ஒரு ஸ்வீட் மாஸ்டரின் டைரிக்குறிப்பு

சமீபத்தில் பஹ்ரைனில் இதற்குமுன் இல்லாத அளவில் மிகப்பெரிய பூஜை நடந்தது. இத்தகையதொரு மைசூர்பாகை.. இல்ல இல்ல ஹோமத்தை பஹ்ரைனில் கண்டதில்லை. 4-5 வருடக்கனவு. 1 வருடத்திற்கும் மேலான திட்டமிடல். சிறப்பான செயல்திட்டம்.. என அத்தனை சிறப்பாக அமைந்தது அந்த ஜாங்கிரி.. இல்ல இல்ல ஹோமம்.

கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் முன்பிருந்தே ரவாலட்டு இல்ல இல்ல.. யாகத்திற்கான பரபரப்பு ஆரம்பமானது. ஜூலை ஆகஸ்ட் வெகேஷன் சமயத்தில் கிட்டத்தட்ட சென்னையிலிருந்து வந்த அனைவருமே யாகத்திற்கான சாமான்களை கொண்டுவந்தனர். வந்த சாமான்களை நிகழ்ச்சிவாரியாகப் பிரித்து அட்டைப்பெட்டிகளில் அடுக்கி, யாகம் நடக்கும் கோவிலுக்கு சாமான்களை ஏற்றி அனுப்பிவிட்டு, அந்த வண்டி அங்கு சேரும் முன்பே தான் அங்கு சென்று அவற்றையெல்லாம் இறக்கி ஸ்டோரில் வைத்தார் அவெஞ்சர்ஸ்-ன் அறிவிக்கப்படாத ஹீரோ VK.

ஒருவாரம் முன்பாக மளிகை சாமான்கள், இதர அத்தியாவசியப் பொருட்கள் என சேகரித்து கோவிலில் கொண்டுசேர்த்தனர். அந்த சமயத்தில்தான் நம் கதையின் நாயகனான ஸ்வீட் மாஸ்டர் (குக் மாமா) பஹ்ரைன் வந்துசேர்ந்தார். மைக்கேல் மதன காமராஜன் படத்தின் காமேஸ்வரன் பூர்வீகமான பாலக்காடு தான் நம் குக் மாமாவுக்கும். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சமையக்கட்டு புகை வரதுக்குட்டி (கே)ட்டேளா... என்ற டயலாக் மட்டும்தான் சொல்லவில்லை. மற்றபடி அதே பாதி தமிழ் பாதி மலையாளம் என கலக்கினார். போதாக்குறைக்கு நடுநடுவே "மித்ரோன்.." ரேஞ்சுக்கு ஹிந்தி வேறு ட்டேளா...


குக் மாமாவுக்கு கோவிலின் சமையல்கூடம் பாத்திரங்கள் இவைகளை காண்பித்து வேறு எதுவும் தேவைப்படுமா என முடிவுசெய்வதற்காக, நான், கமிட்டி முக்கியஸ்தர் ஒருவர், வேறொரு நண்பர் மற்றும் குக் மாமா நால்வரும் கோவிலுக்கு சென்றோம்.

அங்கிருக்கும் பாத்திரம் பண்டங்களைப் பார்த்து செம குஷியாகிவிட்டார். இது ஓகே.. அது சரியாவரும்.. இந்தக் கரண்டி வெச்சுக்கலாம்.. எல்லாம் சரி மாமா, லட்டு பூந்தியா போடலாமா இல்ல உருண்டை புடிச்சுதான் போடணுமா என்று கேட்டார். அப்போது எங்களுக்கு தெரிந்திருக்கவில்லை, இது "என்னாச்சி.. நீ பால் போட்ட.. நீதானே அடிச்ச.. நான் கேட்ச் புடிக்கப் போனேன்.. கீழ விழுந்துட்டனா" ரேஞ்சுக்குப் போகும் என்று.

முதல் நாள் நைட்டு சாப்பாடு ஒரு 40 பேருக்கு, பொங்கல் கொத்சு பண்ணனும். மறுநாள் காலம்பர வேதம் சொல்றவாளுக்கு எல்லாம் கஞ்சி வேகவெச்ச பழம், மத்தியானம் 50 பேருக்கு சாப்பாடு, மூனாவது நாள் காலம்பர கஞ்சி வேகவெச்ச பழம், மத்தியானம் ஒரு 400 பேருக்கு சாப்பாடு.. இதெல்லாம் கமிட்டி முக்கியஸ்தர் சொன்னது. மைசூர்பாகு ரவலாடு மாலாடு ஜாங்கிரி எல்லாம் நன்னாப் பண்ணுவேன் ட்டேளா... என்று சொல்லிக்கொண்டிருந்தார். நடுநடுவே மானே தேனே மாதிரி, சாப்பாடு கஞ்சிக்கு எல்லாம் பண்ணிடலாம் ட்டேளா என்கிற ரீதியில் பதில் இருந்தது.

எனக்கும் நண்பருக்கும் சந்தேகம் வரவே, கமிட்டி முக்கியஸ்தரிடம் "சார், இவர் வந்ததிலிருந்தே ஸ்வீட் பத்தி மட்டும்தான் பேசறார். ஒருதடவைக்கு சாப்பாடு விஷயத்தையும் தெளிவா சொல்லிடுங்க" என்று சொன்னோம். அவரும் மெனுவை திரும்ப ஒருதடவை சொல்லி, என்ன மாமா பண்ணிடலாம் தானே என்று கேட்க, மீண்டும் மைசூர்பாகு ரவலாடு மாலாடு ஜாங்கிரி எல்லாம் நன்னாப் பண்ணுவேன் ட்டேளா... பதிலாக வந்தது.

சாதத்திற்கு பதில் இவர் மைசூர்பாகை வடித்து தள்ளிவிடுவார் என்றே தோன்றியது எனக்கு. குக் மாமாவுக்கு 3 நாட்களுக்கும் உதவியாக ஸ்ரீராமும் கோகுலும் வருவதாக ஏற்பாடு. முதல்நாள் அந்த மாமாவிடமும் கோகுல் ஸ்ரீராமிடமும் பரஸ்பரம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இனி எல்லாம் சுமூகமாக நடக்கப்போகிறது என்று நம்பி அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போயாகிவிட்டது. கோகுலுக்கும் அவருக்கும் ஏதோ முன்ஜென்மப்பகை இருந்திருக்கிறது போலும்.. அப்போதே அது எங்கள் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

கோகுலிடம் அங்கிருந்த சிலர் காபி கேட்டிருக்கிறார்கள். கோகுலும் பாலை காய்ச்சிக்கொண்டே ஸ்ரீராமிடம் டம்பளர்களும் சர்க்கரையும் எடுத்துவருமாறு கேட்டிருக்கிறார். ஸ்ரீராம் இவைகளை எடுத்துக்கொண்டு வரவும், குக் மாமா வரவும் சரியாக இருந்தது. என்னதிது காபி போட 2 பேரா?? அநியாயமா இருக்கே.. அங்க எத்தனை வேலை இருக்கு ட்டேளா.. பொங்கலுக்கு அரிசி பருப்பெல்லாம் எடுக்கணும்.. கொத்சுக்கு கத்திரிக்காய் நறுக்கணும் ட்டேளா... ஆனா இங்க காபி 2 பேர் போட்டுண்டு இருக்கேளே.. என காபிக்கு காய்ச்சிய பாலுக்கும் மேல் அவர் பொங்கினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் பழமொழியை பாலக்காட்டில் "முதல் கோகுல் முற்றிலும் கோகுல்" என்றுதான் அவருக்கு சொல்லிக்கொடுத்தார்கள் போல...


இதை உடனே அங்கிருக்கும் அத்தனைபேரிடமும் தனித்தனியாக சொல்ல ஆரம்பித்துவிட்டார். பாஸ்கர்ஜி வந்து ஏதோ சமாதானம் சொல்லிவைத்துவிட்டு, வெளியே வந்து கோகுலிடம் என்ன சார் 5 பேர் சேர்ந்து காபி போட்டீங்களாமே என கிண்டலாகக் கேட்க, கோகுல் முகத்தைப் பார்க்கவேண்டுமே.. அப்போதுமுதல் கோகுல் எதை செய்தாலும் பிரச்சனை தான்.. அட சும்மா நின்றாலும் பிரச்சனை தான்.

ஒரு வேலையை ஸ்ரீராம் செய்தால் குக் மாமா ஒன்றும் சொல்வதில்லை. அதே வேலையை கோகுல் செய்தால் அவ்வளவுதான்.. கையை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு "என்னவோ பண்ணித்தொல்லைங்கோ ட்டேளா..." என்கிற ரேஞ்சுக்கு அவன் மேல் கொலைவெறியில் இருந்தார். பொறுத்துப் போகும் கோகுல் பொங்கும்போதெல்லாம் நானோ ஸ்ரீராமோ கொஞ்சம் ஐஸ் வாட்டரை ஊற்றி அவனை சமாதானம் செய்யவேண்டி இருந்தது.


கொஞ்ச நேரத்தில் பூந்தி எடுத்து பேக்கிங் செய்ய மகளிரணி அந்தப் பாத்திரத்தை நெருங்கியிருக்கிறார்கள். கிண்டிய கரண்டியை அதிலேயே விட்டுவிட்டார் நம் குக் மாமா. எதையுமே அசால்ட்டாக லெப்ட் கையால் டீல் செய்யும் நம் மகளிரணி எவ்வளவு முயன்றும் அந்தக் கரண்டியை பாத்திரத்திலிருந்து வெளியே எடுக்க முடியவில்லை. குக் மாமா உடனே ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. தான் செய்த வேலையில் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொஞ்சம் முக்கித்தக்கி கரண்டியை வெளியே எடுக்கப் போராடும் வேளையில் கோகுல் ஏதோ சொல்லப்போக, அந்த ஒரு நிமிடம் சந்திரமுகி-யாக மாறிய மாமாவைப் பார்த்து எதுவும் பேசாமல் வெளியே வந்துவிட்டான்.

முதல்நாளே இப்படி ஏக களேபரம்.. அடுத்த இரண்டு நாட்களும் மாமா சமையல் செஞ்சாரோ இல்லையோ.. கோகுலை வெச்சு செஞ்சார் ட்டேளா... கடுகு தாளித்தாரோ இல்லையோ கோகுலை தாளித்தார். ஸ்ரீராமிடம் சாந்த முகமாகவும் கோகுலிடம் Shark முகமாகவும் குக் மாமா ஒரு மினி அந்நியன் படம் காண்பித்தார்.

இதற்கிடையில் கிச்சனுக்கு போவோர் வருவோரிடமெல்லாம் ஏதாவது சாமான் வேண்டுமென சொல்லியனுப்புவார். இத்தனைக்கும் ஸ்டோர் ரூமும் அங்கு இருக்கும் எல்லா சாமான்களும் அவருக்கு அத்துப்படி. அதுவும் போதவில்லையென்றால் கோவிலிலேயே இருக்கும் சாமான்களை கொடுக்க இவருக்கெனவே 2 பேர் கிச்சனில் இருந்தனர். அப்படி இருந்தும், திடீர் திடீரென தன் மனதில் பட்ட மளிகை சாமான்களையெல்லாம் வாங்கிவரும்படி சொல்லிக்கொண்டிருந்தார்.

VK அண்ணா இவரிடம் மாட்டும்போதெல்லாம் செம கலாட்டாவாக இருக்கும். ஸ்டோரில் இருக்கும் சாமானை எடுத்துவரும்படி குக் மாமா சொல்ல, இவர் போகும்போது சரியாக எல்லா சாமான்களும் இடம் மாறியிருக்கும். யாரோ இங்க வந்து அட்டைப்பெட்டியெல்லாம் பிச்சி பீராய்ஞ்சி வெச்சிருக்காங்க.. (அலசி ஆராய்ஞ்சு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா பிச்சி பீராய்ஞ்சி.. இப்போ தான் கேள்விப்படறேன்) மவுண்ட் பேட்டன் மணி மாமா கூப்ட்டாக.. லண்டன் Gordan Ramsay மாமா கூப்ட்டாக.. அங்கயெல்லாம் போகாம என் கெரகம் இந்தப் பாலக்காட்டு மாமாகிட்ட வந்து மாட்டிக்கிட்டேன் என்கிற ரேஞ்சுக்கு இருந்தார்.

இரண்டாம்நாள் காலை நல்ல பிரகாசமாக கோவிலுக்கு வந்தார் VK அண்ணா.. கரண்ட் இல்லாத வேளையிலும் பிரைட்டாக இருந்தார். ஏதோ வேலையாக கிச்சனுக்கு சென்றவர், முகம் வெளிறிப்போய் வந்தார். என்ன அண்ணா.. என்ன ஆச்சு எனக்கேட்டேன்.. பேச்சே வரவில்லை.. கொஞ்சம் உலுப்பி, என்ன ஆச்சு அண்ணா எனக்கேட்டவுடன் தான் தெளிவானார். மாமா "அது" வாங்கிண்டு வரச்சொன்னார்.. ஆனா, எங்க போவேன்.. எப்படி வாங்குவேன் என புலம்ப ஆரம்பித்துவிட்டார்.. "என்ன வாங்கச்சொன்னார் அண்ணா?" என நான் கேட்க, " அதைத்தான் சொல்லக்கூடாது-ன்னு சொல்லிட்டாரே" என்று சொன்னார் VK.


கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா எனக்கேட்க, "பேர் சொல்லாதது வாங்கிண்டு வரசொல்லிருக்கார் யா.. அதுவும் பேர் சொல்லாம.. நம்ப ஊர் கடைலயே பேர் சொல்லாததை பேர் சொல்லாம வாங்கறது கஷ்டம். நான் இங்க எந்தக் கடைக்கு போவேன்.. யாரை கேப்பேன்.. எப்படி வாங்குவேன்.." என புலம்பியபடியே நடந்து போய்விட்டார்.. Bramco கோவிலைச் சுற்றியுள்ள பாலைவன ஏரியாக்களில் யாரேனும் VK அண்ணாவைப் பார்த்தால் உடனே தெரியப்படுத்தவும்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2