து முதுகலை (PG) படிக்க மதுரையில் இருக்கும் ஒரு கல்லூரியை தெரிந்தெடுத்தனர். அதே கல்லூரியில் நானும் சேர்ந்தது விதிவசம். நல்லகாலம் நான் வேறு குரூப். வெவ்வேறு கல்லூரிகளில் படித்து, Cadd Cae-வில் மட்டுமே பார்த்த காதல் பறவைகள் இப்போது ஒரே கல்லூரியில். கேட்கவும் வேண்டுமா.. படங்களில் வரும் கல்லூரிக் காதல் காட்சிகள் எல்லாம் அங்கும் அரங்கேறியது. யாரும் பார்க்காத (என நினைத்துக்கொண்டு) தருணத்தில் பார்ப்பது, சிரிப்பது, கண் சிமிட்டல், கைகோர்த்து நடப்பது என நரம்புகளில் காதல் ஸலைன் ஏற்றிக்கொண்டு திரிந்தார்கள்.

இப்படியே எல்லாம் பிரச்சனையின்றி போனால் வாழ்க்கை என்னாவது? ஒருநாள் மாலை கல்லூரி முடிந்த பிறகு இருவரும் கேன்டீன் பக்கமிருந்து வந்துகொண்டிருக்க, எதிரே ப்ரின்சிபால் வரவும் சரியாக இருந்தது. யார் நீங்கள்? எந்த குரூப்? பேரென்ன? உனக்கு இந்தப் பையனோட என்ன வேலை என சரமாரியாக கேள்விகள் கேட்க, பொய்யாமொழிக்கு மீண்டும் வலிப்பு வந்தது. மீண்டும் ஆஸ்பத்திரி. கல்லூரி திரும்பியபிறகு சிலபல என்கொயரிகள். சம்பந்தப்பட்ட பெற்றோர்களின் வருகை, விசாரிப்புகள், உறுதிமொழி கடிதங்கள் என ஏகத்துக்கும் களேபரம். இதையெல்லாம் விடவும் ஹைலைட் ப்ரின்சிபாலிடம் மாட்டிய அந்த தருணம், "பொய்யாமொழியை யாரென்று தனக்குத் தெரியாது" என்று கயல்விழி கூறியது தான்.


ஒரு சில நாட்களில் மாணவர்களுக்கு முழுக்கதையும் தெரியவந்தது. கயல்விழி செய்தது சரியே என்றும் சரியில்லை என்றும் டிபேட் ஓடிக்கொண்டிருந்தது. சம்பந்தப்பட்ட இருவரும் எதுவுமே நடக்காதவர்கள் போல் வகுப்பில் உட்கார்ந்திருந்தார்கள். பொய்யாமொழியை முன்பே அறிந்திருந்த என்னைப் போல சிலருக்கு வலிப்பு தானாக வரவில்லை, வலிய வந்ததென்று தெரியும். அப்போதும் அவர்களுக்குள் "அது" இருந்தது என்றும், அவள் மீது அவனுக்கு இன்னும் ஈர்ப்பு அதிகமாகியிருக்கிறது என்றும் நண்பர்கள் சொல்வார்கள்.

கடைசி செமஸ்டர் வழக்கம் போல் ப்ராஜக்ட். நான் ப்ராஜெக்ட்டுக்காக சென்னை போய்விட்டேன். PG-யும் முடிந்தது. நான் சென்னையிலே தொடர்ந்து தங்கி வேலை தேடத்தொடங்கினேன். பெரும்பாலான கல்லூரி நண்பர்கள் சென்னையில் இருந்தாலும், ஒருசிலரை தவிர வேறு யாருடனும் தொடர்பே இல்லாமல் போயிற்று. பொய்யாமொழியும் வேலை தேடி சென்னையில் நங்கூரம் அடித்தான் என்று தகவல் கிடைத்தது. அவனை சென்னையில் சந்தித்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கயல்விழியைப் பற்றி பேசினால் பதில் எதுவும் இருக்காது. கிளம்பும் சமயத்தில், பை த பை, கயல்விழி-ன்னு ஏதோ பேர் சொன்னீங்களே யாரு அது? என கேட்டு ஜெர்க் ஆக்குவான்.

வருடங்கள் ஓடிற்று. பொய்யாமொழிக்கு சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பேசி திருமணம் செய்தார்கள். கயல்விழி பற்றி தகவல் தெரியவில்லை.

இப்போது பொய்யாமொழியும் என்னைப்போல் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டிருக்கிறான்.


"சிஸ்டர் டா.. தங்கச்சி டா" எனக் கூறிக்கொண்டு காதல் கடற்கரையில் கால் நனைத்த கதையும் கைவசம் இருக்கு.. இவங்களைப் பாத்து தான் ராஜாராணி படத்துல "பிரதர்" டயலாக் வெச்சாங்களா-னு கூட டவுட்டு இருக்கு.. சொல்வேன்..

அப்பறம்... சொல்ல மறந்துட்டேனே... காதலர் தின வாழ்த்துகள்.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2