பாஸிங் - 2

இன்னிக்கு நம்மள சுத்தல்ல விடப்போறாங்க என்று நான் நினைத்து முடிப்பதற்குள் "ஆப்டர் சூபர்வைசர் கோ டு ரெஜிஸ்தரேசன்" (After subervisor go to registharesan) என்றான். ஏதோ பெருசா பிளான் பண்ணிட்டாங்க என்று கன்பார்ம் ஆகிவிட்டது. வண்டியை பார்க்கிங் ஏரியாவுக்கு விட்டேன்.

ஏற்கனவே அங்கு டபுள் பார்க்கிங்கில் இருந்த நண்பனின் வண்டிக்கருகில் என் வண்டியை நிறுத்திவிட்டு, "ஏதோ சூப்பர்வைஸரப் பாத்து கையெழுத்து வாங்கணுமாம். அப்பறம் ரெஜிஸ்ட்ரேஷன் போகணுமாம். நீ கொஞ்சம் வெயிட்பண்ணு. இந்தா என் வண்டி சாவி. யாராவது வண்டிய பார்க்கிங்ல இருந்து எடுக்க வந்தா, என் வண்டியை நகர்த்தினாதான் அவங்க வண்டிய எடுக்க முடியும். நீ கொஞ்சம் பாத்துக்கோ" என்று சொல்லிவிட்டு சூப்பர்வைசர் இருக்கும் இடம் என்று தோராயமாக கூறிய திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றேன்.

இரண்டு மூன்று பில்டிங் இருந்ததால் எந்த பில்டிங்கிற்குள் நுழைவது என்று குழப்பம். கொஞ்சம் சுற்றும்முற்றும் பார்த்தேன். நண்பனின் வண்டியை பாஸிங் செய்த அரபி ஆபீசர் நின்றுகொண்டு வண்டிகளை ஒழுங்கு படுத்துவதும், சில வண்டிகளை சோதனையிடுவதுமாக இருந்தார். சரி, அவரிடம் கேட்கலாம் என முடிவுசெய்து அவரிடம் சென்றேன்.

வண்டியை சோதனை செய்துகொண்டிருந்ததால், என்னை பார்த்தும் பார்க்காமல் வண்டியை சுற்றி வந்து நோட்டம் விட்டபடி இருந்தார். வேற வழி... நானும் அந்த வண்டியை பிரதக்ஷணம் செய்தேன். அந்த வண்டியில் இருந்தவரிடம் அரபியில் ஏதோ பேசிவிட்டு, பிறகு என்னை ஏறஇறங்கப் பார்த்தார். நான் கையிலிருந்த இரண்டு ஸ்லிப்புகளையும் காட்டி, "மை கார் பாஸ். ஐ நீட் டு ஸீ சூப்பர்வைசர்"  என்றேன். ஸ்லிப்புகளை கையில் வாங்கிப் பார்த்துவிட்டு, "ஆல் ரிப்பேர் பினிஷ்?" என்று கேட்டார். நானும் பதிலுக்கு "யெஸ் சார். ஆல் ரிப்பேர் பினிஷ்" என்றேன்.

உடனே பேனாவை எடுத்து ஒரு ஸ்லிப்பின் பின்புறம் ஏதோ அரபியில் கிறுக்கினார். அப்போது தான் புரிந்தது அந்த ஆள்தான் "சூபர்வைசர்" என்று. ஆஹா புள்ளையார் தான்டா குரங்கு.. எப்படியோ வந்த வேலை முடிஞ்சிடுச்சு என்று நினைத்துக்கொண்டேன். கிறுக்கி முடித்து ஸ்லிப்புகளை மீண்டும் என்னிடம் கொடுத்து "கோ டு ரெஜிஸ்தரேசன்" என்று சொல்லி இவர் ஒரு திசையை குத்துமதிப்பாகக் காட்டிவிட்டு சட்டென அடுத்த வண்டியைப் பார்க்க கிளம்பிவிட்டார். திரும்பவும் வேறொரு வண்டியை பிரதக்ஷணம் செய்ய வேண்டிவருமென்பதால் மேலும் அவரிடம் கேள்வி கேட்காமல் அவர் சொன்ன திசையில் நடந்தேன்.

அந்த ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீசை எப்படிக் கண்டுபிடிப்பது என்று யோசித்தவாறே நடந்தேன். என் வண்டியை சோதனை செய்த அந்த அரபி ஆபீசர் கண்ணில் பட்டான். ஆபத்பாந்தவா அநாதரக்ஷகா என்று நான் நினைத்துக்கொண்டு அவனிடம் ஓடினேன். "சார், ஐ காட் சைன் பிரம் சூப்பர்வைசர்" என்று சொல்லி முடிப்பதற்குள், "ஓகே. கோ டு ரெஜிஸ்தரேசன்" என்று சொன்னான். "ஆபத்பாந்தவா அநாதரக்ஷகா கோவிந்தா கோவிந்தா" என்று யாரோ சொல்வது போல் கேட்டது.

கொஞ்சம்கூட வெறுப்பையும் அழுகையையும் வெளிக்காட்டாமல் அவனிடமே, "வேர் இஸ் ரெஜிஸ்ட்ரேஷன்" என்று கேட்டேன். திரும்பவும் தோராயமாக ஒரு திசையைக் காட்டினான். நான் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு இடம் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, "யூ நோ மாஸ்க்? பேக்சைட் மாஸ்க் பில்டிங்" என்றான். (You know mosque, backside mosque building). நாங்கள் இருந்த இடத்திலிருந்து அந்த மசூதி ஒன்றும் பல கிலோமீட்டர் தூரமில்லை. பத்தடி தூரம் தான். வெறும் பத்தே பத்தடி தான். "இதுக்கு எதுக்குடா இவ்வளவு பில்டப்பு? நன்றி அய்யா. நீவிர் வாழ்க. நும் குலம் வாழ்க. உன் ஆங்கிலம் வானும் மண்ணும் கடலும் அலையும் உள்ளவரை நிலைத்திருக்க இறைவன் அருள்புரிவார்" என்று நினைத்துக்கொண்டு, அவனிடம் "தேங்க்யூ சார்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.


இதற்கிடையில் பார்க்கிங்கிற்கு சென்று நண்பனிடம் நடந்தது எதுவும் சொல்லாமல், "சூப்பர்வைசர் கிட்ட கையெழுத்து வாங்கிட்டேன். அடுத்தது ரெஜிஸ்ட்ரேஷன். கொஞ்சம் வெயிட்பண்ணு, வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு ரெஜிஸ்ட்ரேஷன் பில்டிங்கிற்குள் நுழைந்தேன். டோக்கன் எடுக்க மைல் நீள க்யூ நின்றுகொண்டிருந்தது. வாலைப்பிடித்துக்கொண்டு நானும் நின்றேன்.

ஒருவழியாக கவுண்ட்டரை அடைந்து டோக்கன் கொடுக்கும் பெண்மணியிடம் எதுவும் பேசாமல், கையிலிருந்த ஸ்லிப்பை காண்பித்தேன். பார்த்துவிட்டு, டோக்கன் கொடுப்பாரென காத்திருந்தால், "நோ நோ. நாட் ஹியர். கோ டு ரெஜிஸ்தரேசன்" என்றாரே பார்க்கலாம்.. அப்போ இவ்வளவு நேரம் க்யூவுல நின்னது எல்லாம் வேஸ்ட்-லேண்டா... என நொந்துகொண்டு, "வேர் இஸ் ரெஜிஸ்ட்ரேஷன்" என்றேன். "கோ ஸ்திரயிட் தென் லெப்ட்" என்றார். (Go straight then left).

"ஏண்டா பயப்படற? ஏன் பயப்படற? வெற்றிவேல் வீரவேல்.. வீரம்ன்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது" என்று யாரோ என் பின்னால் பேச, யாரென்று பார்த்தால், மானங்கெட்ட மைண்ட் வாய்ஸ். அடச்சை.. நீ வேற நேரங்காலம் தெரியாம... போ அந்தப்பக்கம் என்று அதை விரட்டிவிட்டு, அந்தப் பெண்மணி சொன்ன திசையில் நடந்தேன். லெப்ட் திரும்பினேன். கொஞ்சம் நீளமான சந்து. கடந்தவுடன் வலதுபக்கம் பார்த்தேன் (இங்கல்லாம் கீப் ரைட் தானே.. அதான்) ஒருபக்கம் சீலிங் வரையில் கண்ணாடி மறுபக்கம் சுவர் கொண்ட வாலோடியான நீண்ட நெடிய நடைபாதை. அடப்பாவிகளா இங்க எங்கடா இருக்கு ரெஜிஸ்ட்ரேஷன் என்று புலம்பிக்கொண்டே இடதுபக்கம் திரும்பினேன். அங்கே சில அரபிக்கள் ஒரு அறையில் உள்ளேவெளியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். அறைக்கு வெளியே "லைசன்ஸ் இன்பர்மேஷன்" என்று போர்டு இருந்தது. சரி நுழைந்து பாப்போம் என்று நினைத்து, உள்ளே போனேன்.

அங்கும் ஒரு க்யூ. 10 நிமிடங்கள் கழித்து கவுண்ட்டரில் அந்த ஸ்லிப்பை காண்பித்தேன். வாங்கிப் பார்த்தான் ஒரு அரபி. "பாத்துட்டு நீயும் கோ டு ரெஜிஸ்தரேசன்"-னு சொல்லப்போற. அதுக்கு எதுக்குடா இவ்வளவு நேரம்? என்று நினைத்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக, ஒரு மஞ்சள்கலர் பார்மை எடுத்து குறுக்கும் நெடுக்குமாக சில கோடுகளை போட்டு, டோக்கன் நம்பருடன் சேர்த்து கையில் கொடுத்தான். அபிராமி கையால் லட்டு வாங்கின குணா கமல் மாதிரி உணர்ந்தேன்.

டோக்கன் நம்பர் 103. அப்போதுதான் கவுண்ட்டரில் 80 கூப்பிட்டார்கள். எப்படியும் அரைமணி நேரமாகும். நண்பன் ஞாபகமும் டபுள் பார்க்கிங் கார் ஞாபகமும் வரவே, பார்க்கிங் ஏரியாவிற்கு ஓடினேன். இதற்குள் என் வண்டிக்கு அருகிலிருந்த வண்டியை எடுக்க வந்த ஒரு அரபி "ஐ ஹேவ் அபாயிண்மென்த் வித் டாக்டர். ரிமூவ் கார் நவ்" என்று காலில் வெண்ணீரைக் கொட்டியதுபோல் குதிக்க, அவன் வண்டியை அனாதையாக விட்டுவிட்டு, என் வண்டியை நகர்த்தி அவனுக்கு இடம்கொடுத்து அவன் சென்றபின் காலியான இடத்தில் என் வண்டியை மாற்றியிருந்தான் நண்பன் (இதை வீட்டிற்கு வந்தபிறகு தான் சொன்னான்). "பார்க்கிங் கிடைச்சிடுச்சா.. சூப்பர்" என்றேன். முறைத்தான். எனக்கு விளங்கவில்லை. "மச்சி டோக்கன் நம்பர் குடுத்திருக்காங்க. இன்னும் 20 பேர் வெயிட்டிங். நீ கிளம்பு. நான் வர நேரமாகும்" என்றேன். அவனுக்கும் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் என் வண்டி சாவியைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகியிருந்தது. எப்படியும் ஒரு 5 நம்பர் போயிருக்கும் என்று நினைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தால், அப்போது தான் நம்பர் 82 அழைத்தார்கள். எனக்கு ஆத்திரங்கள் வருது மக்கழே என்று யாரோ சொல்ல, பார்த்தால் மீண்டும் மைண்ட் வாய்ஸ். சரி, நீயாவது துணைக்கு வந்தியே என்று கொஞ்சம் பேச்சுக்கொடுத்தேன். சிறிது நேரத்தில் என் டோக்கன் நம்பர் வந்தது. கவுண்ட்டரில் சென்று அந்த மஞ்சள்கலர் பார்மை கொடுத்து, கூடவே அவன் கேட்ட "20 தினார்" பணத்தையும் கொடுத்தேன். ஒரு பிரிண்ட் அவுட்டை கையில் கொடுத்து "க்ஹலாஸ்" என்றான் கவுண்ட்டர் அரபி.

செந்தமிழ் நாடென்னும் போதினிலே-வைக் காட்டிலும், இந்த "க்ஹலாஸ்" என் காதில் தேனாகப் பாய்ந்தது. ஒருவழியாக வண்டி பாஸிங் முடிந்தது. வந்து வண்டியைப் பார்த்தேன். "ஆத்தா நான் பாஸாயிட்டேன்" என்று மயிலு ஓடிவருவது போல் இருந்தது. வாஞ்சையுடன் என்ஜினை ஸ்டார்ட் செய்து கிளம்பினேன்.

...சுபம்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2