கேமரா





என்ன சதீஷ் எப்போதான் புது கேமரா வாங்கப்போற?

வாங்கலாம் ப்ரோ.. நல்ல ஆபருக்கு நாலு வருஷம் வெயிட் பண்ணாலும் தப்பில்லைன்னு ஒரு படத்துல ஆண்டவரே சொல்லியிருக்காரு..

அந்த நாளும் வந்தது.

ப்ரோ, ஒரு ஆபர் போட்டிருக்கான். நிக்கான் SLR 3300 கேமரா + பேஸிக் லென்ஸ் சேர்த்து பதினேழாயிரம் ருபாய். நல்ல ஆபர் மாதிரி இருக்கு. கேமரா எப்படி இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க. நல்ல கேமரா-ன்னா வாங்கிடலாம்.

சதீஷ், எண்ட்ரி லெவலுக்கு இந்த கேமரா ஓகே தான். நல்ல ஆபர்.

சூப்பர் ப்ரோ. இன்னிக்கே வாங்கறோம். க்ளிக்கறோம், பேஸ்புக்-ல Satty Clicks-ன்னு ஒரு போட்டோகிராபி பேஜ் கிரியேட் பண்றோம், கலக்கறோம்.

எல்லாம் ஓகே. அதென்னய்யா பேரு சட்டி க்ளிக்ஸ்-ன்னு?

ப்ரோ, அது சட்டி இல்ல. சேட்டி க்ளிக்ஸ். சதீஷோட ஷார்ட் பார்ம் ப்ரோ.

ஓஹோ.. அப்போ சரி அப்போ சரி..

கேமரா வாங்கியாயிற்று.

என்ன சதீஷ், கேமரா வாங்கின அன்னிலேருந்து பையை விட்டே வெளியில எடுக்கல போல? பூஜை ரூம்ல சாமி படத்துக்கு சேர்த்து கேமராவுக்கு சூடம் பத்தி காட்டறீங்கன்னு கேள்விப்பட்டேன்...

அப்படிலாம் இல்ல ப்ரோ. கேமரால ஒன்னும் புரியல. நிறையா ஆப்ஷன்ஸ் இருக்கு. ஒரே கண்பியூஷன். டிஸ்பிலே-ல நல்ல பளிச்ன்னு தெரியுது. ஆனா போட்டோ எடுத்தா, ரொம்ப டல்லா இருக்கு. பிரைட்னஸ் அட்ஜஸ்ட் பண்ண தெரியல.

பரவாயில்ல சதீஷ். ஆட்டோ மோட், இல்லாட்டி ப்ரோக்ராம் மோட்ல எடுக்க பழகு. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கலாம். கேமராவை எடுக்காமலே இருந்தா, ஒன்னும் தெரிஞ்சுக்க முடியாது. அவுட்புட் நல்லா இருக்கோ இல்லையோ, போட்டோ எடுத்துகிட்டே இருந்தா தான், கத்துக்க முடியும்.

சொல்லிட்டீங்கல்ல.. இனிமேல் பாருங்க ப்ரோ.. சும்மா தெறிக்க விடுவோம்ல...

சொன்னது போலவே அன்றுமுதல் போட்டோக்களாக எடுத்து தள்ளினான் சதீஷ். அவுட்புட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. போட்டோஷாப், லைட்ரூம் மாதிரி சாப்டவேர்களை உபயோகித்து ரொம்ப டல்லாக டார்க்காக இருந்த போட்டோக்களைக்கூட ஓரளவுக்கு நல்ல போட்டாக்களாக மாற்றினான். எங்கு போனாலும் கேமராவும் கூடவே சென்றது. கண்ணால் பார்ப்பதைவிட கேமரா லென்ஸால் பார்ப்பது அதிகமாகிவிட்டது அவனுக்கு.

ஒருநாள் அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம். அவன் கிளம்பவே நள்ளிரவாகிவிட்டது. அந்த நேரத்திலும் அவனுக்கென்றே வந்தது போல ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. ஆட்டோவில் ஏறியவுடன் கேமராவைக் கையில் எடுத்தான்.

என்ன சார்.. போட்டோக்ராபரா? எந்தப் பிரஸ்?

இல்லண்ணா.. சாப்ட்வேர் எஞ்சினியர்.

ஓ.. கம்பியூட்டர் வேலையா??

ஆங்.. ஆமாண்ணா, என்றவாறே நகர்ந்து கொண்டிருந்த ஆட்டோவிலிருந்து இரவையும் இருட்டையும் அங்கங்கே வெளிச்சத்தை வாந்தி எடுத்துக்கொண்டிருந்த சோடியம் விளக்குகளையும் பல்வேறு கோணங்களில் கேமரா கண்ணால் கபளீகரம் செய்து 32GB மெமரி கார்டின் யானைப்பசிக்கு கொஞ்சம் சோளப்பொறியை போட்டான்.

அதற்குமேல் டிரைவர் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினார். ப்ளாஷ் எத்தனை பிரகாசமாக இருக்கிறது என்பதை சோதிக்க, சில போட்டோக்களை ப்ளாஷ் உபயோகித்து எடுத்தான். ஆட்டோ நகர்ந்துகொண்டே இருந்ததால், சில போட்டோக்கள் நன்றாகவும் சில போட்டோக்கள் ஷேக்காகியும் இருந்தன.

இன்னும் ஸ்டெடியா புடிச்சு ஷேக் ஆகாம எடுக்கணும் என்று நினைத்துக்கொண்டே ஷட்டர் ஸ்பீடை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துவிட்டு மீண்டும் 'க்ளிக்'கத் தொடங்கினான் சதீஷ்.

அப்போது...

அந்தப் பெண் கால்சென்டர் வாசலில் அலுவலக Cab-ல் ஏறுவதையும் போட்டோ எடுத்தான். அதற்குள் அந்தக் காரும், இவன் வந்த ஆட்டோவும் நகர்ந்துவிட்டதால் அந்தப் பெண்ணை சரியாகப் பார்க்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் அசதியில் தூங்கிவிட்டான்.

மறுநாள் மாலை ஆபிசிலிருந்து வந்தவுடன் முந்தையநாள் எடுத்த போட்டோக்கள் ஞாபகம் வந்தது. உடனே கேமராவிலிருந்து கார்டை உருவி லேப்டாப்பில் சொருகினான். போட்டோக்களை காபி செய்துவிட்டு ஒவ்வொரு போட்டோவாக நிதானமாகப் பார்க்க தொடங்கினான்.

ச்சை.. பாதிக்கு மேல போட்டோ ஷேக்காகியிருக்கு. ஒருவேளை கேமரா சரியில்லையா என நினைக்கும்போதே அந்தப் பெண்ணின் போட்டோ திரையில் வந்தது. தேவதை... அப்படியே அசந்து போனான். கேமராவை எடுத்து நச்சென ஒரு உம்மா கொடுத்து, ச்சே.. ஒரு நிமிஷத்துல உன்னைப் போயி தப்பா நினைச்சுட்டேனே என்று  தனக்குத்தானே பேசிக்கொண்டான்.





எப்படி.. எப்படி கண்டுபிடிப்பது அந்த பொண்ண? என்று யோசித்தவாறே மீண்டும் அந்த போட்டோவைப் பார்த்தான். அப்போது தான் அந்த கால்சென்டர் பெயரையும் அவள் ஏறிய வண்டியும் அலுவலக வண்டி தான் என்பதையும் பார்த்தான். வார்ரே வாஹ்... காட் இஸ் கிரேட். செல்லம்... உன்னைக் கண்டுபுடிச்சுட்டேன் செல்லம்.. என்றவாறே அந்த கால்சென்டரில் வேலைபார்க்கும் தன் நண்பன் டேவிட்டுக்கு டயல் செய்தான்.

மச்சி.. எப்படி டா இருக்க??

சொல்றா.. நல்லவனே..

மச்சி.. நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லவே இல்லையே டா..

ம்ம்ம்... நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? பேசி பல நாள் ஆச்சு...

நான் நல்லா இருக்கேன்.. ஒரு ஹெல்ப் மச்சி..

நெனச்சேன் டா... இத்தனை நாள் கழிச்சு நீ போன் போட்டு நல்லவனாட்டம் பேசினப்பவே நெனச்சேன்.. என்ன வேணும்..

ஒரு பொண்ணு டீட்டெயில் வேணும் டா.. உங்க ஆபீஸ் தான்.

ஓஹோ.. கதை அப்டி போகுதா.. இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை. நெறையா வேலை இருக்கு. அப்பறம் பேசறேன் டா..

மச்சி.. என்ன டா இப்டி சொல்லிட்ட.. ஒரு ப்ரெண்டுக்காக இதுகூட செய்ய மாட்டியா?

ப்ரெண்டுக்கு செய்வேன் டா.. உனக்கு செய்ய மாட்டேன்..

மச்சி.. கோச்சுக்காத டா.. நீ மட்டும் எனக்கு டீட்டெயில் குடுத்தா, இந்த வீக்கெண்ட் சரக்கு என்னுது.. சைட்டிஷ் உன்னுது.. ஓகே வா?

செல்லாது செல்லாது...

சரி சரி.. உனக்கு ஒரு புல், சைட் டிஷ்.. எல்லா செலவும் நானே பாத்துக்கறேன்.. இப்போ ஓகே வா?

சரி.. கன்சிடர் பண்றேன்.. நீ நாளைக்கு கால் பண்ணு...

டேய் டேய்.. ரொம்ப ஓவரா பண்ணாத டேவிட்..

சரி. இவ்வளவு கெஞ்சறதால உனக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்னு தோணுது.. என்ன டீட்டெயில் வேணும்?

குரலில் இன்ஸ்டன்ட் உற்சாகத்துடன், தேங்க்ஸ் மச்சி.. நான் ஒரு பொண்ணு போட்டோ அனுப்பறேன். அந்தப் பொண்ணைப் பத்தின ஆல் டீட்டெயில்ஸ் வேணும்.. வாட்ஸாப்ல அனுப்பிட்டேன் மச்சி. செக் பண்ணு.

சதீஷ்... இந்தப் பொண்ணு வேண்டாம் மச்சி.. ஏற்கனவே ஆள் இருக்குடா..

மச்சி.. நல்லாப் பாத்து சொல்லு டா.. நான் அனுப்பின போட்டோல இருக்கற பொண்ணுக்கா?

டேய்.. நல்லாப் பாத்துட்டுதான் சொல்றேன்.. அந்தப் பொண்ணுக்கு ஆள் இருக்கு.

சதீஷுக்கு லேசாய் தொண்டையை அடைத்தது.

சரிடா அந்தப் பொண்ணு பேர் என்ன?

அதான் ஆள் இருக்குன்னு சொல்றேன், அப்பறம் எதுக்குடா பேரை கேக்கற? விடு மச்சி.. உனக்கு வேற பிகர் செட்டாகும்.

மச்சி ப்ளீஸ் டா.. பேர் மட்டும் சொல்லு டா...

அவ பேர் அஞ்சலி. இதுக்கு மேல எதுவும் கேக்காத, என்று சொல்லி, லைனை கட் செய்துவிட்டான்.

அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி... ஒரு எலி ரெண்டு எலி மூணு எலி நாலு எலி அஞ்சலி.. நீ எனக்கு இல்லியா அஞ்சலி.. சொல்லு அஞ்சலி சொல்லு என்று அஞ்சலி படத்தில் வருவது போல வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தான் சதீஷ். இரவு தூக்கமே இல்லை. அவனும் சதீஷும் உருகி உருகி காதலிப்பது போலவும், கல்யாணம் குழந்தைகள் என அரைத்தூக்கத்திலும் கனவுகள்.

காலையில் எழுந்தவுடன், என்ன ஆனாலும் சரி, அவளை இன்னொரு தடவை பார்க்கவாவது வேண்டும் என்று தீர்மானித்து, நண்பனுக்கு டயல் செய்தான். அவன் கட் செய்தான். அடுத்த மூன்று முறைகளும் அப்படியே.. நேராக அந்த கால்சென்டருக்கே சென்றான். நண்பனுக்கு டயல் செய்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அவன் எடுக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் டயல் செய்தான். பதிலில்லை. அலுவலகத்திற்குள் சென்றான்.

டேவிடின் இருக்கைக்கு சென்றான். அவன் அங்கில்லை. அவன் வரவில்லை என்றார்கள் சக ஊழியர்கள். ஹெச் ஆர் ரூமுக்கு சென்றான்.

சார், ஐ அம் சதீஷ். அஞ்சலி எந்த டீம்? நான் அவங்கள பாக்கணும்.

சாரி சார். அவங்க இன்னிக்கு வரலை.

செயற்கையாக உடனே ஒரு கலவரத்தை முகத்தில் காட்டி, வரலையா... அவங்க காண்டாக்ட் டீட்டெயில் குடுங்க. வெரி அர்ஜன்ட்.

சாரி சார். பெர்சனல் இன்பர்மேஷன் யாருக்கும் குடுக்க கூடாது. கம்பெனி ரூல்ஸ்.

உடனே மௌன ராகம் டெக்னிக்கை உபயோகித்தான். அவங்க அப்பாவுக்கு ஆக்சிடென்ட். அவரை ஹாஸ்பிடல்-ல அட்மிட் பண்ணிட்டு வரேன். அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணனும். உடனே டீட்டெயில் குடுங்க.

சார், உங்களைப் பாத்தா சந்தேகமா இருக்கு. எந்த ஹாஸ்பிடல்? சரி, அஞ்சலி இங்க வேலை பாக்கறாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?

ஒரு நொடி யோசித்தான்.. அது, முருகன் ஸ்பெஷலிஸ்ட் ஹாஸ்பிடல். அவங்க அப்பா தான் சொன்னார். என் பொண்ணு அஞ்சலி, ஏர் வாய்ஸ் கால்சென்டர்-ன்னு சொல்லிட்டு மயங்கிட்டாரு. இப்போ ஐ.சி.யூ-ல வெச்சிருக்காங்க. டைம் இல்ல. சீக்கிரம் டீட்டெயில் குடுங்க.

ஹெச் ஆர் அவன் சொன்னதை உண்மையென நம்பி மொபைல் நம்பரும் வீட்டு அட்ரஸும் கொடுத்து அனுப்பினார்.

எதையோ சாதித்துவிட்ட மனநிலையில் துள்ளிக்குதித்து வெளியே வந்தான். முதல் வேலையாக அந்த மொபைல் நம்பருக்கு டயல் செய்தான். அஞ்சலி குரல் எப்படி இருக்குமென்ற ஆவல். ஆனால், மொபைல் ஸ்விச் ஆஃப் என்று வந்தது.

ஏமாற்றத்துடன் பார்க்கிங் ஏரியா வந்தான். வீட்டுக்கே நேராப் போயிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு வண்டியை கிளப்பினான். வீடு திறந்தே இருந்தது. கூடத்தில் இரண்டு மூன்று பேர் இருந்தனர். ஒருவர் விரக்தியாய் உட்கார்ந்திருந்தார். ஒரு பெண்மணி அழுதுகொண்டிருந்தார்.

இவனைப் பார்த்தவுடன் ஒருவர், தம்பி யாரு நீங்க? என்ன வேணும்?

சார் இங்க அஞ்சலி-ன்னு...

தம்பி... நீங்க யாரு?

என் பேர் சதிஷ். அஞ்சலியோட ப்ரெண்ட்.

அழுதுகொண்டிருந்த பெண்மணி இவனை வெறிக்க வெறிக்கப் பார்த்தார்.

விரக்தியாய் இருந்த பெரியவர் கோபமாய் வந்து இவன் சட்டையைப் பிடித்து, அந்த டேவிட் எங்கடா இழுத்துட்டுப் போயிருக்கான் என் பொண்ணை? சொல்லுடா...

சதீஷ் அதிர்ந்துவிட்டான். சார், எனக்கு தெரியாது சார். நான் ஆபீஸ்ல அஞ்சலியோட டீம்-ல வேலை செய்யறேன். நேத்திக்கு அவங்க ஆபீஸ்-ல இருந்து உடம்பு சரியில்லை-ன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டாங்க. அதான் பாக்க வந்தேன் என்று உளறிக்கொட்டி சமாளித்தான்.

உடனிருந்த ஒருவர் வந்து, விடுங்க. இனிமேல் யார் சட்டைய புடிச்சு என்ன ஆகப்போகுது? வாங்க போயி போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணுவோம், என்று சொல்லி இவனை விடுவித்தார்.

தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தான். வண்டியை விரட்டிக்கொண்டு நேராக அலுவலகம் வந்து சேர்ந்தான். வழியில் ஐந்தாறு மொபைல் கால்கள். எதையும் அட்டண்ட் செய்யவில்லை. செய்யும் மனநிலையிலும் இல்லை.

அலுவலகம் வந்தும் வேலை பார்க்க முடியவில்லை. மனசெல்லாம் அஞ்சலியையும் அதைவிட டேவிட்டைப் பற்றியும் இருந்தது. ச்சே... டேவிட்.. இப்படிப் பண்ணிட்டியே டா... என்று மனதுக்குள் குமுறினான்.

போனை எடுத்துப் பார்த்தான். டேவிட் நம்பரிலிருந்து 4 கால்கள். வேறேதோ புது நம்பரிலிருந்து 3 கால்கள். வாட்ஸாப்பில் புதிய மெசேஜ் வந்தது. ஓபன் செய்தான்.




அஞ்சலியுடன் செல்ஃபி எடுத்து அனுப்பியிருந்தான் டேவிட். கடுப்பில் பதிலுக்கு நடு விரலை அனுப்பி வைத்தான். எல்லாம் இந்தக் கேமராவால வந்தது. முதல் வேலையா அதை OLX-ல வித்துடனும் என்று நினைத்துக்கொண்டான்..

சதீஷ்.. அந்த மாட்யூல் என்ன ஆச்சு? என்று மேனஜர் கத்தியது காதில் விழுந்து நினைவிற்கு வந்தான்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2