அடுத்ததாக ஹாஸ்ய ரசம். அதே தான். அந்த Mime நாடகம் அரங்கேறியது. டெக்னாலஜி,
சோசியல் மீடியா, போன், செல்ஃபி மோகம் போன்றவற்றை வைத்து எழுதிய கதைக்கு,
பின்னனியில் கேட்டதுமே சிரிப்பை வரவழைக்கும் இசை ஒலிக்க, மாணவர்கள்
மேடையில் நடித்து அசத்தினார்கள். பிரச்சனையின் போது செல்பி எடுப்பது,
போனைப் பார்த்துக்கொண்டே சுற்றத்தை மறப்பது என நடைமுறையில் நாம் காணும்
பலவற்றையும் அரங்கேற்றினார்கள். குறிப்பாக, பிரசவ அறையில் குழந்தை
பெற்றெடுத்த பெண் போன் பார்ப்பது போல இருந்த காட்சியும், ஒரு மாணவன்
(கொஞ்சம் பெரியவன்) பின்னால் இருந்து ஒரு 7-8 வயது சிறுவனை (மாணவனை)
புதிதாய் பிறந்த குழந்தையாக, அலேக்காக தூக்கிக் கொண்டுவந்து பெற்றோரிடம்
கொடுப்பது போன்ற காட்சி குபீர் சிரிப்பை உண்டாக்கியது.
இந்த
நிகழ்ச்சியுடன் நான் மட்டும் கிளம்புவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால்
இரவு மணி 8-ஐ நெருங்கிவிட்டபடியால், 9 மணியளவில் நிகழ்ச்சி முடிந்ததும்
மீண்டும் தங்கமணியையும் குழந்தைகளையும் கூட்டிச் செல்ல வர வேண்டும்
என்பதால் அங்கேயே இருந்து நிகழ்ச்சி முடிந்ததும் எல்லாரும் சேர்ந்தே
கிளம்பலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
மீண்டும்
ஒரு
filler-ஆக
பள்ளியின் Band மாணவர்கள் இருவர் கீபோர்டும், கிட்டாரும் வாசித்தார்கள்.
பிறகு வந்தது ரௌத்ர ரசத்திற்கான நிகழ்ச்சி. காஞ்சனா படத்தில் இருந்து
"கொடியவனின் கதையை முடிக்க" பாடலுக்கு குழந்தைகள் ஆடினார்கள். நேர்த்தியாக
இருந்தது. இதில் set property எல்லாம் வைத்து ஆடினார்கள். ஒரு மண்டை ஓடு
மாலை மற்றும் நெருப்புக் கொழுந்து போன்ற ஒரு தெர்மாகூலும் வைத்து
ஆடினார்கள். அந்த மண்டை ஓடு மாலையை சில குழந்தைகள் முதலில் வந்த போது இடம்
மாற்றி/தள்ளி வைத்துவிட, அதை எடுத்து மாட்டிக்கொண்டு ஆட வேண்டிய நேரத்தில்
கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஆனாலும் சமாளித்தார்கள். அடுத்த காட்சி,
இரண்டு குழந்தைகள் மேடையின் நடுவே படுக்க, அவர்கள் மீது பெரிய கருப்புத்
துணியைப் போட்டதும், அவர்கள் ஒரு கையையும் ஒரு காலையும் தூக்க, மேலே
போடப்பட்ட துணி எழும்புவதைப் பார்க்க அமானுஷ்யமாக இருந்தது.
கடைசி
ஃப்ரீஸ் போஸிற்கு ஒரு சில காஞ்சனாக்கள்.. இல்லையில்லை.. குழந்தைகள் இடம்
மாறி நிற்க, ஓரிரு நொடிகளில் அவரவர் இடதிற்குப் போனார்கள். இதற்குள்
ஸ்க்ரீன் போடுவதற்குள்ளாக ஆங்கரிங் மாணவனும் மாணவியும் வர, சில பல
காஞ்சனாக்கள் முறைத்தார்கள். பல்லைக் கடித்தபடியே தலையையும்
ஆட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
அடுத்ததும்
ஒரு டான்ஸ். ஆனால் நவரசத்தில் எந்த ரசம் என்று தெரியவில்லை. அனேகமாக, இந்த
நவரசம் தீமை முந்தைய டான்ஸுடன் ஏறக்கட்டி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.
நாட்டுப்புறப் பாடலுக்கு குழந்தைகள் ஆடினார்கள். இதிலும் set property
உபயோகப் படுத்தினார்கள். இதிலும் இடம் மாற்றி வைத்து, பிறகு ஒரு சிலர் அதை
எடுத்தும், சிலர் எடுக்காமலும் ஆடி சமாளித்தனர். ஆடி முடித்த பிறகு சிலர்
அந்த
set property-யை ஸ்க்ரீன் போடும் இடத்திற்கும் முன்பாகவே மேடையில் வைக்க,
ஸ்க்ரீன் போட்ட பிறகு அவை மட்டும் வெளியே இருந்தன. யாரோ ஒரு டீச்சர் வந்து
அதையெல்லாம் எடுத்துக்கொண்டு போனார்.
அடுத்தது கர்பா மற்றும் தாண்டியா (குஜராத்தி) டான்ஸ். (இந்த டான்ஸுக்கு எதாவது படம் தேடிப்பிடித்துப் போட்டால், பதிவை பப்லிஷ் செய்ய முடிவதில்லை. 4-5 முறை முயற்சி செய்து பார்த்துவிட்டேன். ஏதோ சட்டத்தை மீறி விட்டதாக நோட்டிஸ் அனுப்புகிறார்கள் க்ராதகர்கள்.. கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா உங்களுக்கு???)
அதற்கடுத்து
பதினோறாம் வகுப்பு மாணவன் ஒருவன் எழுதி இயக்கிய நாடகம். பெற்றோர்களால்
புறக்கணிக்கப்படும் குழந்தைகள் குறிப்பாக ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான
நாடகம். பெற்றோர் புறக்கணித்த குழந்தையை அரவணைக்கும் டீச்சர்,
அக்குழந்தையிடம் இருக்கும் பாடும் திறமையை கண்டுபிடித்து வெளிக்கொணர்வது
மூலம் அந்தப் பெற்றோருக்கு குழந்தை மீது மீண்டும் பாசம் வர, அவர்கள் தவறை
உணர்ந்து குழந்தையை அன்புடன் வளர்க்க வழி செய்வதாக நாடகம். இயக்கிய மாணவன்
முதலில் மேடையில் வந்து நாடகத்தைப் பற்றிப் பேசிவிட்டு ஆடியன்சைப் பார்த்து
கையசைத்தபடியே உள்ளே சென்றான். அப்போது அத்தனை பெரிய ஆரவாரம் இல்லை. ஒரு
சிலரே பதிலுக்கு கையசைத்தனர்.
ஆனால் அடுத்த கொஞ்ச நேரத்தில்... (தொடர்வோம்...)
குறிப்பு: இந்த நாடகத்திலாவது "அதை" நிச்சயமாக சொல்லியிருக்க வேண்டும். ம்ஹ்ம்.. சொல்லவில்லை.
Comments
Post a Comment