கிச்சா / கிச்சாமி / சாமி / கிருஷ்ணஸ்வாமி
ஒரு தசாப்தமும் ஒரு வருடமும் பஹ்ரைனிலும் ஒரு வருடம் துபாய்/மஸ்கட் என
மொத்தம் 12 வருடங்கள் வளைகுடா வாழ்க்கை முடித்து கிழக்கு ஆசியாவிற்கு
செல்கிறார்.
பஹ்ரைனில், ரஞ்சனி மாமா என்றழைக்கும்
வெகுசிலரில் ஒருவர். எங்களுக்கு அண்ணா / சார் / கிச்சா என தோன்றும்
பெயர்களில் எல்லாம் அழைப்போம். பெரும்பாலும் ஒற்றையாய் மட்டுமே சத்சங்கம்
வருவதால் அவர் குடும்பம் பற்றி அத்தனை பரிச்சியம் இல்லை. பகவத் ராமானுஜர்
நாடகத்தின் வாயிலாகத்தான் அவர் மகன் ஆதித்யாவுடன் பழகும் வாய்ப்பு
கிடைத்தது.
கராத்தே பயின்றதால் உடல்நலத்திற்கு பெரும்
முக்கியத்துவம் கொடுக்கும் பையன். என்ன சாப்பிடுகிறோம் அதில் எவ்வளவு
எண்ணெய் இருக்கிறது எவ்வளவு கார்போஹைட்ரேட் என பார்த்து பார்த்து
சாப்பிடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பான். மற்றபடி பரமசாது..
அப்பாவைப் போலவே.. கல்லூரி சேர்ந்தாகிவிட்டதால் அவனும் அம்மாவும் இப்போது
சென்னைவாசிகள்.
நானும் சிட்டி நாராயணனும்
சேர்ந்திருக்கும் சமயத்தில் மாட்டினால் கண்ணீர்விடும்வரை கலாய்ப்போம்.
நரசிம்மன் அண்ணா கத்தார் போனபிறகு பெரும்பாலும் கிச்சா சார் தான்
மாட்டுவார். ஏதாவது சொல்லி சமாளிப்பார். சமயத்தில் பதிலுக்கு கலாய்த்து
அதிர்ச்சியூட்டுவார். அவருடன் திவ்யப்ரபந்தம் சேவிக்கும் அனுபவமே அலாதி
தான். கோஷ்டியில் சேராமல் தனி ஆவர்த்தனம் செய்வார். சமயத்தில்
திவ்யப்ரபந்ததில் தேசிக ஸ்தோத்திரம் எல்லாம் சொல்வார்... நாம் குழப்பமாகி
நிமிர்ந்து பார்த்தால், அவர்பாட்டுக்கு அடுத்த பாசுரம்
சேவித்துக்கொண்டிருப்பார். அதில் கத்யத்ரையம் வந்தாலும் வரும்.
அலுவலகத்தில்
பிரச்சனை வந்தபிறகு கொஞ்சம் சோர்வாக இருந்தார். திடீர் திடீரென
மாறுவேடத்தில் வருவார். ஒருவாரம் மழிக்காத தாடியுடன், க்ளீன் ஷேவ், 3 மாத
தாடி இப்படி பல பல கெட்டப்கள். மரு மட்டும் ஒட்டவில்லை.. அவ்வளவே..
நாலுவரி
சேர்ந்தாற்போலப் பேசினால் பதட்டமாகிவிடுவார். அவர் படபடவெனப் பேச
ஆரம்பித்தால் நமக்கு கமல்ஹாசன் ட்வீட் எல்லாம் கண்முன்னே வந்துபோகும்.
முந்தாநாள் மாலை 5.30 வாக்கில் போன் செய்து, உடனே ஜிஞ்ச் போகணும் என்றார்
அதே பதட்டத்துடன். நான் வருவதற்கு 6 - 6.15 ஆகிவிடும் அண்ணா.. டாக்ஸி
நம்பர் தருகிறேன் என்று சொல்லி நம்பர் தந்தேன்.. ஆனால் டாக்சிக்கு
வேலையில்லாமல்
ஜிஞ்ச்
ஆசாமியே இவரைப் பார்க்க வந்துவிட்டார்.
நான் 20 நிமிடம் கழித்து அழைத்தேன். பாஸ்போர்ட் கேன்சல் செஞ்சு கொடுத்துட்டாங்க-மா.. கிளம்பவேண்டியது தான் என்றார்..
ஒருபக்கம் ஆறுதல்.. ஒருபக்கம் ஒரு நண்பரை/பாகவதரை இழக்கிறோம் என்ற வருத்தம்... இன்று காலை கிளம்பிவிட்டார். இந்த 3 நாட்களும் அவர்
படபடப்பாக
பேசுவது போல பரபரப்பாகவே இருந்தது...
சிட்டி... நாம கலாய்க்க ஒரு ஆள் தேடணும்...
Comments
Post a Comment