பாகுபலியின் கதறல்

இன்று காலை பெரியவனுக்கு 5 வயதிற்கான தடுப்பூசி போடச் சென்றோம். இதுதான் முதல்முறை ஹெல்த் சென்டரில் (சிறிய அரசு மருத்துவமனை) அவனுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதனால் 7 மணிக்கே வரச்சொல்லி பதிவு செய்துவிட்டார்கள். நேற்றிரவு தூங்க 12 மணியாகிவிட்டதால் எழுப்பவே பெரும்பாடு பட்டோம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை...

கொஞ்சம் தாஜா கொஞ்சம் மிரட்டல் உருட்டல் என்று ஒருவழியாக எழுப்பி பல் தேய்த்து பாலை குடிக்கவைத்து ஹெல்த் சென்டருக்கு கிளம்பினோம். கூப்பிடு தூரம் தான் (அவரவர் சக்திக்கேற்ப சத்தமாக கூப்பிடலாம். யாரை என்பது அவரவர் விருப்பம்). அதனால் நடந்தே சென்றோம். உள்ளே செல்லும்போதே "எதுக்கு இங்க வந்திருக்கோம்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தான். பின் சிலபல கேள்விகள். இதற்குள் நேராக தாய் சேய் நல மையத்திற்கு சென்றோம். பதிவு சீட்டை காட்டியவுடன், வெயிட் பண்ணுங்க. கூப்பிடுவோம் என்றார் அங்கு பணிபுரியும் இந்த ஊர் பெண்மணி.


சென்றமுறை சிறியவனுக்கு தடுப்பூசி போட வந்திருந்தபோது அந்தப் பெண்மணி யாரோ பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டே அவன் பெயரையும் கூறி அழைத்திருக்கிறார். இது வெளியில் அமர்ந்திருந்த தங்கமணிக்கு கேட்கவில்லை போலும். பின்னர் அந்தப் பெண்மணி வெளியில் வந்து இவன் பெயரை சத்தமாகக் கூறி அழைத்திருக்கிறார்.

தங்கமணி குழந்தையோடு எழுந்து அருகில் சென்றதும், 3 முறை பெயரை சொல்லி அழைத்தேனே... உங்களுக்கு கேட்கவில்லையா? என்றிருக்கிறார். தங்கமணி என்னிடம் பேசும் தொனியில் "கூப்டீங்களா.. கேக்கலையே" என்று சொல்லவும் சற்றே கடுப்பாகிவிட்டார் அந்தப் பெண்மணி. கடைசி வரையில் சிடுசிடு தான்.

இம்முறை அப்படி எதுவும் நடக்க கூடாது என்பதற்காக காதை தீட்டி வைத்துக்கொண்டிருந்தார். நல்லவேளை... அந்தப் பெண்மணி பெரியவனை அழைத்தது நல்ல சத்தமாகவே கேட்டது. பணம் கட்டிவிட்டு ரசீதுடன் வரச்சொன்னார். கவுண்ட்டருக்கு சென்றோம். சரியாக 7 தினார் கொடுத்தால் கொடு.. இல்லையென்றால் நடையைக்கட்டு என்று கறாராக சொன்னார் அங்கிருந்த பெண்மணி. 10, 20 என்று இருந்த நோட்டுகளை ஓரங்கட்டி, 1, 1/2 என்று நோட்டும் சில்லறையுமாக வழித்துவாரி 7 தினார் கட்டினோம். அவர் 5ம் நம்பர் ரூமிலிருக்கும் டாக்டரை பார்க்க போகச்சொன்னார்.

நேராக டாக்டரை சந்தித்தாகிவிட்டது. டாக்டர், மீண்டும் தாய் சேய் மையத்திற்கு அனுப்பி, வேறொரு டாகுமெண்ட் பெற்றுவரச்சொன்னார். சென்றால், அந்தப் பெண்மணி "பணம் கட்டிவிட்டு இங்க வாங்கன்னு தானே சொன்னேன்.. எதுக்கு நேரா டாக்டரை பாக்கப் போனீங்க?" என்றார்... ஞே...


வேண்டா வெறுப்பாக பேப்பரை ரெடி பண்ணினார். "நேரா மாடில இருக்கற லேபுக்கு போங்க. டெஸ்ட் முடிச்சுட்டு, 5ம் நம்பர் டாக்டர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இங்க வாங்க" என்றார். மாடிக்கு சென்றோம்.

அங்கு லேப் ரிசப்ஷனில் இருந்தவரிடம் பேப்பரை கொடுத்தேன். 2-3 நிமிடம் நம்பரை மீண்டும் மீண்டும் கம்பியூட்டரில் தட்டிப் பார்த்துவிட்டு, தாய் சேய் மையத்தில் டெஸ்டுக்கு எதுவும் என்ட்ரி போடவில்லை. நீங்கள் நேராக டாக்டரிடம் செல்லுங்கள். டெஸ்ட் தேவைப்பட்டால் டாக்டரே சொல்லுவார். அப்போது மீண்டும் வாருங்கள் என்று சொல்லி, டாக்டரிடம் அனுப்பி வைத்தார்.

"இதுக்குத்தான் சொன்னேன்.. பிரைவேட் க்ளினிக்குலயே ஊசி போட்டுக்கலாம்-னு. நீங்க தான் என்னமோ, இங்க தான் போடணும்-னு கூட்டிட்டு வந்தீங்க. இப்போ பாத்தீங்களா... மேலயும் கீழயும் நடந்தது தான் மிச்சம்" என்றார் தங்கமணி. வரக்கூடாத இந்த இடத்தில சிரிப்பு வந்தது. ஆனாலும், கட்டுப்படுத்திக்கொண்டேன். எதுவும் பதில் பேசவில்லை.

5ம் நம்பர் டாக்டரிடம் சென்றோம். உள்ளே வேறு யாரோ இருந்ததால் காத்திருந்தோம். "அவங்க எப்படிப்பா டாக்டர் ஆனாங்க?" என்று கேட்டான். எனக்கு பதில் சொல்ல அவகாசம் கொடுக்காமல் அவனே "இங்க திங்க் பண்ணி, அவங்க டாக்டர் ஆகிட்டாங்க" என்று தலையை யோசிப்பது போல் தொட்டுக் காட்டி சொன்னான். "சரி, நீ பெரியவன் ஆனதும் என்ன ஆகணும் உனக்கு?" என்றேன். "பாகுபலி மாதிரி ஆகணும்" என்றான். புஷ்டியாக புஜபல பராக்கிரமத்தை சொல்கிறான் என்று நினைத்து, "அதில்லை டா. நீ பெரியவன் ஆனதும் டாக்டரா சயின்டிஸ்ட்டா என்ன ஆகணும்?" என்றேன். அழுத்தம் திருத்தமாக "அதெல்லாம் வேண்டாம். பாகுபலி மாதிரி ஆகணும்" என்றான். தங்கமணியில் ஒரு கணம் சிவகாமி தோன்றி மறைந்தார். நான் எதுவும் பேசவில்லை (சத்தியமாக).


டாக்டரிடம் சென்றோம். அவரோ மீண்டும் தாய் சேய் மையத்திற்கு சென்று ஹீமோகுளோபின் டெஸ்ட் எழுதி வாங்கி, லேபுக்கு சென்று டெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் வரச்சொன்னார். நல்லா சுத்தவிடுறீங்கடா என்று நினைத்து நொந்துகொண்டே நடக்கலானோம். "எவ்வளவு நேரம் தான் நடந்துக்கிட்டே இருக்கறது? எனக்கு இப்போவே ஏதாவது சாப்பிடணும்" என்றான். "5 நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம். போனவுடனே சாப்பிடலாம்" என்றேன். "அதுவரைக்கும் இங்க மெஷின் இருக்கே... அதுல சிப்ஸ் எடுத்துக் குடுங்க" என்றான் பதிலுக்கு. பயபுள்ள பாத்துவெச்சுட்டு வந்து தான் கேக்கவே ஆரம்பிச்சிருக்கான் என்று நினைத்துக்கொண்டு, "கண்டிப்பா எடுத்து தரேன்" என்று சொன்னேன்.

இதற்குள் தாய் சேய் மையம் வந்தாகிவிட்டது. எங்களை பார்த்தவுடன், "லேபுக்கு தானே போக சொன்னேன்.. இங்க எதுக்கு வந்தீங்க?" என்றார் அந்தப் பெண்மணி. "லேபுக்கு போனோம். நீங்க சிஸ்டத்துல எதுவுமே என்ட்ரி போடலையாம் (கண்ணா சிஸ்டம் சரியில்லே). அதான் திருப்பி அனுப்பிட்டாரு" என்று சொன்னேன். கோபமாக ஒரு துண்டு சீட்டை எடுத்து, "Please do refreshment" என்று எழுதி கொடுத்தார். Refresh அதாவது கம்பியூட்டரில் மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்க்கவும் என்பதற்கு பதில் "புத்துணர்ச்சி பெறவும்" என்று எழுதிவிட்டார். இது லேபில் இருந்தவருக்கு சரியாகவே புரிந்தாலும், "எனக்கே வேலை செய்ய சொல்லித்தறீங்களா" என்ற ஈகோ வந்துவிட்டது.

போனை எடுத்து அரபியில் 5 நிமிடம் ஹரபரா பக்ராபுக்ரா. காலகேயர்கள் கண்முன்னே வந்து போனார்கள். "ஏதோ சிஸ்டம் பிரச்னையாம். அதான் அவங்க போட்ட என்ட்ரி இங்க காட்டலை" (நான் சொன்ன "சிஸ்டம் சரியில்லே" இதைத்தான்). "ஹீமோகுளோபின் டெஸ்ட் எடுக்கணுமாம். டோக்கன் எடுத்துக்கொண்டு உட்காருங்க. கூப்பிடுவாங்க" என்றார்.

இப்பத்தான் ஆரம்பமேவா என்று லைட்டாக கண்ணைக்கட்டியது. 10 நிமிட காத்திருப்புக்குப் பின், அழைத்தார்கள். உள்ளே சென்று சேரில் உட்கார வைத்தவுடன் அவனுக்கு புரிந்துவிட்டது. ஏதோ செய்யப்போறாங்க என்று. அழ ஆரம்பித்துவிட்டான். பிளட் டெஸ்டுக்காக ஒருமுறை கையில் ஊசியை ஏற்றி அப்பரசண்டி லேப் அசிஸ்டன்ட் கிண்டிய அனுபவத்தால் வந்த பயம். விரலை பிடித்து, ஒரு ஊசியை டப்பென அடித்தவுடன் சற்றே அழுகை சத்தம் ஜாஸ்தியானது. முதலில் சிறு துளியாக இருந்த ரத்தம், பிறகு அழுத்தத்தினால் பெறுதுளியாகவும், அழுகை இன்னும் ஜாஸ்தி. ஒரு சிறிய Chip எடுத்து, அதில் ஒரு சொட்டு ரத்தம் எடுத்து கம்பியூட்டரில் சொருகினார். கொஞ்சம் பஞ்சை விரலில் வைத்து அழுத்தி பிடித்துக்கொள்ளுமாறு சொன்னார். அவ்வளவுதான். நீங்கள் போகலாம். ரிப்போர்ட் டாக்டருக்கு நேராகப் போய்விடும் என்றார்.

டாக்டரிடம் வந்தோம். இன்னும் அழுதுகொண்டிருந்தான். இன்னொரு சிறுவனும் இதேபோல விரலில் பஞ்சுடன் இருந்ததைக் காட்டி, "பாத்தியா.. அந்த அண்ணா அழறானா? சமத்தா இருக்கான் பாரு" என்று சொல்லி சிறிது நேரத்தில் அழுகை குறைந்திருந்தது. இதற்குள் அம்மாவுடன் சென்று மெஷினிலிருந்து சிப்ஸ் எடுத்துவந்தான். அந்தப் பையனுக்கு ஒரு பாக்கெட் கொடுத்துவிட்டு, இவன் ஒன்று எடுத்துக்கொண்டான். ஹீமோகுளோபின் கொஞ்சம் குறைவாக உள்ளது. ஆனால் பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை. காய்கறி, கீரைகள் நன்றாக சாப்பிடவேண்டும், என்றவாறே தடுப்பூசி போடலாம் என்று கையெழுத்துப் போட்டு கொடுத்தார்.

மீண்டும் தாய் சேய் மையம். 10 நிமிட காத்திருப்புக்கு பின், அழைத்தார்கள். இவன் பெயரை சொன்னவுடனே அழ ஆரம்பித்துவிட்டான். "ஒண்ணுமில்லடா.. சும்மாதான் கூப்பிடறாங்க" என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றேன். "படுக்க வையுங்க" என்று அந்த சிஸ்டர் சொன்னவுடன், மீண்டும் ஊசி பயம்... அழுகை. "Papa hold legs. Mama hold hands" (அப்பா அவனின் காலைப் பிடி.. அம்மா அவனின் கையைப் பிடி) என்றார். அழுகை ஜாஸ்தியானது. ஊசி எடுத்துவந்தார். அழுகை குறைந்து கத்தல் ஜாஸ்தியானது.


சிஸ்டர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. "முட்டி மேல கைவெச்சு நல்லா அழுத்திப் பிடிங்க" என்று என்னிடம் சொல்லிவிட்டு, இடது தொடையில் முதல் ஊசியை சரக்கென இறக்கினார். சத்தம் செம்ம டெசிபலில் சென்றது. 3-5 செக்கண்டில்  குறைந்தது. அவ்வளவுதான் என்று நினைத்திருப்பான். 2வது ஊசியை கையில் எடுக்கவும் கத்தினானே பார்க்கணும்... அப்படியொரு கத்தல். நான் சொன்ன கூப்பிடு தூரம் சரியாக இருக்கும்பட்சத்தில் எங்கள் வீட்டிற்கே கேட்டிருக்கும். மீண்டும் சரக்கென இறக்கினார். இரண்டு தொடைகளிலும் பஞ்சு வைத்து, பேண்டேஜ் ஒட்டினார். "முடிஞ்சுது. போகலாம்" என்றார்.

கிழிறங்கி நிற்கவேயில்லை.. காலைக் கோணிக்கொண்டு "வலிக்குதுப்பா" என்று கதறினான்... கொஞ்சம் என்மேல் சாய்த்துக்கொண்டு தட்டிக்கொடுத்தேன். "ஆச்சுப்பா.. அவ்வளவுதான். அழக்கூடாது" என்றேன். வெளியில் இருந்த சேரில் உட்காரவைத்து ஆசுவாசப் படுத்தினேன். கொஞ்சம் தெம்பானான். அழுகை நின்றபாடில்லை.

சிறிது நேரத்தில் அழுகையினூடே மெதுவாக வீடு நோக்கி நடக்கத் தொடங்கினோம்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2