நாளைய வாசல் - 1
சைரன்
வைத்த வண்டியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நந்தம்பாக்கம் அரங்கத்தை
நோக்கி விரைந்துகொண்டிருந்தார். டிஜிட்டல் 3D பேனர்கள் பளிச் பளிச்சென
கண்ணைக் கவர்ந்தன. ஆம். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் 3D
தொழில்நுட்பம் தான்.
பக்கத்தில் அந்த சைரன் வண்டியையும் அமைச்சரையும் பார்த்து ஏக்கப் பெருமூச்சுவிட்டவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்தான். ஏங்க இந்த பழைய பேனர் எல்லாம் இல்லாம, இந்த புது டிஜிட்டல் பேனர் நல்லா இருக்குல்ல?
வரைதல்,
பெயிண்டிங், அச்சடிக்கப்பட்ட பேனர் இதெல்லாம் ஒழிந்து ஒரு
மாமாங்கமாகிவிட்டது. இரண்டே இரண்டு தட்டையான குச்சி போன்ற வஸ்து தான் தேவை.
மேலும் கீழுமாக செட் செய்து கட்டிவிட்டால் போதும். அந்த குச்சிகளில்
இருந்து ஒளிக்கற்றைகள் வந்து, அதில் காட்சிகள் விரியும். இதுவும் ஒருவகை
ப்ரொஜெக்ஷன் நுட்பம் தான். ஆனால் திரையிட சுவரோ திரையோ தேவையில்லை. அந்த
குச்சிகளில் இருந்து, காட்சிகள் விரியும். இடத்திற்கு ஏற்ப நீள அகலங்களை
கூட்டவோ குறைக்கவோ முடியும். அச்சிடப்பட்ட பேனர்களை போல அல்லாமல், இந்த
டிஜிட்டல் பேனர்களில் தலைவர்கள் நடக்கலாம் சிரிக்கலாம் தொண்டர்களை பார்த்து
கை அசைக்கலாம்.. இப்படி பல "லாம்"கள் இதில் உண்டு.
சரி.
அதைவிடுங்க. அந்த அமைச்சர் கதைக்கு வருவோம். அமைச்சர் நந்தம்பாக்கம் போறது
எதற்கு தெரியுமா? அடையார் ஆலமரத்தை தத்ரூபமாக அச்சுஅசலாக 3D பிரிண்டிங்கில்
உருவாக்கி ஆறுக்கு ஆறு கண்ணாடிப் பேழையில் காட்சிக்கு வைச்சிருக்காங்க.
அதை பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவைக்க போறார்.
சரி... உண்மையான ஆலமரம் என்ன ஆச்சு?
தெரியாதா உங்களுக்கு? அது பட்டுப்போயி வெட்டிட்டாங்களே. நானும் கூட வெட்டினேன்..
என்னது பட்டுப்போச்சா? ஆமாம். பின்ன தண்ணி இருந்தாத்தான மரம் வாழும்?
தண்ணியில்லயா? ஏங்க? தண்ணிக்கு என்னாச்சு?
ஆமா யாருங்க நீங்க? நிலவரம் எதுவுமே தெரியல? எங்க இருந்தீங்க இத்தனை நாளா?
சொன்னா
நம்பமாட்டிங்க. இருந்தாலும் சொல்றேன். நான் 2020-லருந்து வரேன். ஒரு டைம்
மெஷின் கண்டுபுடிச்சேன். அதை வெச்சு எதிர்காலத்தைப் பாக்கலாம்னு இப்போ
2120-க்கு வந்திருக்கேன்.
அட, இவ்வளவுதானா.. இப்போ டைம் மெஷின்-லாம்
சர்வ சாதாரணம். ஆனா என்ன, பணக்காரங்களுக்கு மட்டும்தான் சாதாரணம்.
தண்ணியில்ல, வெயில் சூடு தாங்க முடியல. ராத்திரிகூட அனல்காத்து தான். திங்க
ஒரு பருக்கை சோறு இல்ல.. பின்ன என்ன செய்வான் பணக்காரன்? டைம் மெஷின்-ல
ஒரு 300-400 வருஷம் பின்னாடி போறான். இன்னும் நெறைய காசு இருக்கறவன்
செவ்வாய் கிரகத்துக்கு போறான்.
செவ்வாய் கிரகமா? அங்க எதுக்கு போறாங்க? எப்படி வாழ முடியும்?
அங்க அதுக்கெல்லாம் அங்க ஏற்பாடு செஞ்சுட்டாங்களே. இப்போ அங்க நெல் அறுவடையே பண்றாங்களாம். 2 மாசத்துக்கு ஒருதடவை செயற்கை மழை. ஆனா இயற்கை விவசாயம். இங்க இருக்கற குப்பைங்கள எல்லாம் மக்கவெச்சி உரமாக்கி டன் டன்னா வருஷத்துக்கு ஒருதடவை அங்க கொண்டுபோய் வயல்ல கொட்டிட்டு வந்துருவாங்க
செவ்வாய் கிரகத்துல விவசாயமா? அப்போ இங்க? தென் மாவட்டங்கள் எல்லாம் என்ன ஆச்சு?
உங்க காலத்துல ஆரம்பிச்சாங்களே நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்.. அது தான் எல்லா அழிவுக்கும் முதல் புள்ளி.
அதைத்தான் நாங்க போராட்டம் பண்ணி நிறுத்திட்டோமே? அப்பறம் எப்படி?
தொடரும்...
Comments
Post a Comment