ஆண்டு விழா - 2
"ஹே எப்புட்றா" என்று குத்துவிளக்கை கொஞ்சம் உற்றுப் பார்த்தால், அத்தனையும் பேட்டரியில் எரியும் LED தீபங்கள். டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் சோ மச் யூ சீ... விளகேற்றி முடித்ததும் அடுத்த ஜோடி மாணவியும் மாணவனும் வந்தார்கள். யார் லீட் எடுப்பது என்று குழப்பம் போல. ஒருவரை ஒருவர் ஒரு நொடி பார்த்துக்கொள்ள, "லேடீஸ் பர்ஸ்ட்" என்று கண்ணாலேயே சொல்லிவிட்டான் பையன். அடுத்ததாக ஒரு பாடலைப் பாடப்போகிறார்கள் என அறிவித்துவிட்டுப் போனார்கள்.
இது 9வது வருட ஆண்டு விழா என்பதால் தலைப்பு / தீம் - நவரசம் என வைத்திருந்தார்கள்.
இன்பம் எனும் ரசத்திற்க்கு அந்தப் பாடல் என நினைக்கிறேன். பாஷை புரியாவிட்டாலும், கேட்க நன்றாகவே இருந்தது. அந்தக் கண்ணாடி போட்ட பையன், சிரிப்பான குறும்பு முகத்துடனேயே அவ்வபோது ஒரு நொடி இருந்துவிட்டு, மீண்டும் சாதாரணமாக முகத்தை வைத்துக்கொள்வது என தொடர்ந்தான். Master Oogway பையன், தலையை அசைத்து கண்ணை மூடி ரசித்துப் பாடிக்கொண்டிருந்தான். அது முடிந்ததும் மேடையின் திரை போடப்பட்டது. பள்ளியின் Band மாணவர்கள் இருவர் கீபோர்டும், கிட்டாரும் filler-ஆக வாசித்தார்கள்.
திரை விலகியது. அடுத்த நிகழ்ச்சி பரதநாட்டியம். பரந்த அந்த மேடையில் நடு நாயகமாக கோகுலன் மகள் கோபிகா மற்றும் சற்று இடைவெளியில் இன்னொரு குழந்தை அமர்ந்திருக்க, 8 குழந்தைகள் சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். மது பாலகிருஷ்ணன் குரலில் "எத்தனை எத்தனை ராகங்கள்" என்ற பாடலுக்கு, பரதநாட்டியம் ஆடினர். அனேகமாக இன்பம்/மகிழ்ச்சி ரசத்திற்க்காக இந்த பரதநாட்டியம் இருக்கலாம். கடைசி அபினயத்தை இவர்கள் கோர்வையாக பிசிறு தட்டாமல் ஆடி அப்படியே ஃப்ரீஸ் ஆகி நின்று முடிக்க, அரங்கம் கரவொலி எழுப்பியது.
அடுத்து பள்ளி முதல்வர் வந்து பேசினார். பள்ளியின் கொள்கைகள் மற்றும் குழந்தைகளுக்கு தாங்கள் கற்பிக்கும் முறைகள் இதையெல்லாம் சொல்லிவிட்டு, குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக பல விஷயங்கள் பேசிவிட்டு, குழந்தைகள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பணியாற்றுபவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு பேச்சை முடித்துக்கொண்டார். இவராவது "அதை" சொல்வார் என எதிர்பார்த்தேன். ம்ஹ்ம்.. சொல்லவில்லை.
அடுத்ததாக பள்ளியின் கடந்த வருட சாதனைகள், மற்ற பள்ளிகளில் நடந்த போட்டிகள், பஹ்ரைன் அளவில் நடந்த போட்டிகள் மற்றும் சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் இந்தப் பள்ளியின் மாணாக்கர்கள் பெற்ற வெற்றிகள் பற்றி நீண்ட நேரம் பேசியும் திரையில் போட்டக்கள் போட்டும் காண்பித்தனர். சத்யா சாரின் பையன் மனோஜ் மற்றும் பூர்ணிமா - மணிகண்டன் மகள் சின்மயி பல போட்டோக்களில் தென்பட்டனர். குறிப்பாக ஓவியப் போட்டி ஒன்றில் சின்மயி வென்ற போட்டோ சில பல நொடிகள் திரையில் நகராமல் நின்றது.
அடுத்ததாக நவரசம் என்ற தலைப்பிலேயே ஒரு டான்ஸ். காந்தாரா பட மாஸ் ஹிட் பாடலான வராஹரூபம் எங்கள் நவரசம் பாட்டின் காப்பி என்று கேஸ் போட்டார்களே, அதே நவரசம் பாடலுக்கு, குழந்தைகள் ஆடினார்கள். இந்த ஆட்டம் பரதநாட்டியமாக இல்லையென்றாலும், நன்றாகவே அபினயம் பிடித்தார்கள். இவர்கள் வழக்கம் போல கடைசி ஃப்ரீஸ் போசில் இருக்க, ஸ்க்ரீன் போட கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஒரு குழந்தை எழுந்து போக நினைத்து பின்னர், மீண்டும் அதே போசில் அபினயம் பிடித்தபடி நின்றது. நான் பள்ளியின் ஒன்றிரண்டு டீச்சர்களைத்தான் பார்த்திருக்கிறேன் என்றாலும், இந்த ஃப்ரீஸ் போசில் பார்க்கும்போது சில குழந்தைகள் அவர்களின் சாயலில் இருப்பதாக ஒரு மனப்பிராந்தி. மேலும் விளக்கம் கொடுத்தால் அடுத்த வேளை சோறு சந்தேகம் என்பதால் இத்துடன் முடித்துகொள்வோம். மேலதிக விபரங்களுக்கு போனில் தொடர்பு கொள்ளவும். (குறிப்பு: ஆபீஸ் நேரத்தில் அழைத்தால், நீண்ட நேரம் பேசலாம்)
அடுத்து ஸ்ருங்கார ரசத்திற்க்கு ஒரு டான்ஸ். இரண்டு பாடல்கள் சேர்த்து ஒரே டான்ஸாக உருவாக்கியிருப்பார்கள் போல. கொஞ்சம் பெரிய மாணவியர் என்பதால், நேர்த்தியாக ஆடினார்கள். டான்ஸ் டீச்சர் பெண்டு நிமிர்த்தியிருப்பார் போல. ஆனாலும், இரண்டாவது பாடல்/செட் ஆட வந்த குழந்தைகள், ஒரு சிலர், மற்றவர்கள் ஆடுவதை காப்பி அடித்தனர். அது சரியாக sync ஆகாமல், ஒன்றிரண்டு நொடிகள் தாமதமாக ஆடுவதால், அந்தக் காட்சி பார்க்க, வாட்சாப் காலில் சில சமயம் ஆடியோ லேட்டாக கேட்பது போல, இருந்தது. ஆடி முடித்த ஒரு மாணவி ஸ்க்ரீன் போடுவதற்குள் தன் பெற்றோருக்கு மேடையிலிருந்து கையசைக்க, பதிலுக்கு அவர்களும் அசைத்திருப்பார்கள் போலும். அந்தக் குழந்தை முகத்தில் அத்தனை சிரிப்பும் ப்ரகாசமும்.
அடுத்து பள்ளியின் இயக்குனர் பேசவந்தார். இவரும் முதல்வர் போலவே பல விஷயங்கள் பேசிவிட்டு உரையை முடித்தார். இவரும் "அதை" சொல்லவில்லை. பிறகு மதிப்பிற்குரிய இந்திய தூதர் (Ambassador) வந்து பள்ளியின் ஆண்டு மலரை வெளியிட்டுவிட்டு, சில நிமிடங்கள் "உங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக பஹ்ரைனிலும் சரி, இந்தியா போவதாக இருந்தாலும் சரி, இந்தியத் தூதரகம் தேவையான எல்லா உதவிகளையும் செய்யும்" என்ற சாராம்சத்தில் பேசினார்.
தொடர்வோம்...
Comments
Post a Comment