விருந்தோம்பல் வித் பெருங்கும்பல் - 3
அந்த அவர் (!?) நேரமாவதைப் பார்த்துவிட்டு, welcome drink பண்ணப் புறப்பட்டார். அரைத்த புதினா, கொஞ்சம் உப்பு மற்றும் சில பல பொருட்கள் (secret ingredients) சேர்த்து ஸ்ப்ரைட்டில் கலந்தால், மசாலா ஸ்ப்ரைட் ரெடி. அது என்ன ரகசிய ரெசிபி என்று தானே யோசிக்கிறீங்க... சொல்லமாட்டேன்.. அது தொழில் ரகசியம். இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா.. பேர் தான் மசாலா ஸ்ப்ரைட்டே தவிர, கலந்தது என்னவோ 7UP வைத்து தான்.
இதற்குள் வெரைட்டி ரைஸ் அயிட்டங்கள் ரெடியாகிவிட்டன. சரி.. எல்லாத்துலயும் டெஸ்ட்-க்கு கொஞ்சம் டேஸ்ட் பண்ணுவோமே என்று ஆரம்பித்தோம். அனைத்து அயிட்டங்களை அடிப்பொலி. வெஜிடபிள் ரைஸ் மட்டும் கொஞ்சம் காரம் தூக்கலாக இருந்தது. சாப்பிட்டதும் கண்ணில் தண்ணி வந்துவிடும் அளவுக்கு மட்டுமே காரம். மத்தபடி நாக்கை கழட்டி ஏஸி-க்கு அடியில் அரைமணி நேரம் ஆறப்போடும் அளவுக்கு ஜாஸ்தி இல்லை...
முறைமாமன் படத்தில் கவுண்டமணி ஜெயராம் சமையலில் குஷ்புவும் மனோரமாவுக்கு சேர்ந்து உப்பையும் மிளகாய்ப்பொடியையும் மானாவாரியாக அள்ளித்தெளித்து கலந்துவிடுவது போல, ஏதோ சதி நடந்திருக்கலாம் என சந்தேகம் இருக்கு... ம்ம்ம்.. ஒரு பஞ்சாயத்தைக் கூட்டிட வேண்டியது தான்..
சரி.. என்ன பண்ணலாம் என யோசித்து, நெய் விட்டு கிளறினால் கொஞ்சம் காரம் குறையும் என்று முடிவு செய்து, நெய் டப்பாவை திறந்தால் கீழ் ஃப்ளோருக்கும் கீழே இருக்கும் பேஸ்மெண்ட் தெரியும் அளவுக்கு சுரண்டப்பட்டிருந்தது. சரி.. நெய்யைக் காய்ச்சி கொட்டிவிடலாம் என்று உடனடியாக செயலில் இறங்கினோம்.
பாத்திரத்தில் வெண்ணெய்யைப் போட்டுவிட்டு அப்படியே, அடுத்த வேலையைப் பார்க்கப் போய்ட்டு, அந்த வெண்ணெய் காஞ்சு கருகிப் பொங்கி தானே அடுப்பை ஆப் பண்ணினதுக்கு அப்பறம் சாவகாசமா வந்து பாக்கறவங்கள்லாம், கன்னியாகுமாரியிலருந்து மெட்ராஸுக்கு டவுன் பஸ்ஸ பிடிச்சுப் போயிடுங்க. நெய் காய்ச்சறதெல்லாம் ஒரு கலை. நெய் காய்ச்சி முடிச்சப்பறம் Art & Artist அப்படின்னு மீம்ஸ் போடற அளவுக்கு இருக்கணும்.
பாத்திரத்தை மிதமான சூட்-ல அடுப்பில் வெச்சு, வெண்ணெய்யை அதுல போடணும். கிளற ஆரம்பிக்கணும். அட.. ஆமாங்க வெண்ணெய்யைப் போட்டதுமே கிளற ஆரம்பிக்கணும். பாதி வெண்ணெய் உருகினதும், அடுப்பை ஆப் பண்ணிடனும். அந்த சூட்டுலயே மிச்சமிருக்கும் வெண்ணெய் உருகிடும். வெண்ணெய் முழுசும் உருகினதுக்கப்பறம், அடுப்பைப் பத்தவெச்சு, சிம்-ல (single sim-ஆ double sim-ஆ என அறிவியல் கேள்வி கேட்பவர்களும், அதே டவுன்-பஸ்ஸில் புட்போர்டு அடிச்சுப் போயிடுங்க..) திரும்பவும் கிளற ஆரம்பிக்கணும். கொஞ்ச நேரத்துல பிசுபிசுப்பா நுரைக்க ஆரம்பிக்கும். முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மாதிரி, கிளறிக்கிட்டே இருக்கணும். கொஞ்ச நேரத்தில் நுரை அடங்கி, வெண்-நெய் துகள்கள் அடியில அப்படியே மணல் மணலா குட்டி குட்டி உருண்டைகளா மாறி, வெண்ணெய் transparent-ஆ மாறும். நாம கிளறிட்டே இருப்போம்.. அடுத்த கொஞ்ச நேரத்துல திரும்பவும் நுரைக்க ஆரம்பிக்கும். மொதல்ல மாதிரி இல்லாம, இப்போ நல்லா சோப்பு நுரை மாதிரி திக்கா நுரைச்சுக்கிட்டே இருக்கும். அடியில் இருக்கற கசண்டு, பொன்னிறமா மாறும் வரை கிளறிட்டு, உடனே ஆப் பண்ணிடனும். அப்போ தான் நெய் நல்ல கலரோட, மணல் மணலா தரமான வாசனை மற்றும் சுவையோட இருக்கும். நெய்யை வேற பாத்திரத்துக்கு மாத்தின அப்பறம், அடிக் கசண்டு அப்படியே பொன்னிறமா இருக்கணும். இது தான் quality check.
ஏங்க.. கொஞ்சமாவது பொறுப்பிருக்கா உங்களுக்கு?? மணி 10 ஆயிடுச்சு.. இன்னும் 20-30 நிமிஷம் ஆகும் போல வேலை எல்லாம் முடிச்சு இலை போடறதுக்கு.. முக்கியமா அப்பளம் இன்னும் பொரிக்கலை, வாழைப்பூ வடை ரெடி ஆகலயேன்னு நாங்க பரபரப்பா ஓடிட்டு இருக்கோம், நீங்க என்னடான்னா ஆற அமர உக்காந்து நெய் காய்ச்சுவது எப்படி-னு படிச்சுட்டு இருக்கீங்களே...
மோகன் சார் தனது கைவண்ணத்தில் மோர் சாத்தமுது முடித்திருந்தார். அடுப்பு ஏரியா கொஞ்சம் காலியானது. 10.15 மணிக்கு, நானும் பிரேம்-ஜியும் அப்பளம் பொறிக்க ஆரம்பித்தோம் (ஹப்பாடா... எவ்வளவு பில்டப்பு...) அப்போ, "வாழைப்பூ வடை அப்பளம் இதையெல்லாம் நான் பண்றேன்"-னு கமிட் ஆன நரசிம்மன் எங்க போனார்? என்ன பண்ணறார்?? அப்படின்னு தானே யோசிக்கறீங்க.. வாழைப்பூ வடையை கோகுலனுக்கு டேக் டைவர்சன் போட்டு விட்டுட்டு, இவர் மைசூர்பாக் அப்படின்னு ஒரு அயிட்டம் மெனு-ல போட்டிருந்தோமே.. அதை கிளறிட்டு இருந்தார். அவர் முடித்து பந்தியில் பரிமாறும்போது அது மைசூர் அல்வா (!!???) ரேஞ்சுக்கு இருந்தது.
வாழைப்பூ வடை அப்படின்னதும் பருப்பை ஊறவெச்சு அரைச்சு, வாழைப்பூவை நறுக்கி அதில் போட்டு கலந்து வடை தட்டிப் போடறது-ன்னு தானே நினைக்கறீங்க.. அங்க தான் ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கார் நரசிம்மன். பருப்பு ஊற வெச்சோம்.. ஆனா கடலைப் பருப்பு இல்ல.. உளுந்து. உளுந்து வடைக்கு அரைச்சு அந்த மாவுல, வாழைப்பூவைக் கலந்து உளுந்தம்பூ வடை பிளான் பண்ணியிருந்தார். கோகுலனுக்கு வேற வழியில்லை. நரசிம்மன் சொன்னபடியே பண்ணவேண்டிய நிர்பந்தம். He was cornered.. ஆனா வழக்கம்போல, கோகுலனின் கைவண்ணத்தில் வடை சிறப்பாக இருந்தது அப்படிங்கறது நான் சொல்லாமலே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.
ஒருவழியா 10.47-க்கு முதல் பந்தி பரிமாறியாகிவிட்டது. Back to back 3 பந்திகள். சாப்பிட்ட எல்லாரும், எல்லா அயிட்டமும் அடிப்பொலி-ன்னு சொல்லி ஒரே பாராட்டு தான். அதுலயும் முக்கியமா, மோகன் சாரோட பாதாம் கீர் பத்தி எல்லாருமே சொல்லிட்டாங்க. இருக்காதே பின்னே... 6 லிட்டர் தண்ணி கலக்காத பாலை திக்கா காய்ச்சி, அதில 1 கிலோ பாதாம் பருப்பை அரைச்சுக் கொட்டியிருக்கோமே..
But அந்தப் பாராட்டையெல்லாம் நாங்க மூளைக்குள்ள ஏத்திக்கலை.. இன்றும் ஆம்னாட்டிகள் சமைக்கும் மற்றொரு நாளே அப்படின்னு ஜஸ்ட் லைக் தட் கடந்துட்டோம். Basically, எங்களுக்கு முகஸ்துதி பிடிக்காது...
மீண்டும் இதுபோன்றதொரு விருந்தோம்பலில் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து வடை-பெறுவது பாதாம்-கீரும், மசாலா ஸ்ப்ரைட்டும்...
முக்கியமா அப்பளம் இன்னும் பொரிக்கலை,...😔
ReplyDelete