பட்டர்ப்ளை எபெக்ட் - 2

ICU வெயிட்டிங் ரூமில் மக்களின் சகிப்புத்தன்மையை காணலாம். கணவருக்கோ, மகனுக்கோ, தாய்க்கோ தந்தைக்கோ சிகிச்சைக்காக அட்மிட் செய்துவிட்டு புலம்பும் சொந்தபந்தங்கள் ஒருபக்கம்.. "காபி சக்கரை இல்லாம எனும் ஒருவர்.. இன்னும் 2 இட்லி போட்டுக்கங்க.. நீங்க சாப்பிட்டு தெம்பா இருந்தாதான் அவருக்கு தைரியம் சொல்ல முடியும்.. எனும் ஒருவர்" இந்த மாதிரி காட்சிகள் இன்னொருபக்கம்..

ஒரு பேஷண்டுக்கு பகலில் 2 பேர், இரவில் 1 அட்டண்டர் மட்டுமே அனுமதி. ஆனால் பகலில் வெயிட்டிங் ரூம் நிரம்பி வழியும். இரவில் சில பேஷண்ட்களுக்கு அட்டண்டரே இல்லாமல் இருந்ததும் உண்டு.


அப்பா.. நல்லாத்தான் இருந்தியேப்பா.. திடீர்-னு நெஞ்சுவலி வந்திருச்சேப்பா என ஆபரேஷன் தியேட்டருக்குள் அப்பாவை அனுப்பிவிட்டு அழுது புலம்பும் மகன், வண்டிய மெதுவா ஓட்டுடா-ன்னு தினமும் சொல்லுவேன்.. அந்த ரூட்டுல லாரிங்க வேற கண்ணுமண்ணு தெரியாம ஓட்டுவானுங்க.. எப்படியாவது என் புள்ளையா காப்பாத்து கடவுளே எனப்புலம்பும் தாய், ICU-விற்கு உள்ளே போய் தன் கணவரைப் பார்த்துவிட்டு வரும்போதெல்லாம் அழும் அந்த யாரோ ஒருவருடைய மனைவி,

அப்பாவுக்காக இரவு ஹாஸ்பிடலில் தங்கப்போகும் மகனுக்கு, ஸ்டீல் சோபாவை மெத்தையாக்கிய அம்மா, கமலா இறந்துட்டாங்க என்று சொல்லி அவரது கணவரை உள்ளே அழைத்துச்செல்ல, இறந்தது வேறொரு கமலா என்று தெரிந்து கொஞ்சம் நிம்மதியாகி ஆனாலும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராத அந்த கமலாவின் கணவர்,

ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து, ஜெனரல் வார்டிற்கு மாற்றி, அன்று இரவே மீண்டும் உடல்நிலை சரியில்லாது போக, மீண்டும் ICU-விற்கு கொண்டுவந்து சிகிச்சை செய்வதற்குள் இறந்துவிட்ட அந்த நபர், நல்லாத்தான் இருந்தாரு.. நீங்க தான் கொன்னுட்டீங்க என ஹாஸ்பிடல் நிர்வாகத்தின் மீது போலீசை அழைத்துவந்து பஞ்சாயத்து பண்ணிய அவரது சொந்தங்கள்... இந்த நினைவுகள் நெஞ்சைவிட்டு அகல சிலகாலம் பிடிக்கும்..

தங்கமணியின் அப்பா ஹாஸ்பிடலில் சேர்ந்த சிறிது நேரத்துக்கெல்லாம் உடனடியாக தன் வீட்டில் போட்டது போட்டபடி வந்து, தங்கமணியின் அம்மாவுக்கு துணையாக நின்று, உதவிகள் செய்து, நாங்கள் வரும்வரை கணக்குவழக்குகளை எல்லாம் கவனித்து என, பேருதவி செய்த ஹரிணி நாராயணன் (தங்கமணியின் சொந்தங்களில் இப்போது ஹரிணி என்றால் தெரியாத ஆளே இல்லை),

ஒரு 50,000 வேணும்டா.. என்று சொன்ன சில மணிநேரத்தில் பணத்தை அக்கவுண்ட்டில் செலுத்திய கார்த்திக்,

தன்னுடன் வேலை பார்த்த நண்பி ஒருவரின் உதவியுடன் தங்கமணி அப்பாவின் உடல்நிலை பற்றிய தகவல்களை பஹ்ரைனில் இருந்து ரன்னிங் கமெண்ட்ரியில் சொன்ன ப்ரியா விஜயபாஸ்கர்,

ரத்தம் கொடுக்க இப்போவே அண்ணனை சென்னை கிளம்பச் சொல்லவா எனக்கேட்ட குமரன், ஆறுமுகம்.. ஓடோடிவந்து ரத்தம் கொடுத்த மாமனிதர்கள்..


தன்னுடைய ATM கார்டைக் கொடுத்து எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோ என்றதும், அது போதாதென அவரது மாமனார், அந்த ஹாஸ்பிடலில் உள்ள MS (Medical Superintendent) நண்பரை அழைத்து விஷயத்தை சொல்லி ஏதோ ஒரு Code-word சொல்லவும், அந்த MS-ம் ஏதோ தன் சொந்தக்காரருக்கு செய்வது போல தினமும் ரவுண்ட்ஸ் வரும்போது பார்த்து, நாங்கள் அடுத்து என்ன செய்வது, என்ன சிகிச்சை கொடுக்கிறார்கள் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதையெல்லாம் விளக்கி சிறப்பாக கவனித்துக்கொண்டார்.. அந்த பஹ்ரைன் நண்பர், அவருடைய மாமனார், அவருடைய நண்பரான அந்த MS,

(இடைச்செருகல்: நாங்கள் அந்த MS-ஐ பார்க்க சென்றிருந்த சமயம், ஒருவர் வந்தார். சார்.. அந்தப் பொண்ணும் அவங்கம்மாவும் வந்திருக்காங்க. நீங்க சொன்னதால, எல்லாரும் நல்லா பாத்துக்கறாங்க. பொண்ணு கொஞ்சம் பயப்படுது.. என்றார். ஒல்லியான தேகம். சராசரிக்கும் சற்றே குறைவான உயரம். அந்தச் சிறிய முகத்தில் கொஞ்சம் பெரிதான கண்கள்... என வந்து நின்றார் அந்தப் பெண். பெண்ணின் அம்மாவுக்கு காது கேட்காது.. வாய் பேச முடியாது. அந்தப் பெண்ணிற்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. பெண் 4 மாதக் கருவை சுமக்கிறாள். கணவன் இறந்துவிட்டான்... கருவைக் கலைக்க அழைத்துவந்திருக்கிறார்கள்.. அந்தப் பெண்ணை, நீ தைரியமா போ கண்ணு.. நான் பாத்துக்கறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார் MS.

MS-ன் கதை பெருங்கதை. நம்பிக்கை விதை. சென்னையில் 5 தபால் நிலையங்கள் இருந்தபோது அதில் ஒன்றில் தலைமை அலுவலர் இவரது அப்பா. அவரது கவுண்ட்டரில் வரிசையில் நிற்காத VIP-க்களே இல்லை எனலாம். அவ்வப்போது ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சில உதவிகள் செய்திருக்கிறார். அப்பாவின் திடீர் மறைவிற்குப் பிறகு MS அதே ஆதரவற்றோர் இல்லத்தில் தட்டேந்தி நிற்கவேண்டிய நிலை. நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாமல் எப்படியோ படித்து, உன்னால முடியுமா என்ற நண்பர்களின் ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் MBBS சேர்ந்து டாக்டராகி இன்றும் ஓய்வறியாமல் பணியாற்றுகிறார்)


இதற்கிடையில் ஒரு நிகழ்வுக்காக பாஸ்கர்ஜி-யிடம் உதவி கேட்க, அவரோ Dr கணேஷிடம் கேளுங்கள்.. நானும் சொல்கிறேன் என்று சொல்லி உடனே பேசியும்விட்டார். இதை கேட்டுக்கொண்டிருந்த அங்கிருந்த VK அவர் பங்கிற்கு சில பல இடங்களில் பேசி உதவி ஏற்பாடு செய்தார்.

பாஸ்கர்ஜி பேசிய பிறகு நான் Dr கணேஷிடம் பேசினேன். "என் கச்சேரி நடக்கற 2 கிலோமீட்டர் சுற்றளவில் அவனை உள்ள விடாதீங்க.. மைக் சரியா வேலை செய்யாது.. ஆடியோ-ல feedback வரும்.. உய்ங் சத்தம் வரும்.. ஆடியோ சிஸ்டமே டேமேஜ் ஆயிடும்" என்று சொல்வதற்கு எல்லா சாத்தியக்கூறுகள் இருந்தும், உடனே உதவிய Dr கணேஷ்.. அவர் சொல்லி எனக்காக அலைந்த மதுரை பாலு சார்(வயலின்), முகம் தெரியாத அந்த பிரேமா மாமி.. 

போனில் பேசி, என்ன உதவி வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள் என்ற சொன்ன அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், எங்களுக்காக பிரார்த்தனைகள் செய்தவர்களுக்கும் என்ன செய்துவிட்டோம் இதுவரை?? இனி என்ன கைமாறு செய்யப்போகிறோம்?

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2