ஏர்போர்ட்

எப்போதுமே பல உணர்ச்சிமயமான நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் இடம் எனக்கு தெரிந்தவரையில் ஏர்போர்ட். எத்தனை சுவாரஸ்யங்கள் ஏக்கங்கள் பிரிவுகள் கண்ணீர்கள் பாசப்பிணைப்புகள் கோபங்கள் துக்கங்கள் சிரிப்புகள் வரவேற்புகள் வழியனுப்புகள் இன்னும் சில பல புகள் கள் ள் ள் ள் ள்...


அலுவல் விஷயமாக ஊருக்குப் போயிருக்கும் அப்பாவை வரவேற்க காத்திருக்கும் குட்டிப்பெண்ணின் கண்களில் இருக்கும் தவிப்பு, உள்ளத்திலிருக்கும் பாசம், தனக்கு என்ன வாங்கிவருவாரோ என்ற அந்த ஏக்கம்..

நண்பனை/நண்பியை உற்சாகமாக கட்டியணைத்து வரவேற்று காதோரம் ஏதோ ஏடாகூட ஜோக்கை சொல்லி கொல்லென சிரிப்பை சிதறிவிட்டு.. பார்க்கும் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்..


காதலியை வழியனுப்ப வந்தவனின் கண்களில் இருக்கும் அந்த ஏக்கம்.. வரவேற்க வந்தவன், இந்த நொடி வருவாளா அடுத்த நொடி வருவாளா என காத்திருக்கும் கண்களில் இருக்கும் தவிப்பு

கல்யாணத்திற்கு பிறகு உற்சாகமாக மனைவியை வழியனுப்பி வைக்கும் கணவனின் உடல்மொழி.. ஆனால் சோகமாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் முகம்.. அதுவே திரும்பிவரும் மனைவியை வரவேற்க உற்சாகமாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் முகம், இன்னும் கொஞ்ச நாள் ஊர்ல இருந்துட்டு வரலாமே என்பது போல சோகமான உடல்மொழி..



அதிலும் குழந்தைகள் இருந்தால் ஒரு மாதிரி குழப்பமான மனநிலையில்.. மனைவியும் குழந்தைகளும் போகும்போது மனைவியை ஊருக்கு அனுப்பும் சந்தோஷமும் குழந்தைகளை பிரியும் துக்கமும், திரும்பிவரும் குழந்தைகளைப்  பார்த்து குதூகலமும், மனைவியைப் பார்த்து பீதியும் என கலந்துகட்டின உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்கும் கணவனுக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்..

மனைவியோ ஊருக்குப்போகும் சந்தோஷம் இருந்தாலும், கணவன் தனிமையில் இனிமையாக ஏகாந்தம் அனுபவிக்கப் போவதை நினைத்து கடுப்புடனும், திரும்பி வரும்போது தன் அப்பா அம்மாவைப் பிரிந்த சோகமும் கணவனைப் பந்தாடப்போகும் உற்சாகமும்.. 

சரி கதைக்கு வருவோம்.. நம் நண்பருடைய "ப்ரிய சகி"யின் அப்பா அம்மா வருகிறார்கள்.. அதுவும் முதல் முறையாக.. இதற்காக நம் நண்பர் செய்திருக்கும் வேலைகள் எல்லாம் வேற லெவல்.. நாம் கற்றது கையளவு கூட இல்லை.. இல்லவேயில்லை.. என்று எந்தக் கோவிலிலும் உங்கள் கையில் கற்பூரமேற்றி சத்தியம் செய்வேன்.

கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப்போனேன் என்று அப்பு பாடுவது போல, ஒரு சாதாரண வியாழக்கிழமையில் மழை கொட்டப்போகும் அறிகுறி தெரிந்துகொண்டு அதுவும் இலங்கையில் கொட்டப்போகும் மழையை பஹ்ரைனிலிருந்து கணித்து, Srilankan Airlines-ல் வருகை  டிக்கெட். ஜெட் புட்டுக்கும் என்று தெரிந்து திரும்புகால் டிக்கெட் இவர் புக் செய்த ஒரே மாதத்தில் அனைத்து சேவைகளும் ரத்து செய்தது JetAirways.


வெதர்மேன் கணிப்புகளையும், இந்தியப் பொருளாதார கடந்தகால நிகழ்கால எதிர்கால தரவுகளை எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒருவரால் மட்டுமே இப்படி டிக்கட் போட முடியும்.

இதையெல்லாம் தாண்டி அவர்கள் வந்துவிட்டால்.. வந்தேவிட்டால் என்ன செய்வது என்று யோசித்து முன்னேற்பாடாக அலுவலகத்தில் சொல்லி தனக்கு ஒரு வாரம் ட்ரிப்.. அதுவும் கண்ணிற்கு குளிர்ச்சியாக இருக்கும் Amsterdam-க்கு போடச்சொல்லி சாம பேத தான தண்டம் என எல்லா யுக்திகளையும் பயன்படுத்தவேண்டிய இடத்தில் சரியாகப் பயன்படுத்தி, எஸ்கேப்...

கபாலி படம் வெளியானபோது கலைப்புலி தாணு செய்த விளம்பர யுக்திகளை MBA மாணவர்கள் இப்போதும் ஆராய்ச்சிக்காக பயன்படுத்துகின்றனர்.. அது போல நம்ம இவரது யுக்திகளை கலியின் கொடுமையால் காலச்சக்கரத்தின் அடியில் சிக்கித்தவிக்கும் பாவப்பட்ட ஜென்மங்களான ஆண் வர்க்கத்தினர் பயன்படுத்தி ஜென் நிலையை அடைந்து மகிழ்வுற்றிருக்க வேண்டும் என்பதே என் அவா..

மேலே சொன்ன ஏர்போர்ட் விவரிப்புகள் எல்லாம் நம் நண்பரின் மாமனார் மாமியாரை வரவேற்க சென்றிருந்தபோது கண்ட காட்சிகளேயன்றி வேறில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நண்பர் திரும்பிவந்த இந்த இரண்டு நாட்களாகவே அவர் வீட்டில் வறண்ட வானிலை நிலவுகிறது. அவ்வப்போது பயங்கர இடி மின்னலுடன் கூடிய மழை "கொட்டும்" சத்தம் மாடியில் எங்கள் வீடு வரைக்கும் கேட்கிறது..

மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்...

Comments

  1. மேலே சொன்ன ஏர்போர்ட் விவரிப்புகள் எல்லாம் நம் நண்பரின் மாமனார் மாமியாரை வரவேற்க சென்றிருந்தபோது கண்ட காட்சிகளேயன்றி வேறில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
    Excellent. Both Arrival and Departure lounge described very well...
    Keep it up. ...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2