குமார்ஜியும் கீதோபதேசமும்

Dear Sri Kumar-ji pranams. Please accept my apologies for writing this in Tamil, as I’m not as proficient as you in English. Hope Srini sir or anyone from Sahasranamam sathsangh would translate it to you.


இன்று ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் அவர்கள் இல்லதில் நடைபெற்ற ஸஹஸ்ரநாமம் நிகழ்வில் கலந்துகொள்ள சென்றிருந்தேன். ஸ்ரீ குமார்ஜி பஹ்ரைனிலிருந்து பிரியாவிடை பெற்று செல்வதால் அவருக்கு திவ்ய ப்ரபந்த ஸத்சங்கத்தின் சார்பில் ஒரு சிறிய அன்பளிப்பையும்   கொடுப்பதற்காக சென்றிருந்(தோம்)தேன்.

முதலில் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பிறகு வரிசையாக சில பல ஸ்தோத்திரங்கள். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அத்தனை அழகாக ஸ்லோகங்களையும் நாம ராமாயணத்தையும் சொல்வதாகட்டும்.. அதுவும் பார்க்காமல்.. அற்புதம். நானெல்லாம் பார்த்துப் படித்தாலே ஸஹஸ்ரநாமத்தில் இல்லாத நாமங்களை எல்லாம் நீங்கள் கேட்கலாம். குழந்தைப் பருவத்தில் இத்தனை விஷயங்களை கற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அது அதுக்கு ஒரு நேரம் வரவேண்டுமே. அந்த வகையில் நிச்சயம் அந்தக் குழந்தைகள் புண்யாத்மாக்கள்.

கீதையின் 13வது அத்தியாயம் பற்றிப் பேச ஆரம்பித்தார் ஸ்ரீ குமார்ஜி. ஏற்கனவே ஒரிரு முறை அவர் பேசிக் கேட்டிருக்கிறேன். நான் கேட்டவரையிலே பேச்சில் ஒரு ஈர்ப்பும், நடுநடுவே ஜனரஞ்சகமாகவும் பேசக்கூடியவர். இம்முறையும் அப்படியே. பஞ்சபூதங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த உடலின் இயல்பு பற்றியும்  புத்தி, மனஸ், உடல் இவைகளுக்கான தொடர்பு பற்றியும் அத்தனை ரசமாகப் பேசினார்.

ஷ்யாம்ஜி அவரது மனம் போல பெரியதான ஒரு தர்பூசணி பிரசாதமாக சமர்பித்திருந்தார். அதில் ஆரம்பித்து, நாம் ஒரு பொருளை பார்க்கும்போது நம் உடலில் என்னவெல்லாம் நிகழ்கிறது, எப்படி அந்தப் பொருளை தெரிந்துகொள்கிறோம், உணர்கிறோம் என்றெல்லாம் எளிதாக விளங்கும் வகையில் சொல்லி சபையிலே இல்லாத ஜாங்கிரியில் வந்து முடித்தார். எல்லாருக்கும் அந்த க்ஷணம் ஜாங்கிரி சாப்பிட்டே ஆகவேண்டும் போலாகிவிட்டது.

மேலும் தொடர்ந்து பேசிய குமார்ஜி பல உதாரணங்கள் சொல்லி, பெண்கள் பட்டு துணியை தொட்டுப் பார்த்து என்ன வகையான பட்டு, உண்மையா போலியா என்றெல்லாம் சொல்லிவிடுவார்கள் என்று சொல்லும்போது சிரிப்பொலி. அப்போது ஸ்ரீ ஸ்ரீதர் கல்யாணராமன், தொடவே தேவையில்லை. கண்ணால் பார்த்தே சொல்லிவிடுவார்கள் என்று சொன்னதும், இன்னும் கொஞ்சம் அதிகமான சிரிப்பொலி.

டாப் கியர் மாற்றி வேகமெடுக்கும் நேரத்தில், பட்டென நிறுத்தி அடுத்த வாரம் வாய்ப்பிருந்தால் தொடரலாம் என்று சொல்லிவிட்டார். இத்தனை நாள் அவர் சொல்லி அந்த கீதையைப் பற்றி கேட்டவர்களுக்கு நிச்சயம் பசுமரத்தாணி போல, கீதையும் கீதாச்சார்யனும் மனதில் பதிந்திருப்பார்கள். இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று ஏங்க வைத்தது அந்த பேச்சு. இனியொருமுறை அவர் கீதோபதேசம் பற்றி பேசிக் கேட்க வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தால் தன்யனாவேன்.

அந்த கீதாச்சார்யனின் அன்பிற்குப் பாத்திரமான ஸ்ரீ குமார்ஜி அவனருள் பெற்று என்றும் இன்புற்றிருக்கப் பிரார்த்திக்கிறேன்.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2