பாஸிங்



சென்ற வாரம் நானும் நண்பனும் வண்டியை பாஸிங் (நம்ம ஊர் FC) கொண்டு சென்றோம். அரைமணி நேரப் பயணத்தில் சோதனைச் சாவடியை அடைந்தோம். எனக்கு சென்ற வருடம் பாஸிங் சென்று வந்த அனுபவம் உண்டு என்கிறபடியால் அவனிடம் "ரொம்ப கறாரா இருப்பாங்க, சின்னதா ஏதாவது தப்பு நடந்தாலும் பெயில் பண்ணி அனுப்பிடுவாங்க. பட்லர் இங்கிலீஷ் தான் பேசணும். உனக்கு இங்கிலீஷ் தெரியும்ன்னு ஸ்டைலா பதில் சொல்லாத. அங்க இருக்கற அரபி ஆபீஸருக்கு புரியாது. அதுக்காகவே பெயில் பண்ணிடுவான்" என்று கொஞ்சம் அளந்துவிட்டிருந்தேன்.
 
மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் க்யூ-வில் நிற்பது போல், அடித்துபிடித்து இருவரும் அவரவர் வண்டியுடன் ஒரே க்யூவில் நின்றோம். கொஞ்சம் கொஞ்சமாக க்யூ நகர்ந்தது. சோதனை சாவடி "ராம்ப்"பில் (Ramp) ஏற தயாராக நான். என் வண்டிக்குப் பின்னாடி நண்பனும் அவனது வண்டியும்.
 
வந்தார் ஒரு அரபி ஆபீசர். நேரே நண்பனிடம் சென்று அவனது வண்டி ஓனர்ஷிப் அட்டையையும் அவனது ஓட்டுநர் உரிம அட்டையையும் வாங்கிப் பார்த்துவிட்டு வண்டியை நோட்டம் விட்டார். லைட், பிரேக் எல்லாம் சரியாக இருக்கிறதா வண்டியில் ஏதேனும் டேமேஜ் இருக்கிறதா என்பதையெல்லாம் சரிபார்க்க ஆரம்பித்தார்.
 
இதையெல்லாம் ரியர் வ்யூ கண்ணாடி மூலம் பார்த்துக்கொண்டிருந்தேன். ராம்ப்பில் ஏறாமலே அவன் வண்டிக்கு அவர் சோதனையை முடித்துவிட்டார். அட்டைகளை திரும்பக் கொடுத்துவிட்டு, வண்டி "பாஸ்" என்கிற ரசீதையும் இடுப்பில் மாட்டியிருந்த சிறிய மெஷினிலிருந்து பிரிண்ட் செய்து சரட்டென கிழித்து கொடுத்துவிட்டார். இத்தனையும் 2 நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டது.
 
அவனை அங்கிருந்து வேறு வழியில் செல்லுமாறு சொல்லிவிட்டு ஆபீசர் அடுத்த வண்டியைப் பார்க்க சென்றுவிட்டார். இவனுக்கோ என்ன நடந்தது என்பது ஓரளவு புரிந்தாலும், அவ்வளவுதானா இன்னும் ஏதாவது பாக்கி இருக்கிறதா என்று  சந்தேகம். (நான் அளந்துவிட்டது காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், நிர்வாகம் பொறுப்பல்ல). வண்டியை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தள்ளி நிறுத்திவிட்டு எனக்கு போன் செய்தான்.
 
"என்னடா பாஸ்-ன்னு ஒரு தம்மாத்துண்டு சலிப்பை கிழிச்சு குடுத்துட்டான். அவ்வளவுதானா?" என்று கேட்டான். "அவ்வளவு தான். நீ நேரா போயி லெப்ட் திரும்பு. வலதுபக்கம் பார்க்கிங் இருக்கும். அங்க நில்லு. நான் வரேன்" என்றேன். "இரு இரு. புரியல. நான் லைன்லயே இருக்கேன். நீ சொல்லு" என்றவாறே வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். அடேய், வந்திருக்கறது ட்ராபிக் போலீஸ் ஹெட் குவாட்டர்ஸ், இதுல போன் பேசிக்கிட்டே வண்டி வேற ஓட்டறோம். புடிச்சா லைசன்ஸை இங்கயே கேன்சல் பண்ணிடுவாங்கடா என்று மனதில் எண்ணிக்கொண்டே, அவனுக்கு ரூட் சொல்லிக்கொண்டிருந்தேன்.
 
ஒருவழியாக பார்க்கிங் ஏரியாவை அடைந்து அங்கு இடமில்லாத காரணத்தால் டபுள் பார்க்கிங் போட்டு வண்டியில் காத்திருந்தான். இதற்கிடையில் என்னை ராம்ப்பில் வண்டியை கொண்டுவருமாறு அழைத்தான் அங்கிருந்த மற்றொரு அரபி ஆபீசர். வண்டியை நோட்டம் விட்டு, "ஆல் ரிப்பேர் பினிஷ்?" என்று கேட்டான். (ஒருவாரம் முன்பு சென்றிருந்தபோது வண்டியில் இருந்த சில பிரச்சனைகளால் பெயில் செய்திருந்தனர்). நானும் பதிலுக்கு "யெஸ் சார். ஆல் ரிப்பேர் பினிஷ்" என்றேன். பிறகு மீண்டும் ஒருமுறை வண்டியை சுற்றிவந்து நோட்டம் விட்டான். அரைமனதாக "பாஸ்" என்றான். சென்றமுறைக்கான "பெயில்" ரசீது இந்த முறைக்கான "பாஸ்" ரசீது இரண்டையும் இடுப்பிலிருந்த மெஷினிலிருந்து கிழித்து என்னிடம் கொடுத்தான்.
 
பிறகு "பார்க் யுவர் கார் அண்ட் கோ டு சூபர்வைஸர்" (Baark your car and go to subervisor) என்று கூறி, தோராயமாக ஒரு திசையைக் காட்டினான். ரைட்டு... இன்னிக்கு நம்மள சுத்தல்ல விடப்போறாங்க என்று புரிந்துகொண்டேன்.
 
தொடரும்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2