ஆண்டவன் ஸ்வாமிகள்

நேற்று காலை வரை அக்ஷதையுடன் அருளாசி வழங்கி உயர்வற உயர்நலம் பாசுரத்திற்கு விளக்கம் கொடுத்த நம் ஆசார்யன், இன்று அந்தி சாய்வதற்குள் அந்த அமரரின் அதிபதியுடன் ஐக்கியமாகிவிட்டார்.
சிட்டி குரூப்பில் வேலை செய்துவந்த சமயம். ஒரு வார இறுதியில் திருவயிந்திபுரம் நண்பர் ஒருவர், ஆண்டவன் அங்கு எழுந்தருளியிருப்பதாகவும், சேவிக்கப் போகலாமா என்று கேட்டார். மடத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அப்போது நம் சம்பிரதாய விஷயங்களில் அத்தனை பெரிய ஞானம் இல்லாமலிருந்த சமயம் (இப்போதும் மாற்றமில்லை). பைக்கில் சென்னையிலிருந்து திருவயிந்திபுரம் வரை செல்லும் நீண்ட பயணத்திற்காகவே ஒப்புக்கொண்டேன். (குறிப்பு: அம்மா வழியில் ஆண்டவன் சிஷ்யர்கள். மாமாக்கள் எல்லோரும் ஆண்டவனுக்கு நெருக்கம். சின்ன மாமாவின் பெயரை சொன்னால் தெரியும் அளவுக்கு பரிச்சியம் கொண்டவர்கள்)
2 நாட்கள் அவருடனே தங்கியிருந்து தேவநாதனையும் ஆண்டவன் ஸ்வாமிகளையும் திவ்யமாக சேவித்தேன். காலை வந்திருந்த அனைவருக்கும் அருட்ப்ரஸாதம் வழங்கினார். பிறகு ததியாராதனை ஆரம்பமானது. அங்கிருந்த சிலருடன் ஏதோ கேலியாக சிரித்துப் பேசிவிட்டு ஆண்டவன் ஓய்வெடுக்க அறைக்கு சென்றுவிட்டார். அவர் அறைக்கு அருகில் அவருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒருவர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
ஆண்டவன் வெளியே வந்தார். ஆசார்யன் வருவதை கவனித்துவிட்டு, இவர் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டார். ஆண்டவன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆண்டவன் தன்னைத்தான் பார்க்கிறார் என்று உணர்ந்து, குனிந்தவாறே சாப்பிடுவது போல பாவனை செய்துகொண்டிருந்தார். சில நொடிகள் கழித்தும் அவர் நிமிர்ந்து பார்த்தபாடில்லை. ஆண்டவனும் விட்டபாடில்லை. ஒருகட்டத்தில் அவரே குனிந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் முகத்தைப் பார்க்க, அவரும் ஓரக்கண்ணில் பார்க்க, இருவரும் வெடித்துச் சிரித்துக்கொண்டனர்.
சம்பாஷணை நினைவில் இல்லையென்றாலும் இந்தக் காட்சி என்றும் மறவாது. ஆசார்யன் என்றாலும், சாமான்யர்களுடன் சிரித்துப்பேசி அளவளாவி அருளாசி வழங்கிய அந்த ஆசார்யன், இனி வைகுந்தத்திலிருந்து நம்மை வழி நடத்தட்டும்.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2