நாடகத்தின் நடுவே அவன் Stephen Hawking-ஆக வீல் சேரில் மேடைக்கு வந்து சில பல விஷயங்கள் சொல்லிவிட்டு மீண்டும்
கையசைத்தபடியே உள்ளே
செல்ல, இப்போது பலத்த கரவொலி. கிட்டதட்ட எல்லாருமே பதிலுக்கு கையசைத்து அவனை நெகிழச் செய்தனர். இந்த நாடகத்திற்குள்ளாக அதன் ஒரு பகுதியாக ஒரு டான்ஸ். அதில் ஆடிய அந்தப் பெண் குழந்தை தனி ஆவர்த்தனத்தில் கலக்கி விட்டார். ஹெட் மாஸ்டரை "மான்ஸ்டர்" என்ற வசனத்தை தெரிந்தே தான் வைத்திருந்தார்கள். பள்ளி முதல்வராக வந்த மாணவன், அப்படியே Mr Bean தான். கண், கண்ணசைவு, உடல்மொழி, பேச்சு, ஸ்ப்ரிங் போல நடப்பது என அனைத்திலும் அப்படியே Mr Bean போலவே இருந்தான். ஒரு ஆசிரியரின் பெருமையை எடுத்துக்கூறும் இந்த நாடகத்திலாவது "அதை" நிச்சயமாக சொல்லியிருக்க வேண்டும். ம்ஹ்ம்.. சொல்லவில்லை.
இதற்குள் மணி 8.30 தாண்டிவிட்டது. சின்னப் பையன் ஏற்கனவே என் மீது சாய்ந்தபடி தூங்கிவிட்டான். அவனைப் பார்த்து, எனக்கும் லேசாக தூக்கம் வர, தன்னையறியாமல் ஒரு கொட்டாவி வந்துவிட்டது. ஆங்கரிங் செய்ய வந்த மாணவி நான் வாயைப் பிளந்து கொண்டு கொட்டாவி விடுவதைப் பார்த்துவிட்டார். உடனே அவர் பார்வையைத் திருப்பிவிட்டாலும், முறைத்துவிட்டு திரும்பியது போல இருந்தது. அல்லது எனக்கு அவர் முறைத்தது போலத் தோன்றியது. இதுவே நம்மூர் நிகழ்ச்சியாக இருந்து, வேறு யாராவது இப்படி முறைத்திருந்தால், முத்து படத்தில் வரும் "இருமல் தும்மல்" ரஜினி டயலாக்கை முறைத்தபடியே சொல்லி சரியான பதிலடி கொடுத்திருப்பேன். நானெல்லாம் பொல்லாக் கோவக்காரனாக்கும். பழிக்குப் பழி.. புளிக்குப் புளி..
அடுத்தது பஹ்ரைன் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு அரபி பாடலுக்கான டான்ஸ். சுமாராகத்தான் இருந்தது என்றாலும், குழந்தைகள் அந்த வயசில் பயமில்லாமல் மேடையேறி ஆடினார்கள் என்பதற்காகவே சூப்பர் என்று சொல்லலாம். சொல்லவேண்டும். அடுத்ததாக நாட்டுப்பற்றை உணர்த்தும் விதமாக மிலிட்டரி உடை அணிந்து மாணவர்கள் மற்றும், 2 மாணிவிகள் நடு நாயகமாக ஆடினார்கள். அதில் ஆடிய ஒரு பெண், என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த "ஜோயல்" என்ற பையனின் அக்கா-வாம். அவனுக்குப் பெருமை பிடிபடவில்லை. "அதாரு அறியுமோ? எண்ட சேச்சி" என்று இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை என்னிடம் மலையாளத்தில் ஸம்சாரித்தான். பதிலுக்கு "ஒன்னாங் க்ளாஸ்.. அடிபொலி" என்று நானும் பரஞ்ஞேன். அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அவன் வேறு எதாவது மலையாளத்தில் கேட்டிருந்தால் பதில் சொல்லத் தெரியாது என்றாலும், அப்படியே மலையாளம் தெரிந்தது போலவே முகத்தை வைத்துக்கொண்டு மெயிண்டெயின் செய்தேன்.
அடுத்து பள்ளியின் Band மாணவன், ஒரு ஆங்கிலப் பாடல் பாடினான். "உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" குறளின் விளக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது போல, "You can count on me", என்ற வரிகளைக் கொண்டு பாடி முடித்தான். ஆடியன்சிடம் நல்ல வரவேற்பு. பாடும்போதும் கூட தாளத்திற்கேற்ப கைதட்டி அவனை ஊக்குவித்தனர்.
அதற்கடுத்து இதுவரை filler-களாக மட்டுமே பெர்பார்ம் செய்து வந்த பள்ளியின் Band மாணவர்கள், இப்போது மேடையில் அணிவகுத்தனர். வயலினுடன் ஒரு மாணவனும் வீணையுடன் ஒரு மாணவியும் அமர்ந்திருக்க, இரண்டு பக்கங்களிலும் கிட்டார் வைத்துக்கொண்டு 2 மாணவர்கள். பின்னணியில் 3 மாணவர்கள் கீபோர்டுடன். நல்லதொரு instrumental கச்சேரி கேட்ட உணர்வு. நன்றாக வாசித்தனர்.
அடுத்தது நன்றியுரை. நன்றியுரையிலும் "அதை" சொல்லவில்லை. அடுத்ததாக பள்ளிக்கென உருவாக்கிய பாட்டு. பள்ளி மாணவர்கள் ஆர்கெஸ்ட்ரா மீண்டும் மேடையேறியது. ஸ்க்ரீன் திறந்ததும், (முதல் பதிவில் சொல்லியிருந்த) அந்தக் கண்ணாடி போட்ட மாணவன் உணர்ச்சி மிகுதியால், தன் பெற்றோருக்கு கை காட்ட, இந்த முறை எல்லாரும் பார்த்துவிட்டபடியால், பதிலுக்கு அவனது பெற்றோர், முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் பதிலுக்கு கை காட்ட, அந்தக் குழந்தைக்கு என்ன செய்வதென்று தெரியாமல், ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துவைத்தான். அற்புதமான பள்ளிப் பாடல் (school song). அந்த Master Oogway பையன் வழக்கம் போல அனுபவித்துப் பாடினான். நடுநடுவே வந்த தாளத்திற்கு மற்ற மாணவர்கள் அப்படியே நின்றிருக்க, இவன் மட்டும் தலையை ஆட்டி ரசித்துக்கொண்டிருந்தான்.
அதற்கடுத்து, அந்த instrumental கச்சேரியின் வீணை மாணவி மட்டும் தனி ஆவர்த்தனம். இன்னும் கொஞ்சம் பயிற்சியும் அனுபவமும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பிறகு பள்ளிக்கான கீதம் (school anthem) பாடினார்கள். பள்ளியின் Band மாணவர்கள் கடைசி filler வாசித்தார்கள். ஸ்க்ரீன் திறந்ததும், விழாவின் முதல் நிகழ்ச்சி தொடங்கி, அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ற மாணவ மாணவியர் அடுத்தடுத்து அணிவகுத்து பின்னணியில் ஒலித்த இசைக்கு கையசைத்தபடியே நடந்துவர, கூடவே பயிற்சி கொடுத்த டீச்சரும் நடந்துவந்தனர். இரண்டே நிமிடங்களில் மேடை நிரம்பி வழிய, மேடைக்கு கீழேயும் மாணவ மாணவியர் வரிசைகட்டி நின்று கையசைத்தனர். கொஞ்ச நேரத்தில் கீழே இருந்த மாணவ மாணவியர் பள்ளி முதல்வர் உள்ளிட்ட நிர்வாகத்தினரையும் கையைப் பிடித்து அழைத்து தங்களுடன் சேர்ந்து கையசைத்து ஆட வைத்தனர்.
இத்தனை பெரிய குழந்தைகள் பட்டாளத்தை வைத்து சமாளித்து அவர்களை மேடையில் பெர்பார்ம் செய்ய வைத்த அனைவருக்கும், பாராட்டுக்கள். கடைசியாக இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
அதை சொல்லிவிட்டுத்தான் ஆரம்பிப்பார்கள் என நினைத்திருந்தேன். ஆனால் சொல்லவில்லை - என்று முதல் பதிவில் எழுதியிருந்தேனே.. அதை தெரிந்துகொள்ள வேண்டிய நேரமிது. சமீபத்தில் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை அகால மரணம் அடைந்தார். பள்ளி நிர்வாகம், மற்ற ஆசிரியர்/ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட யாரும் பேசவில்லை என்பதே அந்த விஷயம். இத்தனைக்கும் அந்த ஆசிரியை ஆண்டுவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கினைத்து நடத்த பெரிதும் உதவியாய் இருந்தவராம். அவரது இழப்பால் தான் முன்கூட்டியே நடந்திருக்க வேண்டிய ஆண்டு விழா 2-3 மாதங்கள் தாமதமாக நடந்தேறியிருக்கிறது. அப்படிபட்ட ஆசிரியையைப் பற்றி, ஒரு வார்த்தை கூட யாரும் பேசாதது சற்றே நெருடலாக/வருத்தமாக இருந்தது.
அவர்கள் சொல்லாவிட்டால் என்ன.. நாம் சொல்வோம்...
இந்தப் பதிவு, அந்த ஆசிரியைக்கு சமர்ப்பணம்.
Comments
Post a Comment