விக்ரம் வேதா(ளம்)

அவர் பெயர் முருகனடிமை. அசந்தர்ப்பமான சமயங்களில் (கொட்டாவி விடுவது மாதிரி) நம்மையும் மறந்து அப்பா, அம்மா, கடவுளே.. என்று சொல்லுவோம். இவர் அப்படி சொல்லும் வார்த்தை - முருகா.

மதுரை பூர்வீகம் என்பதாலோ என்னவோ கொஞ்சம் கள்ளழகரின் காற்று பட்டு, சமயங்களில் வீர வைணவராகவும் இருப்பார். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் முருகனடிமையே. மற்றபடி தானுண்டு வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் பாவம், நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போலத்தான் வாழ்க்கை. பிரச்சனைகளைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டும், பயத்தையே பசிக்கு உணவாகவும் சாப்பிட்டும் காலம் கடத்துபவர்.


ஒரு சமயம் ஒரு இடத்திற்குப் போக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தப்பறம், இப்படியெல்லாம் நேரா போகவேண்டிய இடத்துக்கு டயத்துக்குப் போயிட்டா நம்ம மானம் மருவாதை என்னாகிறது-னு நினைச்சு, வேற பஸ்ஸில ஏறி சம்பந்தமே இல்லாத இடத்துக்குப் போயி, அதுக்குள்ள எல்லாரும் எங்க இருக்கீங்க எப்போ வருவீங்க-ன்னு 7-8 தடவை போன் பண்ணி சுமாரா ஒன்னரை மணிநேரம் லேட்டா போனதுக்கு அப்பறம்தான் இவருக்கு நிம்மதியா தூக்கமே வந்துச்சு. இது சும்மா சாம்பிள் தான்..

இவர் போகும் இடத்திற்கு பிரச்சனை வருமா, அல்லது பிரச்சனை இருக்கும் இடமாகப் பார்த்து பார்த்துதான் இவர் போவாரா என்று டவுட்டே யாருக்கும் வராத அளவுக்கு மெயின்டெய்ன் பண்ணுவதில் கில்லாடி. நாமெல்லாம் பிரச்சனையிலிருந்து தப்பிக்க ரிஸ்க் எடுப்போம். இவரோ, பிரச்சனை வரவேண்டும் என்பதற்காகவே ரிஸ்க் எடுக்கும் ரகம். பொழுதுபோகாமல் சும்மாயிருக்கும் சமயங்களில், யாருக்காவது ஏதாவது பிரச்சனை இருந்தா இந்தப்பக்கம் கொஞ்சம் பார்வேர்டு பண்ணுங்கய்யா என்று அவரே கேட்டு வாங்கிக்கொள்வார். கேட்கும்போதே பீதியாகும் பிரச்சனைகளைக் கூட பக்காவாக மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டு போவார்.

சமீபத்தில் தூரத்து சொந்தக்காரர் ஒருவரைப் பார்த்திருக்கிறார். பெயர், அரைச்சொல் ஆறுமுகம் (சுருக்கமாக அ ஆ). பெயரைப் பாத்ததுமே ஹெவியா அட்ராக்ட் ஆகிட்டாப்ல முருகனடிமை. பேசி முடிச்சோமா பாண்டிச்சேரி போனோமா-னு இல்லாமல், வாண்டடா போயி "இந்தப் பக்கமா வந்தீங்கன்னா வீட்டுக்கு வராம போகக்கூடாது" என்று சொல்லியிருக்கிறார் போல.


ஒருநாள் மெய்யாலுமே வந்துவிட்டார் அ ஆ. ஹய்யா ஆறுமுகம்.. வந்துட்டியா வந்துட்டியா.. நீ நெசமாவே வந்துட்டியா ரேஞ்சுக்கு புளகாங்கிதமாகிவிட்டார் முருகனடிமை. சரி சரி.. இங்க விருந்தும் மருந்தும் 3 நாள் தான் என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டார்.. ஆனால் அ ஆ "இங்கதான் விருந்தும் மருந்தும்" என்று புரிந்துகொண்டார் போல. முருகனடிமையின் திருவிளையாடல் ஆரம்பமானது. அ ஆ-வின் திருவிளையாடல் என்றுதானே இருக்கவேண்டும் என்று நீங்க நினைப்பது எனக்கே சத்தமாக கேட்கிறது.

வந்த நாள் தொடங்கி அ ஆ சட்டாம்பிள்ளை ரேஞ்சுக்கு அலப்பறை செய்ய ஆரம்பிக்க.. இதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி ரேஞ்சுக்கு டீல் செய்தார் முருகனடிமை. எவ்வளவு அடிச்சாலும் தங்குவான் என்று தெரிந்துகொண்ட அ ஆ, வேதாள வேஷம்போட்டு முருகனடிமையின் முதுகில் ஏறிக்கொண்டார். அதுமுதல் பேருக்கேத்தா மாதிரி அரைச்சொல்லா சொல்லிக்கிட்டே இருந்திருக்காரு அ ஆ.

அதுவரைக்கும் ஒத்தையடுப்புல சமைச்சுட்டு இருந்த முருகனடிமை, விருந்தாளிக்கு சேத்து சமைக்க பெரிய அடுப்பு ஆர்டர் பண்ணிருக்காரு. காஸ் கனெக்ஷன் வந்திருச்சு.. எல்லாம் செக் பண்ணிட்டு ஓகே சொல்லிட்டு போயிட்டாங்க. அ ஆ வந்து கையைப் பின்னால கட்டிக்கிட்டு சூப்பர்வைசர் ரேஞ்சுக்கு ஒரு லுக் விட்டுட்டு.. அடடே அடுப்பெல்லாம் வந்திருக்கு போல-னு சொல்லிட்டு போயிட்டாரு. அடுத்த அரைமணி நேரத்துல, புத்தம்புது டியூப் ஓட்டையாகி காஸ் லீக்காகி மரணபீதியாகி அடிச்சுப்புடிச்சு ஆளைக் கூப்பிட்டு சரி பண்ணிருக்காரு முருகனடிமை. லைட்டா பயந்துட்டாலும் வெளிக்காட்டாம சமாளிச்சிருக்காரு.


மறுநாள் புது அடுப்புல சமைச்சு சாப்பிடும்போது அ ஆ, அடடே சாப்பாடு பிரமாதம்-னு சொல்லிருக்காரு. புகழ்ச்சியில குளுந்து போன முருகனடிமை, மூஞ்சியை சிரிச்சா மாதிரி வெச்சுக்கிட்டே ஆபீஸ் போயிட்டாரு. அடுத்த அரைமணிநேரத்துல வயித்துவலி ஆரம்பிச்சு, சொல்லவும் முடியாம போகவும் முடியாம துடியா துடிச்சு சாயங்காலம் வரைக்கும் யார் வந்து என்ன கேட்டாலும் மூஞ்சி-ல எந்த ரியாக்ஷனும் காட்டாம ஒரு மாதிரியா சமாளிச்சு, வீட்டுக்கு வந்தவுடனே போனவர் தான்.. சுமார் ஒரு ஒருமணி நேரமா போனதுக்கு அப்பறம் தான் கண் பளிச்சுனு தெரிஞ்சிருக்கு.

ரெண்டுபேரும் வெளியில எங்கயோ போறதுக்காக டாக்ஸி தேடிருக்காங்க. ஒருத்தர் வந்து கேட்டிருக்காரு. பேரம் பேசி படியாம, நீங்க நடந்து போங்க-னு சொல்லிட்டு கோவமா டாக்ஸியை கிளப்பிட்டு போயிட்டாரு. அ ஆ எங்களையா ஏத்திக்காம போற.. அப்படியே போயி தண்ணி லாரி-ல முட்டிக்கோ-ன்னு யதார்த்தமா சொல்ல, அந்த ஊர்ல தண்ணி லாரி-ல்லாம் இல்லததால, டாக்ஸி டயர் புஸ்ஸுன்னு பதார்த்தமா பஞ்சராயிடுச்சு. இதைக் கண்கூடாப் பாத்த முருகனடிமை டரியலாட்டாரு.


அதுலருந்து அ ஆ-கிட்ட பட்டும்படாம பேசி ரொம்ப பதவிசா நடந்துக்க ஆரம்பிச்சாரு முருகனடிமை. எல்லாம் பஞ்சர் காட்டிய மரணபயம் தான். தான் ஏதாவது பேசப்போயி அவர் பேச்சோட பேச்சா சாபம் கொடுத்துட்டா என்ன பண்றது-ன்னு பயம் வந்திருச்சு. மொதமொதலா பிரச்னையைப் பாத்து பயப்பட்டார் முருகனடிமை. இப்படியாக பேதியும் பீதியுமாக கொஞ்ச நாட்கள் "கழிஞ்சது".

அ ஆ-வோட பவர் அரசல் புரசலா தெரிஞ்சு, தானே கண்கூடாப் பாத்து எல்லாம் நடந்ததுக்கு அப்பறம், நீங்க கிளம்பிடுங்க.. அதுதான் உங்களுக்கும் நல்லது.. எனக்கும் நல்லது-ன்னு சொல்லவே சொல்லிட்டாரு. ஆனா அங்கதான் டிவிஸ்ட். நானாவா வந்தேன்.. நீ தானே கூப்பிட்ட.. இப்போ போ-ன்னு சொல்ற.. அதெல்லாம் முடியாது. நான் இங்கதான் இருப்பேன்-னு கறாரா சொல்லிட்டாரு. அவரை வெளிலயும் அனுப்ப முடியாம, கூட வெச்சுக்கவும் முடியாம தவியா தவிச்சு, கடைசில இவர் வீட்டை விட்டு வெளியில போயிட்டாரு. காலையில கோழி கூவும்போது கிளம்பினா ராக்கோழி கூவும்போது தான் திரும்ப வீட்டுக்கு வருவாரு முருகனடிமை. அ ஆ-வை இவர் அவாய்ட் பன்றாராமா... என்ன கொடுமை சரவணன் இது???

ஆனா  அ ஆ அசரவேயில்லை.

தொடரும்...


என்னய்யா பரபரப்பான கட்டத்தில் கிளைமாக்ஸ் வரும்-னு பாத்தா தொடரும்-னு போடறீங்களே-னு நீங்க நினைக்கறதும் எனக்கு கேக்குது. அ(ட) ஆ(மாங்க)..  தொடரும்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2