தூக்கு தண்டனை

என்ன பாஸ்கரு.. ரெண்டு நாள்ல தூக்கு. ஆனா ரொம்ப குஷியா இருக்கியேப்பா. வருத்தமே இல்லையா?


எதுக்குண்ணே வருத்தப்படணும்? அந்த ரவி பெரிய நல்லவனாட்டம் போலீஸோட சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு என்னை ஜெயில்ல போட்டான்... நான் பெயில்ல வந்து அவனைப் போட்டேன். ஆசை தீர வெட்டினேன். சும்மா ரத்தம் தெரிச்சுது பாரு... சுத்தி இருந்தவனெல்லாம் தெறிச்சு ஓடிட்டான். எனக்கு தூக்குன்னு தேதி தான் குறிச்சிருக்காங்க. ஆனா இன்னும் தூக்குல போடலல்ல.. என்ன நடக்குதுன்னு பாரு.

பாஸ்கரு ஏதோ பிளான் வெச்சிருக்க போல..

ஆமா. பிளான் இருக்கு. வொர்கவுட் ஆகுமா தெரியல. ஆனா வொர்க் ஆச்சுன்னா அப்பறம் இந்த பாஸ்கரோட லெவலே வேற..

அப்படி என்ன பிளான் பாஸ்கரு?

இருண்ணே. நாளன்னிக்கு நீயே தெரிஞ்சுக்குவ..

நீ எஸ்கேப் ஆனா, இந்த அண்ணனை மறந்திராத பாஸ்கரு.

உன்னைப் போயி மறப்பேனா.. நான் வெளில போனதும், மொதல் வேலை, உன்னை வெளில கொண்டுவர்றது தான்.

தூக்கு தண்டனை நாளும் வந்தது.

பாஸ்கர், உங்க கடைசி ஆசை என்ன?

ஐயா, அடுத்த மாசம் நடக்கப்போற தேர்தல்ல எங்க தொகுதியில நான் வேட்பாளரா நிக்கணும். அவ்வளவு தான்.

அதுக்கு வாய்ப்பில்லை. வேற ஏதாவது ஆசை இருக்கா?

இல்லீங்க ஐயா. எனக்கு தேர்தல்ல நிக்கணும். அவ்வளவுதான். அது தான் என் ஆசை.

கிரிமினல் கேஸ் இருக்கறவங்க தேர்தல்ல நிக்க முடியாது பாஸ்கர். புரிஞ்சுக்கங்க. வேற ஏதாவது எங்களால நிறைவேற்றக்கூடிய ஆசை இருந்த சொல்லுங்க.

ஐயா, இந்த நாட்டு நடப்பு உங்களுக்கே நல்லா தெரியும். கட்சியில அரசியல்ல இருக்கற நல்லவங்களை விரல்விட்டு எண்ணிடலாம். அப்படி இருக்குறப்போ, நான் தேர்தல்ல நிக்க முடியாதா? ஐயா நீங்க மனசு வெச்சா, என்னை தேர்தல்ல நிக்க வைக்க முடியும். தோத்துட்டா அடுத்த நாளே என்னை தூக்குல போடுங்க.

பாஸ்கர், ஒருவேளை நீங்க ஜெயிச்சுட்டா?

அப்போ கூட, ஜெயிச்ச சந்தோஷத்துல நானே வந்து தூக்கு மேடையில நிப்பேன்.

ம்ம்ம்.. சரி. உங்க தூக்கு தண்டனையை தேர்தலுக்கு அப்பறம் தள்ளிவைக்கறேன். மனுதாக்கல் பண்றதுக்கு ஏற்பாடு பண்றேன்.

பாஸ்கரு, சொன்ன மாதிரியே தூக்குல இருந்து இன்னிக்கு தப்பிச்சுட்ட. ஆனா இன்னும் ஒரு மாசம் தானே..

அண்ணே அதுக்கும் ஒரு பிளான் இருக்கு. பொறுத்திருந்து பாருண்ணே..

பாஸ்கர் சுயேட்ச்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்தான். தான் ஒரு தூக்கு தண்டனை கைதி என்பதையே பிரச்சாரத்தில் பேசினான். எனக்கு இருக்கற கடைசி ஆசை தேர்தல்ல நிக்கணும். அடுத்த மாசம் எனக்கு தூக்கு. நான் தோக்கறதும் ஜெயிக்கறதும் உங்க கைல தான் இருக்கு.

ஏண்டி சரசு.. யாருக்கு ஓட்டு போடப்போற?

என்னக்கா இப்டி கேக்கற? கத்தையா காசு வாங்கியாச்சுல்ல.. அந்த செல்வத்துக்கு தான் போடணும். இல்லாட்டி காசை வாங்கிட்டு துரோகம் பண்ற மாதிரி ஆயிடுமே..

போடி இவளே... அவன் என்ன சொந்த காசையா குடுத்தான்? எல்லாம் போன தடவை MLA-வா இருந்தப்போ நம்மகிட்ட திருடினது தான்..

சரிக்கா. இப்போ என்ன செய்யலாம்-னு சொல்ற?

பாவம்டி அந்த பாஸ்கரு.. அடுத்த மாசம் தூக்கு. அவனுக்கு போட்டா ஜெயிச்ச சந்தோசத்துலயாவது சாவான்.

அக்கா.. அவன் செத்துட்டா திரும்ப இடைத்தேர்தல் வருமே?

வரட்டும். அப்போ செல்வம் திரும்ப காசு குடுப்பான். அவனுக்கே ஓட்டு போடுவோம்.

அதுவும் சரிதான்... இந்த தடவை ஓட்டு பாஸ்கருக்கு தான்.

மக்கள் மத்தியில் பாஸ்கருக்கு அனுதாப ஆதரவு பெருகியது. யாருமே எதிர்பாராதவகையில் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்து MLA ஆகிவிட்டான். யார் யாரையோ பிடித்து ஆளுங்கட்சியை நுழைந்து மந்திரியாகவும் ஆகிவிட்டான்.

நீதிபதி அவனை கைதுசெய்து தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார். போலீஸ் அவனை கைதுசெய்ய விரைந்தது.

என்னையா கைது பண்ணபோறீங்க? நான் தான் இப்போ உள்துறை சட்டம் ஒழுங்கு அமைச்சர், தெரியுமா??

போலீஸ் செய்வதறியாமல் திணறினர். நீதிபதிக்கு தகவல் தெரிவித்தனர். பாஸ்கர் ஜெயித்ததே அவருக்கு அதிர்ச்சியாக இருந்த சமயத்தில் அவன்தான் இப்போது சட்ட அமைச்சர் என்பதையறிந்து அவர் மாரடைப்பால் காலமானார்.

பாஸ்கர் மெல்ல தனது ஆட்டத்தை ஆரம்பித்தான். ரவியைப் போல பலர் சின்னாபின்னமாய் செத்தார்கள். இடைத்தேர்தலையும் பணத்தையும் எதிர்பார்த்து ஓட்டளித்த மக்கள், ஏமாந்தனர். கடைகளிலும் வணிக நிறுவனங்களிலும் வசூல்வேட்டை செய்தது போய், இப்போது வீடுகளிலேயே வசூல் வேட்டை துவங்கிவிட்டான் பாஸ்கர். மாதாமாதம் அந்தந்த வீட்டு வருமானத்திற்கு ஏற்றவாறு வசூல் நிர்ணயித்தான்.

இதையெல்லாம் கவனித்து கச்சிதமாக நடத்திவருவது, ரேப் கேஸில் 4 தடவை கைதாகி அவனுடன் ஜெயிலில் இருந்த அந்த அண்ணன் தான். அவரு எப்படி வசூல் பண்ணுவார்னு சொல்லித்தான் தெரியனுமா???

உங்க வீட்டு காலிங்பெல் சத்தம் கேக்குதா? எதுக்கும் கதவை திறக்கறதுக்கு முன்னாடி யோசிச்சு திறங்க. பாஸ்கரோ அந்த அண்ணனோ வசூலுக்கு வந்திருக்கலாம்...

பணமில்லைன்னு சொன்னா, உங்களுக்கு தூக்கு நிச்சயம்.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2