எலி வேட்டை
The Walk படத்தில், கம்பி/கயிற்றில் நடப்பது போல ஒரு அளப்பரிய சாகசம்
செய்து கேபிள் வயர் வழியே கோகுல் வீட்டிற்குள் வந்தது அந்த எலி. (
இது சின்ன பட்ஜெட் படம் என்பதால், கிராபிக்சில் சில பல சித்து வேலைகள்
செய்து, பிறகு எலி பாதி தூரம் கடக்கும்போது கீழே விழுவது போல ஒற்றைக்
கை/காலில் தொங்கி பிறகு மீண்டும் கயிற்றை பிடித்து நடப்பது போல நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள்)
அது தானாக வந்ததா, அல்லது தான் ஆபீஸ் ட்ரிப் போவதால் சுதாவுக்கு துணையாக இருக்கட்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலே கோகுல் கொண்டுவந்து விட்டதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
முதல்நாள் கிச்சனில் இருந்த உருளைக்கிழங்கு, வெங்காயம் இவைகளை கொஞ்சம் கடித்து வைத்து, தான் வந்திருப்பதை அடையாளப் படுத்தியது எலி. ஆனால் சுதா ஒன்றும் அத்தனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் அதுவும் மைலாப்பூரில் வளர்ந்த பெண்ணாயிற்றே.. இந்த மாதிரி சாதாரண எலிக்கெல்லாம் பயப்படுவாரா என்ன என நீங்கள் நினைத்தால், அது கதாசிரியரின் தவறல்ல.
இரண்டாம் நாள் பிரிட்ஜ் இருக்கும் அறையில், எலியும் நோக்கினார் சுதாவும் நோக்கினார் ரேஞ்சுக்கு, நேருக்கு நேர் சந்திக்க, பிரிட்ஜில் எடுக்கப் போனதை மறந்துவிட்டு ஜெட் வேகத்தில் வெளியே ஓடிவந்து கதவைப் படீரென்று அடித்து சாத்தி பூட்டிவிட்டு, கதவு இடுக்குவழியே எலி வெளியே வந்துவிடுமோ என்ற சந்தேகம் வரவே, அடியில் ஒரு துணியைவைத்து அடைத்துவிட்டார். படபடப்பு குறைய 10 நிமிடமாயிற்று. ஒருவழியாக நிதானத்திற்கு வந்தவுடன் கோகுலுக்கு விஷயத்தை சொல்ல போன் செய்தால், "மீட்டிங்-ல இருக்கேன்.. அப்பறம் பேசறேன்" என்று சொல்லி கட் பண்ணிவிட்டார் சதி செய்த சுதா-பதி.
வீட்டுக்குள்ள எலி வந்திருக்கு, போன் பண்ணா மீட்டிங்-னு சொல்றாரே இந்த மனுஷன்.. அப்படி என்ன பொல்லாத மீட்டிங்.. புடலங்கா மீட்டிங்.. நான் ஒருத்தி இங்க எலிக்கு பயந்து உயிரை கைல புடிச்சுண்டு இருக்கேன்.. இந்த மனுஷனுக்கு மீட்டிங் முக்கியமா போச்சு.. வரட்டும்.. பேசிக்கறேன்.. என்று தன்னைத்தானே நொந்துகொண்டு அம்மாவிடம், மாமியாரிடம், நாலே நாலு நண்பிகளிடம் மட்டும் இந்த எலி மேட்டரை சொன்னாரே தவிர, வேறு யாருக்கும் சொல்லவேயில்லை. மற்றபடி அந்த பிரிட்ஜ் இருந்த ரூமை 2 நாட்களுக்கு திறக்கவேயில்லை. தனி அறையில் அதுவும் இருட்டில் அந்த எலி நிச்சயம் பயந்துபோயிருக்கும்.. பாவம்.
இரண்டாம் நாள் மாலை கோகுல் வந்து சேர்ந்தார். இரவே எலி வேட்டை தொடங்கியது. எனக்கும் அழைப்பு வந்தது. ஏற்கனவே கோகுலும் ஸ்ரீராமும் நாக்கை துருத்தி, கண்ணை உருட்டி, முஷ்டி உயர்த்தி, நரம்பை முறுக்கிக்கொண்டு, தீவிரவாதிகளை லெப்ட் காலால் சுழட்டி அடிக்கும் கேப்டன் போல, எலி வேட்டையாட களத்தில் இறங்கியிருந்தனர்.
துணிமணிகள், பொருட்கள் என தரையில் ஒரு சிறிய கலவரம் நடந்த தடயம் இருந்தது. பிரிட்ஜ் மேலே எலி போயிருக்குமோ என்ற டவுட்டில் 1 1/2 ஆள் உயரமிருந்த பிரிட்ஜ் மேலிருந்த பொருட்களையெல்லாம் கையிலிருந்த கம்பால் சிக்ஸ் போர் அடித்து கீழே தள்ளியது, "ஆஹா நகைச்சுவை" என்று சிரிச்சா போச்சு நாஞ்சில் விஜயன் சொல்லுவது போலிருந்தது.
ஸ்ரீராம்
கட்டிலின் மேல் நின்றுகொண்டு பயத்தை வெளிக்காட்டாமல் தேடுகையில், காலில்
குறுகுறுவென ஏதோ உரச, பதட்டத்தில் குனிந்து பார்த்தபோது... பேப்பர் பேன் காற்றில் பறந்து காலில் உரசிக்கொண்டிருந்தது. அட ச்சீ..
இதுக்கா பயந்தோம் என லேசாக சிரித்துக்கொண்டே, நான் பார்த்துவிட்டேனோ
என என்னைப் பார்க்க, நானும் பார்க்க, பிறகு ஒருவேளை எலியா இருக்குமோ என்று தன் பயத்திற்கு கொடுத்த விளக்கம் அடடே...
கட்டிலுக்கு கீழ தேடினீங்களா என்ற கேள்விக்கு, இருவரிடமும் பதில் இல்லை. கட்டிலின் மேல் பலகை கழட்டும் வகையில் தான் இருந்தது. மெல்ல அந்தப் பலகையை எடுத்து கீழே வைத்தார் கோகுல். அதனடியில் சில பல துண்டுப் பலகைகள்.. அதில் ஒன்றை நான் விலக்க, அடியிலிருந்து எலி ஓடியது. (கட்டிலின்) சட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட எலி தப்பிக்க வழியில்லாமல் திணறியது. கையில் கனரக ஆயுதங்களுடன் அதை தாக்க தயாராக நாங்கள் மூவரும் நிற்பதைப் பார்த்தவுடன் "சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா" என்ற வசனம் அந்த எலிக்கு ஞாபகம் வந்திருக்கக்கூடும்.
ஆனால் அப்படியும் நம்மூர் அரசியல்வாதி போல சட்டத்திலிருந்து தப்பித்து வெளியே ஓடியது. சுமார் 2 நிமிடம் எங்களை ஓடவிட்டு ஆட்டம்காட்டிய எலியை, 2 நாட்கள் சுதாவுக்கே பயம்காட்டிய அந்த எலியை சுவற்று மூலையில் வைத்து கம்பால் அமுக்கிப் பிடித்தார் கோகுல். பாவம்.. அடிச்சுடாதீங்க.. அப்படியே கொண்டுபோய் வெளில விட்டுடுவோம் என்ற எனது வெள்ளைக்கொடி ஐடியாவுக்கு இருவரும் உடனே சம்மதித்தனர்.
கையில் ஒரு பிளாஸ்டிக் கவரை மாட்டிக்கொண்டு லாவகமாக எலி வாலைப் பிடித்து தூக்கினேன். பாத்து ஜி.. கடிச்சுடப் போகுது என்று பீதியூட்டினார் கோகுல். ஆனால் உயிரோட விட்டுடலாம் என்று நான் சொன்னது எலிக்கு புரிந்துவிட்டது போல, சாதுவாக எந்த ரியாக்ஷனும் காட்டாமல் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தது, என் கையில். "சுதா இங்க வந்து பாரேன்" என்று சொல்லிக்கொண்டே கோகுல் கதவை திறக்க, கையில் எலியுடன் என்னைப் பார்த்த சுதா கத்திய அந்த சத்தத்தில் ஆம்புலன்ஸ் சைரன் தோற்றது போங்கள்.
ஒரு 5 நிமிடம் சுதாவையும் எங்க வீட்டு தங்கமணியையும் அந்த சாது எலியை வைத்து ஆட்டம்காட்டிவிட்டு அப்படியே கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டோம். அந்த 5 நிமிடமும் எலியைப் பார்த்து அவர்கள் கத்தியதைவிட, அவர்கள் கத்தியதைப் பார்த்து எலிக்கே கிலி பிடித்திருக்கும்.
விரைவில் பார்ட் 2 - கோகுல் மீண்டும் ஆபீஸ் ட்ரிப் போகும்போது...
Comments
Post a Comment