குறுந்தாடி
தாடி மீசைக்கும் நமக்கும் ரொம்ப தூரம். வின்னர் படத்தில் வடிவேலு சொல்வது போல், வண்டி "மை"-ல மீசை வரைஞ்சதுக்கே புழுதி-ல விட்டுப் பொரட்டிட்டு இருக்காங்கே கதை தான். ஆனாலும் அவ்வப்போது இருக்கும் கொஞ்சநஞ்ச மீசை தாடியை வைத்து சர்க்கிள் பியர்ட் (குறுந்தாடி) முயற்சிப்பது வழக்கம்.
கல்லூரி நாட்களில் மீசை வைத்திருந்தேன். முதல் பாஸ்போர்ட்டில் கூட எனக்குப் பிடித்த சிவப்புக் கலர் சட்டையில் எடுத்துக்கொண்ட மீசையுடன் கூடிய போட்டோ-தான் இருக்கும். கல்யாணத்திற்குப் பிறகு மீசை இருந்தால், ஆணவம் ஆணாதிக்கம் போன்ற எண்ணங்கள் தலைதூக்கி, அடி வாங்கினால் கோபப்படவோ திருப்பி அடிக்கவோ தோன்றும் என்பதாலேயே ட்ரிம் அல்லது ஷேவ் தான்.
இருக்கும் கொஞ்சநஞ்ச மீசை தாடியாவது ஒழுங்காக வளர்ந்திருந்தால் பரவாயில்லை... சீரான இடைவெளியில் இல்லாமல் ஒரு இடத்தில அடர்த்தியாக, இன்னொரு இடத்தில புதிதாகப் போட்ட மொஸைக் தரை போல இருக்கும்பட்சத்தில் மொத்தமாக இல்லாமலிருப்பதே நலம். மீசை தாடியில் விதவிதமாக அலங்காரம் செய்பவர்களைக் கண்டால் கொஞ்சம் எரிச்சலாக இருக்கும்.
அதிலும் இந்த No Shave November என்று சொல்லி முகம் முழுக்க தாடியுடன் உலா வருபவர்களைக் கண்டால் பற்றிக்கொண்டு வரும். "முடி"யாமை என்பதை தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? எனக்கு விருமாண்டி படத்தில் கமல் வைத்திருந்த ஸ்டைல் கிருதா மீசை வைத்தால் ஆஸம்-மாக இருக்கும் தான். ஆனால் கேஸம் இல்லையே.
சரி போகட்டும். இப்போதெல்லாம் அடிக்கடி இந்த குறுந்தாடியுடன் சுற்றுகிறேன். காரணமில்லாமல் இல்லை. க்ளீன் ஷேவ், லெவல் 0 அல்லது 1 ட்ரிம் செய்த முகத்துடனும் இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் அலுவலகத்திலோ வேறு இடங்களிலோ ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தாலோ அல்லது அது சம்பந்தமான சிந்தனையில் இருந்தாலோ, யாராவது வந்தால் உடனே குறுக்கிட்டு தங்கள் வேலையை முடித்துக்கொடுக்குமாறு கேட்பார்கள்.
அதற்கு முன்னர் செய்த வேலை/சிந்தனை பாதியில் நின்று பிறகு மறந்தே போகும். மீண்டும் அதை ஞாபகப்படுத்தி அந்த வேலையை முடிப்பதற்குள் வேறு யாராவது வந்து நிற்பார்கள்.
முன்பெல்லாம் கவனித்தது கிடையாது. ஆனால் சமீபகாலமாக இந்தக் குறுந்தாடியுடன் இருக்கும் சமயங்களில் அத்தனை குறுக்கீடு இல்லை என்பதை கவனித்தேன். சும்மாவே உட்கார்ந்து மோட்டுவளையைப் பார்த்து தாடியை தடவிக்கொண்டிருந்தாலும் தங்கமணி உள்பட அனைவரும் ஏதோ சிந்தனையில் இருப்பதாக நினைத்து, தொந்தரவு செய்வதில்லை.
அதிலும் அலுவலகத்தில், நீங்க பிசியா இருக்கீங்க போல... நேரம் கிடைக்கும்போது இந்த வேலையை கொஞ்சம் முடிச்சுக்குடுங்க என்கிற ரேஞ்சுக்கு இருக்கிறது இந்த குறுந்தாடி ரெஸ்பான்ஸ். உயரதிகாரிகளாக இருப்பவர்கள் பெரும்பாலானோர் ஏன் இப்படி குறுந்தடியுடன் இருக்கிறார்கள் என்று இப்போதுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
என்றேனும் ஒருநாள் முகம் மறைக்கும் மீசை தாடியுடன் உங்கள் வாசற்கதவின் பின்ஹோல் லென்ஸ் வழியாக யாராவது தென்பட்டால், அது நானாக இருக்க வாய்ப்புள்ளது..
குறிப்பு: வீட்டிற்குள் வந்தபிறகு ஒட்டுதாடியா என சந்தேகித்து இழுத்துப்பார்க்க வேண்டாம்.
Comments
Post a Comment