விருந்தோம்பல் வித் பெருங்கும்பல் - 2
எதையுமே பிளான் பண்ணிப் பண்ணணும் என்று ஞானி வடிவேலர் சொன்னாலும் சொன்னார்.. எங்கே போனாலும் அதே பல்லவி தான்.
அப்படியான ஒரு பிளானோடு வந்திருந்தார் MTSMT (விரிவாக்கம் முந்தைய பதிவில்) லக்ஷ்மி நரசிம்மன். சரியாக 5.55 மணிக்கு வந்தார் என சொல்லியிருந்தேனே.. வந்தவர், மேரா ஓனர் தங்கமணியிடம் உரிமையாக காபி போடச்சொல்லி கேட்டார். நானே இதுவரைக்கும் இத்தனை வருடங்களில் அப்படியெல்லாம் உரிமை எடுத்துக்கொண்டு வேலை வாங்கியதில்லை (@!??) சரி போகட்டும்..
காபி சாப்பிட்டு முடித்ததுமே, "பிரசன்னா, மொதல்ல அப்பளத்தைப் பொரிச்சுடலாம்-பா. பொரிச்சு கவர்-ல போட்டு ஓரமா வெச்சுட்டா, ஒரு வேலை முடிஞ்சிடும்" என்றார். "காலங்காத்தால 6 மணிக்கு அப்பளம் பொரிக்க ஆரம்பிச்சா, மத்த வேலை எல்லாம் எப்போ ஆரம்பிக்கறது" என்று கேட்டதும், சுடுங்-காபி சாப்பிட்டதாலோ என்னவோ கடுங்கோபத்துடன் எழுந்தவர், பரபரப்புடன் வடைக்கு வாழைப்பூவை உரிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஒவ்வொரு அயிட்டமாக ரெடியாக ஆரம்பித்தது. கிச்சனில் கூட்டமும் கூடியது. கைப் பக்குவத்திற்கு சாம்பிள் காட்ட சாவகாசமாக (அட.. அதாங்க.. 9 மணி ஆபீசுக்கு 10 மணிக்கே!!?? வந்து அட்டண்டன்ஸ் போடுபவர்கள்) வந்தவர்கள், கிச்சன் வாசலில் நின்று உள்ளிருந்த கூட்டத்தைப் எட்டிப் பார்த்து எங்கே உள்ளே நுழைந்தால் கூட்டத்தில் சிக்கி சட்னி ஆகிவிட்டால், அதையும் தாளிச்சு கொட்டி இவர்கள் நோகாமல் இன்னொரு அயிட்டமாக கிண்ணத்தில் வைத்து பந்தி பரிமாறிவிடுவார்கள் என்ற பயத்தால் ஹாலில் பட்டறையைப் போட்டனர்.
மணி 7.30 இருக்கும். அப்பளம் இன்னும் பொரித்திருக்கவில்லை. ஆபீஸ் வேலைகளை outsourcing பண்ணுவது போல, காய்கறி வெட்டும் வேலைகள் எல்லாம் ஹாலில் பட்டறையைப் போட்டவர்களிடம் கை மாற்றிவிடப்பட்டன.
இதற்கிடையில் தன்னுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்த அந்த அவர் (!?) வெள்ளரிக்காய்களை அழகான கனசதுரங்களாக (அதாங்க குட்டி குட்டி Cube-ஆ) கலையார்வத்துடன் வெட்டி ஆரவாரமில்லாமல் அதில் 2 லிட்டர் மோரைக் கொட்டி வெள்ளரிக்காய்த் துண்டுகளுக்கு வலிக்காமல் கலந்து உப்பு போட்டு பக்காவாக பக்குவம் செய்து வைத்தார்.
அந்த நேரம் பார்த்து மிக்சியில் ஏதோ அரைக்கவேண்டுமென பெருமுயற்சி செய்தும் அது அரைக்காததால், வழக்கம் போல் troubleshooting-கிற்கு (IT-ல வேலைன்னா சும்மாவா) அழைத்தார்கள். சூரியன் படத்துல கவுண்டமணி டயலாக் பேசுவாரே "ஏதோ கல்யாணமாம். MLA-வாலயே சாதிக்க முடியலையாம். என்னை சாதிக்க சொல்றாங்க" என்பது மாதிரியான தோரணையில் நான் போய் அரைத்துக்கொடுத்தேன். இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா...
அதை முடித்துவிட்டு திரும்பினால், இன்னொருபக்கம் மேரா ஓனர் தயிர் சாதத்துக்கு ரெடி பண்ணிக்கொண்டிருந்தார். என்னதான் ஆம்னாட்டிகளின் அடிபொலி விருந்து என்றாலும், எங்கள் வீட்டு கிச்சனில் தான் தயாராகிறது என்பதால் மேரா ஓனருக்கு மட்டும் இதில் கலந்துகொள்ள விதிவிலக்கு. சரி.. அவர்தான் செய்கிறாரே என்று கண்டும்காணாமல் போக மனமில்லை ஆகையால் (அப்படியெல்லாம் கண்டும்காணாமல் ஒரு எட்டு போயிட முடியுமா என்ன??) நானும் தயிர் சாதத்தில் ஒரு கை வைத்தேன்..
மணி 9.30 இருக்கும். அப்பளம் இன்னும் பொரித்திருக்கவில்லை.
ஒரு வேளைக்கு தளிகைக்கே ம்ம்ம்... எத்தனை வாரம் ஆகுமோ....
ReplyDelete*அப்பளாமே பொரிக்கல*