பட்டர்ப்ளை எபெக்ட்
ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை அதிர்வுக்கும் ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்பது கேயாஸ் தியரி என்று தசாவாதாரத்தில் உலகநாயகன் பேசும் வசனம் உண்டு. கேயாஸ் தியரி உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் பிளைட் லேட் ஆவதற்கும் ஹாஸ்பிட்டலுக்கும் தொடர்பு உண்டு என்று தெரிந்துகொண்டது நவம்பர் மாதம்.
தங்கமணியின் அப்பா அம்மாவுக்கு, பஹ்ரைன் - சென்னை சென்றுவர டிக்கெட் போட்டாயிற்று. ஆனால் நேரடி பிளைட்டில் சீட் இல்லாததால் அமீரகம் வழியாக ட்ரான்சிட்டில் டிக்கெட் ஏற்பாடு செய்தோம். அந்த நாளும் வந்தது. பிளைட்டும் கிளம்பியது.. ஆனால் தாமதமாக. பஹ்ரைன் அமீரகம் பிளைட் லேட்டானதால் இவர்களால், அமீரகம் சென்னை பிளைட்டை பிடிக்க இயலாமல் போனது. மாற்று ஏற்பாடாக உடனே இவர்களை கோவை பிளைட்டில் அமர்த்திவிட்டனர் நிறுவனத்தினர்.
விமானம் கிளம்ப 10 நிமிடம் இருக்கும்போதுதான் எங்களுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள். உடனே கோவை டு சென்னை ட்ரெயினில் டிக்கெட் புக் செய்து, அடுத்த பத்தாவது நிமிடம் அவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டோம். கோவையில் இறங்கியது முதல், ரயில்வே ஸ்டேஷன் செல்லும்வரை என்ன செய்யவேண்டும் என அவர்களிடம் பட்டியலிட்டாகிவிட்டது.
வெள்ளிக்கிழமை காலை சென்னை செல்லவேண்டியவர்கள், கோவை சென்று அங்கிருந்து ரயிலேறி வெள்ளிக்கிழமை இரவு சென்னை சென்றடைந்தனர். வீட்டிற்குள் சென்றதுமே களைப்பில் படுத்தவர்தான்.. அடுத்த நான்கு நாட்களுக்கு சோர்வு, களைப்பு, உடல்வலியுடன் சேர்த்து காய்ச்சலும்.. உடனே ஆஸ்பத்திரி சென்றனர். நிலைமை கொஞ்சம் சீரியஸ் என்றவுடன் நாங்களும் அடுத்த விமானத்தில் ஏறி சென்னையில் ஆஜர். ஒரு சிறிய ஆபரேஷன் செய்தபிறகு, இப்போது நலம். இந்த அளவிற்கு கொண்டுவந்து விட்டதில் அந்த லேட் பிளைட் விவகாரம் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கை....
அது ஒருபுறம் இருக்க.. ஒரு நான்கு நாட்கள் நான் ஹாஸ்பிடலில் தங்க நேர்ந்தது. அதிலும் இரவுகள் ரொம்பவே படபடப்பும் திகிலும் சேர்த்து ஒரு த்ரில்லர் பட ரேஞ்சுக்கு ஒவ்வொரு இரவும் ஒவ்வொரு ரகம் (மேலிருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு ஏடாகூடமாக கற்பனைசெய்து எடக்குமடக்கு கேள்விகேட்டால் தசாவதாரம் பிளெட்சரிடம் சொல்லிவிடுவேன்)
வெளியில் தெருவில் யாருக்கும் உதவி செய்கிறார்களோ இல்லையோ அங்கே ஹாஸ்பிடலில், அந்த ICU வெயிட்டிங் ரூம் அளவிலாவது நிறையபேர் அனுசரணையாக ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பது நெகிழ்ச்சி.
தன் அப்பாவின் சிகிச்சைக்காக வந்திருந்த நண்பரை, சில மணிநேரம் மாற்றிவிடக்கூட யாரும் வராமல், 10 நாட்களாக "தனி ஒருவன்" ரேஞ்சுக்கு தந்தையையும் பார்த்துக்கொண்டு தன்னையும் பார்த்துக்கொண்டு அல்லாடிக்கொண்டிருந்தார். என் பெரியம்மாவின் புண்ணியத்தால் 4-5 இட்லிகளைக் கட்டிக்கொண்டார்.. நெல்லுக்குப் பாய்ந்ததில் கொஞ்சம் புல்லுக்கும் பாய்ந்தது..
அப்பா அம்மாவுக்காகக்கூட ஹாஸ்பிடல் வராத பிள்ளைகள் உள்ள இந்தக்காலத்தில் தனது அக்காவின் மாமியாருக்காக வந்திருந்தார் பாலாஜி. அனைவருக்கும் உதவும் நல்ல மனிதர். இவர் இத்தனை நல்லவராக இருக்க, இன்னும் திருமணமாகவில்லை என்பது ஒரு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் அவ்வப்போது எழவே செய்தது.
ஒரு அன்பரின் 3 உறவினர்கள் (மனைவி உள்பட) அங்கே சிகிச்சைக்காக அட்மிட் செய்திருந்தார்கள். காலை 7-7.30 பார்வையாளர் நேரம். ஒருவருக்கு 10 நிமிடம் என்கிற ரீதியில் பார்த்துவிட்டு, ஒவ்வொருவருக்கும் இருக்கும் முன்னேற்றம் சிகிச்சைகள் உள்ளிட்ட விஷயங்களை பாலாஜி எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து அவரிடம் சொல்வார் அந்த அன்பார். பாலாஜியும் பொறுமையாக கேட்டுக்கொண்டு, நடுநடுவே அவருக்கு சிலபல டிப்ஸ்களும் சொல்வார். இது தினப்படி காலை பார்வையாளர் நேரம் முடிந்தவுடன் நடக்கும் நிகழ்வு.
அந்த அன்பருக்கு ICU-வில் அட்மிட்டாகியிருக்கும் அத்தனைபேரும் அத்துப்படி. இவரது 3 உறவினர்கள் அப்டேட் முடிந்தவுடன், மற்றவர்களின் விவரங்களையும் ஒரு அலசு அலசுவார். அந்த அவருக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்லை.. ஆனா நேத்து சேர்த்தாங்களே இந்த இவரு.. கொஞ்சம் கஷ்டம்தான். நான் நேத்து காலையில பாத்தப்போ 9500 இருந்த கவுண்ட், இன்னிக்கு 15000 இருக்கு. என்ன ட்ரீட்மெண்ட் குடுக்காரங்களோ என்னவோ.. காசு புடுங்கறாங்க சார்.. என்கிற ரீதியில் டீட்டெயில் அள்ளித்தெளிப்பார். அதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் பாலாஜி.
செல்போன் தொல்லை பெரும்தொல்லை.. பிறருக்கு இடைஞ்சலாக இருக்குமே என்ற இங்கிதம் தெரியாமல் அந்த ICU வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்துகொண்டு மேடைப்பேச்சு பேசுவது போல செல்போனில் ஆத்து ஆத்தென ஆத்திக்கொண்டிருப்பார்கள். பகலில் பரவாயில்லை... இரவில் 1 மணி 2 மணி என நேரம்காலம் பாராமல் பேசுவார்கள். பேஷண்ட் பற்றியோ அவர்கள் தொடர்பான உறவினர்களுடனோ பேசினால் பரவாயில்லை. எப்போதோ 2-3 வருடங்களுக்கு ஒருமுறை போன் செய்து "நான் நல்லாயிருக்கேன்... நீ நல்லாயிருக்கியா" ரேஞ்சுக்கான பேச்சுக்கள் தான் பெரும்பாலும். அதிலும் அந்தமாதிரி பேசிய ஒரு ஆசாமியின் 2 வயது மகனை "லுலுலுல்லு.... அடிச்செல்லாமே.." என்று கொஞ்சிக்கொண்டிருந்தார் ஒருவர் இரவு 2.15மணிக்கு. இருக்கும் அரைகுறை தூக்கமும் "லுலுலுல்லு"...
ஒருவர் தனது செல்போன் ரிங்டோனாக தளபதி படத்தின் காட்டுக்குயிலு பாடலில் வரும் "தும் தும் டக் டக் டிஷ் டிஷ் டக் டக்... தும் தும் டக் டக் டிஷ் டிஷ் டக் டக்... பந்தம் என்ன, சொந்தம் என்ன, போனா என்ன, வந்தா என்ன, உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லே.." வைத்திருந்தார். இருப்பதோ ICU வெயிட்டிங் ரூமில்.. நல்ல டைமிங் சாங் சார் என்று சொல்லத்தோன்றும். இரவு 11-12 மணிக்கு மேல் உறக்கம் வரும் வேளையில் "தும் தும் டக் டக் டிஷ் டிஷ் டக் டக்... தும் தும் டக் டக் டிஷ் டிஷ் டக் டக்..."... இளையராஜா மேல் கோபம் கொண்டது அந்த ஒருத்தருணத்தில்தான்.
மறுநாள் யாரோ உறவினர் வந்து உள்ளிருக்கும் பேஷண்டைப் பற்றி பேசி, அவரது நிலையை நினைத்துக் கண்ணீர் சிந்தவும், இந்த "உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லே.." ஆசாமியும் மூக்கை உறிஞ்சிக்கொண்டே பக்கெட் பக்கெட்டாக அழுது தீர்த்துவிட்டார்..
தொடரும்...
தொடரும்...
Comments
Post a Comment