திருவத்திமாமலை

ஆகஸ்ட் 13ம் தேதி. அதிகாலை 2.20 மணி. ஏற்கனவே 2 நாட்களாக சரியான தூக்கம் இல்லாததால் சிவந்த கண்கள் தகதகவென எரிய, பொருட்படுத்தாமல் காரில் கிளம்பினோம் நானும் அப்பாவும். கொஞ்சம் பழங்கள், 3-4 பாட்டில் தண்ணீர். பழங்களை அப்பா எடுத்துக்கொண்டார். தண்ணீர் பாட்டில்களை Backpack-ல் நான் எடுத்துக்கொண்டேன்.

கியூவில நிப்போம். 10 மணி வரைக்கும் பாப்போம். ஸ்வாமி பாக்க முடியம்-ங்கற மாதிரி இருந்தா நிப்போம். 7-8 மணி நேரத்துக்கும் மேல ஆகும்-ங்கற மாதிரி இருந்தா, கிளம்பிடுவோம் என்று பேசிக்கொண்டு கிளம்பினோம். ஏனென்றால் முந்தைய நாட்களில் இருந்த கூட்டத்தின் எஸ்.டி.டி அப்படி.

3 மணிக்கு காஞ்சியை அடைந்துவிட்டோம். பச்சையப்பாஸ் பார்க்கிங்-ல் தான் இடம் உள்ளது. வேறெங்கும் இடமே இல்லையென்பதால், அந்த நேரத்திலும் காவல்துறை கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தது. VIP, VVIP, அமைச்சரோட அத்தை பேரனுக்கு ஆயாவோட சித்தி பொண்ணு ரேஞ்சுக்கு யார் வந்தாலும், ஒரே பதில் - Turn Left (பச்சையப்பாஸ் பார்க்கிங்).

உள்ளே போனால், போய்கிட்டே இருக்கு.. எங்க வண்டிய நிறுத்தறதுன்னே தெரியாம தேடி, 30 நிமிஷம் சுத்தி, கடைசில வாஸ்து எல்லாம் பாத்து ஒரு இடமா நிறுத்தினார் டாக்ஸி நண்பர். அவரையும் வரச்சொல்லி கேட்டேன். மறுநாள் குடும்பத்துடன் போவதாக பிளான் இருப்பதாகச் சொல்லி மறுத்துவிட்டார். நாங்கள் இருவரும் நடக்க ஆரம்பித்த 5 நிமிடத்தில் கியூ தென்பட்டது. இருந்தாலும் அதில் நிற்காமல் சைடில் சென்று சீனியர் சிட்டிசன் வழி எதுவும் இருக்குமா என்று சென்றோம்.

இருபது முப்பதடி அடி தூரம் தான் நடந்திருப்போம். அங்கே ஒரு போலீஸ். அவரைத்தாண்டி ஒருவரையும் அனுமதிக்கவில்லை. சார், சீனியர் சிட்டிசன் கியூ.. என்று கேட்டதற்கு, இந்த கியூ-ல நில்லுங்க சார். கோவிலுக்குள்ளே போனப்பறம் தான் சீனியர் சிட்டிசன் கியூ எல்லாம். அவங்களே பாத்து அனுப்பிடுவாங்க என்றார்.

மீண்டும் வந்து நிற்பதற்குள், நாங்கள் பார்த்ததை விடவும் இன்னும் 10 அடி கியூ பின்னால் வளர்ந்திருந்தது. கட்டியிருக்கும் கம்புகளையெல்லாம் கடந்து வந்து நிற்பதற்குள் இன்னும் பத்தடி வளர்ந்துவிடும் என்பதால், கட்டைகளுக்குள்ளே புகுந்து ஜோதியில் ஐக்கியமானோம். மணி 3.45. எங்கள் பக்கத்தில் செல்வம் ஹார்டுவேர் என்ற கடை இருந்தது. அரைமணி நேரம் கியூ நகரவேயில்லை. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தது. 5-10 நிமிட இடைவேளைக்கு ஒருமுறை என்ற கணக்கில் நகர்ந்தது. அரைமணி கழித்து திரும்பிப் பார்த்தால், அதே செல்வம் ஹார்டுவேர் கடைக்கு கொஞ்சமே கொஞ்சம் தான் தள்ளி நின்றுகொண்டிருந்தோம். இது வேலைக்காகாது என்று தோன்றியது. ஆனாலும், 10 மணிவரை பார்க்கலாம் என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தபடியால் தொடர்ந்து ந(ட)கர்ந்தோம்.


வாகன நெரிசலுக்கு Bumper to Bumper என்ற சொலவடை இருப்பது போல, கூட்ட நெரிசலுக்கு ஏதாவது இருந்தால், அதைவிடவும் நெறுக்கித்தள்ளி நின்றுகொண்டிருந்தோம். வெயில் இல்லாததால், அத்தனை ஒன்றும் வியர்க்கவில்லை. கூட்ட நெரிசலால் கொஞ்சம் கசகசப்பாக இருந்தது.

4.30 வாக்கில் வரிசையின் இருபக்கமும் ஆங்காங்கே பக்கத்திற்கு ஒருவர் என, 15-20 அடி இடைவெளிக்கு இருவர் என்ற கணக்கில் போலீஸ் நின்றனர். கூட்டத்தின் குறுக்கே அப்படியே பெரிய சவுக்கு கட்டைகளை வைத்தார்கள். கிட்டத்தட்ட கேட் போல வைத்து கும்பல் கும்பலாக ஏரியா பிரித்தார்கள். குடும்பமாக, நண்பர்களாக வந்திருந்து ஏரியா பிரிந்தவர்கள், உடனே அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

ஒரே ஒரு பெண்மணி முன்னிருந்த கும்பலில் சிக்கிக்கொண்டார். அவரது குடும்பம் கிட்டத்தட்ட 7-8 பேர் அடுத்த கும்பலில். அவர் மட்டும் பிந்தைய கும்பலுக்கு வந்து சேர்ந்திருக்கலாம். ஆனால், போலீசிடம் நாங்க ஒண்ணா வந்தோம் ரெண்டா வந்தோம் என்று சொல்லி சொல்லியே, மொத்தக் குடும்பத்தையும் தனது கும்பலுடன் சேர்த்துக்கொண்டு அராஜகம் பண்ணினார்.


சுமார் 6.30 மணி இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக கியூ நகர்ந்தது. இப்போது ஒரு பெரிய ஷெட் போடப்பட்டு அதனுள் கூட்டத்தை திருப்பி விட்டார்கள். ஷெட்டுக்குள், கட்டைகளை வைத்து கூண்டு போல கட்டிவைத்திருந்தனர். எப்படியும் 20 கூண்டுகளாவது இருக்கும். கூண்டுக்கு ஒரு போலீஸ் கணக்கிலும், ஷெட்டுக்குள்ளும் சுற்றியும் போலீஸ் இருந்தனர்.

கூண்டுக்குள், அடுத்த கூண்டுக்குப் போகும் வழியின் பக்கத்திலேயே கால்ப்பகுதி இடத்தில் அனைவரும் முண்டியடித்துக்கொண்டு நின்றனர். முக்கால் பகுதி கூண்டு காலியாக இருக்கும். முதல் கூண்டு காலியானவுடன், 2வது கூண்டு கும்பலை அங்கே விடுவார்கள். இப்போது 2வது கூண்டிற்கு 3வது கும்பல் என வரிசைப்படுத்தியிருந்தனர். ஆனால் மக்கள் கூட்டமோ, ஒரு கூண்டிலிருந்து அடுத்த கூண்டுக்குப் போகவே, இடித்தும் தள்ளியும் ஓட்டமாக ஓடினார்கள். எவ்வளவு சொல்லியும் ம்ஹ்ம்.. மந்தைகளாகவே மாறியிருந்தனர். முதுகும் தோள்களும் லேசாக வலியெடுக்க ஆரம்பித்தன.

ஓடும்போது யாரோ அப்பாவின் காலை மிதித்து, சுண்டுவிரல் தோல் கழண்டு, ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் வலியையும் எரிச்சலையும் பொருட்படுத்தாது நடந்தார். ஷெட்டின் மூலையில், முதல் கூண்டின் பக்கத்தில் போலீஸ்காரர் ஒருவர் மைக்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பாகப் பேசினார். ஓடவேண்டாம்.. நிதானமாக வரவும்.. குழந்தைகளை ஜாக்கிரதையாக கூட்டிக்கொண்டு போங்கள்.. என எவ்வளவோ சொல்லிக்கொண்டிருந்தார்.. ஆனால் மந்தைகளின் மண்டையில் ஏறவேயில்லை.


7.30 வாக்கில் கூண்டு ஷெட்டை விட்டு வெளியே வந்து, அடுத்த கியூவில் நின்று நகர்ந்தோம். கோவில் கோபுரம் தென்பட்டது. கொஞ்ச தூரத்தில் கிழக்கு வாசல் வந்துவிட்டது. ஆஹா.. உள்ளே போகப்போகிறோம் என்று நினைத்த எங்களுக்கு, வார இதழ்களில் பாட்டி வீட்டுக்குப் போக சிறுவனுக்கு உதவுங்களேன் என்ற தலைப்பில் போடப்பட்டிருக்கும் இடியாப்ப சிக்கல் கோட்டோவியத்துக்குள் நாம் நுழையப்போகிறோம் என்று அப்போது தெரியவில்லை.

சரியாக கிழக்கு கோவில் வாசலில், Turn Left ஆகி, நடந்தோம் நடந்தோம். பிறகு  Turn Right ஆகிநடந்துகொண்டேயிருந்தோம். வழியில் ஒரு இடத்தில தொடங்கி மீண்டும் கும்பல். ஆனால் இங்கே முறைப்படுத்தப்படாமல் செம்ம கூட்டம். நாங்கள் அவர்களையும் கடந்து  தெற்கு கோபுரம் வரை நடந்து, மிகப்பெரிய கும்பலுக்குப் பின்னால் இணைந்துகொண்டோம். போலீஸ்காரர்கள் யாரும் இல்லை. திடீர் திடீரென கூட்டம் நகரும். 3 அடிதான். அதற்கு மேல் கிடையவே கிடையாது. ஆனால் ஒரே தள்ளுமுள்ளு தான். இதில் இடைச்செருகலாக வேறு சிலர் நுழைந்தனர். அதற்காக சிலபல சலசலப்புகள். சலம்பல்கள்.

8 மணிக்கு 8-10 பேர் கொண்ட போலீஸ் குழு வரிசையாக முன்னும்பின்னும் அதிவேகமாக நடந்து போனார்கள்.. வந்தார்கள்.. ஆனால் கூட்டத்தை முறைப்படுத்த எதுவும் செய்யவில்லை. 8.30 மணியளவில் மீண்டும் வந்து, கூட்டத்தின் 2 பக்கத்திலும் பக்கத்திற்கு ஒருவராக நின்று கயிறு பிடித்து கூட்டத்தை கும்பல் கும்பலாக பிரித்தனர். அதற்குப் பிறகு தான் ஓரளவுக்கு தள்ளுமுள்ளு குறைந்தது. பணியில் இருந்தது பெரும்பாலும் சிறுவயது காவலர்கள்.. கொஞ்சம் வயதானவர்கள் கும்பலாக இருந்தனர் தவிர, கூட்டத்தை கட்டுப்படுத்த வரவில்லை.


 9 மணியளவில் மீண்டும் அதே கிழக்கு கோபுரத்தின் வழியாக கோவிலுக்குள்ளே நுழைந்து விட்டோம். இதற்குள், அப்பாவின் பையிலிருந்த வாழைப்பழங்கள் நசுங்கி பஞ்சாமிருதமாகி பை வழியாக ஜுசே சொட்டத்தொடங்கியது. ஆனால், குப்பைத்தொட்டி ஒன்றும் கண்ணில் படாததால் அதையும் சுமந்துகொண்டே நகர்ந்தோம்.

கோவிலுக்குள் நுழைந்தவுடன், இடதுபக்கம் மீண்டும் ஒரு பெரிய ஷெட். அதற்குள் கூண்டுகள்.. சரியாக நாங்கள் கூண்டுக்குள் நுழையும்போது ஒரு போலீஸ்காரர் அப்பாவின் காலைப் பார்த்துவிட்டு, நீங்க இந்த கியூவில் போங்க என்று சொல்லி, அந்த ஷெட்டுக்குள் நுழைவதிலிருந்து காப்பாற்றினார். அந்தக் கூண்டுகளுக்குள் போயிருந்தால் கண்டிப்பாக 1-2 மணிநேரம் மேலும் லேட்டாகியிருக்கும்.

கொஞ்ச தூரம் நடந்தோம். கியூ இடதுபக்கம் திரும்பியது. 3 பிரிவாக கட்டைகள் கட்டி வரிசைப் படுத்தியிருந்தனர். இடது பக்கத்தில் ஸ்வாமி தரிசனம் நன்றாக இருக்கும் என்பதால், செம கூட்டம். நாங்கள் வலது பக்கத்துக்கு கியூவிலேயே நின்றோம். அருகில் இருந்தவர், அப்பாவின் காலைப் பார்த்துவிட்டு, பக்கத்தில் நின்றிருந்த போலீஸிடம் சொன்னார். அவர் எங்கள் இருவரையும் வெளியில் அழைத்து, நேரா போங்க. சீனியர் சிட்டிசன் கியூ வரும்.. அதுல போயிருங்க என்று அனுப்பிவைத்தார். அதிகாலை 3.45-க்கு கேட்ட சீனியர் சிட்டிசன் கியூ, கொஞ்சம் லேட்டாக 9.45-க்கு கிடைத்தது. இடைப்பட்ட 6 மணி நேரம்.. மந்தைகளின் படுத்தலால் ஐயோ அம்மா ரேஞ்சுக்கு இருந்தது.

ஒருவழியாக வசந்தமண்டபம் கண்ணில் பட்டது. உடனே அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.. வயசுக்கு எல்லாம் மரியாதை தரமாட்டாங்க.. இழுத்து தள்ளிருவாங்க. ஜாக்கிரதையா வாங்க. அதே சமயம், ஸ்வாமி பக்கம் மட்டுமே பாருங்க. வேற எங்கயும் பாக்காதீங்க. அப்பறம் இவ்வளவு நேரம் நின்னது வேஸ்ட் ஆகிடும், என்று. கத்திப்பாரா Flyover மாதிரி கன்னாபின்னாவென Ramp போட்டு வைத்திருந்தார்கள். எல்லாவற்றிலும் கூட்டமோ கூட்டம்.

ஒருவழியாக மண்டபத்திற்குள் ஏறிவிட்டோம். சீனியர் சிட்டிசன் கியூ என்பதால், கொஞ்சம் உயரமாக மேடை போல அமைத்திருந்தார்கள். எண்ணி நாலே செகண்ட் தான். இழுத்து வெளியே தள்ளிவிட்டார்கள்.


அந்த நாலு செகண்ட் பார்த்த அனுபவம்.. அடுத்த 40 வருடம் தாங்கும். தலை முதல் மார்பு/இடுப்புவரை மட்டுமே தரிசனம் கிடைத்தது. எங்களுக்கு முன், வேறு பக்கத்திலிருந்து வந்த கியூ இருந்ததால் சீனியர் சிட்டிசன் தரிசனம் அவ்வளவே தெரியும். ஆனாலும் அந்தப் பரவசம்.. இன்னதென்று விவரிக்க முடியாது. அத்திகிரி பாசுரம் ஒன்றுகூட ஞாபகம் வரவில்லை.. "அத்தா உன்னை அறிந்துகொண்டேன்.. உனக்கஞ்சுவன் அம்மம் தரவே" என்ற பாசுரம் மட்டும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது.

சேவித்து முடித்து வெளியே வருவதற்கும் கியூ.. ஆனால் இது சீக்கிரம் நகர்ந்தது. வெளியே வந்தவுடன் ஆளாளுக்கு கையில் செல்லை வைத்துக்கொண்டு வழியை மறைத்துக்கொண்டு கோபுரத்துடன் செல்பி எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களையும் தாண்டி அஹோபிலமடத்தில் நுழைந்து முகம் கைகால் அலம்பியபிறகு பாதி தெம்பு வந்தது. வயிறார சாப்பிட்டபிறகு தான் கண்ணே பளிச்சென தெரிந்தது. மணி 11 ஆகியிருந்தது. 7 மணி நேரம் காத்திருந்து 4 நொடி தரிசனம்..

2059... Varathan... I'm (Varathan) waiting..


Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2