ஆண்டு விழா
ஆண்டு விழா-ங்கறது பொதுவான ஒரு சொல் தான் அப்படின்னாலும், கேட்டத்துமே பலருக்கும் நினைவுக்கு வர்றது என்னவோ பள்ளி ஆண்டு விழா-வாகத்தான் இருக்கும்.
கரெக்ட். நாம இங்க பாக்கப் போறது (பாக்கப் போறதா படிக்கப் போறதா? நாங்க பாத்ததை நீங்க படிக்கப் போறது.. புரியற மாதிரி இருக்கா?)
பள்ளிப் படிப்பு முடித்து 3 கழுதை வருஷமாச்சு (ஆமா.. ஒரு கழுதைக்கு 7 வயசு தானே?)
6வது படிக்கும்போது ஹாஸ்டலில் இருந்தபோது, "ஹாஸ்டல் டே" கலை நிகழ்ச்சியில் பங்குபெற்றது மட்டுமே கடைசி. அதுவும் நான் தோன்றும் அந்த ஒரு காட்சி, "பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா" பாடலுக்கு முருகனுக்கு தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டும் கோவில் குருக்களாக கிட்டதட்ட ஒரு நிமிடம் வரை நடிக்கும் மிகப்பெரிய வேடம்.. என் நடிப்பைப் பார்த்து மெய் மறந்து முருகன் அப்படியே சிலை போல நின்றுவிட்டான் (அட.. அந்தப் பையனுக்கு வேஷமே சிலை மாதிரி நிக்கறது தான்). மொத்தக் கதையையும் என் தோளில் தாங்கி நடித்த சிறப்பான அனுபவம். பார்த்தவர்கள் எல்லாரும் எழுந்து நின்று கைகூப்பி.. இல்லையில்லை.. கைதட்டினார்கள். பை த பை.. எனக்குத் தற்புகழ்ச்சியோ முகஸ்த்துதியோ புடிக்காது. போன் பண்ணியெல்லாம் நீங்க என் நடிப்பை பாராட்ட வேண்டாம்.
ஒரு வருஷம் ஹாஸ்டல் வாழ்கைக்குப் பிறகு, "அட என்ன சார் நீங்க.. சரியாவே அடிக்க மாட்டேங்கறீங்க.. ஹாஸ்டல்-ல ரொம்பத்தான் செல்லம் குடுக்கறீங்க.. நல்ல பிள்ளையை அடிச்சு வளக்கணும்.. அவனை நானே டீல் பண்ணாத்தான் சரியா வரும்" என என் அப்பா நல்லதொரு முடிவு எடுத்ததால், 7வது தொடங்கி டே-ஸ்காலர். பள்ளி ஆண்டு விழாக்களில் எல்லாம் கலந்து கொண்டதேயில்லை. எங்க... கணக்கில் குறைந்தபட்சம் 35 மார்க் வாங்கி பார்டருக்கு அந்தப் பக்கத்தில் விழுந்துவிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் ஓடிக்கொண்டிருந்த எனக்கு, கலை நிகழ்ச்சிக்கெல்லாம் ஏது டைம்?
சரி.. பழைய கதையெல்லாம் இப்போ எதுக்கு..
கடந்த வியாழக்கிழமை (19-Jan-2023) அன்று பெரிய பையனின் பள்ளி ஆண்டு விழாவில் கலந்துகொண்டோம். அவன் அதில் Mime (வசனம் இல்லாமல் உடல்மொழி நடிப்பு) பாணி காமெடி நாடகத்தில் நடித்திருந்த படியால், எங்களுக்கு நேரடியாக கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது பள்ளி நிர்வாகம். கலை நிகழ்ச்சியில் பங்கேற்காத மற்ற மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் ஆன்-லைனில் மட்டுமே பார்க்க முடியும்.
பள்ளிக் குழந்தைகளை வைத்தே நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் பண்ணியது, பாராட்டத் தக்கது. ஒரு பெண்ணும் பையனும் என 3 ஜோடி மாணவ மாணவிகளை வைத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
அதை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் சொல்லவில்லை. (எதை? விரைவில் தெரியும்.)
முதலில் வந்து பேச ஆரம்பித்த பெண்ணும் பையனும், அந்தப் பெண் ஒய்யார நடையில் வர, அந்தப் பையன் அலட்டிக்கொள்ளாமல் வர நடு மேடையில் நின்று அங்கு வந்திருந்த ஆடியன்ஸைப் பார்த்து, அதாவது பெற்றோர்களையும், சிறப்பு விருந்தினர்களையும் பார்த்துப்
பேச ஆரம்பித்தனர். ஆனால் அந்தப் பையன், மற்ற சமயங்களில் ஆடியன்ஸைப் பார்த்தாலும், பேசும்போது கடைசி வரிசையில் ஆடியன்ஸைப் பார்ப்பத்து போல பார்வையை நிலை நிறுத்தி, யாரையுமே பார்க்காமல் தான் பேசினான். அந்தப் பெண் பேசும்போது மைக்கில் சிறிது எக்கோ எபக்ட் (எதிரொலி) வர, ஒரு நொடி பேச்சை நிறுத்திவிட்டு மீண்டும் விட்ட இடத்திலே பேச்சை தொடங்கி அனாயசமாக சமாளித்தார். பதட்டமே இல்லை. இதற்குள் அந்த எக்கோ எபக்ட்டை நிறுத்திவிட்டார்கள்.
அவர்கள் போனதும், வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்று மலர்ச்செண்டு கொடுத்து அவர்களுக்கு மரியாதை செய்வதைத் தொகுத்துப் பேச அடுத்த ஜோடி மாணவனும் மாணவியும் வந்தனர். அந்தப் பையன் தான் லீட் எடுத்துப் பேச வேண்டும். பதட்டமில்லாமல் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தான். ஆனால், இரண்டு வரி பேசியதும், மூன்றாவது வரி மறந்து விட்டது போலும். கொஞ்சம் வாய் குழற, உடனே சரிசெய்து கொண்டு மீண்டும் பேசினான். ஆனால், அந்தப் பெண், பதட்டமில்லாமல் பேசி முடித்தார்.
பஹ்ரைன் தேசியகீதத்துடன் விழா ஆரம்பமானது. பள்ளி மாணவர்களே மேடையில் தோன்றி ஆர்கெஸ்ட்ரா போல கோரஸ் பாடினார்கள். அதில் ஒரு பையன், அவனுடைய அப்பா அம்மாவைப் பார்த்துவிட்டான் போல. புருவத்தை உயர்த்தி கொஞ்சம் சிரித்துவிட்டு, உடனே சட்டென மேடையில் நிற்பது நினைவுக்கு வந்தவனாய், முகத்தை சீரியசாக வைத்துக்கொண்டு பாட ஆரம்பித்தான். அவன் கண்ணாடி வேறு போட்டிருந்தபடியால், அவனது அந்த முகபாவம், பார்த்தவுடனே சிரிப்பை வரவழைக்கும்படியாக இருந்தது.. ஆனால், அவனை யாரும் கண்டுகொண்டிருக்கவில்லை. நிகழ்ச்சி தொடர்ந்தது.
அடுத்ததாக நமது இந்திய தேசியகீதம் ஒலித்தது. எத்தனை நாளாயிற்று பள்ளி நிகழ்ச்சியில் இதை பாடி/கேட்டு. மயிர்கூச்செறிய நானும் பாடினேன். பிறகு அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பையன் வந்து மேடையில் குரான் வாசிக்கத் தொடங்கினான். முகத்தில் அத்தனை அமைதி. பதட்டம் துளியளவும் இல்லை. அனுபவித்துப் பாடி/வாசித்து முடித்தான். சட்டெனப் பார்த்தால் Kungfu Panda படத்தில் வரும் Master Oogway போல இருப்பான்.
அடுத்ததாக, விளக்கேற்றும் நிகழ்வு. ஆளுயர குத்துவிளக்கில், எண்ணெய் இல்லை. திரி இல்லை. தீக்குச்சி கூட கொளுத்தவில்லை. ஆனால் விளகேற்றிவிட்டனர். "ஹே எப்புட்றா" என நினைத்து பதிலை தேடிக் கொண்டிருங்கள்...
Comments
Post a Comment